Thursday 31 December 2020

KA30 - TN 72

 

வெளிமுதற் பூதங்களாக விரிந்து நின்றபோதும், இந்த எளியவனின் உள்ளத்திலும் உறையும் கருணையுள்ள, எல்லாமும் வல்ல இசக்கியம்மனின் மலரடிகளை, என் மன மொழி மெய்களால் துதிக்கின்றேன்.

1

 

அளவானது அதிசயமே..

பொதுவில் வாழ்க்கையில் அதிகக் கமுக்கங்கள் இருக்கக்கூடாதென்று நினைப்பவன் நான். ஆகக் குறைவாக இருந்தால்தான் அவை இரகசியங்கள். அதிகமாக இருந்தால் அவை இரகசியங்கள் அல்ல, பொதுவெளி குறித்த அச்சத்தால் நாம் வெளியில் சொல்ல விரும்பாதவை.

உலகில் யாவரும் எனக்கு நன்மை செய்யக்கூடியவர்களே என்ற சிந்தனையினாலும், இறைவனால் நடக்கின்ற செயலொன்றை அற்ப மனிதன் தடுத்துவிடமுடியாதெனும் எண்ணத்தினாலும், கமுக்கங்களை ஆகக்குறைவாக வைத்துக்கொள்ளும் வழக்கம் எனக்கு உண்டு. இளைய வயதிலேயே எங்கள் ஊரில் குடிகொண்டிருக்கும் இசக்கியம்மனை நோக்கி, எனது விதிவசத்தாலும் வினைப்பயனாலும் நான் ஓரடி எடுத்துவைக்க, தனது ஆயிரம் கரங்களொன்றில் அந்தக் கருணை எனை அரவணைக்க, மனிதர்களின் மீதெனக்கு அச்சம் போய்விட்டது. அதனால் பெருமளவு வெளிப்படையானவன் நான்.

அறிவியல் முறைமையாக இஃதோர் சிறந்த தன்மை என்கிறார்கள். மனிதனின் மனமும் ஒரு கணினி போலத்தான். நீங்கள் சொல்லாமல் அமைதிகாக்கும் தகவல்கள், அதிக நினைவிடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால் வெளிப்படுத்திக்கொண்ட ஒரு தகவல், நம் நினைவில் இருக்குமானாலும், அதற்காக அது பகிர்ந்துகொள்ளும் இடம் ஆகக்குறைவு. இதனால் நம் மனது வேகமாக செயல்படவும், புதிய தகவல்களை எளிதாக ஏற்கவும், நினைவாற்றல் பெருகவும் வழிவகை செய்கிறது.

உங்களுக்குச் சொல்கிறேன், எனது பணியிட மாற்றம் தொடர்பாக, நான் மு.ப.பொ. க்கு மேலான யாரையும் சந்தித்துப் பேசியதில்லை. இங்கே நமது த.நி.இ. க்கு அடுத்த நிலையில் இருப்போர்களைச் சந்தித்துப் பணிமாறுதல் பெற்றவர்களும், அப்படி சந்தித்தும் பல்லாண்டுகள் கழித்து பலன் பெற்றோரும், அப்படியும் நடவாமல் இருப்போரும் உண்டு. நாடங்குளம் தொழிலகத்துக்கும், ஊருக்கு இத்தனை அருகிருந்தும் ஒருமுறை கூட நான் வந்து சென்றதில்லை. நாடங்குளம் இம்மிமின் திட்டம் என்ற பெயர்ப்பலகையை நான் பணியில் சேர வந்த நாளில்தான் முதன்முதலில் பார்த்தேன். நடந்தவற்றை அப்படியே சொல்வதும், இப்படியும் நடக்கலாம் பாருங்கள் என்று நம்பிக்கை ஊட்டுவதற்காக மட்டுமே இதை எழுதுகின்றேன்.

