Tuesday 10 May 2016

அரசியல் பிழைத்தோர்க்கு அறம்.........

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கித்தாயின் தாள்வாழ்க.


அரசியல் பிழைத்தோர்க்கு அறம்.........
                               (சிறுகதை)

“எப்பா.....என்னவே வெயிலு இது... மண்டைய பொளக்குது.......நம்ம காலத்துலயும் இப்படி வெயில பாத்த மாதிரியே இல்லய.....”. மூக்கநாடார் தனக்கு இறைவனே வழங்கிவிட்ட அந்தோணியார் பட்டம் வைத்த மயிரில்லாத  தலையை தடவிக்கொண்டு, துண்டெடுத்து தலைப்பாகை அணிந்துகொண்டார். அந்தோணிசவரிமுத்து தான் அவருக்கு பெற்றோர் இட்ட திருப்பெயர். மூக்குவாளி பூறியதால் மூக்கன் ஆகி, சாதி மண்டிக்கிடக்கும் அப்பூமியில், வயதைக் கடந்ததைப் போலவே அதையும் கடந்து, தனக்கிருக்கும் சிறு நட்புவட்டத்தில் மூவன்னா என்று பாசமுடன் அழைக்கப்படுகிறார்.

“வந்துட்டாரு, எல்லா வருஷமும் இப்படித்தான் அடிக்குது....அப்பப்ப நமக்கு அதது பெருசா தெரியுது....”. தாணுப்பிள்ளை இன்னும் என்னமோ சொல்லவந்தது போலவே வாயை அசைக்கப்போகையில் கொம்பையாத்தேவர் குறுக்கே வந்துவிட்டார்.

“காஞ்சிவரத்துல செயலலிதா கூட்டத்துல ரெண்டுபேரு செத்தே போனானுகளாம், டிவி யில சொல்லுதாணுக...”
“உம்ம மவன் தினைக்க உம்மகிட்ட பேசுவானவே....அங்கன எப்படி இருக்காம் வெயிலு...ரெண்டுமாசம் போயி இருந்துட்டு வாராதுதான ஆச்சியும் ஐயரும்”.

கோவாலக்கோன் எனப்படும் கோபால்கோனாரின் இந்த கேள்விக்கு, தாணுப்பிள்ளை கொஞ்சம் நேர இடைவெளி விட்டு பதில்சொன்னார்.

“நம்ம சுக்ரரு இப்படித்தான் போயிட்டு இப்ப ஊருக்கு வாரதுக்கு டிக்கெட்டு கிடைக்காம கெடக்காரு... சின்னப்புள்ளைக அதுக பாட்டுக்கு சந்தோஷமா இருந்துட்டு போகுதுக...இதுக்கு எடைல நாம எதுக்கு போயி எடைஞ்சல கொடுத்துகிட்டு.....சுக்கிரனையும் சந்திரமதியையும் அவங்க மகனும் மருமகளும் தாங்குதாங்க... இவோளுக்கு இருக்கமுடியல பாரும்.....நமக்கு நம்ம ஊரு, இந்த சனம், சாய்ங்காலம் ஆனா இந்த இசக்கிக்கு ஒரு கும்பிட போட்டுட்டு இந்த திண்டுல உக்கார்ந்த்து அளக்கனும்....அப்பத்தான்வே உசிரு வாழ்ந்த மாரி இருக்கு. எதுத்த வீடு பக்கத்து வீடுல என்ன நடக்குதுன்னே தெரியாம எப்ப பார்த்தாலும் கதவ பூட்டிட்டே இருக்கானுவோ அவனுவோ... நம்மளால இருக்கமுடியுமா...போனும் போலத்தான் இருக்கும்...அங்க போனதக்கு அப்புறம் ஊர தேடும்....”.

மேற்குப்பக்கம் சுக்கிரர் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். வெளியூருக்கு சென்று வந்ததில் ஆள் கொஞ்சம் நிறமாகவும் கெதியாகவும் ஆகியிருந்தார். கோயில் மண்டபத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு, காலணிகளை கழட்டிவிட்டு, அங்கிருந்த நல்லியைத் திறந்து, கால்கள் இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றை வைத்துத் தேய்த்து கழுவினார்.

வாயின் ஒருபக்கம் தலையும், ஒருப்பக்கம் உடம்புமாக, ஊனும் நிணமும்  வடிய அரக்கனைக் கடித்துக்கொண்டு, குடல் மாலையணிந்து, வீரப்பல்லும் விரிசடையுமாக, ஒருகையில் மழலையையும் இன்னொரு கையில் மழுவும் ஏந்தி நின்ற, எல்லாமும் வல்ல இசக்க்கியம்மனை கையெடுத்து வணங்கி, அங்கிருந்த கொப்பறையில் இருந்த நீறை எடுத்து நெற்றிமுழுக்க பூசினார் சுக்கிரர். சப்பாணி மாடசாமி கோயில் கோமரத்தாடி அவர். சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு பாலத்திண்டு நோக்கி நடந்தார்.

