Wednesday 26 September 2012

ஓராண்டு சாதனையும்.....ஒரேயொரு வேதனையும்.....


அருள்தரும் ஸ்ரீ முப்பந்தல் இசக்கியம்மன் துணை....

அதிமுக ஆட்சி. – ஒரு பார்வை. ---பார்த்தசாரதி.

அரசியல் வாடையே அறியாதவர்கள் கூட, இந்த முறை அதிமுக வெல்லும் என்று அறைகூவல் விடக்கூடிய அளவுக்கு, ஒரு மோசமான நிலைமைக்கு தமிழக அரசியலை தள்ளியிருந்தார்கள், இதற்கு முன் ஆண்டவர்கள். பணம் கொடுத்து வென்று விடலாம் என்று, அவர்கள் போட்ட கணக்கை சுழியமாக்கியது தேர்தல் ஆணையம். அதற்காக பிரவீன்குமாருக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு பிந்தைய இடைத்தேர்தல்களில் அவர், ஐயப்படக்கூடிய அளவுக்கு நடந்துகொண்டார் என்பது வேறு. உலகில் தர்மம் குறைந்து அதர்மம் தலைதூக்கும் போது, யுகம்தோறும் நான் அவதரிப்பேன் என்று கீதை சொன்ன கண்ணன், மீண்டும் அதிமுக வடிவில் அவதரித்தான் என்றுதான் சொல்லவேண்டும். ஆட்சி மாற்றம் என்பது ஒரு காட்சி மாற்றம்தான் என்று சில ஆய்வாளர்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் விடுதலை செய்யவந்த ஒரு மக்கள் புரட்சியாகத்தான் நான் அந்த தேர்தலை பார்க்கிறேன். எந்த ஆட்சியாளனாலும் எல்லா தரப்பு மக்களையும் திருப்தி படுத்த முடியாது. சமூகம் என்பது எப்போதும் மேல்தட்டு மக்களால் மட்டுமே ஆளப்படுவது இல்லை. அதற்காக மட்டுமே அரசியல் நடத்துவது நியாயமாகாது. சாமான்யனை நோக்கி ஓர் அரசு என்று பயணிக்க நினைக்கிறதோ, அப்போதுதான் சமூகம் தன்னிறைவு பெரும்.

ஒட்டுமொத்த தமிழகமும், ஓர் அறைக்குள் கட்டிப்போட்ட மனிதர்கள் மாதிரி, அசைய முடியாமல் இருந்த காலகட்டம் அது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் ஆட்சியாளரின் குடும்பம், தனது கைவரிசையை காட்டிக்கொண்டு இருந்தது. அதிமுக வென்ற நாளில்தான், அண்ணாவே தன் கல்லறைக்குள் ஒருமுறை புரண்டு படுத்திருப்பார் என்பது என் எண்ணம். அத்தனை ஆதிக்கம் எங்கும் இருந்தது. தேர்தலின் மகிமையை, மக்களாட்சி தத்துவத்தின் வலிமையை, தமிழகத்து மக்கள் உலகுக்கு உணர்த்திய தினம், அந்த நாள். அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று வென்ற நாள்.  ஒரே நாளில், கொள்ளைக்கூட்டத்தின் கொட்டம் அடங்கிப்போனது. அதை செய்துகாட்டி, பல்லாயிரமாண்டு பண்பாட்டு வலுவுள்ள இனம், எங்கள் தமிழினம் என்பதை, நாம் தக்கவைத்துக்கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்காக நமக்கு நாமே ஒருமுறை பெருமை பட்டுக்கொள்ளலாம்.