ஆறு இணையவழி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டபிறகு, இது ஏழாவது. இதற்கிடையில் இரண்டுமுறை எனக்கிருக்கும் மூச்சிறைப்பைக் காரணம் காட்டி மருத்துவ வழி விண்ணப்பம். அப்போதும் நாம் மருத்துவமனை கண்காணிப்பாளரை அணுகவில்லை. இப்போது இடமாறுதல் கிட்டியது மருத்துவ விண்ணப்ப வழி அல்ல. முதலாவது விண்ணப்பம், நான் அனுப்பியதற்கும், நிராகரிக்கப்பட்டதற்குமான கால இடைவெளி, இரண்டரை ஆண்டுகள். இது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து, ஏழாவது விண்ணப்பம் தீர்ப்பளிக்கப்பட்டது நாற்பது நாட்களுக்கும் குறைவான இடைவெளியில். ஒவ்வொருமுறையும் விண்ணப்பம் அளிப்பதையும், விண்ணப்பத்தில் நான் என்ன எழுதுகிறேன் என்பதையும் ஒழிக்கும் எண்ணம்  எனக்கு இருந்ததில்லை. என்னுடன் இருப்போருக்கு அதில் எழுதப்படுபவை தெரியும். எழுதிவிட்டு எனது உடனடி அதிகாரிக்கோ, அல்லது மு.ப.பொ க்கோ சொல்வதுண்டு. அதுவும் பொதுவெளியில்தான், எந்தவிதத் தேவையுமில்லாதவன், ஒரு நேரப்போக்குக்கு சொல்வதுபோல சிரித்துக்கொண்டே தான் சொல்வேன், அவர்களும் சிரித்துக்கொண்டேதான் பதில் சொல்வார்கள். அந்த சிரிப்பிலேதான் அவர்கள் என்ன எழுதுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள்வேண்டும். எனது பணியிடமாறுதலுக்கான விண்ணப்பம் எனக்கும், எனது பிரிவின் மேலதிகாரிகளுக்கும் இடையில் எந்த நெருடலையும் உண்டாக்கவோ, அது பிரிவில் நமது பணி, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பாதித்துவிடவோ கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏனெனில் இடமாறுதலைவிடவும் பெரியது மனம் என்பது என் கணக்கு.

சொல்லப்போனால் நமது வளர்தளிர் பிரிவில், அண்மையில் பணிக்கு சேர்ந்த சுரபூபதியை விட்டுவிட்டால், நாடங்குளத்துக்கு அருகாமையில் இருப்பது என்னுடைய சொந்த ஊர்தான். ஆனாலும் எனக்கு முன்னர் நாடங்குளத்துக்கு பணியிடமாறுதல் பெற்றவர்களில் பெரும்பாலானோர், நைகாவில் வேறு சிலருக்குக் நாடங்குளத்துக்கு வருவதற்கு செய்த உதவிகள் போல, எனக்கு யாரும் செய்யவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. அதற்கு பலவகைகளில் நானும் ஒரு காரணம். யாருடனும் ஒத்துப்போகாத என்னுடைய மனப்போக்கும், ஏற்கனவே சொன்னதுபோல கமுக்கங்கள் காக்கத் தெரியாதவனுமாக இருந்ததால் என்னை யாரும் விரும்பியிருக்கவில்லை. இரண்டாவது உதவிகள் செய்யும்படி யாரிடமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

நாடங்குளத்தில் பணியாற்றும் எனது உறவினர் ஒருவர், இங்கே என்னுடைய சொக்காரர் ஒருவருக்கு இடமாறுதல் அவசியம் கருதி, என்னோடு அவரது மாறுதலை நேர்செய்ய விரும்பி சில ஆண்டுகளுக்கு முன்னர் முயற்சித்து அது நடவாமல் போனது. திருமலையப்பன் மூலமாக அவர் எனக்கு அறிமுகம். அதற்கடுத்து நேராக வந்தால், அரிமுத்துக்குமார் அண்ணன். அவரது பிரிவுக்கு ஆள் தேவைப்பட்டபோது, அவர் பரிந்துரைத்த பெயர்களில் நானும் ஒருவன். அவரது பரிவை என்றென்றும் நான் நினைவில் வைத்திருப்பேன்.

மொத்தத்தில் எந்த கமுக்கமும் இல்லாமல், எனக்கே பெரும் ஆச்சரியமாக அமையும் வகையில் வந்து சேர்ந்ததுதான் இந்த பணியிட மாறுதல்.

 

2

 

வாவென்று அழைத்த வான்கருணை.