“வாரும்வே....புள்ளேல் எப்பிடி இருக்குதுக....ஒரு மாசமா நீரு இல்லாம ஒரு பேச்சும் எடுபடலை...என்ன கோனாரே.... அப்புறம் ஒன்னு சொல்லுதேன் கேளும்...இப்படி கால் மேல காலையே வச்சு தேச்சு கழுவ பிடாதுன்னு ஆசாரக்கோவை சொல்லிருக்குவே.....கேட்டீரா”....

“பிள்ளைவாள்.....அதெல்லாம் உங்கள மாதிரி பெரிய ஆளுங்களுக்கு...கஞ்சிக்கு வழியில்லாம வயக்காட்டுல கெடக்க மனுஷனுக்கு சாத்திரம் சம்பிரதாயம் எல்லாம் கிடையாது....சரி அது போட்டும்....இங்கன யாருவே செயிப்பா?”.

மூவன்னா தான் முதலில் தொடங்கினார். “ ஒன்னும் சொல்லமுடியல வே...ஒரு மாதிரி மந்தமா இருக்கு எலெக்ஷன்.....நம்ம காலத்துல என்னா கூட்டம், என்னா பிரச்சாரம்...திமுகா ல எல்லாரும் தமிழ் பேர் வைக்கிறாங்கன்னு...நம்ம குமாரசாமி தன்னோட பேர இளங்கோ ன்னு மாத்திகிட்டார்....கையில ஒரு சின்ன தாளம் வச்சுகிட்டு...ஆபத்து அண்ணே ஆபத்து....அண்டா நிறைய சொத்து சேத்திருக்கும் அண்ணமாருக்கு ஆபத்து ன்னு ஆடிக்கிட்டே பாடுவார். பழச வுடும்....தொன்னுத்தி ஒண்ணுல இங்க நடேசன்பால்ராஜ் செயிச்சாரே, இந்த கோயிலுக்கு மண்டபம் கட்டபோறோம் னு நானும் அருணாசலமும் தான் போனோம்...மனுசன் ரெண்டாயிரம் தந்தாரு......”

கோயில் மண்டபத்தில் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் நடேசன் பால்ராஜ் ரூ.2000 என்று கல்வெட்டில் முதல் பெயர் இருக்கிறது இன்னமும். இப்போது இவர்கள் அமர்ந்திருக்கும் பாலத்தில், ஒருநாள் இசக்கி, நல்ல.. தலைக்கு நிறைய ஷாம்பூ போட்டு குளித்த பெண் போல, சடையை  விரித்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாளாம். சுக்கிரக்குடும்பர் தான் சொல்வார். என்னவென்று பார்த்திட வேண்டியதுதான் என்று சைக்கிளில் அருகே வர வர காணாமல் போனாளாம். இப்போதும் அவர் பாலத்தை பார்க்கும்போது, அங்கே அழகே வடிவான பெண்ணொருத்தி அதே கோலத்தில் அமர்ந்திருப்பது போலவும், திடீரென மறைவது போலவும் இருக்கும். கண்ணைக் கசக்கிக்கொள்வார் குடும்பர்.

“எங்காளு ஒரு கூட்டம் பாசக கூட கூட்டணி வச்சு ஏகப்பட்ட சீட்டு வாங்கியாச்சு...செயிக்குமோ என்னமோ...இப்படித்தான் ரெண்டாயிரத்து ஒண்ணுல, கண்ணப்பன் மக்கள் தமிழ்தேசம் னு ஒரு கட்சி தொடங்குனாரு....மானம் காக்க வந்ததையா மக்கள் தமிழ் தேசம் னு பாட்டெல்லாம் போட்டன்.....அப்ப இதுவரைக்கும் மானமில்லாமயாடே  இருந்தோம் னு நம்ம பேச்சியக்கா வாசநடை ல உக்கார்ந்து சிரிப்பா சிரிக்கும். பயலுவோ அழகுமுத்து படத்த ஒருபக்கமும், கண்ணப்பன் படத்த இன்னொருபக்கம் அடிச்சு சட்ட போட்டுட்டு அலைஞ்சானுக...இப்ப என்னடான்னா கண்ணப்பனையும் காணோம், அவராவது போவட்டும், அண்ணாதிமுகா வுல போயி சேந்துட்டாரு.... அழகுமுத்த இப்ப கோனாரே இல்லை, சேர்வைக்காரர் னு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு....இப்ப அழகுமுத்த யாரு காப்பாத்துவான்னு தெரியல....அவர புடிச்சு பீரங்கி வாயில வச்சு சுட்டுருக்கானுவோ வெள்ளக்காரனுவோ...இவனுக என்னடான்னா...அவரு என்ன சாதின்னு அடிச்சுட்டு  திரியுரானுக...பொறவு நாடு எப்படி உருப்படும்றேன்.....”

