Wednesday 26 June 2013

நினைத்தேன் எழுதுகிறேன்.

உலகின் அசைவையும் அமைதியையும் தன் திரிசூலத்தால் திருப்பும், முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மலர்தாங்கும் தங்கத்திருவடிகளை சிந்திக்கிறேன்.

நினைத்தேன்  எழுதுகிறேன்- 1 /செசெ


இது தியாகம்.


பொன்னியின்செல்வன் படித்தவர்களுக்கு, வேளக்காரப்படை குறித்து தெரிந்திருக்கும். காலங்காலமாக சோழ அரசர்களின், உயிரை பாதுகாப்பது அவர்களின் பணியாக இருந்திருக்கிறது. அவர்கள் பாதுகாப்பு முறைமையின் உச்சம் எதுவென்றால், மன்னனின் உயிருக்கு எதிரிகளால் ஆபந்து வந்தால், அவனது உயிர் பிரிவதற்கு  முன்னால், தன்னுயிரை மாய்த்துக்கொள்வது என்பதுதான். அதை ஒரு சத்தியமாக மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த அதிகாரக்கட்டுக்குள்ளும் அடங்காமல், அரசனைப் பாதுகாப்பது மட்டுமே அவர்கள் குறிக்கோள். அவர்களை கேள்விகேட்கும் அதிகாரம், நீண்டு நெடிந்து கிடந்த சோழ அரசாங்கத்தில், யாருக்கும் இருந்திருக்கவில்லை. மாபெரும் அறிவாளி என்றும், சோழகுலம் முழுக்க, தன் ஆயிரம் கண்களாலும் வேவு பார்த்தவருமான அநிருத்தபிரம்மராயர் உட்பட. மன்னரை இறைவனுக்கு இணையாக பார்த்த காலம் அது.


எங்கள் ஊரில், நிலக்கிழார்கள் பலருக்கு, மெய்க்காப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம், அவருக்காக உயிர் கொடுக்கும் நிலையில் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் உடன்சொக்காரர்களாகவே இருப்பார்கள். அவர்களுடன் சுற்றுவதையே வேலையாக வைத்துக்கொண்டு, அதனால் சுற்றுப்பட்டிக் கிராமத்துக்குள், தான் நினைத்ததை சாதிக்கும் மனிதர்களாகவே அவர்களை பார்த்திருக்கிறேன்.


ஆனால் சுயநலம் பெருக்கெடுத்து ஓடும் இந்த காலத்தில், மெய்க்காப்பாளர் ஒருவர், தான் பாதுகாக்க நேர்ந்துகொண்ட மனிதனின் உயிர் பிரியப்போகிறது என்று தெரிந்தவுடன், அதற்கு முன்னால், தன்னையே தான் மாய்த்துக்கொண்ட தியாகம் நடந்திருக்கிறது. காளிக்கு முன்னால் சத்தியம் செய்துகொண்டு வந்தவர்கள் இல்லை, தான் உடன் சுற்றும் மனிதர்களின் பெயரை வைத்து, தனக்கென எந்த செயலையும் செய்து கொள்ளும் இடத்திலும் இல்லை. எப்போது எந்த மனிதனுக்கு மெய்க்காப்பாளன் ஆவோம் என்று இவருக்குத் தெரியாது. அவன் நல்லவனா?, கெட்டவனா என்ற ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட முடியாது. மொத்தத்தில் சோழ தேசத்து வேளக்காரப்படையைப்போலவோ, இல்லை என் ஊரில் வசிக்கும் நிழக்கிழார்களின் மெய்க்காப்பாளர்கள் போலவோ எந்த சலுகையும் பெற முடியாத, சம்பளத்துக்கு வேலை செய்யும் ஓர் அரசு ஊழியர்.


ஓர் உயிர் சாலையில் துடித்துக்கொண்டு இருந்தபோது, தனது வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், மருத்துவமனை வாகனத்தை அழைப்பதற்காக, அதே சாலையில் அலைபேசியில் பேசிக்கொண்டு அங்கும் இங்கும் சாவகாசமாக அலைந்துகொண்டிருந்த அமைச்சர்கள் பிறந்த இந்த நாட்டில், தன் கண் முன்னே, ஒருவனை இன்னொருவன் உருட்டுக்கட்டையால் கொலைவெறிக் கொண்டு தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தும், மேலிட உத்தரவுக்காக, கையில் கம்பும் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு, கைகட்டி வேடிக்கை பார்த்தவாறு காவல்துறை நின்றுகொண்டிருந்த இதே இந்தியாவில்தான் இவரும்  பிறந்திருக்கிறார்.


