Saturday 30 April 2016

வாழி நண்பினை உன்னி.......கிப்டன்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கித்தாயின் தாள்வாழ்க.

வாழி நண்பினை உன்னி.......
                               (கிப்டன் நினைவலைகள்)


அவசியம்
மறந்துவிடக்கூடாது இந்த மனிதனை. உலகம் உருண்டுகொண்டே இருக்கிறது. ஆண்டிகளும் அரசர்களும் அல்லாதவர்களுமாக மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். பிறப்பு இறப்பு குறித்த எந்த பிரக்ஞை யுமில்லாமல் உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நமது வாழ்வும் அப்படித்தான். வாழ்க்கையில் சிலகாலத்துக்கு நம்முடன் வந்துபோகும் மனிதர்களை நாமும் மறந்துவிடுகிறோம். மறக்கவேண்டியதுதான், நினைப்பது போலவே மறப்பதும் வாழ்க்கையின் அங்கம். என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, நினைவுகள் மீண்டுவரும். ஆனால் மீண்டும் சந்திக்கவே முடியாத ஒரு மனிதனின் நினைவுகள்?. அதனால் எழுதி வைத்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இல்லையேல் வேகமெடுத்து ஓடும் வாழ்க்கை ஓடத்தின் ஏற்ற இறக்கங்களில் என்றேனும் ஒரு நாள் மறக்கக்கூடும் நானும். அண்மையில் எனது அலைபேசி செயலிழந்து போனது. அதன் பதிவுகளை கருவியில் இருந்து அட்டைக்கு மாற்றிக்கொண்டு இருந்தேன். கிப்டன்தமிழ் என்ற பெயருடன் இருந்த எண்ணை என்னசெய்யவேண்டும் என்று எனக்கே புரியவில்லை. அந்தப் பெயரைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த நினைவுகள் தான் இந்த எழுத்துகள்.


நட்பு
சமகாலத்தில் நட்பு என்பதன் பொருள் பெரும் பிழையாகப் புரியப்பட்டு இருக்கிறது. அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை எல்லாம் நட்புவட்டத்துக்குள் அடக்கிக்கொள்வதில் நட்பின் தரம் தாழ்ந்துபோயிருக்கிறது. இப்போதெல்லாம் நட்பென்றாலே தினமும் சந்திக்கும் மனிதர்களுடன்தான் இருக்கமுடியும் என்றாகிவிட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி நடக்கும் என்பதை அறிந்திருந்ததாலோ என்னவோ  வள்ளுவன், முகநக நட்பது நட்பன்று  என்று எழுதிவிட்டான். இதன் பொருளே, நீ தினமும் பார்க்கும் மனிதன், உன்னோடு படிப்பவன், பணிபுரிபவன், உன்னோடு நடைபயிற்சிக்கு வருபவன் என்று முகம் தெரிந்த மனிதர்கள் மட்டுமே உனக்கு நண்பர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதுதான். நட்பு, எதிர்ப்பு என்பதைத்தாண்டி தமிழில் நொதுமல் என்றொரு உறவுச்சொல் காலப்போக்கில் பயன்பாடு குறைந்துபோனதால், எதிரி இல்லாத அனைவரும் நண்பன் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். அபூர்வமாக சிலரைப் பார்த்திருக்கிறேன். அறிமுகப்படுத்தும்போதே, கூட வேலைப்பார்க்கிறார், தெரிந்த மனிதர் என்று சொல்வார்கள். இல்லையென்றால் பெரும்பாலும் ஆங்கிலத்தில் ஃபிரண்ட் என்று எளிதில், யாரையும் சொல்லிவிடுகிறார்கள். தனது சுயவாழ்வு குறித்து உண்மைத்திறப்பில்லாமல் ஒருவருக்கொருவர் பெருமளவு ஒளித்துக்கொள்ளும் இவர்களின் செய்கைகளின் பின்னால் நின்று பல்லிளிக்கிறது நட்பு. இதில் நம்மைப்போல் வெளிமாநில வெளிநாடு வாழ் மனிதர்கள், தமிழன் இந்தியன் எனும் இன அடையாளம் கொண்டு நண்பர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் அது பேச்சுக்குத்தான் என்பதும், அதில் உண்மையில்லை என்பதும், சில தனித்தகவல்கள் இனத்தைத் தாண்டி நிற்கும் மனிதர்களிடமே அதிகம் உண்மையாகப் பகிரப்படுகிறது என்பதில் தெரிகிறது. ஏனெனில் எப்போதும் தன்வாழ்வு குறித்த  ஒப்பீடும், அதன் நிறைவும், மனங்கொளாமை, எதற்குமான தகுதியின் குறைந்தபட்சம் இம்மாதிரி இனப்பிரிவுகள்தான்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே என்று வள்ளுவன் வகுத்திருக்கும் நட்பிலக்கணத்தை நினைந்து நினைந்து அதிசயித்திருக்கிறேன் நான். எங்கள் ஊரில் ஒரு தாத்தா இருந்தார். திடீரென ஒரு நாள் அவருக்கு வலதுகை ஒரு பக்கமாக இழுத்து வைத்துக்கொண்டது. கையின் மூட்டுகளில் அசைவே இல்லாமல் போய்விட்டது. ஆண்கள் பெண்கள் ஆச்சிதாத்தாக்கள் என தெரு ஆட்கள் முழுக்க அவரைப் பார்க்க வீட்டில் குழுமினார்கள். ஆறுமுகத்தாத்தா வும் இருந்தார். வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டு “இங்கன வாரும் வே....:” என்று கூப்பிட்டார். தாத்தா மெல்ல எழுந்து வரும்போது ஆட்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கையில், எதிர்பாராதவிதமாக சடாரென தாத்தாவின் வேட்டியை உருவிவிட்டார். “யோவ்...என்ன பன்னுதீரு.....” என்ற சொற்கள் வெளிவரும் முன்னமே, தாத்தாவின் வலது கை நீண்டு வேட்டியைப் பிடித்தது.  ஆறுமுகத்தாத்தா சிரித்துக்கொண்டே “சரியாச்சு போரும்” என்றார். தாத்தாவின் வலதுகை மூட்டுகள் சரியானதை ஊர் அப்போதுதான் கவனித்தது. இது ஓர் அனிச்சை செயல் பாருங்கள். நண்பனின் துன்பம் தீர்ப்பதற்கு ஒரு மனிதனின் இதயம் எந்த கணக்கீடும் இல்லாமல்  அனிச்சை செயலாக இயங்கவேண்டும். இதற்கு இப்படி ஒரு உவமையை வள்ளுவன் எப்படிக் கையாண்டான் என்பதில்தான் எனக்குப் பெருவியப்பு. இதுதான் நட்பு. ஆடைக்கலைக்கு தமிழன் அத்தனை பெருமை வைத்திருக்கிறான் அந்தக் காலத்தில். ஆனால் சிறந்த வடிவமைப்பாளர் விருது இறைவனுக்குத்தான் கொடுக்கவேண்டும் எனும் அளவுக்கு, ஆடைகுறைப்புத்தான் அழகு என சிந்திக்கும் காலத்துக்கு வந்துவிட்ட பிறகு, அதற்கு ஒப்பிடப்பட்ட நட்பும் இப்படி பொருள் பிழைத்துப் போனதில் பெருவியப்பு இல்லை.  வள்ளுவன் சொன்னபடி எனக்கொரு நட்பு வாய்க்கும் என்று நான் நினைத்திருந்த காலத்தில் , மழையில் கரையும் மண்சுவராக அந்தக் கனவு கலைந்துபோனது குறித்த பதிவுதான் இந்தக்கட்டுரை.