ஓட்டை, உடைசலாக, ஓடமுடியாமல் இருக்கும் ஒரு வண்டி, ஓட்டுனரை மாற்றுவதால் ஒரே நாளில் சீறிப்பாயுமா என்ன?. பல வேலைகள் புதிய அரசுக்கு. அனைத்து துறைகளிலும், தொழில்களிலும் இருந்த ஆக்டோபஸ் கரங்கள், தானாகவே விலகிப்போயின. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றுதான் மக்கள் மனநிலை எப்போதும் இருக்கும். ஆனால் ஓர் அரசு அப்படி செயல்பட முடியாது. பலவழிகளிலும் நிதிநிலைமையை சரிசெய்யவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்ததை, நேர்மையாக அரசியல் திறனாய்வு செய்யும் எவனும் அறிந்துகொள்ள முடியும். அதனால் கட்டணங்களை உயர்த்த அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புகள் அதிகம் இல்லை என்பதுதான் உண்மை. நடந்தவற்றை பெரிதும் எழுதி நான் உங்களை சலிக்க வைக்க நினைக்கவில்லை. சமச்சீர் கல்வி, புதிய தலைமை செயலகம், கட்டண உயர்வுகள் என அனைத்திலும் என் கருத்து அரசின் செயல்பாட்டை ஆமோதிக்கிறது. ஒரு வாசகனாக எனக்கு அண்ணா நூலக பிரச்சினையில் ஓர் ஊடல் உண்டு. சேலைகளையும், நகைகளையும் செருப்புகளையும், படம் படித்து காட்டிய மனிதர்கள், அதே வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூல்களையும் காட்டியிருந்தால் நியாயவாதிகள் என்று நானும் நினைத்திருப்பேன். செய்யவில்லை. முதல்வரும் ஒரு தீவிர வாசகர். ஆனாலும் அந்த பிரச்சினை அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில், அது வாசகர் வட்டத்துக்கான செயல்பாடாகவே இருக்கும். இது விடயத்தில் நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அதிமுக அரசின் சாதனை என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதை தமிழக மக்கள் உணர்கிறார்கள். சாமான்யன் நிம்மதியாக இருக்கிறான். அவனுடைய நிலத்தை கொள்ளை அடிப்பவர்கள் இல்லை. திடீர் என ஆட்கள் வந்து அவனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லவில்லை. எல்லா தயாரிப்பாளர்களும் திரைப்படம் எடுக்கிறார்கள். கூடவே ஒரு கல் ஒரு கண்ணாடி யும் நன்றாக ஓடுகிறது. அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு அச்சம் குறைந்திருக்கிறது. ஆளும் கட்சிக்காரர்களை தைரியமாக மக்கள் பார்த்து, குறைகளை சொல்கிறார்கள். அணுக முடிந்த இயக்கமாக அரசாங்கம் இருக்கிறது. இதுதான் நல்ல நாட்டின் அடையாளம். ஒரு வருடமாக அரசின் கொள்கை முடிவுகள் அத்தனைகளிலும் நான் அரசின் பக்கமே நிற்கிறேன் என்ற ஒரு வரி, என் சிந்தையை உங்களுக்கு சொல்ல போதுமானது. அது குறித்த ஐயம் உங்களுக்கு இருக்குமானால் நாம் விவாதிப்போம்.

எனக்கிருக்கும் ஒரே கவலை....இந்த ஆட்சி மீது நான் கண்ட ஒரே குற்றசாட்டு, சாதனைகளை நான் விளக்கவேண்டியது இல்லை....அது தானாகவே விளங்கும். ஆனால் இதை விளக்கவேண்டும். அது தான் எழுத்தாளனின் கடமை. எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்றான் பாரதி. தெய்வத்தின் கடமை, சோகத்தை தீர்ப்பதுதான். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன், கெடுப்பார் இலனும் கெடும் என்றான் வான்புகழ் வள்ளுவன். தவறு சொல்லி திருத்தும், மதியூக மந்திரிகள் இல்லாத மன்னனை, கெடுப்பதற்கு ஆளே வேண்டாம், அவனே கேட்டுப்போவான் என்கிறான் நம் அறிவாசான். எழுத்தும் பேச்சும் இந்த நாட்டு ஆட்சிக்கட்டடத்தின் நான்காவது தூண். அது நேராக நிற்கவில்லை என்றால், கட்டடம் வலுவாக இருக்காது. அதனால் இதை சொல்ல விழைகிறேன்.

நெஞ்சம் முழுவதும் சோகத்தை அள்ளி அப்பக்கூடிய நிகழ்வு, நினைக்க நினைக்க, கண்களில் நீரைச் சுரக்கவைக்கும் சோகம், இந்த ஆட்சி பரமக்குடியில் நடத்திய துப்பாக்கிச்சூடு. உயிர் இரக்கம் உள்ள எவனுக்கும், உள்ளத்தை உறைய வைக்கும் நிகழ்ச்சியாக அது அமைந்தது. அங்கே கூடிய மக்கள் எதற்காக கூடினார்கள்?, அவர்கள் அஞ்சலி செலுத்தப்போன மனிதர் குறித்து எனது பார்வை என்ன?, அந்த கூட்டம் நியாயமானதுதானா?, அப்படி செய்வதால் அவர்கள் நாட்டுக்கு என்ன உணர்த்த விழைகிறார்கள்?, என்பது குறித்த என் பார்வை எல்லாம், என்னை அறிந்தவர்களாக உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதை நான் அதிகமாக எழுத விரும்பவில்லை என்பதில் இருந்தே, அதன் மீதான என் பார்வை எஞ்சியோருக்கும் புரிந்திருக்கும். ஒருபக்கம் இருக்கட்டும் அது. தமிழக காவல்துறை யில் எனக்கு உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு அம்புதான். எய்தது அரசு. அமைச்சரவை, அதற்கு தலைமைதாங்கும் முதல்வர். அவர்தான் அத்தனைக்கும் பொறுப்பு. மக்களின் ஆக்ரோஷம், காவல்துறையின் மீது கற்கள் வீசிய அவர்கள் கோபம், விட்டிருந்தால் சில காவலர்கள் மாண்டிருப்பார்கள் என்று காவல்துறை சொல்லும் தகவல், எதையும் நான் யோசிக்காமல் இல்லை. ஆனால் தன் சொந்த மக்கள் மீது ஓர் அரசு பிரயோகிக்க வேண்டிய ஆயுதம் என்ன?.