அவருக்கென்று ஒரு மனைவி இருப்பாள், குழந்தைகள் இருக்கும், பெற்றோர், சுற்றம் எல்லாம் இருக்கும், அவர்களையெல்லாம், கடமைக்காக, கண்மூடி மறந்திருக்கிறான் அந்த மனிதன். ஆட்சியாளர்கள் ஊழல், அமைச்சர்கள் மாற்றம், ஆட்டக்காரர்கள் சூது என தினமும் வகைவகையாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கோ, அதை படித்து, அதுகுறித்து விவாதித்து, தன் நேரத்தையும் போக்கிக்கொள்ளும், இந்தியத்திருநாட்டின் குடிமக்களுக்கோ, இத்தகைய மனிதர்கள் குறித்து சிந்திக்க நேரமில்லைதான். எதை நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம் நாம். எப்போதும் கொள்ளையும், வஞ்சமும் சூதுமாய் செய்தி சொல்லி, நமை கட்டிப்போடும் ஊடகங்கள், மெல்ல அந்த குணங்களை நமக்குள்ளும் புகுத்துகின்றன.


மே மாதம் தண்டகாரண்யத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மேனாள் மத்திய அமைச்சர்  திரு.வி.சி.சுக்லாவின்  (இப்போது மறைந்துவிட்டார்), மெய்க்காப்பாளராக இருந்த, பிரபுல்லா  சுக்லா என்ற காவலர்தான் நான் நினைத்து வியந்த மனிதர். தாக்குதல் நடத்தியவர்களின் குறி, இவரல்ல. தான் குறி வைத்த ஆட்கள் இறந்து போனதை உறுதி செய்த மாவோயிஸ்ட்கள், காயமடைந்த சிலருக்கு குடிக்க நீரும், சிலருக்கு ஊசி மூலம் வலிகுறைக்கும் மருந்தும் கொடுத்திருக்கிறார்கள். ஆக நினைத்தால் தப்பியிருக்க முடியும். ஆனால் தனது கைத்துப்பாக்கியில் இரவை குறைந்துபோன  போது, ஐயா, எனது துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டடன. இனிமேல் என்னால் தங்களைக் காக்க முடியாது என்று சொல்லிவிட்டு, கடைசி குண்டை தன்மீது பாய்ச்சிக்கொண்டு செத்துப்போனான் அந்த வீரன்.  நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்....இப்படி ஒரு தீரத்தை இந்த நிலத்தில் புலிகளைத்தவிர வேறு யாரிடமும் நான் கண்டதில்லை. பொதுவாக, தனக்கென ஒரு கொள்கை கொண்டு, போராளிகளாக உருவெடுப்பவர்களுக்கு இது சாதாரணம். அவர்களுக்கு தரவரிசையில் கொள்கை முதன்மையானது, உயிர் ஈறானது. இராணுவத்தில் பணியாற்றி பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் சிலர் கூட,  போர்க்காலத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிடுவது உண்டு. இலங்கையில் புலிகளுடனான போரில், சிங்கள இராணுவத்தில் இப்படி நடந்தது, அதை இலங்கை இராணுவதிகாரி ஒருவரே சொன்னார். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், தான் பாதுகாக்க நினைத்த மனிதனின் உயிர் போவது உறுதி என்றும், எதிரிகளின் பலமான தாக்குதலுக்கு முன்னர், தன்னிடம் இருக்கும் ஆயுதம் அவரை பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு போதுமானதாக இல்லை எனும் நிலை வந்தவுடன், எனது வேலை முடிந்துவிட்டது என்று ஓடிவிடாமல், சத்தியத்துக்காக தனதுயிரை மாய்த்துக்கொண்ட அந்த வீரன் எனக்கு போற்றுதலுக்கு உரிய உயர்வானவனாகவும், நினைக்கவேண்டிய ஒரு மாமனிதனாகவும் தெரிகிறான்.