நதிமூலம்.
ஆறு ஒன்றின் மூலமும், ஆன்மீகம் தேடும் ஒருவனின் மூலமும் அறிதல் எளிதல்ல. தாமிரபரணி தொடங்கும் இடம் என்று மணிமுத்தாறு அடவிக்குள் வீழும் அருவி அறியப்பட்டாலும், அது ஓய்ந்து தூங்கும் காலத்திலும் ஆழ்வார்திருநகரி க்கு கிழக்கே அந்த ஆற்றில் நீர் ஓடக்கூடும். இந்த புள்ளியில்தான் இது தொடங்கியது, இப்புள்ளி அழிந்தால் இதன் தொடக்கமும் அழியும் என்று அறுதியிடமுடியாத நிலைதான் இதற்குக் காரணம். அப்படித்தான் நட்பும் கூட. நட்பின் பத்து குறட்களிலும் அதன் கூறுகளை பகுத்து ஆய்ந்திருக்கிறான் வள்ளுவன். பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு எனும் ஆய்வுமுடிவை அவன் நட்பதிகாரத்தில் பதிகிறான் என்பதே, இதன் மூல ஆய்வு முடியாதது என்பதற்கான சான்று. ஆக எங்கே தொடங்கியது அந்தப் பாசம் என்பதை என்னால் சொல்லமுடியாது என்றாலும், எங்கே முதன்முதலாக அறிந்துகொண்டேன் என்பது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