தாணுப்பிள்ளை எப்போதும் மென்மையாக ஆழமாக பேசுவார். அதிர்ந்து பேசத்தெரியாது அவருக்கு. ஒரே மகன், வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்விட்டான். ஏகப்பட்ட சம்பாத்தியம். தினமும் மாலையில் அலைபேசியில் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசுவான். புதிதாக வீடு கட்டி, பெரிய தொலைக்காட்சி, ஏசி, வாசிங்மெசின் என சகல வசதிகளும் செய்துகொடுத்திருக்கிறான். ஊருக்கு வந்தால் வாசலில் உட்கார்ந்து தகப்பனும் மகனும் சைவ சித்தாந்தத்தை பிரித்து மேய்ந்துகொண்டு இருப்பார்கள்.மெய்கண்ட சாத்திரம் முதல், பெரியபுராணம் வரை அலசப்படும். மாலை வேளையில் வீட்டின் முத்தத்தில் இருக்கும் ஊஞ்சலில் அம்மாவையும் அப்பாவையும் வைத்து ஆட்டிக்கொண்டே திருவாசகம் ஓதுவான். வீட்டு பூசை அறையில் தகப்பனும் மகனும் பஞ்சபுராணம் சேவிப்பார்கள் சிவபெருமானுக்கு. ஊரே அதிசயமாக பார்க்கும். ஊரில் கார் வைத்திருக்கும் அனைவரும், காரின் பின் ஆடியில்  தனது குடும்பத்தார்கள் பெயரைக் குறுக்கும் நேருமாக எழுதி வைத்திருக்கையில், தானுப்பிள்ளை காருக்குப் பின்னால் “நற்றுணையாவது நமசிவாயவே” என்று எழுதியிருப்பார். மகனுக்கு  மணமாகி இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. மருமகளும் கெட்டிக்காரி. மூத்தவர்கள் எனும் அதிகாரமோ, காலத்துக்கும் உழைத்து  பிள்ளையை படிக்கவைத்த பெருமையோ இவர்கள் இருவருக்கும் கொஞ்சமும் கிடையாது. மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் எனும் சிந்தனையால், குடும்பம் சுமூகமாக இருந்தது.

“திருநெல்வேலி னாலே ஒருகாலத்துல புள்ளமார்தான் ராச்சியம். இப்ப கொஞ்சம் தேவமார் ஆளுங்க அதிகமாயிட்டாங்க. சிவப்பிரகாசமும் ஏஎல்எசு ம்தான் ஆளுங்க. ஏஎல்எசு எம்எல்ஏ வா இருக்கும்போது கூட, கோயில் தெப்பக்குளத்து படித்துறைல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம் நாங்க. ஒண்ணு சொல்லுதேன் கேளும்....அம்பாளுக்கு பேரு காந்திமதி கிடையாது. வடிவுடைநாயகி. நல்லவேளை சாமி பேர நெல்லையப்பர் னு அப்படியே விட்டுட்டானுக. ஆதிசங்கரர் ஒரு சாக்தர். அதனால எல்லா ஊருலயும் அம்மனுக்கு மட்டும் பேர மாத்திப்புட்டார். அங்கயற்கண்ணி மீனாட்சி, வடிவுடைநாயகி காந்திமதி....ஆனா சாமி இன்னைக்கும் சொக்கன் சொக்கன்தான், நெல்லையப்பர் நெல்லையப்பர்தான்.”

என்னதான் சமூகம் அரசியல் குறித்து பேசிக்கொண்டு இருந்தாலும் இடையிடையில் சாமியை பற்றி கொஞ்சம் பேசாமல் இருக்கமாட்டார் பிள்ளைவாள். சிலசமயம் அதிகம் ஆழ்ந்து போய். பசு பதி பாசம் எல்லாம் பேசத்தொடங்கிவிடுவார். கோபால்கோனாருக்கு பசு என்றால் அவர் வீட்டில் வளர்க்கும் பசுக்கள்தான் தெரியும். போதும் என்று சொன்னாலும் நிறுத்தமாட்டார் பிள்ளை. அப்படி பேசிக்கொண்டே இருப்பது ஒரு மாதிரி ஈச்வரலயம் என்பார்.