நைகாவில் வெள்ளம் வடிந்துவிட்டிருந்தது. இருபது நாட்களாக மனமும் உடலும் அடைந்த அயர்ச்சிகள் நீங்கி, உள்ளம் மெல்ல பழைய நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரம். எனினும் மழை முழுவதுமாக நின்றுவிடவில்லை. இடமாறுதல் பட்டியல் ஒன்று வரவிருக்கிறதென்றும், அதில் இன்னாரது பெயர்களெல்லாம் இருக்கலாம் என்றும் பேச்சுகள் அடிபட்டன. அதில் என்னுடைய பெயர் எப்போதும் இருப்பதில்லை. எந்த ஏற்பாடும் செய்யாதவனுக்கு எப்படி வரும் ஆணை?. ஆக நானாகவே நானும் ரவுடிதான் எனும் வைகைப்புயல் போல, அவ்வப்போது அடித்துவிடுவதுண்டு. வந்தியத்தேவன் ஒருமுறை தனது முன்னோர்கள் செழித்து வாழ்ந்து அரசாண்ட காலம் பற்றிய பாடல் ஒன்றைப்பாடுவான். வந்தியத்தேவன் என்றால் தெரியும்தானே...எனது சொக்காரன் என்று நினைத்துவிடாதீர்கள். சாட்சாத் பொன்னியின் செல்வனின் நண்பனும், அத்தானும் ஆனவன்தான். ---உண்டோ வாணன் கொடியடையா கொம்பு என்பது போல முடியும் அந்த பா. வாணர்கள் கொடி பறக்காத கொம்பே இல்லையாம் நாட்டில், இப்படி வாழ்ந்ததையும் இப்போதைய வாழ்க்கையையும் எண்ணி சலிப்படையும் குந்தவைமணாளன், இப்போது நானே எதாவது மாட்டுக்கொம்பில் பிடித்துக் கொடி கட்டிவிட்டால்தான் உண்டு என்று வருந்துவான். அப்படித்தான் நானும் போகிற போக்கில் எனக்கும் வரும் என்பேன். எல்லோரும் சிரிப்பார்கள். நானும் சிரிப்பேன். சிலர் விண்ணப்பம் அனுப்பியதே தெரியாது, சிலர் விண்ணப்பம் அனுப்பிவிட்டு, எதிர் அலகுகளில் இருக்கும் ஆட்களிடம் நேரிடமாறுதல் ஏற்பாடு செய்வது, அங்குள்ள அதிகாரிகளிடம் பேசி நல்விருப்பம் எழுதச்சொல்வது, தலைமை நிர்வாக அலுவலகத்தில் தெரிந்த ஆட்களை வைத்து ஏற்பாடுகள் செய்தவர்கள் எல்லாம் ஏதும் பேசாமல் அமைதியாக வரும் நேரத்தில், நான் மட்டும் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் செய்துகொண்டிருப்பேன். புலி வருகிறது கதையாக நம் கதை ஆகிவிட்டிருந்தது.

இப்போது இதுவரை இல்லாத வகையில் எனது விண்ணப்பம் வேறுபோக்கில் செல்வது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதைப்போலவே இன்னும் சிலரது விண்ணப்பங்களின் நிலையும் இருக்க, ஒருபக்கம் அதிசயமாக எதுவும் நடந்துவிட வாய்ப்புண்டு என்றும், இன்னொருபக்கம் வழக்கமான நடைமுறையில் ஏதும் மாறுதல் நடந்திருக்கலாம், நமக்கெப்படி நடக்கும் என்ற இரக்க மனநிலையுமாக அன்றைய இரவு கடந்து விடிந்தது. இரவிலேயே சிலருக்கு அவரது உயரதிகாரிகள் சொல்லிவிட்டதாகத் தெரிய, காலையில் இன்னும் சிலர் அதை உறுதிப்படுத்த, எனக்கு உதறல் எடுக்கத் தொடங்கியது. வேணு அண்ணன் தான், என்னுடைய உடனடி மேலதிகாரியை ஒருமுறை கேட்டுவிட்டால் என்ன என்று சொன்னார். நானும் அவரது அறைக்குச் சென்றேன். எங்களது உரையாடலை சற்று தமிழ்ப்படுத்தித் தருகிறேன்...

வணக்கம்..