முகநூல் கணக்கு தொடங்கிய புதிது. சொல்லப்போனால் கணினி வாங்கியதே அதற்குத்தான். கூடங்குளத்தில் அணுமின்நிலையத்தை எதிர்த்து பொதுமக்கள் பெரும்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தருணம். கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரை செட்டிக்குளம் வழியாக மாபெரும் எந்திரஈருருளைப் பேரணி ஒன்று போராட்டக் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் காணொலிப் பதிவு முகநூலில் உலவிக்கொண்டிருக்கிறது. திருப்பூர் செந்தில்குமார் அந்தப்பதிவை தனது பக்கத்தில் பகிர்கிறார். அவரது முகநூல் இணைப்பில் நானும் இருப்பதால் எனக்கும் அது தெரியவருகிறது. செந்தில்குமார் மதிமுக காரர். முகத்தின் அழகைக் கொண்டு அகத்தை அளக்கலாம் என்பது உண்மையானால் செந்தில்குமார் நல்ல மனிதர். திருப்பூருக்கு சென்றிருந்தபோது, திரும்பும் நேரத்தில் தொடர்வண்டி நிலையத்துக்குச் செல்லத் தாமதமாகும் வேளையில், தனது நண்பர் ஒருவரின் (எனக்கு நினைவு சரி என்றால் அவர் பெயர் மயில்சாமி) மகிழ்வுந்தில் எங்களை (உடன் அண்ணன் பெரியார்குமார்) தொடர்வண்டி நிலையம் வரைக்கும் அழைத்துவந்து அளவளாவிவிட்டு சென்றவர். வாழ்க.   மதிமுக அப்போது போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் உதயகுமார் அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்திருந்தது. நான் எனது கருத்துக்களை அந்த இழையில் எழுதத் தொடங்குகிறேன். 

இந்தியாவுக்கான ஆக்கப்பூர்வமான அணுசக்தி குறித்து நான் எழுதிய அனைத்தையும் தொகுத்து ஒரு பல பக்கங்கள் கொண்ட புத்தகமே பதிப்பிக்கலாம். அவ்வளவு எழுதியிருப்பேன். அதில் சிலவற்றை இக்கட்டுரை நிறைவில் இணைத்திருக்கிறேன். அந்த இழையில்தான் அண்ணன் கிப்டனை சந்திக்கிறேன். அவர் மதிமுக காரர் மட்டுமல்லாது அணுசக்திக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாளர். எனது கருத்துக்களுக்கு அதிவேகமாக பதில்சொல்லிக்கொண்டு இருக்கிறார். அணுசக்திக்கு ஆதரவாக முகநூலில் எழுதும் மனிதர்களிடம் கோபாவேசமாக பேசும் அண்ணன் கிப்டன் போன்றோர்களால், என்னிடத்தில் அப்படி பேசமுடியாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. முதற்காரணம் நான் எழுதும் தமிழ். கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லும் பாங்கு. அடிப்படையில் நானும் வைகோ மீது பெருமதிப்பும் மரியாதையும் உடையவன். எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ அதே அணுசக்தித்துறையில் பணியாளன். இடையிடையே தமிழைப் புகழ்ந்தும், வைகோ வைப் பாராட்டியும் பதில்கள் சொல்லும் என்னிடம் வேகம் காட்டமுடியாமல் கிப்டன் அண்ணன் உட்பட, தியோடர், சுரேஷ்குமார் போன்றவர்களும் திகைத்துதான் போனார்கள். ஏனெனில் அப்போது பொதுவில் அணுசக்திக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருந்தவர்கள், பெரும்பாலும் தமிழ் ஆதரவாளர்கள் இல்லை.



போராட்டக்குழுவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அண்ணன் உதயகுமார் அவர்கள், தன்னை ஒரு ஈழ ஆதரவாளராகக் காட்டிக்கொண்டதும், போதாத குறைக்கு, கூடங்குளத்தில் அணுஉலை நிறுவியதன் மூலம் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது என்பன போன்ற பேச்சுக்களாலும், தேச ஒருமைப்பாட்டுக்கு ஆதரவான பலரும் போராட்டத்தை எதிர்த்தார்கள். முகநூல் ஒரு வித்தியாசமான களமாக எனக்கு இருந்தது அப்போது. அதன் பிரிவினைகளை நான் விளக்க விரும்பவில்லை. இன்னும் அது அப்படித்தான் இருக்கிறது. இதில் நான் கொஞ்சம் வேறுபட்ட சிந்தனை கொண்டவன். தீவிர தமிழீழ ஆதரவும், அதற்காகவே புலிகளை ஆதரிக்கும் சிந்தனையும் கொண்ட என்னால், இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு சிறுகருத்தைக் கூட ஏற்கமுடியாது. தமிழீழத்தேவைக்கான காரணங்கள் பலமாக இருப்பதாகக் கருதும் எனது சிந்தனை ஒருக்காலும் தமிழ்த்தேசியத்துக்கானக் காரணிகள் கிஞ்சித்தும் இருப்பதாக நினைக்காது. இந்நிலையில் அடிப்படைக் கோட்பாட்டில் நானும் கிப்டனும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறோம். ஆனால் அதற்கான மூலங்கள் குறித்து எங்கள் இருவருக்குள்ளும் பலத்த வேறுபாடு. இந்நாட்டின் வளர்ச்சிக்கான தேவை என்று எதை நான் கருதுகிறேனோ, அதுவே இந்நாட்டின் அழிவுக்கு வித்து என்று கிப்டன் நினைக்கிறார். இருவருக்கும் இருப்பது தேசம் குறித்த சிந்தனைதான். அதற்கு அணுஉலை தேவையென்று நானும், கூடாது என்று அவரும் விவாதம் நடத்திக்கொண்டு இருந்தோம். 

