Wednesday 20 November 2013

இராசகிளி - சிறுகதை.

மூவுலகையும் ஒரு குடைக்கீழ் வைத்தரசாளும் முப்பந்தல் இசக்கியம்மனின் மலரடிகள் சரணம்.

இராசகிளி


இராசகிளி.

அந்த ஊருக்கு பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. சொல்லப்போனால் அஃதோர் ஊரே அல்ல. ஏழெட்டு வீடுகள் இருபுறமும் இருக்கும் ஒரே ஒரு தெருதான். மேற்கோடியில் இரட்சணியசேனை யின் பிரார்த்தனைக் கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே வசிப்பவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று இந்த கதையை உங்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பவனுக்குத் தெரியாது. இப்படி பல தெருக்கள் அந்த பகுதியில் இருந்தன. அதன் அருகில் இருக்கும் ஆதிக்கசாதிக்காரர்கள் இதை சேரி என்றும், பிறர் அந்த ஆதிக்கசாதிக்காரர்கள் ஊர்பெயரை முன்னிட்டு, சேரி யை விகுதியாக்கி, தங்கள் உரையாடல்களில் குறிப்பிட்டு வந்தார்கள். அந்த வகையில் இந்த தெரு குண்டலிச்சேரி. காலங்காலமாக இப்படித்தான் இந்த தெரு அழைக்கப்பட்டு வருகிறது. வருணாசிரமம் வகுக்கும் நால்வகை பிரிவுகளில் இங்கிருப்பவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை.


குண்டலிக்கும் இந்த சேரிக்கும் இடையில் பிராமணர்கள் வசிக்கும் நான்கைந்து வீடுகள் தனியாக இருக்கின்றன. அது சாமிமார் ஊரு என்றோ, பிராமணக்குடி என்றோ பொதுவில் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்கள் வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் மேலக்குண்டலி என்று எழுதிக்கொள்வார்கள். இதேபோன்று சேரிகாரர்கள் ஒருவர் வெளியூரில் சொன்னார் என்று செய்தி அடிபட, பிரச்சினை ஒன்றும் வரவில்லை என்றாலும் குண்டலியிலும் பிராமணக்குடியிலும் அது பெரிதாகப் பேசப்பட்டது.


சேரிக்காரர்கள் தனியே எங்கும் வேலைக்குப் போவதாகத் தெரியவில்லை. குண்டலியில் இருக்கும் யாராவது ஒரு வீட்டில் வேலை பார்ப்பார்கள். சேரியில் குடிநீர் உட்பட பெரிதாக வாழ்வதற்கான எந்த வசதிகளும் இல்லை. இரட்சணியசேனை ஆலயத்தைத் தவிர வேறு எல்லாமே குச்சிவீடுகள்தான்.  மேலக்குண்டலிக்கும் சேரிக்கும் இடையில் உள்ள தண்ணீர் கிணறு தான் மூன்று ஊர்களுக்கும் குடிநீருக்கான ஆதாரம். சேரிகாரர்கள் கூட அங்கேதான் தண்ணீர் எடுக்க வரவேண்டும். பிராமணர்கள் நிற்பது தெரிந்தால் அருகில் செல்லக்கூட அனுமதி கிடையாது. அய்யாமார்கள் நின்றால் செல்லலாம். கிணற்றைச் சுற்றி இருக்கும் திண்டுக்குக் கீழே நிற்கவேண்டும். இரக்கப்பட்ட நாச்சியார்கள் யாரேனும் ஒரு சிலர் வாளியில் நீர் இறைத்து எட்டி ஊற்றுவார்கள். அப்படி நிறைந்தால்தான் உண்டு. சிலசமயம் பலமணி நேரம் ஒரு குடம் நீர் எடுக்கக் காத்திருக்கவேண்டி வரும். தேவர்மார் ஊரில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி, அருகுகிறது  என்றால் சீக்கிரம் குடம் நிறைந்துவிடும். அந்த நிகழ்வில் இலை எடுக்க, சமைத்த பாத்திரங்களைக் கழுவி அடுக்க, இடத்தைச் சுத்தம் செய்ய, எல்லாம் சேரிக்காரர்கள்தான்.


