Monday 8 February 2016

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு.

எல்லாமும் வல்ல இசக்கியம்மனின் திருவடிகளைச் சிந்திக்கிறேன்....


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு.

இந்தக் கட்டுரை முழுக்க முழுக்கக் கற்பனையே....

எனக்கு நினைவு சரியென்றால் அன்று சனிக்கிழமை. எப்போதும் கைகா தமிழ்ப்பள்ளியில் பாடம் நடத்தும் சகோதரர், சொந்த வேலை காரணமாக ஊருக்கு சென்றுவிட பாடம் நடத்தும் பணி நமக்கு வந்தது. ஐந்து நாட்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார். ஒருவேளை ஊருக்குப் போகலாம் என்றும் அப்படிப் பயணப்பட்டால் நீங்கள்தான் வகுப்பு நடத்தவேண்டும் என்றும். இந்த ஒருவாரம் விடுமுறை விட்டுவிடலாம் என்ற என்னுடைய சிந்தனையை அவர் ஏற்கவில்லை. ஏற்கனவே பலமுறை அப்படி செய்தாகிவிட்டது, இம்முறை நீங்கள் நடத்துங்கள் என்று சொன்னதோடு, என்ன பாடம் நடத்தவேண்டும் என்றொரு குறிப்பும் கொடுத்துவிட்டுப் போனார். தமிழ் வகுப்பு எடுப்பது நமக்கு ஒன்றும் கடினமான பணியில்லை என்பது எனது எண்ணம். மணிக்கணக்கில் தமிழின் பெருமைகளைப் பேசும் அளவுக்கு, தமிழை உடம்போடும் சதையோடும் இரத்தத்தோடும் கலந்துவிடச் செய்துவிட்டவர் அப்பா. ஆனால் எழுத்துமுறைப் படிப்பவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு அதிக அனுபவம் இல்லை. அதனால் அவர் சொல்லிக்கொடுத்த குறிப்பின் படி பாடம் நடத்துவது எனும் முடிவுடன் செல்ல ஆயத்தமானேன்.

மாலை ஐந்தரை மணி இருக்கலாம். நகர்ந்த முறை வகுப்புக்கு சென்ற போது, கரும்பலைகையில், இல்லை இப்போது அது வெள்ளைப்பலகை யில் எழுதுவதற்கு எழுதுகோல் கொண்டுசெல்லாதது நினைவில் வர, குர்ணிப்பேட்டை வரைக்கும் சென்று எழுதுகோல் வாங்கியதொடு நிற்காமல், அடுத்து செய்த வேலை, இக்கட்டுரைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். கொஞ்ச நாளாக என்றால், நான்கைந்து நாளாக கொஞ்சம் வாயுத்தொல்லை. பிரியாமல் வயிற்றுக்குள்ளே நின்றுகொண்டு, ஊதி அடைத்துக்கொண்டு  இருந்தது. உடல்நிலை தொடர்பாக எந்த பிரச்சினை என்றாலும், உடன் பழகும் மனிதர்களிடம் சொல்லும் வழக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அதில் பல வருமானங்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஒரு காலத்தில் மூச்சுப்பிரச்சினை இருந்தபொழுது, ஒரு மாலைவேளையில் அலுவலகக் கதைப்பில் பேசிக்கொண்டு இருந்தபொழுதுதான், ஈசிபிரீத் வாங்கி சாப்பிடலாம் என்ற ஆலோசனை மேலதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டது. அதனால் பெரும்பயன் அடைந்தவன் நான். பிறகு அதைக் கைவிட்டுவிட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் ஆங்கில மருத்துவமுறைமையான உறிஞ்சை பயன்படுத்த பழகிவிட்டேன். இக்கட்டுரைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நண்பர்களுடன் இந்த காற்றுப்பிரச்சினை குறித்து பேசிக்கொண்டு இருந்தபொழுது, பலரும் தனக்கும் இருப்பதாகச் சொன்னார்கள். எனக்குக் கொஞ்சம் எளிதாக இருந்தது. இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு உடல் முறைமையான பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. அதில் ஆம்லா சாறும், ஆரோவேரா சாறும் வாங்கிக் குடிக்கலாம், தினசரி காலை அதிக நீர்கலந்து குடிக்கவேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. சிலர் வீட்டிலேயே செலூசில் வைத்திருக்கிறார்கள். நான்  வகுப்புக்கு செல்வதற்கு எழுதுகோல் வாங்கப்போன ஆள், அப்படியே ஆம்லா ஆரோவேரா சாறும் வாங்கிவிட்டேன். இரண்டும் தனித்தனி புட்டிகளாக மொத்தம் முன்னூறு செலவு. வாங்கி வண்டியில் வைத்தாகிவிட்டது. இந்தத் தலைக்கவசம் வேறு இப்போது பெரும்பிரச்சினை ஆகியிருப்பதால் அதையும் அணிந்துகொண்டு, மழலையர் பள்ளி வகுப்பறைக்கான சாவியும் வாங்கிக்கொண்டு பாடம் எடுக்கப் போனேன்.