“இந்தவாட்டி நயினாருக்குத்தான் வாய்ப்பு அதிகம் னு பேசிக்கிடுதாங்க டவுண் ல. எல்லா சாதியையும் அரவணைச்சு போறார் ல. யோவ்...மூவன்னா...இந்த சரத்குமார அம்மா வளர்க்குதா ஒய்க்குதா ன்னே தெரியலவே....” பிள்ளைவாளுக்கு செயலலிதா அம்மா, கருணாநிதி கலைஞர். இட்டத்துக்கு பேரெல்லாம் சொல்லி பேசமாட்டார்.

“அத ஏன் கேக்குறீங்க..... ரெண்டு நாளைக்கு முன்னாடி, நாங்க கருவேப்பில, மல்லி இல னாரு...பிசேபி கூட கூட்டணி னார், டபால்னு அந்தம்மாட்ட போயி சிரிச்சுக்கிட்டு சீட்டு வாங்கிட்டு வந்திருக்காரு. நாங்குநேரிய வாங்கிருக்கலாம், திருசெந்தூர் ல அனிதா நெம்ப உறுதி, நம்மாளு கத கொஞ்சம் டைட்டுதான். இதுல இன்னொரு கொடும என்னா தெரியுமா கொம்பு....இந்த அனிதா செயலலிதா விடுதலை ஆன அன்னிக்கி, வெடி வெடிச்சு கொண்டாடி இருக்கார், எந்தொகுதில நின்னு அம்மா செயிக்கட்டும் நான் விட்டுக்கொடுக்கிறேன் னு பேட்டி எல்லாம் கொடுத்தார், அவருக்கு திருப்பியும் திமுகா வுல சீட்டு கொடுத்திருக்கானுக...அப்பன்னா நெலம எப்படி இருக்கும்னு பாத்துக்கிடும். சரத்குமார நீங்க இன்னொரு கட்சித்தலைவரு எப்படி இரட்டை இலை ல நிக்கமுடியும் னு வேட்புமனு வாங்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அப்புறம் செயலலிதா கூட நின்னு புடிச்ச போட்டோ எல்லாம் காட்டி சரி பண்ணி இருக்காங்க. உங்க கார்த்திக்க வுட கேவலம் னு நம்ம பயலுக பேசிக்கிடுதாணுக”.‌

மூக்கநாடார் ஆட்கள் அந்த ஊரில் ஆகக்குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். அவர்களில் இவர்தான் பெரியவர். தனது மகளுடைய திருமணத்துக்கு, ஊரில் அத்தனை பேருக்கும் பத்திரிகை வைத்தார். சாதி வேறுபாடு இல்லாமல் திரண்ட கூட்டத்தைக் கண்டு மாப்பிள்ளை வீட்டார் திகைத்துப் போனார்கள். வெள்ளையும் சொள்ளையுமாய் வீட்டு வாகனங்களை எடுத்துக்கொண்டு கல்யாணம் நடந்த மண்டபத்துக்கு செல்லும் வழியில் டிராபிக் நெரிசல் வரும் அளவுக்கு களைகட்டிவிட்டார்கள். மூவன்னா வுக்கு அந்த ஒரு பெருமையே போதும் போல இருந்தது, இந்த ஊரில் வாழ்ந்த வாழ்க்கைக்கு. 

கொம்பையாத்தேவர் க்கு கொஞ்சம் அண்ணாதிமுகா ஆதரவு பார்வை உண்டு. “ செயலலிதா வுக்கு இப்ப இருக்கிற பிரச்சினையே அவங்க உடல்நிலைதான் கேட்டேளா... வயசாயிட்டு இல்ல.. இப்ப மட்டும் பழைய மாதிரி எல்லா ஊருக்கும் வந்து பேசமுடியும்னா இங்க ஒரு பயலும் செயிக்க முடியாது. கருணாநிதிய அவரு நல்லா இருக்கும்போதே எம்சியார் கவுத்திட்டாரு…. ஆனா இவங்க ரெண்டு பேரையும், நிக்க நடக்க முடியாம வயசான பொறவுதான் இங்க மூணாவது அணி, நாலாவது அணி ன்றானுக.... ஏற்கனவே செத்துப்போன வீரபாண்டியன் தலைய வெட்டிபுட்டு, வேங்கியும் கலிங்கமும் வென்று வீரபாண்டியன் தலைக்கொண்ட ஆதித்தகரிகாலன் னு பட்டம் போட்ட கததான் போரும். இதுல சிங்கக் கூட்டணி வேற, என்னமும் துட்டுகிட்டு வாங்கிட்டாணுவளோ என்னமோ... நம்ம தொகுதி வேட்பாளர் அதெல்லாம் இல்லைன்னு ஊருக்கு ஊரு பேசிக்கிட்டு இருக்காரு, இந்த பார்வார்டு பிளாக்க சேர்த்து ரெண்டு சீட்டு கொடுத்திருக்கலாம் ...செய்யல..... தேவர்மாரு கமுக்கமா இருக்கான், சிங்கத்துக்கு சீட்டுக்கொடுக்கலை, ரெட்டலை க்கு ஓட்டுப் போடப்பிடாது ன்னு சின்ன பயலுக எல்லாம் பேசிக்கிடுதாணுக, அவனுகள்ள பாதி பேருக்கு ஓட்டே இல்ல, தேவர சாதித்தலைவர் னு சொல்லிக்கிட்டு அலையையில, இந்தம்மா பசும்பொன் கோயிலுக்கே போய் தங்கம் கொடுத்திருக்கா...அதெல்லாம் இவனுவோ நெனப்புல எங்க இருக்கு...என்னதான் ஆவுதுன்னு பாப்போம்...”.

