Friday 5 October 2012

வானும் அதிலோர் விண்மீனும்.


இமைப் பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காத இசக்கித்தாயின் இணையடிகள் சரணம்.
வானும் அதிலோர் விண்மீனும்.       05.10.2012.
(சமர்ப்பணம் :::: ககக சங்கத்துக்கு)
                                                     இரா.பார்த்தசாரதி.

அவர்கள்  வானில் மின்னிய ஒளி பொருந்திய நட்சத்திரம் ஒன்று, விரைவில் அடுத்த  வானுக்கு செல்லப்போகிறது.

அந்த வானம் ஒன்றும் அத்தனை தொலைவோ, அவர்கள்  அறியாததோ அல்ல. இடைவெளி கடக்க கடினமானதும் அல்ல. பயணத்தின் காலம், கனவு மாதிரி இருந்திருக்கவேண்டும்,.

எப்போது செல்வோம் என்று இருக்கும்  அனைவரும் ஏங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். சிலருக்கு சீக்கிரம். அவனுக்கு இப்போது. இன்னும் இருப்போருக்கும் விரைவில்.....

அத்தனை சீக்கிரம் அந்த பயணம் நடக்கும் என்று அவனோ, அவனை சார்ந்தவர்களோ நினைக்கவில்லை. யாரோ நினைத்திருக்கிறார்கள்.

இதோ பயணம் தொடங்கிவிட்டது..................

வெளியூருக்கு போகிறான் என்ற எண்ணம் இருந்தாலும், வேலைக்கு போகிறான் என்று மகிழும் பெற்றோர் மனநிலையில், ககக சங்கம். புதிதாக வேலை கிடைத்த புளகாங்கிதம் அவனுக்கு.

வானம் விட்டு வானம் செல்வதென்ன, வாய்வழிச்சொல் மாதிரி இலகுவானதா?.

வளிமண்டலம், எண்ணற்ற சூரிய குடும்பங்கள், கோள்களும் அதன் துணைகளும், தாண்டி பால்வெளி, விசுவாமித்திரன் படைத்த திரிசங்கு சொர்க்கம் வேறு இவ்விரண்டுக்கும் இடையில்தான் இருக்கிறதாம், பால்வெளியை தாண்டினால் பார்க்கக் கிடைக்கலாம்.

வழியில் இளைப்பாற என்ன செய்வான் அவன்?. யார் உருட்டிவிட்டார்களோ? ஓய்வரியாமல் சுழலும் உலகத்தின் வழியில் அவனுக்கு மட்டும் அது வேண்டுமா என்ன?. உலகைத் தாண்டுகிறோம் என்று உரைக்கவே இல்லை அவனுக்கு. எங்கோ அந்தரத்தில், மந்தகாசப் புன்னைகையுடன் பயணிக்கிறான்.

நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஓரடி எடுத்து வைக்கிறான். இன்னொரு வானத்தில் இருந்து இடையிடையில், அழைக்கும் குரல் மட்டுமே, அவனுக்கு ஆகாரம். அவன் இனி அந்தக் குரலாவதும், அந்த குரலின் தொனி  அவனாவதும் அடுத்த வானத்தில் நடக்கும்.

இளவட்டம் என்று பெயர்தானே தவிர, என்ன தெரியும் அவனுக்கு?.

சில நேரம் சிந்திப்பான். என்ன செய்திருக்கிறான்  இதுவரை.......

எதையும் தன்முனைப்பாக செய்ததாக அவனுக்கு நினைவில்லை. பள்ளம் நோக்கி பாயும் வெள்ளம்போலவே ஓடியிருக்கிறது வாழ்க்கை. உருட்டிவிட்ட பந்தொன்று ஒடுவதைப்போல. விசையுறு பந்தினைப்போல்  என்று, பராசக்தியிடம் வேண்டியதும் இல்லை. அவளாகவே உருட்டிவிட்டாள் என்றுதான் அவனுக்கு எண்ணம். ஆனால் அவனுக்கே தெரியாமல் அது வழித்தடைகளை உடைத்து, வாழ்வைச் செம்மையாக சமைத்திருக்கிறது.