குண்டலிக்கு சேரியில் இருந்து நேராக இருக்கும் பாதையில் சேரிக்காரர்கள் செல்லமுடியாது. இடையில் இருக்கும் பிராமணக்குடியில் நுழைய இவர்களுக்கு அனுமதி இல்லை. தண்ணீர்க் கிணறு வரைக்கும் தான் செல்லலாம். அதனால் அந்த பிராமணக்குடியைச் சுற்றிக்கொண்டு குண்டலிக்கு வருவார்கள் சேரிக்காரர்கள். ஏறத்தாழ இரண்டு கல்தொலைவு அதிக தூரம். எந்த சலிப்பும் இல்லாமல் நடப்பதற்கென்றே பிறந்த பிறவிகள் போல அதுபாட்டுக்கு செலவதும் வருவதுமாக இருப்பார்கள். இந்த பாதையில் ஒரு இசக்கியம்மன் கோயில் இருக்கிறது. அது குண்டலி அய்யாமார் கோயில்தான். ஆனாலும் காட்டுக்குள் இருப்பதால் சேரியைச் சேர்ந்தவர்களும் கும்பிடுவார்கள்.  இந்த கோயில் குறித்து ஒரு கதை உண்டு. இந்த பாதையைக் கடக்கும் யாராலும் அந்த கதை பேசப்படாமல் இருந்தது கிடையாது.


“பொல்லாத சாமீ......இங்க எப்படி வந்துதுன்னு உனக்கு தெரியுமாடீ.....” இப்படித் தொடங்கி அந்த கதை சொல்லப்படும். “ ஒரு தடவ குண்டலி அய்யாமாரு ஒரு விவகாரமா முப்பந்தல் போயிருந்தாகளாம். அங்க அம்மனுக்கு கொட நடந்துகிட்டு இருந்துச்சாம். கணியான் சத்தம் கேட்ட கடசி தம்பி.....எண்னே....இன்னைக்கு ராத்திரி கொட பார்த்துட்டு காலைல நடப்போம ன்னு சொன்னாகளாம். அது யாருன் ன்றே....நம்ம நல்லபோத்தி வம்சம் தான். அதுல இருந்த பெரியவுக....போடா...நம்ம வெளை ல வரியழியுத பதினிய வித்தா இந்த மாதிரி ஆயிரம் கொட கொடுக்கலாம்டா...கொட பாக்கணுமாம் கொட....நட ன்னுட்டாராம். அப்படியா சொல்லுத.....கொடுத்துப்பாரு கொடன்னு, சாமி இவங்க கூடே வந்துருச்சாம்..... வீட்டுக்கு வந்தவுடனே...அப்போ அந்த நாச்சியாரு...மீனாச்சி அம்மை ன்னு பேரு அவங்களுக்கு....ஒரே ஆட்டமாம்.... நம்ம மாந்த்ரவாதி  சுப்பையாக்கோனாரு வம்சத்து ஆளுகதான் சொல்லிருக்காங்க... இசக்கித்தா நெலயம் கேக்கான்னு..... பதறி அடிச்சுபோய் புடிமண்ணு எடுத்துட்டு வந்து, இங்க போட்டுக்கொடுத்திருக்காங்க....இப்ப வருஷாவருஷம் கொடை..... சாமியும் அவங்க குடும்பம் கொடி கொடி கோத்திரம் வரைக்கும் நல்லா வச்சிருக்குன்னு வச்சுக்கோயன்.......” 


பெரிய கோயில் ஒன்றும் கிடையாது. சின்ன பீடமும் அதன் மேல், சுடுமண்ணால் ஆன சிலையும். பக்கத்தில் மீனாட்சி அம்மைக்கு ஒரு சின்னக்கல். பூசையின் போது மேலே போர்த்தப்படும் துணி காற்றில் பறந்துவிடுவதால் சிலையில் வடிக்கப்பட்டுள்ள பாவாடை சட்டையுடன், விரித்தகண்ணும் தெறித்த தனமுமாக, மலைவாசி பெண் போல இருப்பாள் அம்மன்.  இரவு நேரங்களில் உண்மையில் ஒரு பெண் அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஆங்காரமாக நிற்பதுபோலவே இருக்கும். சேரிக்காரர்கள் தவிர மற்றவர்கள் இரவு நேரத்தில் தப்பித் தவறி கூட இந்த பாதையில் வரமாட்டார்கள். அத்தனை பயம்.