“டிவி ல ரெண்டு பெரும் போடுற வெளம்பரத்த பார்த்தா சிரிப்பா வருதுவே... திமுகா காரன் சொல்றான், இப்ப கரண்டு கட்டு அதிகமா இருக்காம், மனிப்பர்சுல பைசாவே இல்லையாம்...அப்புறம் அண்ணா திமுகா காரன கேளும், கடவுளே கேட்டாத்தான் கொடுக்குமாம், அம்மா கேக்காமலே கொடுப்பாங்களாம்,பெரிய அநியாயம் வே...பாக்க சகிக்கல..இப்படியெல்லாம் பண்ணுனா எவன் ஓட்டு போடுவான், வெளம்பரம் வந்தாலே டிவிய மாத்திருவா என் வீட்டுக்காரி”.. தாணுப்பிள்ளைக்கு அத்தைமகளைத்தான் கட்டியிருக்கிறது. இத்தனை வயதுக்குப் பிறகும் இருவரும் கேலி பேசிக்கொள்வார்கள். கனகம்மாள் எனும் ஆச்சியின் பேரை சுருக்கி, “கனகா….”என்று பிள்ளை கூப்பிடும்போது காதல் ததும்பும் காற்றில். “கொஞ்சம் தண்ணி கொண்டா” தார்சாவில் உட்கார்ந்துகொண்டு கேட்பார். இப்போதெல்லாம் மனைவிகள் டிவி பார்த்துக்கொண்டு இருந்தால் கூட, “ஏன் எந்திரிச்சு வந்து குடிக்க வேண்டியதுதானே” என்கிறார்கள். ஆச்சி குத்தவச்சி ஏனம் கழுவிக் கொண்டிருந்தாலும் கூட, அதில் ஒரு சொம்பை சுத்தமாகக் கழுவி, கையூன்றி எழுந்துவந்து நீர் நிரப்பிக் கொண்டுவந்து கொடுக்கும். கைநீட்டி இந்தாருங்க ஐயா...” எனும் வார்த்தையில் பாசத்தை குழைத்துவிடுவாள் ஆச்சி.

சுக்கிரக்குடும்பர், அரசியலை வித்தியாசமாக அணுகும் முறையைக் கொண்டவர். ஐந்துகோடி வாக்காளர்கள் இருக்கும் நாட்டில், பல பிரச்சினைகள் பல இடங்களில் வாக்குகளைத் திருப்பலாம். ஆனால் என்றைக்கும் எல்லா இடத்திலும் தேர்தலை திருப்பும் விதமாக  இழையோடிக் கிடப்பது இரண்டுதான். ஒன்று சாதி, இன்னொன்று கட்சிகளின் கூட்டணி. அறுபத்திஏழில் கூட, திமுகா பெரும் கூட்டணி அமைத்துதான் காங்கிரசைக் கவிழ்த்தது. பிறகு எம்சியார் தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணி வைத்து, மத்தியத் தேர்தலில் அவர்களுக்கு அதிக இடமும், மாநிலத் தேர்தலில் இவர்களுக்கு அதிக இடமும் என பங்குபோட்டுக்கொண்டு வெற்றிபெற்று வந்தார். இனிமேல் முடியாது எனும் நிலையில் திமுகா வும் காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொண்டது. தமிழகத்தில் கால்நூற்றாண்டு காலமாக ஆட்சிகள் மாறி மாறி வந்த போதெல்லாம், எதிரணி உறுதியான கூட்டணியை அமைத்து வந்திருக்கிறது. ஈழப்படுகொலைக்குப் பிறகு காங்கிரசு பெருமளவுக்கு வலுவிழந்து போன நிலையில், கூட்டணிக் கணக்குகளும் மாறிப்போயின. மாறாக அண்ணாதிமுகா ஐந்தாண்டு காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. இப்போதிருக்கும் சின்ன தடுமாற்றத்துக்கு காரணம் செயலலிதாவின் உடல்நிலை ஒத்துழைப்பு குறித்ததுதான். வழக்கினால் சிறைவாழ்வும், சென்னை மழையும் கொஞ்சம் அதிமுகவுக்கு கெட்ட பெயர் என்றாலும், செயலலிதா அடிக்கடி கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்திருந்தால் அவை குறைந்து போயிருக்கும் என்பதே சுக்கிரக்குடும்பரின் கணிப்பு.