இத்தனை தூரத்துக்கும் ஏறிவந்த படிக்கட்டுக்கள் ஏராளம். ஆனால் ஏணியின் கைப்பிடிகள் அம்மாவும் அப்பாவும். இருக்கும் சொச்ச தொலைவுக்கு படிகள் யாரென்று தெரியாவிட்டாலும், கைப்பிடிகளின் உறுதி கருதி, அவன் கவலைப்பட்ட காலமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

எப்போதோ ஒருமுறை கோபப்பட்டதாக நினைப்பு. அதன் விளைவு பெரியது. அதன்பின்னர் நிறுத்திக்கொண்டான். கோபத்துக்கும் குணத்துக்கும் தொடர்பில்லை என்று புரிந்துபோனது அவனுக்கு.

தான் செய்த செயல்களுக்ககாக அவன் வருந்தியதே இல்லை. அது ஒருவகை குழந்தைத்தனம்..இன்னும் குறையவும் இல்லை.

எல்லோரையும் விட தாழ்வானவன் என்று நினைப்புக்கு பழகிக் கொண்டிருப்பவன். அந்த பழக்கமே அவனுக்குள் அவனை உயர்த்திவிடும் சில சமயம். அதையும் உடைக்க முயன்று தோற்பான்.

தமிழ், வாசிப்பு, இசை, நேர்மை, பொய்யாமை.....உயிர் அவனுக்கு. உத்தரவாதம் உண்டு.

அவனை பற்றி சொல்வதில் என்ன விழையப்போகிறது உங்களுக்கு....?

அடுத்த வானம் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு கற்பனை உண்டு. சில கதைகளும் புனைந்திருக்கிறான். அனுபவித்திருப்பானோ என்று அப்பாவே அச்சப்படும் அளவுக்கு.....

இத்தனை வருட தவத்துக்கு இப்போதுதான் வரம் அவனுக்கு வாய்த்திருக்கிறது.. அந்த வானம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அங்கே செல்வதில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. எப்போது செல்வோம் என்று ஏங்கிக் கிடந்தான் என்று கூட சொல்லலாம்.

அந்த வானத்து மனிதர்களில் பலர் இவனுக்கு பழக்கம். எல்லோரும் இங்கிருந்து சென்றவர்கள் தானே?...

சொல்லிப்போனவர்கள், சொல்லாமல் போனவர்கள், வேறெங்கோ போவதாக பொய் சொல்லிவிட்டு போன சிலரைக் கூட, அங்கே அவன் பார்த்திருக்கிறான். ஏன் பொய் சொன்னார்கள் என்று இன்று வரை புரியவில்ல. அங்கே புரியாத பல உண்டு என்று அவனுக்கோர் அபிப்ராயம் இருப்பதால் அது  அத்தனை பெரிதாக தெரியவில்லை.

ஆனால் எந்த கற்பனையும் அவன் அவர்களிடம் பெற்றது கிடையாது. அதை வானம் என்பதைக் கூட அவர்களில் பலர் ஏற்றுக்கொள்வது இல்லை. பாழுங்கடல் என்றே பகர்கிறார்கள். அவர்கள்  பொய் சொல்கிறார்கள் என்றே அவன் நினைக்கிறான். அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது குறித்து அவனுக்கோர் பலத்த சிந்தனை உண்டு. அதை இப்போது சொல்வதற்கில்லை.

அந்த வானத்து மனிதர்கள் குறித்து சில எண்ணங்கள் இருந்தது அவனுக்கு. அவர்களோடு பல மணிநேரம் பழகும் வாய்ப்பு அவனுக்கு எப்போதும் உண்டு. அவை குறித்து அவனிடம் பகிர்ந்துகொள்ள எதுவும் இல்லை. விரும்பவில்லை என்றுகூட வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு சீக்கிரம் அனுபவிக்காமல் சொல்லிவிடும் ஆள் இல்லை அவன். பார்த்துவிட்டு பேசுவோம் என்று வைத்திருக்கலாம்.