இராசகிளிக்கு இந்த சாமி என்றால் ரொம்பப் பிடித்தம். அவ்வப்போது இங்க வந்து நின்று அம்மனிடம் பேசுவாள். சாமியின் பாதத்துக் கீழே இருக்கும் பிடிமண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வாள். அவளது பிறப்புக்கும் தோற்றத்துக்கும் தொலைவு அதிகம். அப்படி ஒரு அழகும் வாளிப்பும்.  நாச்சியார்களிடம் முடியாத போது அய்யாமார்களின் ஆண்மை செலுத்தப்படும்  சேரியில், அதற்கு இணங்காத ஒரே பெண்ணாக இராசகிளி இருந்தாள். இப்படி பெயர் வைப்பதே அங்கே அபூர்வம். பெரும்பாலும் அவர்கள் குழந்தைகளுக்கு பெயர்கள் தீர்மானிப்பது இல்லை. தானாகவே வந்துவிடும். ஆண்குழந்தைக்கு அய்யாமார்களின் பெயரும், பெண்குழந்தைக்கு அந்த நாச்சியாரின் பெயரையும் வைத்துவிட்டு நிம்மதியாக இருந்துவிடுவார்கள். இதற்கு மாறுதலும் உண்டு. பிறக்கும்போது பட்டுத்துணி உடன் வந்தது என்று பட்டுராசா என்று பெயர்வைத்தார்கள் ஒருவனுக்கு. ஆனாலும் ராசாவை விட்டுவிட்டு குண்டலி அவனை பட்டு என்றே அழைத்தது. பொடிசாக இருந்தான் என்று சின்னத்தம்பி, உதடு பெரிதாக இருந்தது என்று சுண்டன், இப்படித்தான் அவர்கள் பெயர் வைக்கும் பழக்கம். நீலகண்டன் மட்டும் பெண்ணுக்கு இராசகிளி என்று பெயர் வைத்தார். பிறக்கும்போது அப்படி இருந்திருக்கவேண்டும் அவள்.


குண்டலியிலிருந்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வரும் நாச்சியார்கள் பலர் இராசகிளி யிடம் ஆசையாகப் பேசுவார்கள். அவள் தண்ணீர் எடுக்க வந்தால் சீக்கிரமே திரும்பிவிடுவாள். “ நீ எம்ட்டி இப்படி தள்ளி நிக்க....கிட்ட வாட்டி..” என்று கிணற்று துவளத்துக்கு அருகில் அழைத்து தண்ணீர் ஊற்றிவிடுவார்கள் சில நாச்சியார்கள். யாரிடமும் அதிகம் பேசமாட்டாள் இராசகிளி. ஆனால் குண்டலி, பிராமணக்குடி அப்படியே சேரி, இவைகளுக்கு இடையில் இருக்கும் பல்வேறு வகையிலான ஏற்ற இரக்கங்கள் குறித்து அடிக்கடி சிந்திப்பாள். அவளுக்கு இணையாகச் சிந்தித்து அதுகுறித்து விவாதிக்க சேரியில் இன்னொரு ஆள் இல்லையென்பதே அவள் அதிகம் பேசமுடியாமல் போனதற்குக் காரணம். மற்றவர்களுக்குச் சிந்திக்க நேரமில்லை என்றும் கொள்ளலாம். சிந்தனை தேவையில்லை என்றே நிறையபேர் நினைத்தார்கள். இராசகிளி கொஞ்சம் மனம் விட்டு பேசும் ஒரே ஒரு ஆளாக நான்சி இருந்தாள். இரட்சணியசேனை ஆலயத்தின் பிரச்சாரகி. குண்டலி வரைக்கும் பேருந்தில் வந்து, அங்கிருந்து இசக்கியம்மன்கோயில் பாதை வழியாக சேரிக்கு வருவாள். ஞாயிற்றுக்கிழமை அவள் வருகை தவறாது. அவளும் மனம்விட்டு  பேசும் ஒரே பெண் இராசகிளி. ஆனால் அவள் இசக்கியம்மன்கோயிலுக்கு செல்லக்கூடாது என்றும், இறையேசு மட்டுமே அவளுக்கான பிரச்சினைகளில் விடியல் தரமுடியும் என்றும் அடிக்கடி சொல்லிவருவது இராசகிளிக்குக் கொஞ்சம் பிடிப்பதில்லை.