உங்களிடம் நான் வேண்டுவது ஒன்று உண்டு நண்பர்களே..... ஒரு நிமிடம் அந்த மாவீரனுக்கு மௌன அஞ்சலி செலுத்துங்களேன்...


இது சாதனை.

ஒரு வழியாக நிறைவேறி விட்டது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம். திட்டமிட்ட பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில், திட்டத்தின் தொடக்கவிழா நடந்துவிட்டது என்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதியதல்ல. திரைத்துறைக் கலைஞர்களை  அழைத்து வந்து, கோடிக்கணக்கில் கொடுத்து, கட்டடத்தின் மாதிரி வடிவம் செய்து, பிரதமரை அழைத்து வந்து, திறந்துவைத்த தேசம் இது. ஆனால் இந்த திட்டத்தின் ஒரு பகுதி தொடக்கம் என்பது, எஞ்சிய பணிகளை வேகமாக முடுக்குவதற்கு உதவும் என்ற அடிப்படையில்தான் நடந்திருக்கிறது என்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில் இது நல்லதே.


தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களின், நிலத்தடி நீரில் கூட, புளூரைடு எனும் உப்பு, அதிகமாக இருப்பதும், அதனால் அம்மாவட்ட மக்களுக்கு என்பு தொடர்பான நோய்கள் அதிகம் வருவதும் அறியப்பட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. பொங்கி வைக்கப்படும் சோறு, மஞ்சள் நிறத்தில் இருப்பதும், இரண்டு நாட்கள் நீரை அப்படியே வைத்தால், அதில் உப்பு பிரிவதும் இந்த புளூரைடின் பாதிப்புதான். தொடர்ந்து இந்த நீரை பருகுவதால், அம்மாவட்ட மக்களின் பற்களில் ஒரு மஞ்சற்கரை பதிந்துவிடுகிறது. பொன்மனச்செம்மலின் பொற்கால ஆட்சியில், இந்த குறையைப் போக்க, தீட்டப்பட்ட திட்டம்தான் இந்த கூட்டுக்குடிநீர் திட்டம். பின்னர் பர்கூர் தொகுதியில் தற்போதைய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானபோது இத்திட்டம் கூராக்கப்பட்டது. காலப்போக்கில் ஒவ்வொருமுறையும் அதிமுக ஆட்சி வரும்போது மட்டுமே இது தூசு தட்டப்பட்டது. அதற்கு நிதி ஆதாரம் இடம்கொடுக்காத நிலை அப்போதெல்லாம் இருந்துவந்திருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் பொன்னையன் நிதி அமைச்சராக இருந்தபோது, இத்திட்டத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதில் பெருமளவு முனைந்தார்.


ஆமை வேகத்தில் நகர்ந்த பணிகள், இம்முறை வேகமெடுத்து, ஒரு வழியாக ஒருபகுதி மக்களுக்கு நல்ல நீரைக் கொண்டு சேர்த்திருக்கிறது பொதுப்பணித்துறை. இதிலும் இதை செயல்படுத்தியத்தை விளம்பரப்படுத்துவதில், நான் நீ என்று தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகள், தருமபுரி முழுக்க விளம்பரப்பதாகை மூலம் அலப்பறை செய்துகொண்டு இருக்கிறது. ஆனால் இத்திட்டத்தின் நிறைவேற்றம் ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். நிலத்தடி நீரே பிரச்சினை மிகவும் கொடுமையான ஒன்று என்று நான் நினைக்கிறன். நாம் பிறக்கும் இடத்தின், சுற்றுப்புறச்சூழலில் இயற்கையாகவே மாசு இருக்கிறது என்பது, மிகவும் வேதனைக்குரிய ஒன்று. அதற்கான மாற்றுத்திட்டம் இத்தனை ஆண்டுகாலம் கழித்தாவது நிறைவேற்றப்பட்டிருப்பது மனதுக்கு மிகுந்த ஆறுதலிளிக்கிறது. இதை ஒரு சாதனையாகவே நான் நினைக்கிறேன்.


இது போன்ற சுகாதாராப் பிரச்சினைகளுக்கான தீர்வை, இனிவருங்காலத்திலாவது அரசு வேகமாக நிறைவேற்றிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.


இது வேதனை.