“யாராவது பைத்தியக்காரப் பெண்ணைக் கட்டுவார்களா?”, இந்தக் கேள்வியை அண்ணன் உதயகுமார் கூட ஒருமுறை தொலைக்காட்சியில் கேட்டார். இதையே பேசிய கிப்டன் அண்ணனிடம், “ பெண்ணுக்குப் பைத்தியம் இல்லையென்று பெண்ணைப் பெற்றோரும், மனநிலை மருத்துவர்களும் கூட சொன்னபிறகும், இல்லை அந்தப் பெண்ணுக்குப் பைத்தியம்தான் என்று தொடர்ந்து சொல்லும் மாப்பிள்ளையின் மனநிலைதான் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவேண்டும்” என்று நான் பதிந்த கருத்து, விருப்பங்களை அள்ளிக்கொண்டது. இப்போது அதே இழையில் பேசிக்கொண்டிருந்த அண்ணன் இராபர்ட் செயந்த் அவர்கள் எனது உள்பெட்டியில் வந்து கேட்கிறார்கள். குமரிக்கொழுந்துகள் என்றொரு குழு இருக்கிறது. அதில் நீங்கள் இணைய முடியுமா என்று. அண்ணன் இராபர்ட்செயந்த் அவர்கள் அமைதியான பேச்சுக்கு சொந்தக்காரர். வெளிநாட்டில் வசிக்கும் அவர், ஓரிருமுறை என்னைத்  தொடர்புகொண்டு பேசியபொழுது என்னால் அவரது உள்ளத்தைக் கணிக்க முடிந்தது. அவருக்கும் கூட நான் ஒரு ஆச்சர்யமானவன். அணுசக்திக்கும் ஆதரவு, ஈழத்துக்கும் ஆதரவு, தீவிரத் தமிழ்ப்பற்று, ஆயினும் இந்திய ஒருமைப்பாடு குறித்த சிந்தனை இப்படி பல. குமரிக்கொழுந்துகள் குழுவில் ஏற்கனவே இப்படி விவாதம் நடந்துகொண்டு இருப்பதையும், அணுசக்திக்கு ஆதரவாக பேசும் என்போன்றோர், இராபர்ட்செயந்த் மற்றும் இன்னபிற ஆதரவாளர்களுக்கு துணையாக இருக்கமுடியும் என்றும் அவர் நினைத்ததன் விளைவு எனக்கு வந்த அழைப்பு.


குமரிக்கொழுந்துகள்
குழுக்களில் இணைந்து விவாதம் நடத்துவது குறித்து அதிகப்புரிதல் எனக்கு அப்போது இல்லை. அல்லாமல் நான் திருநெல்வேலிக்காரன். குமரிக்கொழுந்துகள் குழுவில் இணைவதற்கு  குமரி மாவட்டத்தில் பிறந்தவனாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. குமரி மாவட்டத்தில் பயின்றவன் என்ற தரத்தின் அடிப்படையில் என்னை அந்தக் குழுவில் அண்ணன் இராபர்ட் இணைத்துவிட்டார். எனக்கென தளர்த்தப்பட்ட அந்தக் கட்டுப்பாட்டின் காரணமாகவே நான் ஒருகாலத்தில் அந்தக் குழுவை விட்டு வெளியேற நேரிட்டது. ஆனால் கொஞ்ச காலம் குமரிக்கொழுந்துகளில் நான் போக்கிய எனது பொழுது, எக்கச்சக்கமான நல்ல மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.

மங்களூரு இந்தியன் வங்கியில் துனைமேலாளராக இருந்த அய்யா ஜி.டி.கோபாலகிருஷ்ணன், ஒரு காலைப்பொழுதில் பயணத்தின் ஊடே, அவரைச்சந்திக்கும் வாய்ப்பை ஆண்டவன் அருளியபோது, தமிழீழத்தேவை தொட்டு முரண்படும் எங்கள் உணர்வுகள், நேரில் சந்தித்த கணத்தில் நெகிழ்ந்தது.