இராசகிளி தண்ணீர் எடுக்கக் கிணற்றாங்கரைக்கு வந்திருந்தாள். அங்கே யாரும் இல்லை. துலாகல்லுக்கு அருகில் யாரோ விட்டுப்போன பட்டை, நாருடன் கிடந்தது. கல்லின் மேலேறி நீர் இறைத்துவிடலாமா என்று யோசித்தாள். ஒருவேளை இறைத்துக்கொண்டிருக்கும்போது யாரும் வந்துவிட்டால் என்ற எண்ணம் அவளைத் தடுத்தது. இராசிகிளி நீர் இறைப்பதை யாரும் பார்த்தாலும் குறை சொல்லமாட்டார்கள் என்றொரு எண்ணம் அவளுக்கே கூட உண்டு. இருந்தாலும் எதற்கு வேண்டாதவேலை என்று விட்டுட்டு, இசக்கியம்மன் கோயில் பக்கம் எட்டிப்பார்த்தாள். கோயிலுக்கு அருகில் இருக்கும் வண்டித்தடத்தில் ஒரு காந்தவண்டியும் அதற்கு பின்னர் ஒரு ஜீப் பும் நின்றுகொண்டு இருந்தது. இவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே காந்தவண்டி புறப்பட்டு கிளம்பிப் போனது. குண்டலி பாதையில் யாரும் நீர் இறைக்க வருவதாகத் தெரியவில்லை என்பதால், மெல்ல கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அருகே வர வர, ஜீப்பில் வந்தது வெள்ளைக்கார துரை என்றும், வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவன் தமிழ்க்காரன் என்றும் புரிந்தது. பண்பாடு தெரிந்த மனிதனாக அந்த துரை தனது பொதியடிகளை ஜீப்புக்கு அருகிலேயே கழட்டி வைத்திருந்தான். வண்டி ஓட்டி தமிழன், துரையிடம் ஏதொ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தான். அநேகமாக அம்மன் இந்த ஊருக்கு வந்த கதையாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தாள். பேச்சுவாக்கில் திரும்பிய துரை, இராசகிளி யைக் கவனித்தார். பூனைமயிர் மீசைக்குக் கீழ் இருந்த மெல்லிய உதடுகளில் சிறு புன்னகையைத் தவழவிட்டார். பூடத்துக்குப் பின்னால் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்திருந்த கள்ளிச்செடி வேம்பு மரத்தை அதிசயமாகப் பார்த்தவாறு, காலணிகளை அணிந்துகொண்டு, வண்டியில் ஏறி அமர்ந்து, தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு போகலாம், என்று சைகைக் காட்டினார். வண்டி சென்ற பின்பு இராசகிளி கோயிலுக்கு அருகில் வந்து சாமி கும்பிட்டாள். ஒரு வெள்ளைக்காரர் ஒருவர் இந்த கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு சென்றது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மெனக்கிட்டு வந்தாரா, இல்லை போகிற போக்கில் பார்த்தாரா என்று சிந்தித்தாள். இதுவரைக்கும் பார்த்தது இல்லை என்பதால், போகிறபோக்கில் பார்த்திருக்கவேண்டும் என்று முடிவுகட்டிக் கொண்டு, திரும்பினாள். ஐங்கதிர் எப்போது வீட்டுக்கு வருவான் என்று சிந்தித்துக்கொண்டே நடந்தாள். யாரோ ஒருவர் தனது குடத்தில் நீர் இறைத்து ஊற்றிக்கொண்டு இருப்பது தெரிந்தது.


ஐங்கதிர் அடிக்கடி சேரிக்கு வரும் ஆள் இல்லை. சொல்லப்போனால், அந்த ஊரில் இருக்கும் எல்லோருமே அப்படித்தான். அய்யாமார்களின் கழனிகளில் வேலை செய்துவிட்டு அங்கிருக்கும் மோட்டார் ரூமிலேயே ஒரு துண்டை விரித்துத் தூங்கிடுவார்கள். ஆண்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது சேரியில். ஐங்கதிர் எங்கோ வெளியூரில் வேலை பார்க்கிறான். பேண்டு சட்டை எல்லாம் போட்டு வெள்ளைக்காரன் முறையில் வேலைக்கு போவான். குண்டலி பகுதியில் நிறையபேருக்கு அவன்தான் இராசகிளியின் கணவன் என்பதே தெரியாது. எப்போதாவது பேருந்து நிலையத்தில் நின்றால் குண்டலி பிராமணக்குடி ஆட்கள் கூட, ஏதொ பெரிய அலுவலர் என்று கொஞ்சம் தள்ளி நிற்பார்கள். ஐங்கதிரும் அதிகம் பேசும் ஆள் இல்லை. ஊருக்கு வரும் இரவுகளில், இராசகிளியுடன் மட்டும் விடிய விடிய கதை பேசிச் சிரிப்பான். இருவரும் சொந்த கதை தாண்டி, உலக நடைமுறைகள், விடுதலைப்போர் குறித்தெல்லாம் பேசிக்கொள்வார்கள். இந்த இரவுச்சிரிப்பின் அடையாளமாக இப்போது இராசகிளி உண்டாகி இருக்கிறாள்.