ஓர் ஆலயத்தின் அருளை  எத்தனையோ பாடகர்கள் பாடியிருப்பார்கள். ஆனால் இந்த மனிதனின் குரலை  என்று அந்த ஆலயத்தின் அருள் அலங்கரிக்கிறதோ, அன்றுதான் அந்த இறைவனையே அகிலம் அறியும். அதற்கு காரணம் வேறொன்றும் இல்லை... எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே.. என்று அவன் சொன்னதே காரணம். அவர் பாடப்போகிறார் என்றால் அந்த பாட்டுக்கு ஆண்டவனே அடியெடுத்துக்கொடுப்பான். அப்படி ஒரு காந்தக்குரல் அது. காளிதாசனுக்கு பவதாரிணி தேவி, சூலமெடுத்து நாவினில் கோடு கிழித்ததைப் போல, சுரபூபதி அந்த மனிதனின் குரல்வளைக்குள் தன் வேலை நுழைத்து பிரணவம் எழுதியிருப்பான் போலும். தமிழகத்தில் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு, ஆலயத்தின் திருவிழாக்களை இந்த மனிதனின் குரல் அலங்கரிக்கும்.

கிராமத்தின் எந்த கொடைவிழாவையும், நாதசுர ஒலி தொடர்ந்து தொடங்கி வைக்கும் பெருமை, இந்த குரலுக்கு உண்டு. உயிரடக்கத்திற்கு உள்ளிருந்தும் உணர்வூட்டும் பசும்பொன் தெய்வம், முருகபக்தனாக வாழ்வதை ஒரு தவமாக செய்துவந்த  திருமுருக கிருபானந்தவாரியார், இவர்களுக்குப்பிறகு  பிறகு இந்த நூற்றாண்டு இப்படி ஒரு முருகபக்தனைக் கண்டதில்லை. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தனைப்போல, இறைவனை பாடிப்பாடி திரிந்த அந்த வானம்பாடி, தன் வாயை நிரந்தரமாக மூடிக்கொண்ட செய்தி, நெஞ்சை அழுத்தியது. எத்தனை திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பக்திப்பாடலுக்காகவே நான் தெய்வத்திரு.சௌந்திரராஜனைப் போற்றுகிறேன். அந்த மனிதனின் தாய்மொழி தமிழில்லை என்பது ஆச்சரியமான செய்தி.


செய்தி என் வீட்டு சின்னத்திரையில் தெரிந்தபோது, அழுதேவிட்டேன். அதற்குக் காரணமும் உண்டு. சின்ன டி.எம்.எஸ் என இசைரசிகர்களால் எங்கள் பகுதியில் சொல்லப்படும் என் மாமா என்னுடனே இருந்தார்கள். திகைத்துப்போய்விட்டார். அவருக்கும் டி.எம்.எஸ் க்குமான உறவு அலாதியானது. தனியே நடந்து செல்லும்போது பாடல் வரிகளை முனுமுனுத்துக் கொண்டே ‘ச்ச...எப்படிடா பாடுன?’ என்று தனக்கு முன்னே அவரது குரு நிற்பதுபோல பேசிக்கொண்டே நடப்பார். அந்த துரோணரிடம் இப்படி பாடம் பயின்ற ஏகலைவன்கள் எக்கச்சக்கம் உலகம் முழுக்க இருப்பார்கள். குருவின் மரணச்செய்தி அந்த மனிதனை நிலைகுலையச் செய்துவிட்டது. நாள்முழுக்க, அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்.


தக்கார், தகவிலார் என்பது எச்சத்தால் காணப்படும் என்பது தமிழ். ஒருவன் இறக்கும் போது, உலகம், அவன் குறித்த உண்மையான பார்வையை பதியும். எந்த ஒட்டும் உறவும் இல்லாமல், உலகம் முழுக்க தமிழர்களுக்குச் சொந்தமாகிப்போன அந்த மனிதனின் இறப்பை, ஒரு பெரும் இழப்பாகவே தமிழர்கள் கருதினார்கள். இத்தனை வயதாகிப் போனபின்பும், இனிமேல் பாடமுடியாது எனும் நிலைக்கு வந்திருக்கும் ஒரு மனிதனின் இறப்பு, அவன் பாடகன் என்பதற்காகவே அவன் மீது பாசம் வைத்தவர்களைக் கலங்கச் செய்கிறது என்றால், அவன் வாழ்ந்ததின் பொருள் நமக்கு புரிகிறது.