சிங்கப்பூரில் வசிக்கும் அண்ணன் ஜோமில்டன். இன்றுவரை நான் பெரிதும் மதிக்கும் மனிதம். அவரது வலைப்பூவில் ஆழிசூழ் உலகு நாவலுக்கு ஜெயமோகன் எழுதிய விமர்சனத்தைக் கொழுக்கிவிட்டிருந்தார். அதைப்படித்துவிட்டுத்தான் நானும் அப்பெருங்கதை நூலை வாங்கி வாசித்தேன். கிப்டனுக்காக நாங்கள் பணம் சேகரித்தபோது, ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை எனது வங்கிக்கணக்கு மூலம் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

தம்பி ஜான் ரூபர்ட். பெரும் தமிழ் ஆர்வலன். குமரிக்கொழுந்துகளில் அவர் எழுதிய தமிழ்க்கவிதை ஒன்றின் பொருளை சரியாகப் புரிந்துகொண்டு கேள்வி தொடுத்ததில் தொடங்கியது எங்கள் நட்பு. இன்றுவரை தமிழின் இலக்கணம் குறித்த ஐயங்களுக்கு நான் அணுகும் மனிதம். ஒரு காலத்தில் பேசத்தொடங்கினால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் ஆர்வமும் அறிவும் கொண்ட ஆச்சரியமான இளவட்டம் ரூபர்ட்.

அக்காலத்தில் அடிக்கடி அலைபேசியில் அழைத்து பேசிவந்த அண்ணன் தியோடர், என்னுடன் கல்லூரியில் சமகாலத்தில் பயின்ற சுரேஷ்குமார், அண்ணன் ஜஸ்டிபஸ் ஆசீர், குமுதம் நிருபர் அண்ணன் திருவட்டாறு சிந்துகுமார், அண்ணன் சுரேஷ்சுந்தரராஜன், கிறிஸ்டி அண்ணி .....இப்படி எண்ணற்ற மறக்கமுடியாத நட்புகளை குமரிக்கொழுந்துகளில் இருந்த காலத்தில் நான் பெற்றுக்கொண்டேன்.

சைவமே சிறந்த உணவு, கூடங்களும் அணுஉலை நாட்டுக்கு அவசியம் என்பது போன்ற விவாதங்களில் எல்லாம் கலந்துகொண்டு களைகட்டுவேன். ஈழம், வைகோ ஆதரவு போன்றவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு என்ற காரணத்தால், மற்ற விவாதிகளை வாதிட்டு விலக்கிய மாதிரி என்னை விலக்க கிப்டன் அண்ணனால் முடியவில்லை. தொடர்ந்த அலைபேசி அழைப்புகளிலும் அவர்களது ஐயத்தை போக்கும் அளவுக்கு விவாதித்திருக்கிறேன். இதன் விளைவாக போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அண்ணன் வரைக்கும் எனது பெயர் தெரியவந்தது. சுரேஷ் அண்ணன் ஒருமுறை பேசிக்கொண்டு இருந்தபொழுது, உதயகுமார் அவர்கள் என்னை விசாரித்ததாக என்னிடமே சொன்னார்.

பிற்காலத்தில் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள்  மட்டுமே இக்குழுவில் இருக்கமுடியும் என்ற கருத்து அண்ணன் ஜோமில்டன், எட்வின்பால் ஆகியோர் பங்கேற்ற ஓர் விவாத இழையில் பகிரப்பட்டபோது, மெல்ல அக்குழுவில் இருந்து நான் வெளியேறினேன். பிறிதொருநாளில் எட்வின்பால் இறந்துவிட்டார் எனும் செய்தி பரப்பப்பட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது.

மதிமுக இணையதள அணி
இந்நிலையில் சங்கரன்கோயில் இடைத்தேர்தல் வருகிறது. இடைத்தேர்தலுக்கு மதிமுக சார்பில் வாக்களர்களுக்குக் கொடுப்பதற்கு ஒரு புத்தகம் தயாரிக்க இருப்பதாகவும், அதில் கட்டுரை எழுத விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் என்றும் அண்ணன் சிவக்குமார்செல்வராஜ் அவர்களின் அலைபேசி எண்கள் பகிரப்படுகிறது.

அண்ணன் சிவா அவர்கள் அப்போது தில்லியில் இருந்தார். பின்னர் வங்கதேசத்தின் டாக்காவில் சிலகாலம் பணியாற்றினார், அதன்பிறகு அகமதாபாத், தற்போது சென்னையிலேயே புதுவீடு கட்டி குடியேறி வசிக்கிறார்.  புதியதலைமுறையின் நேர்படபேசு நிகழ்ச்சியில் சுற்றுப்புறச்சூழல் குறித்த விவாதங்களில் கலந்துகொண்டு அறிவியற்பூர்வமாக விவாதிப்பார். அலைபேசியில் பேசும்போது பாசமுடன் பேசுவார். அவரது மின்னஞ்சலுக்கு எனது கட்டுரையை அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு பாராட்டியதோடு நிற்காமல், அப்போது அதிகாரப்பூர்வமாக இணையத்தில் இயங்கிவந்த மதிமுக வின் இணையதளப்பிரிவின் ஆளுநராக இருந்த அண்ணன் லோகேஷ் அவர்களுக்கு இந்தக் கட்டுரையை அனுப்பி வைத்தார்.