அந்த வானம் மிகவும் அழகானது. எல்லோரையும் இழுக்கும் ஏதொ ஒன்று அங்கே இருக்கிறது.  சென்றவர்கள் திரும்பாத அளவுக்கு, பழைய வானம் ஒன்று இருந்ததையே மறக்கும் அளவுக்கு அவர்களைக் கட்டிப்போடும், அது என்னவென்று அறியத்தான் எல்லோருக்கும் ஆசை. அவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

அங்கே என்ன அப்படி இருக்கலாம்?. வானத்தின் நிறமா?, வளைய வரும் வெண்ணிலவா?, நீல வானின் மடியில் மின்னும் நித்திலங்களா?, அறிந்தானில்லை. அங்கே சென்றவர்களும் அறிந்துவிட்டார்கள் என்று நினைக்கவில்லை. அவர்களும் என்னவென்றே புரியாமலும், தொடர்ந்த தேடுதலுக்கும்தான் அங்கே இருக்கிறார்கள் என்பது அவன் கணிப்பு. மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தில் இனி அவனும் ஒரு ஆள். வெல்வான் அவன்.



காதல் பொய்யென்று கல்லூரிக் காலம் முதல் அவனது கணிப்பாக இருந்து வருவதால், இன்னொரு வானம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்கவே இல்லை. ஆக அந்த வானமும் அவனுக்கு புதிது. அங்கே இவனுக்கென்று ஒலிக்கும் ஒரேயொரு குரலைத் தவிர வேறெதுவும் தெரிந்த மாதிரி இல்லை.

புதியதோர் கூட்டத்துக்குள் புக அவன் புறப்பட்டு விட்டான். வருகிறேன் என்றுதான் பழைய வானத்துக்குச் சொன்னான். ஆனால் அதற்கு பல பொருள் உண்டு என்பதை அவன் மட்டுமே அறிவான்.

இனி அவன் நினைத்த மாதிரி அலைய முடியாது. அவன் எண்ணங்களுக்கு இன்னொரு பார்வை அவனுக்குள்ளேயே முளைக்கும். அது குரலின் தாக்கமாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

இப்படி நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், தனக்கு பிடித்த பலவற்றை, இடைவேளை இருந்த இவ்வாழ்க்கையில் ஏராளமாய் வாழ்ந்துவிட்டான். இனி குரலும், குறளும் தான் அவனுக்கு வாழ்க்கை.

அந்த வானத்தில் இருந்து வா வென்று முகமன் கூற யாருமே இல்லை என்ற வருத்தம் உண்டு. இருப்பவனே ஏதொ என்றிருக்கையில் இன்னொருவனா என்ற எண்ணமாக இருக்கலாம். ஆனால் வழியனுப்ப பெருங்கூட்டம் நிற்கிறது. அவை அனைத்தும்  வரிசையில் நிற்பதும் கூட.

நடக்கிறான். மெல்ல நடக்கிறான். வளி தாண்டி, பரந்த வெளிக்கு வந்துவிட்டான். அங்கே காற்றில்லை. உணவில்லை. தேவைப்படவும் இல்லை. உடல் எடை குறைந்து மிதக்க ஆரம்பித்தான். அறிவியலில் இப்படி நடக்கும் என்று படித்ததுதான். ஆனால் அது நினைவில்லை அவனுக்கு. மிதந்துகொண்டே இருக்கிறான். பெரும் மரம் ஒன்றில் இருந்து, பிய்ந்து விழுந்ததோர் இலையைப்  போல பறக்கிறான். மாமயில் ஒன்றின்  தோகையில் இருந்து தவறிய இறகொன்றும் அதே வெளியில் பறக்கிறது.

இன்னும் சில நாட்களில் இவன் இன்னொரு வானத்தில் இருப்பான். நினைத்தால், இரவும், நினைத்தால் பகலும் வரும் அற்புத வானம் அது. காலத்தை நாமே தீர்மானிக்க முடிந்த கனவு வானம் அது. வருகிறான்  தோழர்களே......

                -------------தொடரும்)