ஒருநாள் பேசும்போது ஐங்கதிர், பிராமணக்குடி கணபதிராமஐயர் மகன் சுவாமிநாதன், ஏதொ இயக்கத்தில் இருப்பதாகவும், வெள்ளையர்களைக் கொல்லவேண்டும் என்று முடிவுகட்டித் திரிவதாகவும், துப்பாக்கி சுடவெல்லாம் பயிற்சி எடுத்திருப்பதாகவும் சொல்லியிருந்தான். சுவாமிநாதுவைப் பற்றி அடிக்கடி கிணற்றங்கரையிலும் பேச்சு நடந்து இராசு கேட்டிருக்கிறாள். வீட்டுக்கே வருவதில்லை என்றும், எப்போதாவது இரவில் வந்துவிட்டு ஓடுவதாகவும், அய்யருக்கும், ஆறுமாத கர்ப்பிணியாக இருக்கும் சுவாமிநாதுவின் மனைவி மகாலெட்சுமிக்கும், இதுகுறித்து ஒரே கவலை என்றும், அய்யாமார்களிடம் சொல்லி அவனைத் திருத்தவேண்டும் என்று பேசிக்கொள்வதாகவும் பேச்சு நடக்கும். அதுபோக புதிதாக வந்திருக்கும் வெள்ளைக்காரத்துரை ஒருவர் சுதேசி இயக்கத்தின்மீது அளவுக்கதிகமாக அடக்குமுறை செய்வதாகவும், அவரால்தான் தூத்துக்குடி கப்பல்கம்பெனி நட்டமானது என்றும், தலைவர்கள் கைதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நான்கைந்து அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஐங்கதிர் இராசகிளியிடம் சொன்னான். குண்டலிக்காரர்கள் வண்டிகட்டிக் கொண்டு கமுதிக்கு பக்கத்தில் இளையசமீந்தார் ஒருவரை பார்த்து வந்ததாகவும், அவரது ஏற்பாட்டில் குண்டலிக்காரர்கள் ஐந்தாறு பேர் நேதாஜியின் இந்தியதேசியப்படையில் இணைந்திருப்பதாகவும் சொன்னான். அவளுக்கு அதிலெல்லாம் மனது அதிகமாக செல்லவில்லை. இந்த மாதிரி செய்திகள் இவனுக்கு எப்படி கிடைக்கின்றன என்று வியப்பதோடு சரி.


இப்போதெல்லாம் இராசகிளி கிணற்றுக்கு நீர் எடுக்க செல்வது இல்லை. இசக்கியம்மன் கோயிலுக்குக் கூட அடிக்கடி போகவில்லை. அடிக்கடி ஐங்கதிர் குறித்து சிந்திப்பதும், அவனோடு இருந்த நேரங்களின் நிகழ்வுகளை எண்ணி எண்ணி மகிழ்வதுமாக இருந்தாள். தினமும் காலையில் குளித்துவிட்டு, இசக்கியம்மன் கோயில் இருக்கும் திசை நோக்கி தொழுது, மண்ணெடுத்து நெற்றியில் பூசிக்கொள்வாள். நான்சியும் அடிக்கடி வந்து சந்தித்து மகப்பேறு குறித்து தகவல்கள் சொல்லிவந்தாள். நான்சி மாதிரி இருப்பதற்கு இராசகிளிக்கு ஆசை வரும் சிலசமயங்களில். நிறைய விஷயங்கள் அறிந்தவளாக அவள் இருந்தாள். குண்டலிக்காரர்கள் மாதிரி இல்லாமல், கை முழுவதும் மூடும் வகையில் சட்டைபோட்டிருப்பாள். சேலையின் கடைசிக் கொசுவத்தை ஏற்றி சட்டையோடு முள்குத்தி இடுப்பை மறைத்திருப்பாள். சட்டையில் காவலர்கள் மாதிரி பட்டை வைத்து அதில் கொக்கி மாதிரி ஏதொ ஆங்கில எழுத்து எழுதியிருக்கும். ஐங்கதிரும் இப்படித்தான் ஏதொ வேலைப்பார்க்கிறான் என்று இராசகிளி நினைப்பது உண்டு. அவளை மாதிரி வெள்ளை வெளேரென உடை உடுத்த ஆசை இராசுவுக்கு. நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தன.


பக்கத்தில் மகப்பேறு மருத்துவமனை எல்லாம் கிடையாது அங்கே.... பட்டவிளை யில் ஒரு ஆச்சி இருக்கிறாள். மருந்தாச்சி என்றே பெயர் அவளுக்கு. குண்டலியில் யாருக்காவது வலிக்கிறது என்றால், மூன்று நாளைக்கு முன்னரே வந்து அந்த வீட்டில் சாப்பிட்டு தூங்கிக்கொண்டு இருப்பாள். சேரிக்காரர்கள் என்றால் வண்டிகட்டிக்கொண்டு புள்ளத்தாச்சியை அவள் வீட்டுக்குக் கூட்டிப்போகவேண்டும். அதனால் நீலகண்டன் இப்போதெல்லாம் வயக்காட்டுக்கு போகவில்லை. வீட்டிலேயே இருந்தார். சுப்பையாத்தேவரிடம் சொன்னபோது, வண்டிமாட்டையும் வீட்டிலேயே வைத்துக்கொள்ள சொல்லிவிட்டார். புண்ணியவான்.