வா....வா...உட்கார்....சொல்லு

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை, நீங்கள் என்னிடம் சொல்வதற்கு எதாவது இருக்கிறதா என்று கேட்க வந்தேன்...

உன்னிடம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. நேற்று அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் காரணமாக என்னால் உன்னுடைய வகுப்புக்கு வர இயலவில்லை. மிக நன்றாக வகுப்பு எடுத்ததாக எல்லோரும் பாராட்டினார்கள். அதனால் உனக்கு இனி நிறைய தலைப்புகள் தருவேன், நீ பாடங்கள் எடுக்கவேண்டும்..

அதில்லை...என்னுடைய பணியிடமாறுதல் விண்ணப்பம் எப்போதும் போகின்ற திசையல்லாமல் வேறுவழியிலான நிலையில் இருக்கிறது. அப்படி இருப்போருக்கு எல்லாம் இப்போது இடமாறுதல் ஆணை வந்திருப்பதாக வேறு பிரிவுகளில் சொல்லி இருக்கிறார்கள், எனக்கும் ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்..

அவரது முகத்தில் சின்ன கறுப்புரேகை ஒன்று படரத்தொடங்கியது. எனினும் அதை வெளிக்காட்டாமல்..கொஞ்சம் குரலை உயர்த்தி, வலிந்து முகத்தில் புன்னகையை வரவைத்துக்கொண்டு

அப்படி ஒன்றும் வரவில்லைவரவும் வராது. அப்படி ஒரு எண்ணத்தையே நீ மனதில் வைக்கக்கூடாது. நாங்கள் எழுதாத யாருக்கும் இதுவ்ரை இடமாறுதல் வந்ததில்லை. (இதற்கு முன்னர் இடமாறுதல் வந்த இருவர் பெயரைச் சொல்லி), அவருக்கு எழுதினோம் வந்தது, இவருக்கு எழுதினோம் வந்தது, உனக்கு எழுதவில்லை அதனால் வராது.

சரிதான்...ஆனாலும் ஒருமுறை உங்கள் மின்னஞ்சலைப் பாருங்களேன்...

வராதென்றால் வராது விசயசாரதி, காலையிலேயே எனக்கு வேறு வேலை இருந்ததால் நானும் இதுவரை அஞ்சலைப் பார்க்கவில்லை, உன் திருப்திக்காக ஒருமுறை பார்க்கிறேன்.

மின்னஞ்சலைத் திறந்தார்.

அது அமைதியாக இருந்தது.

அவசரப்பட்டு...பார்...சொன்னேன் இல்லையா...அப்படி ஒன்றும் வரவில்லை...என்று முடிக்கப்போனார்….

டிங்...டிங்...என்ற ஓசை அவரது ஆசையைக் கலைத்தது. முதலில் வந்திருந்தது இராமசாமி அண்ணனுக்கான பணியிடமாறுதல்.

கண்கள் விரிய அவர், அதன் தலைப்பை வாசித்துக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய சனத்தில், அடுத்த மணி அடித்ததில் அவர் சற்று ஆடிப்போனார். அதன் தலைப்பு இப்படி இருந்தது.

Inter-Unit Transfer on Compassionate Grounds - Shri R. Vijayasarathy, SA/K from Naiga Site to NKIPP34 - reg.

இது எப்படி நடந்தது...நீ என்ன செய்தாய்....

நான் ஒன்றும் செய்யவில்லை...

அங்கிருந்தே மு.ப.பொ வுக்குத் தொடர்புகொண்டார். நம்மைக் கேட்காமல் இப்படி நேரடியாக ஆணை அனுப்பினால் எப்படி என்று பொரிந்தார், பதிலுக்கு அவ்ர், அவன் மேலிடத்தில் பேசியிருக்கலாம் என்றதை என் முன்னால் வைத்தே மறுத்தார், பத்தாண்டுகாலமாக எனக்கு விசயசாரதியைத் தெரியும், அவன் நமக்கு சொல்லாமல் அப்படி செய்கிற ஆள் இல்லை என்றார்.