“இந்த திமுகா ஒரு சரியான கூட்டணிய போடாம விட்டுருச்சே.... கூட்டணி ஆட்சி வேணும்னு திருமா கூட்டம் போட்ட அன்னைக்கே அவர மட்டும் கைக்குள்ள போட்டிருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது. பீகார் மாதிரி ஒரு பெருங்கூட்டணி போட்டிருக்கலாம். முடியாம போச்சு... அதனால தான் தேர்தல் ல இத்தன இழுபறியும்”. பெரும்பாலும் தமிழகத்தின் தென்பகுதி அரசியலை மட்டுமே பேசிக்கொள்ளும் அவர்களுக்குள், சுக்கிரக்குடும்பர் மட்டும் வடதமிழகம் தாண்டி, வடநாட்டு அரசியலையும் பேசுவார். தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழகத்தின் சாதிகளுக்கு பிடிகொடுக்காமல் தேசிய அரசியலோடு கலந்து போராடவேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு.

“எனக்கென்னவோ நிறைய சின்ன சின்ன கட்சிகள் இந்த தேர்தலோட ஓஞ்சு போகும் னு தோணுதுவே....பொதுவா சாதி மதம் பேசுற ஆட்கள் தேறுறது நெம்ப கச்டம். பிசேபி யும் பாமக வும் பெருசா ஒண்ணும் கூட்டணி அமைக்காம செயிக்க முடியும் னு தோணல எனக்கு. விசிக, புதியதமிழகம் எல்லாம் கொஞ்சமாவது ஒரு சில கட்சியோட சேர்ந்திருக்கு.... சான்பாண்டியன் அதையும் செய்யல. வேணும்னா திருவாடானை ல இந்த கருணாசு செயிக்கிறத ஓட்ட பிரிச்சு கவுக்கலாம். அங்க உங்க கோனார் வேற நிக்கார் னு நெனைக்கேன். ஆனாலும் கொம்பு...இந்த தேவர்மாரு பூராம் ஓட்டு போட்டா....கருணாசு வந்துருவான் ன்னுதான் சொல்லுதாணுக...பாப்போம்.”.

மூவன்னா கூட இன்னும் கொம்பையாத்தேவரை பாண்டியன் என்றுதான் அழைப்பார். பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஆனால் சுக்கிரர் கொம்பு என்றுதான் கூப்பிடுவார். சிலசமயம் கால்வலிக்கிறது என்று கொம்பையாத்தேவரை சைக்கிள் மிதிக்கச்சொல்லி பின்னால் உட்கார்ந்துகொள்வார் சுக்கிரர். ஊரில் சின்னப்பயலுகள் சிலபேர் இதை ஒரு குறையாக கொம்பையா விடம் சொன்னபோது, இரும்பு பூண் போட்ட கைத்தடியைக் கொண்டு அடிக்கப் போய்விட்டார். கிழடு போகட்டும் என்று விட்டுவிட்டார்கள் அப்புறம்.

“பாண்டியன் ஓண்டியன் ன்னுகிட்டு...... என்ன பெரிய பரம்பரை...எல்லாரும் ஒரு காலத்துல பெரிய பரம்பரை தான். தமிழ்க்குடி ல சாதியே கிடையாதுவே...சங்க இலக்கியங்கள் ல எங்கினியாச்சும் இருக்காவே....அப்புறம் என்ன வாழுது....மூவன்னா இனிமே இப்படியெல்லாம் கூப்பிடாதீயும் வே...ஒருமாதிரி கூசுது எனக்கு. சோத்துக்கு வழியில்லாம நீரு என் வயல்லையும் நான் உம்ம வயல்லையும் மாத்தி மாத்தி கதிரு அறுத்திருக்கோம்.. இதுல யாரு ஒசத்தி..... இசக்கி தான் எல்லாருக்கும் பெரியவா.....வேற எல்லாரும் ஒண்ணுதான் போம்...”. என்று சொல்வார் கொம்பையாத்தேவர்.