வண்டி கிணற்றுப்பக்கம் இருந்து மெல்ல இசக்கியம்மன்கோயில் நோக்கி திரும்பியது. வேகமாக செல்லவேண்டுமா, மெல்ல செல்லவேண்டுமா என்றே நீலகண்டனுக்குத்  தெரியவில்லை. இராசகிளி வண்டியில் மல்லாந்து படுத்துக்கிடந்தாள். கண்ணின் கடைவிழிகளில் நீர் வழிந்து வண்டியின் கம்பம் வழியாகக் கீழே சிந்தியது. “அழாதம்மா அழதம்மா.. எந்தங்கம்......” மெல்ல ஆற்றுப்படுத்தினாள், வண்டியில் குத்திட்டு உட்கார்ந்திருந்த செல்லம்மாள். செத்தே போய்விடுவோம் என்றே நினைத்தாள் இராசு. உடம்போடு உயரே பறப்பதுபோல இருந்தது. “யாத்தே....என்னை காப்பாத்துங்க......” நாக்கைக் கடித்துக்கொண்டு கத்தினாள் இராசு. உடலில் எந்த பாகமும் இல்லாத மாதிரியும், தான் என்பதே தன் அடிவயிறு மட்டும்தான் என்று நினைக்கும் அளவுக்கு வலி உயிர்போனது. வண்டி இசக்கியம்மன்கோயில் சாலையில் ஏறுகிறது என்பது, ஒரு குலுக்கு குலுக்கியதில் தெரிந்தது இராசுவுக்கு. தலை திருப்பி அம்மனைப் பார்க்கும் சக்தி இல்லை அவளுக்கு. ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே கத்தினாள்....”ஆத்தா...... என்னிய காப்பாத்து......எசக்கியாத்தா என்னிய காப்பாத்து.....”. ஆகாயம் பிளந்துவிடும் போலிருந்தது இராசுவின் சத்தத்தில். வானவெளியில் இருந்த மேகத்தின் நகர்வு,  அம்மை இருகரம் நீட்டி அவளைத் தூக்க வருவது போல இருந்தது. இப்படி ஏதாவது கற்பனை செய்து மகிழ்வது இராசுவுக்குப் பழக்கம். நீலகண்டன் ஒருமுறை திரும்பிப் பார்த்தார்... இராசுவின் சேலை கொஞ்சம் நனைந்துபோய் இருந்தது.


கையில் அரிவாளும் வாயில் அரக்கனுமாக, வீரப்பல்லும் விரிசடையுமாய் நின்றுகொண்டிருந்த அம்மனை கையெடுத்து தொழுதார் நீலகண்டன். பிரார்த்தனை செய்து பழக்கமே கிடையாது அவருக்கு. அப்படி எல்லாம் அடுக்குமொழி பேசத்தெரியாது அவருக்கு. அந்த கைகுவிப்பில் அத்தனையும் அடக்கம். ஹை..சூ... என்று மாட்டை அடித்துக்கொண்டு இருந்தவர், கார்ச்சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். இப்போதுதான் காந்தவண்டி போயிருக்கவேண்டும். எப்படி வழிவிடுவது என்று இடப்பக்கம் பார்த்துக்கொண்டு இருக்கையில், கார் வண்டியருகே வந்து நின்றது. இறங்கிய துரை, காலனி கழட்டிவிட்டு சாமிகும்பிட்டார். அவரது பார்வையில் புரிந்துகொண்டு, இராசகிளி குறித்தும், இப்போது அவர்கள் செல்வது குறித்தும் வேகவேகமாக சொல்லி முடித்தார் ஓட்டுநர்.  “ ஒய் தே சுட் நாட் கோ துரு குண்டலி“. “நோ... தே கேன்னாட் என்டர் இன்று பிராமின்ஸ் ஸ்ட்ரீட்....தே ஆர் அன்டச்சபுள் பீப்புள்ஸ்....லீவ் இட் சர்...” கொஞ்சமும் யோசிக்காமல் தனது வண்டியைத் திருப்பச் சொன்னார். ஓட்டுனரை ஒரு கை பிடிக்கச்சொல்லி, இராசுவை இறக்கி தனது காரில் ஏற்றினார். இராசகிளிக்கு தானும் தன் வயிறும்தான் உலகில் இருப்பதுபோல தோன்றியது. மற்றவர்களின் தொடுதலை அவளால் அதிகம் உணரமுடியவில்லை. ஆனாலும் நடப்பது கொஞ்சம் தெரிந்தது அவளுக்கு.  “அய்யா...வேனாஞ் சாமீ.....நீங்க போயிருவிய....எங்களுக்கு பொரச்சின....சாமீ....” நீலகண்டன் கும்பிட்டார். என்ன பதில் சொல்வார் துரை என்று ஓட்டுநர் பார்த்தார். அவருக்கு இது அதிகம் பிடிக்கவில்லை. நீலகண்டனையும் செல்லம்மாளையும் ஜீப்பின் பின்புறம் ஏறச்சொன்னார் துரை. வண்டி புறப்பட்டது. கிணற்றங்கரை வழியாக, பிராமணக்குடி தாண்டி, பட்டவிளை வரை புழுதிமண்ணில் அதன் தடம் அழுத்தமாகப் பதிந்தது.