ஒருமுறை அவர் அனுப்பிய ஆணை ஒன்றை எதிர்த்து மு.ப.பொ வைப் பார்க்கச் சென்றபொழுது, உடன்வந்த அனைவரும் மறுத்தபோதும், நான் அவரிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றேன். உங்களது இந்த ஆணையை எதிர்த்து, நாங்கள் மேலதிகாரியைப் பார்க்கச்செல்கிறோம் என்று, பின்னர் நாங்கள் சென்ற அலுவல் சித்தியாகவில்லை. அப்படி நடக்காவிட்டாலும் பரவாயில்லை, அவரிடம் சொல்லாமல் போகக்கூடாது என்ற எண்ணம் எனக்கு இருந்தது, அதைப்போல அந்த ஆணையைக் கடைபிடிக்கச் சொன்னபோது அதை ஆகச்சிரத்தையாகக் கடைபிடித்தேன். இது ஒருவகை மனநிலை. இதையெல்லாம் கவனித்து வந்தவருக்கு என்மீது இப்படி ஒரு கருத்து இருந்திருக்கலாம். பேசி முடித்த பிறகு, அந்த மின்னஞ்சலை எனக்கு முன்னனுப்பச் சொன்னேன், உடனே அனுப்பினார்.

என்னுடைய பணியிட மாறுதல் ஆணையை நான் பார்த்த தருணத்தில் என்னுடைய உள்ளம் அடைந்த கிளர்ச்சியை எனது முகம் காட்டியிருக்கும் பாருங்கள், அதை நேரில் கண்டவர் அவர் மட்டுமே. என்னிடம் பின்னர் ஒருமுறை சொன்னார். நீ அன்று அடைந்த மகிழ்ச்சியை உன் முகத்தில் கண்டேன், எனக்கு வியப்பாக இருந்தது, அது அளவிடமுடியாத மகிழ்ச்சி என்றார்.

மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் நெஞ்சம் விம்மியிருந்தது எனக்கு, சில அடிகள் நடந்தபிறகுதான், என்னாலே அதை உணரமுடிந்தது.  அறைக்கு வந்து சேர்வதற்குள் அதைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஆனாலும் அறையில் இருந்த சிலரால் என்னுடைய ஆனந்தத்தை அளவிட முடிந்த அளவுக்கு அது கட்டுக்குள் அடங்காததாக இருந்தது. என்னுடைய மின்னஞ்சலைத் திறந்த இடமாறுதல் ஆணையைக் காட்டியபொழுது, மகிழ்ச்சி வருத்தம் இவற்றைவிட அங்கிருந்த பலருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

நான் நண்பர்களுக்கெல்லாம் சொல்லி, வீட்டுக்கும் சொல்லி சிலசமயம் கழித்து, மு.ப.பொ வுக்கு அலைபேசியில் அழைத்தேன்

மிக்க நன்றி

நான் இந்த வகையில் ஒன்றும் செய்யவில்லை, எனக்கு நன்றியெல்லாம் நீ சொல்லவேண்டாம், வாய்ப்பைப் பயன்படுத்தி சீக்கிரம் ஊருக்கு சென்றுவிடு, உனக்கு நல்லது நடக்கும்.

பெரிய வாழ்த்தென்று மனதில் பட்டது எனக்கு.

 

 

3

வருக வென்று அருள்புரியாயே

இதற்கிடையில் நைகாவில் மீண்டும் அணை நிரம்பி ஆயிரக்கணக்கில் கனஅடி நீர் வெளியேற்றம் தொடங்கியிருந்தது. மாலை நேரத்தில் வீட்டுக்குக் கீழே வந்து நின்ற வாகனத்தில், அறுபதினாயிரம் கனஅடி நீர் இப்போது திறக்கப்பட்டிருக்கிறதென்றும், அது என்பதினாயிரம் கனஅடி யாக உயர்த்தப்பட இருக்கிறதென்றும் ஒலிபெருக்கி மூலம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நான் அவசர அவசரமாகக் கீழே இறங்கி, பேசிக்கொண்டிருந்தவரிடம், இதைவிடவும் அதிகமாக நீர் திறப்பீர்களா என்று கேட்டதற்கு, தெரியாது, ஆனால் திறந்தால் சொல்லிவிட்டுத்தான் திறப்போம் என்றார். உடலில் பயம் மீண்டும் தொற்றிக்கொண்டது.