அப்பப்பா.....இந்த நிலையில் ஏற்கனவே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் நண்பருக்கு எத்தனை பலே சொன்னாலும் தகும் பாருங்கள். என் குணபாவத்துக்கு அவர்கள் கட்டுக்குள் அடங்கவில்லை. எப்படியோ சொன்ன குறிப்புகளை வைத்து, பாடத்தை நடத்தினேன்...வகுப்பு முடிந்தபிறகு ஒரு குழந்தை வந்து, நீங்க டீச்சரா, இல்ல சோக்கரா என்று கேட்டது. வீட்டில் சொல்லக்கூடாது எனும் உத்தரவாதத்தை வாங்கிக்கொண்டேன். சத்தியம் சக்கரைப்பொங்கல் ஆகியிருக்கும். அதற்குப் பிறகு பெரியவர்கள் பாடத்துக்கான காலம். உண்மையில் பாடம் நடத்தும் அன்பு சகோதரருக்கு பெரும் நன்றி சொல்லவேண்டும். நன்றாக வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள். வாழ்க..... அப்படியே சாவியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, நமைப் பிடித்திருக்கும் காற்றுப்பிரச்சினை இன்றோடு ஓய்ந்தது எனும்  மனநிலையில் வண்டியில் இருந்தச் சாறுகளைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.

வந்தவுடனேயே வேறு வேலையே இல்லாத மாதிரி, அந்தப் புட்டியில் இருக்கும் தகவல்களை வாசித்தேன். கால அளவு எல்லாம் சரிபார்க்கப்பட்டு, அதில் சொல்லி இருந்ததை விட அதிக அளவு நீர் ஊற்றி, புளிப்பும் கசப்புமாக மருந்து குடலுக்குள் ஊற்றப்பட்டது. எல்லா விளைவுக்கும் சமமான எதிர்விளைவு உண்டு எனும் அறிவியல் பொய்யாக்கப்பட்டு, கொஞ்சம் அதிகமாகவே வயிறு வலிக்கத் தொடங்கியது. அதன் பிறகு போதாதக் குறைக்கு, இரசமும், கருவாட்டுப் பொறியலும். உப்பும் உரைப்புமாக இருந்த கருவாட்டுப் பொறியலுக்கு இரசம் துணை நிற்க, எப்போதும் இல்லாத அளவுக்கு மூக்கு முட்டப்  பிடித்தேன்.

வயிறு தொடர்ந்து உப்புசமாகவே இருக்க கொஞ்சம் தூங்கியாகிவிட்டது. காலையில் நெஞ்சை இறுக்கிக் கொண்டது மாதிரி ஒரு உணர்வு. எங்கள் ஊரில் திட்டுமுட்டு அடித்தது என்பார்கள், அப்படி ஒரு நிலை. மனதைத் திசை திருப்பலாம் என்று, அப்போதைக்கு அரசியலில் பரபரப்பாக இருந்த பழ. கருப்பையாவின், துக்ளக் ஆண்டுவிழா உரை, தந்தி, புதியதலைமுறையில் அவர் அளித்த பேட்டிகள் என அத்தனையும் விடாமல் பார்த்தேன். ஆனாலும் மனம் திரும்பவில்லை. வயிற்றுக்குள்ளேயே கிடந்து உழண்டது. பெருங்குரலெடுத்து இரசம் முழுக்க வாய்வழியே வெளியேறிய பிறகு, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வழக்கம்போல இதையும் நண்பர்களிடம் பகிர, ஒருவேளை வயிறைக் காயப்போடுங்கள், சாப்பிடாதீர்கள், ஈனோ குடியுங்கள் என அறிவுரைகள். அவையும் கடைபிடிக்கப்பட்டன. ஒன்றுக்கும் கட்டுப்படவில்லை.