லோகேஷ் அண்ணன் நார்வே நாட்டின் ஒஸ்லோ வில் வசிக்கிறார். சொந்த ஊர் திருவில்லிபுத்தூர். தந்தி தொ.கா வில் அரசியல்வாதிகளை தன் அதிரடி கேள்விகளால் கலக்கும் அண்ணன் ரங்கராஜன் பாண்டே வின் பால்யகால நண்பர். எனது கட்டுரையைப் படித்த மாத்திரத்தில் உள்பெட்டியில் தொடர்புகொண்டு, இணையதளப்பிரிவில் இணைப்பதற்கான வழிமுறைகளைச்சொல்லி, இணைத்ததோடு அல்லாமல், எனக்கான வரவேற்புத் தகவலில் என்னை எழுத்தாளர் என்றும் சிறந்த சிந்தனையாளர் என்றும் பதிவிட்டார். ஏற்கனவே இக்குழுவில் இருந்த அண்ணன் கிப்டன் அவர்கள், சிந்தனையாளர் என்று லோகேஷ் அண்ணன் எழுதியதை பகடி செய்து பதிவுகள் செய்ய, அங்கேயும் விவாதங்கள் தொடர்ந்தன.

இந்திய அரசின் குடியரசு நாளையொட்டி, நமது நாட்டின் விடுதலைப்போராட்ட வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் ஒரு காணொலி காட்சி பதிவு செய்து யூடியூப் மூலம் அதை குமரிக்கொழுந்துகள் குழுவில் நான் கொழுக்கிவிட, கிப்டன் அண்ணன் அணுமின்சாரம் இந்நாட்டுக்கு அவசியம் இல்லை என்று பத்துநிமிடங்கள் பேசி ஒரு காணொலி காட்சியை குழுவில் பதிலுக்கு கொழுக்கிவிட்டார்.  எழுதுவதைத் தவிர்த்து இப்படிக் காணொலிக் காட்சிகளை முகநூலில் பதியும் கலையை அறிமுகப்படுத்தியதே கிப்டன் அண்ணன்தான். சரளமாக இந்தியாவின் மின்தேவை, உற்பத்திமுறைகள் என்று அப்போதைக்கு கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கம் எதையெல்லாம் முன்னேடுத்ததோ அதையெல்லாம் பேசி பதிவு செய்திருந்தார். கூடங்குளத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சி உரை ஆற்றினார்.

ஒரு கட்டத்தில் எனது கருத்துக்களின் மீதெழுந்த விமர்சனங்களாலும், மத்திய அரசின் பணியாளன் கட்சியில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இருக்கமுடியாது எனும் தன்னுணர்வினாலும் நான் இணையதள அணியைவிட்டு வெளியேற நேரிட்டது. பாலாவின் இணையம் என்றபெயரில் இருந்த மதிமுக இணையதள அணியின் இணைச்செயலாளர் பாலதண்டாயுதம் தனிச்செய்தியில் எனது பதிவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தபோது, அதற்குப் பதிலாக அணியில் இருந்து வெளியேறிய செய்தியை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

 
நேரில் சந்தித்தோம்
அந்தவார ஆனந்தவிகடனில், தலைவர்கள் தற்போது மகிழ்ந்த தருணங்கள் என்ற தலைப்பில், பல பிரபலங்களைப் பேட்டி கண்டு பெட்டிச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். வைகோ, ஈரோடு புத்தகத்திருவிழாவில், எழுத்து எனும் கருவறை என்ற தலைப்பில் உரையாற்றிவிட்டு இறங்கியபோது, உள்ளம் நிறைந்துபோய் இருந்தது என்று சொல்லியிருந்தார். தாயகத்துக்கு நமக்கு ஏற்கனவே இருந்த தொடர்பைப் பயன்படுத்தி, அவ்வுரையின் பதிவை வாங்கி பார்த்தபோது, ஏற்கனவே வைகோ மீதிருந்த பாசத்தின் மடங்குகள் பெருகியதோடு, ஈரோடு புத்தகத்திருவிழா மீதும் எனக்கொரு ஆசை வந்துவிட்டது. சென்னையில் இரண்டுநாட்கள் சேக்கிழார் விழாவில் தொடர்ந்த அமர்வுகளின் நிறைவில், ஈரோட்டில் வந்து இறங்கினேன். தமிழருவிமணியன் அவர்களின் பேச்சை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கனிந்தது அதுதான் முதன்முறை. அவர் அப்போது தொடங்கிய காந்திய மக்கள் இயக்கத்தின் இரண்டாமாண்டு தொடக்கவிழா, திருப்பூரில் நடக்க இருந்தது. இயக்குனர் தங்கர்பச்சான், பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் நல்லக்கண்ணு, இராமகிருஷ்ணன், உடன் வைகோ வும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். தமிழகத்தில் ஓர் அரசியல் மாற்றம் கொண்டுவர விரும்பிய தமிழருவிமணியன் நடத்திய அக்கூட்டத்தில், எந்தவித அரசியலும் யாரும் பேசாமல், எல்லோரும் காந்தி குறித்து பேசிவிட்டு நிறுத்திக்கொண்டார்கள். இது நடந்தது இரண்டாயிரத்து பதினொன்று. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மக்கள்நலக் கூட்டணி யின் விதை இங்குதான் ஊன்றப்பட்டது. 