வீட்டுக்கு வந்து உடனடியாக விமானத்தில் பயணச்சீட்டு பதிவுசெய்தேன், ஒருவேளை நீர் சூழ்ந்துவிட்டால், சோவா வந்து சேர்வதே கடினமாகலாம் என்பதால், வண்டியையும் வரச்சொல்லி, குடும்பத்துடன் சோவா வுக்கு வந்து தங்கி, காலையிலேயே வானூர்தி ஏறி கென்னை வழியாக நூத்துக்குடிக்கு வந்து இறங்கினேன். வெள்ளத்தால் அடைந்த துயர்களுக்குப் பிறகு எங்களைப் பார்ப்பதாலும், பணியிடமாறுதல் தந்த நல்லதிர்வுகளாலும் அப்பாவும் அம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்களை எதிர்பார்த்து நின்று வரவேற்றார்கள்.

குடும்பத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு மீண்டும் நைகா வுக்கு வந்தேன். குடும்பத்தோடு பிரியாவிடை பெற்றுக்கொள்ளாதது, ஒரு சிறு மனக்குறையாக என் மனைவிக்கு இருந்தது. அது பெண்களுக்கு இருக்கும் இயல்பான குணம்தான் என்பது என்னுடைய புரிதல். அதன் மூலங்களை நான் இங்கே விளக்க விரும்பினால், விரிவடையும். எனக்கு அந்த எண்ணம் கிடையாது. உடனடியாக ஊருக்கு வந்து நாடங்குளத்தில் சேர்ந்துவிடவேண்டும் என்பதுதான் எனக்கிருந்த முக்கிய சிந்தனை. அதற்குக்காரணம் வேறொன்றுமில்லை. மனிதர்கள் யாருடைய உதவியும் இந்த இடமாறுதல் ஆணையில் எனக்கு இருந்தததாகத் தெரியவில்லை. இது தாமதமானால் நாளை நாம் அணுகி நிற்பதற்கு நமக்கோர் ஆளில்லை. அதனால் இறைவன் அருளிய வாய்ப்பின்மேல் அதிகக் காலம் கடத்தக்கூடாதென்ற எண்ணமும் ஒரு காரணம். அதற்கும் மேலாக என்னுடைய இடமாறுதல் என்பது, நான் பணியாற்றும் பிரிவிற்கும், நைகா தமிழர்களுக்கும், என்னுடன் பழகும் நண்பர்களுக்கும் எப்படிப் பார்த்தாலும் பெரிய மகிழ்ச்சியைத் தரவல்லது அல்ல. இது என்னுடைய எண்ணம். மாறுபாடுகள் இருக்கலாம். தினசரி வாழ்வியலில், அலுவலகத்தில், பணியாற்றும் பிரிவில், விருந்துகளில், தமிழர்களின் கூடுகைகளில் என எப்படிப்பார்த்தாலும் நான்  இருப்பது மகிழ்வுக்குரியதுதான். இல்லாமல் இருப்பது அதன் எதிர்நிலைதான். அதனால் நீண்டகாலம் நைகாவிலேயே இருந்துகொண்டு, உடனிருப்போரின் கவலையை அதிகரிக்கக்கூடாது என்று நினைத்தேன்.

இந்த நிலையில் என்னுடைய மு.ப.பொ நீள்விடுப்பில் இருந்தார். அதனால் மீண்டும் பிரிவின் இரண்டாம் நிலையில் இருப்பவரைச் சந்தித்தேன். தமிழில் தருகிறேன் படியுங்கள்..

வா..

எனக்கு விடுப்பு ஆணை வேண்டும்..

இப்போதா...2021 ல் தான் உனக்கு விடுப்பு தரமுடியும். இப்போதுதான் ஒருவரை அரோரா வுக்கு விட்டிருக்கிறோம், கட்டுப்பாட்டு அறைக்குப் புதிதாக வந்தவர் இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லை, அதனால் நீ இப்படி உடனே விடுப்பெல்லாம் கேட்கக்கூடாது...

இல்லை, எனது குடும்பத்தை எல்லாம் நான் ஏற்கனவே ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டேன், இனிமேல் அவர்களை என்னால் அழைத்துவரமுடியாது, என்னை விட்டுவிடுங்கள்...