ஆணவம் கன்மம் மாயை.....என்று சைவசித்தாந்தம் சொல்லும் சிக்கல் எனக்கு ஏற்கனவே கொஞ்சம் உண்டு. காலையில் எழுந்து ஒரு உழக்கு வெதுவெதுப்பான நீர் அருந்தி, அப்புறம் கைகள் இரண்டையும் வீசி ஒரு நடை நடந்துவிட்டு வந்தால், கொஞ்சம் இளக்கமாக இருக்கும். எதையாவது செய்து, முதல் நாள் உணவை வயிற்றை விட்டு வெளியேற்றிவிடு என்று காந்தி சொல்லியிருக்கிறார். அதற்காக இனிமா எல்லாம் கூட எடுத்துக்கொண்டு இருக்கிறார். நாமென்ன, தண்ணீர்தானே குடிக்கிறோம், இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பதுபோல அதை வழக்கமாகக்
கைகொள்பவன் நான். விவரித்தால் அது தனிக்கட்டுரை ஆகிவிடும். ஆனால் இந்த மூச்சுப்பிரச்சினை, மலச்சிக்கல் எல்லாமே எனக்கு கைகா வந்தபிறகு வந்ததுதான். இப்போதும் ஊருக்குப் போனால்....அடடா அது ஒரு சுகம். சொன்னால் நம்ம ஆளுங்களுக்கு எங்கே புரிகிறது. மருந்து மாத்திரைகளோடே வாழ் என்று இறைவன் படைத்துவிட்டானோ என்னமோ...இதுவோ எமைப் பணிகொள்ளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அறனே..என்று பிரார்த்திக்கும்போது எனக்கு எனது பணிமாற்று விண்ணப்பம் கண்ணுக்குள் வந்துபோகும்.

வேறு வழியில்லை.... மருத்துவமனைக்குச் சென்றாகிவிட்டது. பணியில் இருந்தவருக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையாகப் படவில்லை, நன்றாக செமிப்பதற்கு ஒரு மருந்து எழுதித் தந்து, அவசரமில்லை என்றால் நாளை வாங்கலாம் என்றும், நமது மருத்துவமனையிலேயே கிடைக்கும் என்றும் சொன்னார். நான் வேண்டாம் என்று மருந்துக்கடையில் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். இதற்கிடையில் அருந்திய உணவு, நீர் என்று எதுவும் குடலுக்குள் நிற்கவில்லை. சிறுநீர் மண்டலம் செயலிழந்து விட்டதோ என்று நான் அஞ்சும் அளவுக்கு, நீர் கீழே இறங்கவே இல்லை. பேறுகால வலி மாதிரி வயிற்றைப் பிசைந்துகொண்டு வந்தது. விடிய விடிய தூங்கினேனா இல்லையா என்று எனக்கேத் தெரியவில்லை.

மறுநாள் காலையிலும் மருத்துவமனை, இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. எப்போதும் போல காற்றுப்பிரச்சினைக்கு பேன் மாத்திரை தரப்பட்டது. வாயும் வயிறும் உலர்ந்து போயிருக்க, கைவழியே உடலில் நீர் ஏற்றப்பட்டது. வாந்தியை நிறுத்த ஓர் ஊசியும் போடப்பட்டது. அங்கே இருந்த ஆண்செவிலி நமக்கு நண்பர். சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கன்னடத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார். தொழிற்சாலை முதலுதவி மையத்தில் சுழற்சி முறையில் பணியாற்றிய அவரை, மருத்துவமனைக்கு நாள்வேலைக்கு வரச்சொல்லி விட்டதில் பெரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு இருந்தார். அவருடன் அளவளாவியதிலும், ஏற்றப்பட்ட சத்துக்களாலும் கொஞ்சம் தேறி இருந்தேன் நான். மாலையில் மீண்டும் மருத்துவமனை அழைத்தது.

வெள்ளை அணுக்களின் மொத்த எண்ணிக்கை, நான்காயிரத்தில் இருந்து பதினோராயிரம் வரை இருக்கலாமாம். எனக்கு பதினையாயிரத்து இருநூறு இருந்தது. வயிற்றில் புண் இருப்பதைக் குறிப்பதகாவும் அட்மிட்டடு இன் வார்டு என்று எழுதியும்  கையெழுத்திட்டுத் தந்துவிட்டார் மருத்துவர். வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்து  வருவதற்கு உடனடிச் சீட்டு எடுத்துவிட்டு, நண்பர் ஒருவரின் வண்டியில் ஏறி வார்டில் போய் விழுந்தேன்.  எனக்கும் அதுதான் சரியெனப்பட்டது. தொடர்ந்து ஒன்னரை நாட்களாக ஐவி எனப்படும் இன்டெர்வெனசு உணவுப்பொருட்களும் மருந்துகளும் ஏற்றப்பட்டன.