அதிர்ந்து போய் இருந்தது குண்டலி, பிராமணக்குடி வீதிகள். அடங்கிப்போய் இருந்தது சேரி. சேரிக்காரர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. குண்டலிக்காரர்கள் நடந்ததைப் பேசிக்கொண்டார்களே தவிர, சேரிக்காரர்களை வேலைக்குக் கூப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இல்லாமல் வேலை ஓடாது அங்கே நிறைய தோட்டத்தில். பெரிய பெரிய ஊர்களில் இருந்து பண்டிதர்கள் வருவதாகவும், மாபெரும் யாகம் ஒன்று நடத்தி தீட்டு கழிக்கவேண்டும் என்றும், அதுவரை அம்மன்கோயில் பூட்டியே இருக்குமென்று, சாமிகள் பக்கத்து ஊர்களுக்கு பூசை வைக்க செல்லக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவுகள் மெல்ல பிறப்பிக்கப்பட்டன பிராமணக்குடியில். அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது பிராமணக்குடி. செய்தி கேள்விப்பட்ட பிறகு சுவாமிநாதன் மிகுந்த கோபம் கொண்டவனாக, ஊரை விட்டு வெளியேறியவன் ஐந்து நாட்களாக இன்னும் திரும்பவில்லை. அதுவும் குண்டலி பகுதியில் அதிகம் பேசப்பட்டது.


ஐங்கதிர் வீட்டுக்கு வந்திருந்தான். சுகமே பிறந்திருந்த காரணத்தால் இராசு உடல் தெளிவாகி இருந்தாள். குழந்தையை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து இருவரும் இசக்கியம்மன்கோயில் பக்கம் வந்தார்கள். ஐங்கதிர் குழந்தையைக் கையில் வைத்திருந்தான். மெல்ல அவன் தோளை உரசிக்கொண்டு நடந்து வந்தாள் இராசகிளி. குழந்தைக்கு வைப்பதற்கு தான் ஒரு பெயரைத் தேர்வு செய்து வைத்திருந்தாள். அவள் சொல்வதை அதிகம் மறுப்பவனல்ல ஐங்கதிர். தவறாக ஏதேனும் சொன்னால் ஒழிய, தனக்கென்று இருந்த ஆசைகளில் பலவற்றை அவன் இராசுவுக்காக விட்டுக்கொடுத்திருந்தான். அம்மனின் காலடி மண்ணை எடுத்து குழந்தையின் நெற்றியில் பூசினார்கள். இசக்கித்துரை என்று காதில் மெல்ல சொன்னாள் இராசகிளி. குழந்தை மெல்ல கண்களைத் திறந்து சிரிப்பது மாதிரி இருந்தது. அங்கேயே சாமிக்கு முன்னால் உட்கார்ந்து இருந்தார்கள். அழுத இசக்கித்துரை யைத் தூக்கி, அந்த பக்கமாக உட்கார்ந்து அமர்த்திக்கொண்டிருந்தாள் இராசு. நீலகண்டன் வந்துகொண்டிருந்தார் கோயிலை நோக்கி.


மேற்கேயிருந்து காந்தவண்டி மெல்ல ஊர்ந்து வந்து திரும்பி சென்றது. அதன் சக்கரங்களில் மாட்டின் இலாடங்கள் நிறைய ஒட்டியிருந்தன. வண்டி ஓட்டி, கோயிலில் இருந்த மூவரையும் பார்த்துக்கொண்டே சென்றான். ஒன்றும் பேசவில்லை. பின்னாடியே ஜீப்பில் துரை வரலாம். அவரிடம்  குழந்தையைக் கொடுத்து அவர் பெயரை வைத்திருப்பதை சொல்லவேண்டும் என்று ஆசை இராசகிளிக்கு. எப்படி சொல்வது. ஐங்கதிரிடம் சொல்லிப் பார்க்கலாம். அவளே சொன்னால் நன்றாக இருக்கும். நான்சி யிடம் கேட்டிருந்தால் சொல்லித் தந்திருப்பாள். இருக்கவே இருக்கிறான் வண்டி ஓட்டும் துவிபாஷி, அவனை வைத்தாவது சொல்லிவிடவேண்டியதுதான். சுருங்கிய கடைக்கண்களில் சிரிப்பு தட்டும் அழகு தனி துரைக்கு. முதல்நாள் பார்த்தது நினைவுக்கு வந்தது. காந்தவண்டி முக்கைத் தாண்டி போகும்போது, அங்கே ஓர் இளைஞன் நின்றுகொண்டு இருப்பதுமாதிரி தெரிந்தது நீலகண்டனுக்கு. ஏதொ யோசித்தவர் அப்புறம் குழந்தையைப் பார்த்து மறந்துவிட்டார்.