“தொன்னூத்தி ஆறுல இருந்து ரெண்டாயிரத்து பதினொன்னு வரைக்கும் கருணாநிதி ஆட்சி நல்லாதான் இருந்துச்சு..... நம்ம பக்கம் நடந்த சாதிக்கலவரம் அப்போதைக்கு இருந்த பெரியகுறை. அதையும் கூட கடைசி நேரத்துல் சாங்கிட்டு மாதிரி ஆளுங்கள போட்டு அடக்கிட்டாரு கலைஞரு. ஆனாலும் அந்தம்மா தமாகா கூட கூட்டணி போட்டு ஆட்சிக்கு வந்துருச்சு. அதுக்கு அடுத்த தேர்தல் ல, இந்த அரசு ஊழியர் பிரச்சினை, சாலைப்பணியாளர் மக்கள்நலப்பணியாளர், அப்படியே மதமாற்ற தடை சட்டம், கோயில் ல ஆடுகோழி வெட்டப்புடாது ன்னுது...இதெல்லாம் கூட கூட்டணியும் ஒரு மாறுதலை கொண்டுவந்துச்சு....”

“அப்ப சிறுமளஞ்சி கோயில் ல பன்னிகள் எல்லாம் தானா ஓடிப்போயி பரண் ல படுத்துகிச்சாம் ல......ஒத்தப்பனை சுடலைன்னா சும்மாவா.....”


சுலோசனமுதலியார் பாலத்துல மாஞ்சோலை தோட்டத்தொழிலார் போராட்டம் நடத்துனப்ப, ரெண்டு பக்கமும் போலீச வுட்டு அடிச்சு பத்து பதினேழு பேரு செத்துப்போனான். அந்த போராட்டத்த நடத்துன கிருச்ணசாமி அடுத்த தேர்தல் ல அதே திமுகா கூட கூட்டணி வச்சாரு. ஆனாலும் அந்தம்மாதான் செயிச்சுது. இப்பகூட பரமக்குடில போலீசு அஞ்சாறு பேர சுட்டுபுட்டு. சான்பாண்டியன் அடுத்த மாசமே அம்மாவுக்கு ஆதரவு ன்னு பேப்பர் ல அறிக்க விட்டிருக்காரு... இதுல இந்த ஏழைசனங்க என்னைக்கு முன்னேற.... இதுக்கு எடைல பிஎல் பிஆர் பிரச்சின வேற இருக்கு....இல்லன்னா திருமா வுக்கு இங்க கொஞ்சம் ஆளு கிட்டும்.”.

“அந்தமாதிரி பிரச்சின இப்ப எல்லா சாதியிலயும் வந்தாச்சுவே....அகமுடையார் ஆளுங்க நாங்க முக்குலத்தோரே கிடையாது ன்னுறாங்க இப்ப. புள்ளமார்களுக்கு கூட இப்படி பல பிரிவின இருக்கு கேட்டீரா....என்ன தாணு.....”
“எங்கள்ல ஒரு கூட்டத்துக்கு கொண்டையங்கோட்டை காரங்க மாதிரி கிளை எல்லாம் கூட உண்டு. ஆனா உங்கள மாதிரி அம்மா வழி கிளை கிடையாது பாரும். அப்பன் கிளைதான் புள்ளைக்கு.”

“எளவு சாதிஎல்லாம் இன்னாட்டுல ஒழிஞ்சுகிடாது வே.... வேற வேற சாதிக்குள்ள இருந்த பொரச்சின போய்...இப்ப ஒரே சாதிக்குள்ளேயே பல பிரிவின இருக்குன் ரானுக......எல்லாம் மனுச சாதிதானவே....என்ன சொல்லுதீரு....கோவாலக்கோன்...மாலக்கோனாரு மகன் அன்னைக்கு பள்ளிகூடத்துல இதையெல்லாம் ஒழிக்கணும் னு ஒரு பாட்டு படிச்சானவே கேட்டீரா”.

“எல்லாம் சின்னப்புள்ளைகள் ல இப்படித்தான் பாடுராணுக....வளந்ததுக்கு அப்புறம் வாசகசாலை கூட்டத்துல இவனுவோ தான் மொத ஆளா நிக்கான்”.

“சரி விடும்....யாருதான் செயிப்பான் னு நெனக்கிறீகோ........”

“ஒன்னும் அடபடலவே.....வைகோ திடீர்னு நான் போறேன் னுட்டு போயிட்டாரு, எதாச்சும் பிரச்சினை ன்னா வேற எடத்துல நிக்குறதுதான ன்றேன்.....”

“திமுகா வெவசாயக் கடன எல்லாம் தள்ளுபடி பண்றது ன்னு சொன்னவொடனே வந்துருவான் போலன்னு நெனச்சேன்...இந்த செயலலிதா அதையும் சேத்து ஏகப்பட்டத சொல்லிருக்கு. என்னமும் நாலுபேருக்கு கெடச்சாலும் நல்லதுதானவே....போன அஞ்சு வருசத்துல எல்லாம் குடுக்கத்தான செஞ்சுது....நமக்கும் கொடுக்காம இந்த துட்டெல்லாம் எங்க போவபோவுதோ....நமக்காவது தந்தா என்னா.....?”.