நான் பெரிதும் மதிக்கும் அண்ணன் கிப்டன், தியோடர், முத்துகிருஷ்ணன், நான் ஏற்கனவே  குறிப்பிட்ட திருப்பூர் செந்தில்குமார், மயில்சாமி அனைவரையும் இங்குதான் சந்தித்தேன். கூட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகில் இருந்த டாஸ்மாக் கடை ஒன்றை, கிப்டன் அண்ணன் பேசி மூடவைத்தார். பின்பக்கமாகச் சென்று தியோடர் அண்ணன் பக்கம் இருந்துகொண்ட நான், கிப்டன் அண்ணனை விசாரித்து அவருக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டேன். அப்போது சொன்னார், “எதிர்த்தவர்கள் அனைவரையும் விரட்டிவிட்டு பார்த்தால் உள்வீட்டுக்குள்ளே ஒரு எதிரி இருந்திருக்கிறான்” என்று. அந்தக் கூட்டத்துக்கு என்னோடு அண்ணன் பெரியார்குமாரும் வந்திருந்தார். எனக்கென்னவோ கிப்டன் அண்ணனைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் குமரிக்கொழுந்துகளில் உலாவிய பொழுது, “நீங்கள் இருவரும் சகோதரர்களா?” என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம் பேர்.


முகநூலில் நாயகன்
தினமும் முகநூலைத் திறந்தாலே கிப்டன் அண்ணனின் பதிவுகளும் பின்னூட்டங்களும் வரிசையாக வந்து நிற்கும். வேகமாக தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்ததால் உடனுக்குடன் பதில் எழுதும் வழக்கம் அவருக்கு இருந்தது. விவாதம் தொடங்கிவிட்டால், எங்கிருந்துதான் கருத்துக்கள் சிக்குமோ, பேசிக்கொண்டே இருப்பார். அத்தனைக் கேள்விகளுக்கும் இலாவகமாக பதில் சொல்லும் அறிவு அவருக்கு இருந்தது. இதற்கிடையில் குமரிக்கொழுந்துகள் குழுவில் பனிப்போர் மெல்ல நடந்தது. அதன் பின்புலம் சாதியாகவோ, மதமாகவோ இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. விவாதம் வேறுபாடுகளை நோக்கிச் செல்லும்போது அதைத் தணிக்கும் முகமாக நான் பேசினால், கிப்டன் அண்ணன் என்னிடம் தனிச்செய்தியில், அந்த விவாதத்தில் நீ கலந்துகொள்ளாதே...அது பல்வேறு கோணங்கள் கொண்டது...நீ சின்னப்பையன் உனக்குத் தெரியாது என்றே சொல்லிவிடுவார். நானும் ஒதுங்கிக் கொள்வேன். ஒரு உடன்பிறந்த சகோதரன் போல அவர் சொன்னதையெல்லாம் கேட்கவேண்டும் என்ற மனநிலை எனக்கு அப்போது இருந்ததாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஒரே நேரத்தில் பல தளங்களில் பல்வேறு விவாதங்களில் பங்குகொண்டு பேசிக்கொண்டு இருப்பார். காலையில் முகநூலைத் திறந்தால் கிப்டனின் அடங்காவணக்கம் என்ற சொல்லுடன் தான் விவாதங்கள் தொடங்கும் அப்போது. எண்ணிலடங்காத நட்பு வட்டத்தையும், அவர்கள் அனைவருடனும் அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பதையும் ஒரு வழக்கமாக வைத்திருந்தார் கிப்டன் அண்ணன். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது மாதிரியான ஒரு முக அமைப்பு அண்ணனுக்கு இறைவன் கொடுத்தக் கொடையாக இருந்தது.