ஜீப் மெல்ல கடந்துசென்றது. நிற்கவே இல்லை. துரை வண்டியிலிருந்தவாறு, இவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றார். நீலகண்டன் கையெடுத்துக் கும்பிட்டார். இராசகிளிக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்னொருமுறை சிக்காமலா போய்விடுவார் என்று நினைத்து அமைந்தாள். நீலகண்டன் ஜீப்பையே பார்த்துக்கொண்டு இருந்தார். பின்பக்கத்  திறப்பில் இருந்து, அந்த ஜோக்கர் தொப்பியுடன் துரை அமர்ந்திருப்பது நன்றாகத் தெரிந்தது அவருக்கு.


வயற்காட்டுக்கு போகும்பாதையில் ஜீப்பை இளைஞன் வழிமறித்தான். உடன் வரப்போகிறான் என்று நினைத்து நிறுத்தச்சொன்னார் துரை. வண்டி நின்றது. தான் போட்டிருந்த பழைய கோட்டுக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்தான் அந்த இளைஞன். “இன்குலாப் ஜிந்தாபாத்”, துப்பாக்கியை துரையின் நெஞ்சுக்கு நேரே குறிவைத்தான். சுதாரித்த துரை, தனது ஜோக்கர் தொப்பியைக் கழட்டி அவனை நோக்கி வீசினார். அவனது கவனத்தைக் கொஞ்சமும் சிதைக்காமல், விரைத்திருந்த அவன் கைகளில் பட்டு கீழே விழுந்தது தொப்பி. பிஸ்டலை அழுத்தினான். ஓட்டுநரின் மேலே  ரத்தவெள்ளமாகச் சரிந்தார் துரை. ஒரே குண்டுதான். அவர் சரிந்த வேகத்தில் இறந்துவிட்டார் என்றே நினைத்தான் இளைஞன்.  ஐங்கதிர் பிள்ளையை இராசகிளியிடம் கனவேகத்தில் மாற்றிவிட்டு ஓடினான். பின்னாலேயே நீலகண்டனும் ஓடிவந்தார். இவர்களைப் பார்த்த இளைஞன் துப்பாக்கியை தன் தொண்டைக்கு நேரே பிடித்தான். கைகள் நடுங்கின அவனுக்கு. தோள்பட்டையைப் பிய்த்துக்கொண்டு பாய்ந்தது இரவை. பயத்தின் நடுக்கத்தில் கீழே கைவிரித்து விழுந்தான். வலக்கையில் துப்பாக்கி இருந்தது. வியர்த்து விறுவிறுத்துப் போய் இருந்த அவனையும் தூக்கி வண்டியில் போட்டார்கள். அவனை யாரென்று ஐங்கதிருக்கு அடையாளம் தெரிந்தது. வண்டி திரும்பியது, மாவட்ட தலைநகர் மருத்துவமனைக்கு. தாண்டி செல்லும்போது வண்டிக்குள் எட்டிப்பார்த்தாள், இராசகிளி. ஐங்கதிர் ஒருபுறமும், நீலகண்டன் ஒருபுறமுமாக, மறைத்துக்கொண்டார்கள். இரத்தமாகத் தெரிந்தது. “ஆத்தா....தொரைக்கு ஒன்னும் ஆகிறப்பிடாது......” நெற்றியில் மண்ணெடுத்துப் பூசிக்கொண்டாள். அண்டம் முழுவதும் அடக்கி ஆளும் அம்மை, வெறித்த கண்களுடன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நின்றாள்.


இருவரும் பிழைத்துக்கொண்டார்கள். துரையின் நெஞ்சில் இதயத்துக்கு அருகில் பாய்ந்திருந்த குண்டு அகற்றப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட சுவாமிநாதனுக்கு தூக்கு விதிக்கப்படலாம் என்று பேசிக்கொண்டார்கள் குண்டலி பகுதியில்.




முற்றும்......
அன்பன்.
ஆர்.பார்த்தசாரதி.