சுந்தோபசுந்தர்கள் எங்கள் பாடல்களை நீ எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிய காரணத்தால், அவர்களை இரு தோடுகளாக்கி தன் காதில் அணிந்துகொண்டான் நீலகண்டன். ‘தோடுடைய செவியன்’ என்று ஞானசம்பந்தப்பெருமான் இதை மனதில் வைத்துதான் பாடினார். அஃதே போல, உலகம் முழுக்க வலம் வந்த முருகப்பெருமான், தமிழகத்துக்கு வள்ளியை மணம் செய்த குமரக்கடவுள், தன்னருகில் இருந்து பாடுவதற்கு இவரை அழைத்துக்கொண்டான். திரிசூலம் படத்தில் கண்ணதாசனின் வரிகளில், இவர் பாடிய மலர்கொடுத்தேன் பாடலை நான் இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கிறேன்.

நினைந்து நினைந்து நெஞ்சுருக அஞ்சலி செலுத்துகிறேன். மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு நீ மறையவே இல்லை. மறையப்போவதுமி .


இது ஆனந்தம்.

அந்த அரங்கத்துக்குள் நான் நுழைந்த போது, வேணுக்குள் நுழைந்து வெளிவந்த காற்று, வளியில் கலந்து அங்கிருப்போர் காதுகளில் தேனைச் சொறிந்துகொண்டு இருந்தது. உயிர்க்காற்றை உள்ளிழுத்து, உலகுக்கு ஒவ்வாத கரியமிலத்தை வெளியிட்டுக் காற்றைக் கறையாக்கும் உயிர்களுக்கு மத்தியில், அந்த கரியமிலத்தில் தன் கலையைக் கரைத்து, உடனிருக்கும் உயிர்களின்  உள்ளத்தில் உவகையை உண்டாக்கும் உன்னதமான கலை குழல்வாசிப்பது. மயங்கச்செய்யும் மழலைச்சொல்லுக்கு உவமை சொல்ல வள்ளுவன் தேர்ந்தெடுத்த வாத்தியம் இந்த குழல். மூங்கில் புல்லினத்தைச் சேர்ந்ததாதலால், புல்லாங்குழல் என்றழைக்கப்படுகிறது. இந்துசமயப்படி உயிர்களில் கடையானது புல். ஆனால் காற்றை உட்கொண்டு, ஓசை எழுப்பி, அனைத்துயிர்களையும் மயக்கும் தன்மையால், இது தலையாயவர்கள் என சொல்லப்படும் தேவர்களையும் விஞ்சி நிற்கிறது.