மனிதவாழ்வில் மகிழ்ச்சி என்பது அவனுக்கு அறிவு புரியும் நாள்தான். இன்ன பிற மனிதர்கள் மீதும், உயிரினங்கள் மீதும் கரிசனமும் கருணையும் தான் அறிவின் உச்சம். பிறப்பில் ஏற்றத்தாழ்வு அறிவால் மட்டுமே. ஆனால் பேரறிவு, குறையுடையோர்க்கு அறிவு புகட்டத்தான் நினைக்குமே தவிர, ஒருக்காலும் தாழ்வாக நினைக்காது. நட்பின் அடிப்படை அறிவாக இருந்தால், அது ஆழக்கடல் போல அமைதிகொண்டு விவாதிக்குமே தவிர, அலைகடல் போல அடித்துக்கொள்ளாது. அப்படி இருந்தது எனக்கு அண்ணனின் நட்பு.

ஒரு பக்கம் தமிழீழத்துக்கான தேவையின் நியாயங்கள், இன்னொரு பக்கம் கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையில்லாததற்கான காரணிகள், வைகோ வின் செயல்பாடுகள் மீதான தீவிர ஆதரவு என்று முகநூல் எனும் விவாத களத்தின் நாயகனாக கிப்டன் அண்ணன் இருந்தார். அவர் கலந்துகொள்ளாத விவாதங்களே இல்லாத அளவுக்கு பெரும் ஆளுமையாக வளர்ந்திருந்தார். எண்ணற்ற குழுக்களில் உறுப்பினராக இருந்தார். பல குழுக்களில் ஆளுநராகவும் இருந்தார். ஏதேனும் விவாதங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றால், உறுப்பினர்கள் அவரது அடையாள இழையைக் கொழுக்கி விட்டு, இழுப்பார்கள். அதற்குப் பிறகுதான் விவாதம் வேகமே பிடிக்கும். அப்போதெல்லாம் முகநூல் அழுத்தமான விவாதங்கள், எண்ணற்ற நகைச்சுவைகள் கொண்ட களமாக இருந்தது. அதில் கிப்டன் அண்ணன் இல்லாத பக்கங்களே கிடையாது.

இருக்கிறார்......
   பிசிராந்தையார் தேடிச் சென்று கொண்டிருக்கும்போதே, கோப்பெருஞ்சோழன் மக்களுடன் முரண்பட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டான். ஆந்தையார் தேடிச்செல்லாமலோ, இல்லை பாதிவழியில் திரும்பி இருந்தாலோ அந்த நட்பு வாழ்ந்திருக்கும். உடலையும் உயிரையும் உலுக்கி திடுக்கிட செய்து, நாட்கணக்கில் என் கண்ணுறக்கத்தைக் காவு வாங்கிக்கொண்ட அச்செய்தி எனை வந்து சேராமலே இருந்திருக்கலாம். நேரில் அளவளாவும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் ஒரு நட்பின் காலம், அதன்  இன்னொரு பகுதி இருப்பது இல்லாதது எனும் கருத்தாக்கத்தைத் தாண்டியும் நீடிக்கும். எப்போது சேர்ந்து நடப்போம் என்றே தெரியாத நட்பின் சந்திப்புக்கான நேரங்களின் இடைவெளி, அந்த ஆன்மாக்கள் சந்திக்கும் காலம் வரையாகக்கூட இருக்கலாம். அதில் ஒன்று இன்னொன்றுக்காக காத்திருக்கலாம்.  நாள்தோறும் பார்க்காத நண்பன், சுழலும் இவ்வுலகின் இன்னொரு பக்கத்தில் இல்லை எனும் செய்தியை நாம் அறியாமல் இருந்தால், அல்லாமல் அத்துயரச்செய்தியை மறக்கும் சக்தி நமக்கு இருந்தால் அஃதோர் இருபக்க நட்பாக எப்போதும் தொடரவே செய்யும்.

இப்போதும் அண்ணனின் முகநூல் பக்கம் இருக்கிறது. அதில் அவர் எழுதவில்லை. ஒருவர் ஒரிருநாள் எழுதாவிட்டால், அவர் இல்லாமலே போய்விட்டார் என்றுதான் நினைக்கவேண்டுமா என்ன?. இல்லையே?. நாம்கூடத்தான் முகநூலில் தொடர்ந்து   நான்கைந்து நாட்கள் எதுவுமே எழுதாமல் இருக்கிறோம். அப்போதும் உலகில் இருக்கத்தானே செய்கிறோம்?. இன்றைக்கு முகநூல் இருக்கும் நிலையில் கிப்டன் அண்ணன் ஏதும் எழுதவேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம். இங்கே எழுதி ஏதும் ஆகப்போவதில்லை எனும் அறிவுமுதிர்வை அவரும் அடைந்திருக்கலாம். அதனால் அமைதியாக இருக்கலாம். இருக்கட்டும். மீண்டும் உயிர்த்தெழுந்து எழுதும் வரைக்கும், உயிர்த்தெழும் நம்பிக்கையோடு இறந்துபோன சகோதர சகோதரிகளின் ஆவி மீது அருள்பொழியும் இறைமகன் இயேசுவின் ஆசியுடன் இருக்கட்டும்.