இராமசாமி அக்டோபர் இரண்டாவது வாரம் கேட்கிறார்...

எனக்கு செப்டெம்பர் இரண்டாவது வாரமே போகவேண்டும்.

அதெல்லாம் முடியாது, போய் எரிபொருள்  நிரப்பும் வேலையைப் பார்.

இந்த நேரத்தில் அவரது தொலைபேசி ஒலித்தது. நான் இசக்கியம்மனை மனதில் நினைத்துக்கொண்டேன். இக்கட்டில் இப்படி நினைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு.

அந்த அலைபேசியில் அந்தப்பக்கம் நிலைய இயக்குனர் பேசினார். மு.ப.பொ இல்லாததால் இவருக்கு அழைத்திருக்கவேண்டும். எரிபொருள் கையாளும் பிரிவில் இஃதோர் நடைமுறை. அது குறித்து வேறுயாரிடமும் விவாதிக்கமுடியாது.

அவர்களது தொழிலக விவகாரங்களைப் பேசி முடித்தவுடன், போகிறபோக்கில்

இந்த விசயசாரதி விடுப்பு ஆணை கேட்கிறான் என்றார்.

அவனை வைத்து இனிமேல் என்ன செய்யப்போகிறாய், விட்டுவிடவும்..

இந்தமாதமே...

விட்டுவிடு....

அதிசயமான மனநிலையுடன் உன்னை விடச்சொல்கிறார், கோப்பில் நான் நீ சொன்ன தேதியை எழுதிவிடுகிறேன்...மகிழ்ச்சியாக உன் சொந்த ஊருக்குப்போகலாம் என்றார்.

நாம் இடமாறுதல் விண்ணப்பத்தில்தான், இவனுக்கு ஒன்றும் செய்யவில்லை, இந்த விடுப்பு ஆணையிலாவது உதவி செய்வோம் என்றவர் எண்ணியிருக்கவேண்டும், இல்லையென்றால் மறுத்திருக்கமுடியும்..

நிலைய இயக்குனர் ஏன் அப்படி விட்டுவிட சொன்னார் என்பது குறித்து எனக்கொரு புரிதல் இருக்கிறது. அதைச் சொல்கிறேன்.

 

4

 

அம்மை எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே

கை சோர்ந்து, கால் சோர்ந்து மெய் சோர்ந்து நான் நடந்துகொண்டிருந்தேன். குடியிருப்புப்பகுதி ஒன்றின் வாயிலில் இருந்து உள்நோக்கி நடந்துகொண்டிருந்தேன். தள்ளாடி அலைந்துகொண்டிருந்தேன் என்று சொல்லவேண்டும். நான் அப்போது அணிந்திருந்த ஆடைகளை அணிந்து சிலநாட்கள் ஆகியிருக்கும், மாற்று ஆடைகள் என் கைவசம் இல்லை, கட்டிய சேலையுடன் ஓடிவிட்டாள் என்பார்கள் அல்லவா, அதைப்போல உடுத்தியிருந்த ஆடைகளுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வந்து இரண்டுநாட்கள் ஆகியிருந்தன. குளிருக்கிடையில் அவ்வப்போது ஏற்பட்ட புழுக்கத்தில், என் மேனியிலிருந்து வந்த வாசம் எனக்கேப் பிடிக்கவில்லை. அப்போதுதான் அந்த மகிழ்வுந்து வந்தது.

நான் கைநீட்டி மறித்தேன். எனக்கு வேறுவழி தெரியவில்லை. போக, யாராக இருந்தாலும் அப்போது உதவிகள் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வண்டி, நிற்பது போல் வராமல், வேகமாக வந்து, பின் என்னருகே தீடிரென நின்றது. வண்டியை ஓட்டும் வலவர் செல்ல நினைத்தும், உள்ளிருப்பவ்ர் என்னைக் கவனித்து நிற்கச் சொல்லியிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் வண்டிக்குள் எட்டிப்பார்த்தேன். நிலைய இயக்குனர் அமர்ந்திருக்கிறார். அவர் சில ஆண்டுகள் நான் பணிபுரியும் பிரிவில் மு.ப.பொ வாக இருந்தவர், அப்போதே நான் அவரிடம் பணியிடமாறுதலுக்கு விண்ணப்பத்திருக்கிறேன். அதன்பிறகு நிலையத்தில் பல உயர்பதவிகளுக்கு வந்தவர், இப்போது இயக்குனராக இருக்கிறார்.