“இந்த தடவ துட்டு கொடுக்கமா ஓச்சு புடுவான்வ போல இருக்க......அங்க புடிச்சான் இங்க புடிச்சான் னு டிவி ல போடுதான.....எம் மகன் வேற ஓட்டுக்கெல்லாம் துட்டு வாங்கப்பிடாது ன்னு ஏசுதான்.....போன தடவ வேண்டாம் னு சொன்னதுக்கு பண்ணைய வீட்டுல ஏகப்பட்ட ஒகல.....பெரிய பணக்காரன் ஆயிட்டானோ, ஓட்டு போடுதான்... இல்ல....., துட்ட வாங்குனா என்னான்னு பேசிருக்கானுவோ.......”

“இதுல அண்ணாதிமுகா வுல துட்டு குடுக்கவனுக்கும் இவனுக்கும் ஆகாது, அதான் வேண்டாம் னு சொல்லிட்டான் னு இழுத்துவுடுதானுக......என்னத்த சொல்லதுக்கு......”

“எம்பொஞ்சாதி ஊருல எல்லாம் ஆளுக்கு அறநூறு ரூவா கொடுத்தாச்சாம்....அவ தம்பி போன் பண்ணி சொல்லிருக்கான்.....”

“யோவ்...இந்த பண்ணி ன்றது தமிழ்ச்சொல் இல்லல்லா......”

“ம்க்கும்....இப்ப எது தமிழு எது இல்லங்கிரதுல ஏகப்பட்ட குழப்பம் இருக்கு....வேற மொழில இருக்குன்றதுக்காகவே அது தமிழ் இல்லன்னு ஆகிடுமா....அங்கன இருந்து இங்க வந்ததுக்குத்தான் கணக்கு உண்டா....இங்க இருந்து அங்க ஒன்னும் போயிருக்கிறதா என்ன?.”

“பண்ணும் அயன் கையாறவும் அடியேன் காலாறவும் கண்பார் ஐயா திருவையாறா ன்னு பட்டினத்தார் பாடலியா......”

“சரி கிடக்கு விடும்......அப்ப அண்ணாதிமுகா ஆட்சிக்கு வந்துரும் கீரு........”

“ஏன் அப்படி சொல்லுதேன் ன்னா....”

“பாண்டியன்...உங்க ஆசைய எங்கமேல திணிக்கப்பிடாது ஆமா.....”

கொம்பையாத்தேவர் அமைதியாகிவிட்டார். சுக்கிரக் குடும்பர்தான் பேசத்தொடங்கினார். விருப்பு வெறுப்பு இல்லாமல் அரசியலை ஆய்ந்து வழங்கும் குணம் அவருடையது என்பது தெளிந்தபடியால், அனைவரும் ஆவலாகக் கேட்கத் தொடங்கினார்கள்.

“எனக்கும் அப்படித்தான்வே தோணுது....அது ஏம்னா ஏற்கனவே சொன்னதுதான்...எல்லாரும் அங்க இங்கன்னு ஓட்ட பிரிக்கானுவோளா..... அதுல செயலலிதாவுக்குதான் வாய்ப்பு அதிகம். பாமக ஒரு பக்கம், நாம்தமிழர் ஒருபக்கம், பாசக ஒருபக்கம் வைகோ கூட்டணி ஒருபக்கம் னு இழுத்தா....இது எல்லாம் திமுகா வுக்கு சேரவேண்டிய ஓட்டுத்தான் பாரும்...சிங்கக்கூட்டணி என்னமாச்சும் ஓட்டு வாங்குனா அதுதான் அண்ணாதிமுகா ஓட்டு....ஆனா அதுக்கு எல்லாரும் தயாரானமாறி தெரியல.....அங்க இங்க அந்தம்மா மேல வெறுப்பு கொஞ்சம் இருக்கு...ஆனா அதிகமா இல்ல.. இருக்கிற கொஞ்ச வெறுப்பு ஓட்டும் இப்படி பிரிஞ்சு போச்சுன்னு வையும்....அது அவுகளுக்குத்தான் சாதகம். போன பார்லியமெண்டு தேர்தல் ல அவுங்க அதிகமா செயிச்சு திமுகா ஒன்னும் இல்லாம போனதுக்கு இதான்  காரணம். இந்த தடவ அதுக்குள்ள கூட நிறைய அடிபிடி இருக்கிறதால திமுகா வுக்கும் கொஞ்சம் வாய்ப்பு இருக்கலாம். எல்லாம் எலேஷன் முடியட்டும் தெரிஞ்சுகிரலாம்....வாரன் வே....”சைக்கிளைத் தட்டும் நோக்கில் மெல்ல கோயில் மண்டபத்தை நோக்கி நடந்தார் சுக்கிரக்குடும்பர்.

-பழநியாண்டிச்சங்கரன்.

10.05.2016