போ...சம்போ......சிவசம்போ....ச்வயம்போ...மெல்ல இருக்கையில் வந்து அமர்ந்தபோது, இந்த பாடலைத்தான் அவர் வாசித்துக்கொண்டு இருந்தார். மகராஜபுரம் சந்தானம் என்றொரு மாமனிதன் இருந்தார். அவர் இப்பாடலைப் பாடும்போது கிறங்கிப்போய்விடும் கேட்கும் உயிர். வீணையும் மிருதங்கமும் ஒரே நேரத்தில் ஒலிக்கும் குரல் இந்த மனிதருக்கு. அந்த பாடலை வாசித்துக்கொண்டு இருந்தார். குன்னக்குடி எங்காவது கச்சேரிக்கு வந்தால், நேரம் ஆக ஆக திரைப்பாடலுக்கு வந்துவிடுவார். சுசீந்திரத்தில் ஒருமுறை சங்கீதம் அறியாதவர்களுக்கு சலிப்பு தட்டியபோது, ‘அக்கடான்னு நீங்க எடை போட்டா’ ன்னு ஆரம்பித்து ஆதரவை அள்ளிக்கொண்டார். அதைப்போலவே இவரும் மெல்ல இரகுமானின் இசையை தன் குழலுக்கு புகுத்தி கலை செய்தார். காதல் ரோஜாவே, வசீகரா என்று ஒரு கலக்கு கலக்கிவிட்டார் மனிதர். அவருடன் இணைந்திருந்த வயலினிடம், அரங்கம் ‘தனி’ கேட்க ஆசைப்பட, அந்த மனிதரும் ‘என்ன தவம் செய்தனையை’ இழைத்து இழைத்து காற்றில் கரைத்தார். உள்ளம், உலகம் மறந்து கொள்ளை போன தருணங்கள் அவை. இன்றைக்கு தென்னக மொழிகள் அனைத்தையும் இணைத்து, திராவிடம் பேணப்படும் ஒரே இடம் கர்நாடக சங்கீதம் இசைக்கப்படும் இடங்கள்தான். கர்நாடகம் என்பது மாநிலத்தை குறிப்பது அல்ல. அது கடற்கரைப் பரப்பைக் குறிப்பது. சிலப்பதிகாரக் காலத்தில், காவேரி பூம்பட்டினத்தின் கரையில் நாடகங்கள் நடத்தப்பட்டபோது, அதற்காக இசைக்கப்பட்ட கீதங்கள், கரைநாடகக் கீதங்கள் எனச் சொல்லப்பட்டு, மருவி கர்நாடக இசை ஆகிவிட்டது என்று நெடுமாறன் அய்யா ஒருமுறை சொன்னார். கொங்கன், கர்நாடிக், கோரமண்டல் என்று நம் கடற்கரை நாகரிகங்கள் அழைக்கப்பட்டது உண்டு. அதனடிப்படையில் தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம் ஆகியது என்றும் சொல்லப்படுவது உண்டு.  கர்நாடக சங்கீதத்தை இரசிக்கத்தெரியாத மனிதன், உலகில் தன்னை மகிழச்செய்வதற்கான வாய்ப்புகளில் ஒன்றை இழக்கிறான் என்று சுஜாதா சொல்லியிருந்தார். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். இராகம் தாளமெல்லாம் முழுதாகப் புரியாது எனக்கு. ‘போண்டா ருசியா இருக்கு, சாப்பிடுதோம், மத்தபடி அதப்பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை’ என்பார் இராமதாத்தா. எங்கள் ஊரில் நீதியரசர் சங்கரநாராயணத்தேவருக்குப் பிறகு சங்கீத ஞானம் கொண்ட மனிதர் இவர் ஒருவரே. ஹரிவராசனம் பாடி முடித்து தனது தனி சேவையை நிறைவு செய்தது வயலின். கொஞ்சகாலம் வயலின் படிக்க முயன்ற காரணத்தால், அதை வாசிப்பவர்கள் மீது எனக்கு ஆச்சரியம் வரும். நான் ஆசைப்பட்டு எனக்கு வராத ஒன்றைத் திறம்படச் செய்யும் மனிதர்கள் எனக்குள் வானளாவ உயர்ந்து நிற்பார்கள். அப்படித்தான் நிற்கிறான் அந்த கலைஞன்.