அவரைப் பார்த்துவிட்ட பிறகு அந்த வண்டியில் செல்வது சரியல்ல என்பதால், வண்டியைக் கைகாட்டி போகச்சொன்னேன். ஆனால் வலவர் வண்டிக்குள் ஏறுமாறு பணித்தார். அது இயக்குனரின் அனுமதியுடன் நடந்திருக்கும் என்பதனால், என்னுடைய குடையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தேன். அதான் வண்டிய மறிச்சாச்சில்ல...அப்புறமென்ன ஏறவேண்டியதுதான....என்று சன்னமாகப் பேசினார் இயக்குனர். அவரது பேச்சே அப்படித்தான். நல்ல குளிரேறிப்போயிருந்த வண்டியில் அமர்ந்ததும், தளர்ந்தும் வியர்த்தும் இருந்த என் தேகம் சில்லென உணர்ந்து ஆசுவாசமாகியது. சற்று நேரத்துக்கு யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் கவலை தோய்ந்த முகத்துடன், சற்றே தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். அவரே அந்த மவுனநிலையை மெல்லக் கலைத்தார்.

விசயசாரதி....

ஆம்....

குடும்பமெல்லாம் இங்கேதான் இருக்கிறதா...

ஆமா சார்....அங்கே ஒன்னுமே கிடைக்கலை, சின்னவனுக்கு பாலோ, பால்பவுடரோ கிடைக்கவில்லை, அதனால் குடும்பத்துடன் இரண்டு படகுகள் ஏறி இங்கே வந்துவிட்டோம். இப்போது கிரிதரன் சார் வீட்டில்தான் குடும்பத்துடன் இருக்கிறோம்..

யார்..நம் மருந்தகத்தில் இருப்பாரே...

ஆமா சார்.. அவர் வீட்டில்தான்.

ச்ச...என்று சொல்லி மெல்ல உச்சுகொட்டியவர், எல்லோருக்கும் ரொம்ப இடராகப் போய்விட்டது இந்த சூழ்நிலை என்று சொல்லிமுடிக்கவும், அவர் வீட்டின்முன் வண்டி நிற்கவும் நேரம் சரியாக இருந்தது. அவர் இறங்கும் முன் நானும் இறங்கப்போனேன். உட்கார் என்றவர், ஓட்டுநரிடம், இவனை கிரிதரன் வீட்டில்விட்டுவிடு என்றார். இயக்குநர் இறங்கி வீட்டுக்குள் போகும் வரை, இறங்கி நின்றுகொண்டிருந்த வலவர், மீண்டும் ஏறிக்கொண்டார், நான் வண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்தேன். நம் வாழ்விடத்துக்கு இப்படி ஓர் இடர் வந்ததை நினைத்து சார் மிகவும் வருந்துகிறார் என்று என்னிடம் ஓட்டுநர் சொன்னார். நான், என்ன செய்யமுடியும் என்று பதிலிறுத்தேன்.

இடமாறுதல் ஆணைவந்த அடுத்த பத்துநாட்களில் விடுப்பாணையும் பெற்றுக்கொண்டதால், நண்பர்கள் ஏற்பாடு செய்த, செய்ய நினைத்த பல கூடுகைகளில் என்னால் முழுமையாகப் பங்கேற்க முடியவில்லை. பகிரமுடியாத எண்ணற்ற எண்ணங்களின் பதிவுகளோடு சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். இங்கென்ன நடந்தது என்பதை சொல்லவேண்டுமல்லவா?. ஒரேயடியாக எழுதிக்குவிப்பது, எழுதுபவனின் சிந்தனைக்கும் நல்லதல்ல, வாசிக்கும் மனிதருக்கும் நல்லதல்ல.  அதனால் அதை அடுத்து எழுதுகிறேன்.

(கதையில் இருக்கும் தகவல்கள் யாருடைய தனிவாழ்வையும் பிரதிபலிப்பவை அல்ல. மாறாக இருந்தால் அது தற்செயலே)

 

இங்ஙனம்   

இதிகா

31.12.202