அதிகபட்சமாக அவர்கள் கற்கள் தானே வைத்திருந்தார்கள். அதற்கு பதில், குண்டுகளா பயன்படுத்துவீர்கள்?. உங்கள் கண்ணீர் புகைக்குண்டுகள் எங்கே?. நெகிழியால் செய்யப்பட்ட குண்டுகள் எங்கே?. மீறி துப்பாக்கி சூடு நடத்த வேண்டி வந்தால், முட்டிக்கு கீழே சுடவேண்டும் என்ற தர்மம் எங்கே?. உயிர்கள் என்ன உங்களுக்கு அத்தனை எளிதாக தெரிகிறதா?. எந்த கேள்விக்கும் விடை சொல்ல முடியாது இந்த அரசால். பதிலுக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரை, மந்திரி ஆக்கிவிட்டதொடு அவர்கள் பதில் முடிந்துவிட்டது. ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பம். கைக்குழந்தையை கொண்டுவந்து, உங்கள் ஒரு இலெட்ச ரூபாயை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், நான் ஐந்து இலெட்சம் தருகிறேன், என் கணவனை தருவீர்களா? காவலர்களே..... என்று கண்ணீர்மல்க கேட்டாளே ஒரு பெண். அவளுக்கு உங்கள் மந்திரி என்ன பதில் சொல்வார்?. ஏதொ அவரால் முடிந்தது, நினைவிடத்துக்கு சாலை அமைக்கிறார், அதிலும் ஒரு நியாயமான போக்கில்லாமல், மீண்டும் பிரச்சினைக்கே வழி வகுக்கிறார். ஏழைகள் உயிர் என்றால் எள்ளலாக இருக்கிறதா உங்களுக்கு?.
நடந்த நிகழ்வுகள் குறித்த நம் கருத்தை நாம் அப்போதே பதிந்தும் இருந்தோம். நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என்றால், அதற்கு முதல்வர் சொன்ன காரணம் இருக்கிறதே அது பெருந்தவறு. கூட்டத்துக்கும், காவல்துறைக்கும் நடந்த சண்டையை சாதிப்பிரச்சினையாகக் காண்பிக்கும் முயற்சியில் முதல்வரே இறங்கியது போலானது அவரது சட்டமன்ற பேச்சுக்கள். நடந்தது அஞ்சலி செலுத்தும் நிகழ்வு. வர நினைத்தவர் ஜான்பாண்டியன். அவரை கைது செய்தது அரசு. பிரச்சினையை தடுக்கிறோம் பேர்வழி என்று செயல்பட்டு, பிரச்சினையை பெரிதாக்கிய செயல் அது. பின்னர் சாலைக்கு வந்து போராட்டம் தொடங்கிய புத்திசாலிகள் யாரோ?. ஆனால் செத்துப்போனது அப்பாவி உயிர்களாகத்தான் இருக்கும். அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவனுக்குத்தான் அந்த வலி தெரியும்.

இப்படி ஒரு கோர நிகழ்வை, மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம், நெல்லையில் நடந்தபோது, திமுக ஆட்சியும் அரங்கேற்றியது. ஆனால் அதற்கு பின்னர் வந்த, 2001 தேர்தலில், புதியதமிழகம் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்தது. அழைத்தீர்கள் என்று சொல்லி போராட்டம் நடத்த பின்னால் திரண்டவர்களுக்கு, அதில் செத்துப்போனவர்களுக்கு அவர்கள் செய்த அஞ்சலி அது. அதைப்போலவே, இந்தமுறையும், ஏழு உயிர்கள் பறிபோக காரணமாக இருந்த ஜான்பாண்டியன், சங்கரங்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார். எந்த பொதுவுடைமை வாதியும், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய நினைக்கும் மனிதனும், கனவிலும் செய்ய நினைக்காத செயல் இது?. இதை யாரும் கண்டித்து எழுதியதாகவோ, பேசியதாகவோ எனக்கு தெரியவில்லை.  எப்படித்தான் இவர்களால் முடிகிறதோ?. மக்களும்தான் என்ன செய்வார்கள். நல்லவர்கள் போலவே நடிக்கும் அரசியல்வாதிகளை நம்பித்தான் ஆகவேண்டி இருக்கிறது. என்னளவில் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையில் அக்கறை கொண்டவராக, நான் என்றும் நினைப்பது விடுதலை சிறுத்தைகளின், அண்ணன் திருமாவளவனை மட்டும்தான்.

இனிமேலாவது தமிழக அரசு, இதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு இறை என்று வைக்கப்படும் என்றான் வள்ளுவன். மனிதர்களில் நான் அரசன் என்றான் கண்ணன் கீதையில். நல்ல செயல்களில் நாட்டம் கொண்டு, இதுபோன்ற பொதுமக்கள் பிரச்சினையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல், நிதானத்துடன் செயல்பட்டால் எல்லா ஆட்சியையும் நல்லாட்சியே. அதை தமிழக அரசு தற்போது புரிந்திருப்பதாக தெரிகிறது. கூடங்குளம் விவகாரத்தில், அதன் நிதானமான அணுகுமுறை அதை நமக்கு சொல்கிறது.
அன்புடன்.
இரா.பார்த்தசாரதி
(தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்)