இவர்கள் கூடவே சிருங்கேரி சகோதரிகள் வாய்ப்பாட்டு இடையிடையே. பாரதி தீர்த்த சுவாமிகளை ஏகத்தும் பாடி, தங்கள் குருபக்தியை அவைக்குக் காட்டினார்கள். ‘குறையொன்றும் இல்லை’ பாடியபோது தமிழ் தெரியாதவர்கள் மாதிரி தெரியவில்லை. மகாசுவாமிகளின் ‘மைத்ரீம் பஜத’ வைவிட,  எம்எஸ் அம்மாவின் குரலில் இராஜாஜியின் இந்த பாடல் இனிமையாக இருக்கும். அப்புறம் இன்னொன்றை சொல்லவேண்டும். மீராவின் பாடல் ஒன்றைப் பாடினார்கள். எனக்கு அந்த பாடல்வரிகள் நினைவில் இல்லை. ஆனால் ஓ.எஸ்.அருண் பாடி ஒருமுறை அதை கேட்டிருக்கிறேன். இவர்கள் பாடிக்கேட்டபின்பு, அந்த பாடல்மீது ஒரு அவா வந்துசேர்ந்துவிட்டது. இதற்குமுன்னர் ஒருமுறை இதே அரங்கத்தில் ஒரு கலைஞர் மீராவின் ‘ரகுநந்தனு ஆகே நாச்சுங்கி’ பாடி உள்ளத்தையும் ஆட வைத்தார். சில பாடல்களை சிலர் பாடும்போது அந்த பாடல்மீது ஒரு காதல் தன்போக்கில் வந்து சேரும். என்னளவில் சிலருக்கென்று சில பாடல் உண்டு. அது இறைவன் கொடுத்த பேறு. ‘தந்தை தாய் இருந்தா’ லை அருணா சாய்ராம் அம்மா  அல்லாத ஒருவர், ‘சிங்காரவேலவன் வந்தா’ னை சௌம்யா அம்மா அல்லாத ஒருவர், ‘தாயே யசோதா’ வை சுதாம்மா அல்லாத ஒருவர், ‘ஆடும்வரை அவர் ஆடட்டு’ மை சந்தானம் அய்யா அல்லாத இன்னொருவர், ‘பிரபோ கணபதி’ யை அருண் அண்ணனை தவிர இன்னொருவர் பாடிக்கேட்டால் எனக்கு இனிப்பதில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போவேன். வேற்றுமொழிபாடல் கூட, கனகசை லக்மிகாரிணி எனக்கு எம்எஸ் அம்மாவை விடவும் சித்ராம்மா பாடியதுதான் பிடிக்கிறது. எக்கடி மானுஷ ஜென்மம், பிரியா சகோதரிகளால் பாடப்படும்போதுதான் வேங்கேடேசனுக்கேப் பிடிக்கும் போலிருக்கிறது. எம்மனேனிக ஏனெந்து   க்கு எம்எல் அம்மாதான். எந்த செலுவகே டிகே அம்மாதான். அப்படி இருந்தது அந்த கண்மணிகளின் பாடல்கள். ‘ஜெகத்குரு ஆதி சங்கராச்சார்யாக்கு போலோ ஜெய் ஜெய் கார்’ எல்லாம் அவர்களுக்காகவே ஆண்டவன் அருளியது மாதிரி ஓர் எண்ணம்.



இதை ஏற்பாடு செய்த ஷாயாத்ரி லலிதகலா வேதிகே, அதே அரங்கத்தில் அடுத்த சில நாட்களில் ஒரு நாட்டிய நிகழ்வையும் நடத்தியது. அங்கும் அமரும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது. பாரதியின் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ க்கு ஆடித் தீர்த்தார்கள் கண்மணிகள். ‘நறுமுகையே’ பாடலுக்கு மேடை முழுதும் உடல் பரப்பி ஆடிய பரதம் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது. காப்பியப்பெண்கள் குறித்து ஒரு நாட்டியத்தில் நம் ஆண்டாளும், கண்ணகியும் அடக்கம். ஆடலுக்கு முன்னர் கதை சொன்ன பெண்மணி, தமிழைக் காவு வாங்கினார். ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ யை, இந்திக்காரர்கள் தவறாகப் பொருள்கொள்ளும் அளவுக்கு சொல்லிவைத்தார். கண்ணகிக் கதையில் பொருட்கள் அத்தனையையும் இழந்தபின்னர், மாதவியே கோவலனை விரட்டிவிட்டது மாதிரி காண்பித்தது சிலம்பிற்கு முரண். கானல்வரிப்பாடலைப் பொருள்கொள்ளுதலும், அதற்குப்பிறகான சின்ன உரையாடலுக்கு ஊடேயும் உடைந்துபோகிறது அவர்கள் உறவு. தனக்குத் தெரியாமல் தன் தாயான சித்ராபதி, கண்ணகியிடமிருந்து பெற்ற செல்வத்தைத் திரும்பக்கொடுக்க நினைக்கிறாள் மாதவி. ‘அடிகள் முன்னர் யானடி’ வீழ்ந்தேன் என்று வசந்தமாலையை விட்டு மன்னிப்புக் கடிதம் கொடுக்கிறாள் மாதவி. மாதவியின் காதல் புனிதமானது. தவறிழைத்தவன் கோவலன். அவன் இன்னொருத்தியின் கணவன் என்பதை மாதவி அறிந்திருந்தால், தவறு நடக்காமலே போயிருக்கலாம். அதனால்தான் நான் காதலே ஆகாது என்கிறேன். பேசப்போனால் அது பெரிதாக விரிந்துவிடும். ஆதலால் இத்துடன் நிற்க. கொசுறாக ஒரு தகவல். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் அதிகமாக தமிழ் தழுவப்பட்டதற்கும், அதை ஏற்பாடு செய்த அமைப்பில் நான் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.