தகவல் மெல்லப் பரவி, அலைபேசியிலும் நேரிலுமாக ஒரே விசாரிப்பு. அனுமன் வனப்பும் வார்ப்பும் எனும் நூலின் துணை கொண்டு ஆசுபத்திரி நாட்கள் கழிந்துகொண்டு இருந்தன. தனியர்களாகவும், குடும்பத்தோடும் நமது தமிழ் சொந்தங்கள் தொடர்ந்து வந்து உடல்நலம் விசாரித்தார்கள். கேட்டினும் உண்டோர் உறுதி என்பான் வள்ளுவன். அப்படி ஓர் உறுதி இந்த சின்ன நோயால் வந்து சேர்ந்தது. என்ன ஒன்று, பார்க்க வந்த யாரும் பழம் கார்லிக்சு போன்ற எதையும் வாங்கி வரவில்லை. நான் கேட்டே விட்டேன். எதிர்ப்படுக்கையில் இருக்கும் ஒரு வயோதிகரைப் பார்க்கவரும் ஆட்கள் எல்லாம் பழங்கள் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். நீங்கள் இப்படி கையை வீசிக்கொண்டு வருகிறீர்களே என்று, போதாதக் குறைக்கு மருத்துவமனையில் நமக்குக் கொடுத்திருந்த பிசுகோத்துக்களை பேச்சின் ஊடாக பிய்த்துத் தின்றுகொண்டு இருந்தார்கள் சிலர். வயிறு சரியில்லாதவனுக்கு எப்படி உணவுப்பொருள் வாங்கிவரமுடியும் என்று காரணம் சொன்னார்கள். மருத்துவமனையில் இப்படி கேலிகளும் கிண்டல்களுமாகக் கழிந்ததிலேயே பாதி நலமாகிக்கொண்டிருந்தது உடம்பு. இரண்டு நாள் கழிந்த பிறகு, மெல்ல வாய்வழி உணவும் மருந்தும் உட்கொள்ளத் தொடங்கி, உடலும் குடலும் மெல்ல இயங்கத்தொடங்கி.. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அங்கும் மூன்று நாட்கள் ஓய்வெடுத்து நேற்றிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துகொண்டு இருக்கிறேன் நான்.

இதுக்கெல்லாம் ஒரு கட்டுரையா என்று நீங்கள் நினைக்கலாம். அது ஒருவகையில் சரியும் கூட. எனக்கு வந்த பிரச்சினையை சொல்வது என்பது, அதுகுறித்த கவனம் அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்பதுதான். இந்தமாதிரி புண்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனக்கு வந்த பிரச்சினை வெறும் சாறுகளாலோ, அல்லது அந்த கருவாடால் மட்டுமே வந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. அவை வினையூக்கிகள். அதற்கும் முன்னமே எனக்கு வாயுத்தொல்லை இருந்தது. வேக வேகமாக உணவு அருந்துவது, நிறைய உணவை வாய்க்குள் வைத்துவிட்டு தண்ணீர் விட்டு உள்ளே தள்ளுவது, அப்படியே இந்த மூச்சுப் பிரச்சினைக்கு உறிஞ்சப்படும் மருந்து, புகைப்பது, நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது இப்படி பல. எனக்கு எதுவோ சில காரணங்கள்.

உடல் சாவகாசமாக இருக்கும்போது அதன் மகிமை நமக்கு தெரிவதில்லை. அடிபடும் போது பலமாக வலிக்கிறது. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்கிறது தமிழ். நமக்கெல்லாம் என்ன வந்துவிடும் என்ற நினைப்பே நமைக் கெடுத்துவிடுகிறது. இப்போதெல்லாம் கைகாவில் சைக்கிள் வாங்கி, பைக் வாங்கி, பிறகு கார் வாங்கி, கடைசியில் எதிலும் செல்ல முடியாமல் ஈ டைப்பிலிருந்து எல்&டி கேட் வரைக்கும் நடந்துகொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். இரண்டொரு நாளில் பிரச்சினை சரியாகாதபோது, குடல்வாலாக இருக்கலாம், ஏன் புற்று கூட இருக்கலாம் என்றெல்லாம் எனக்கு ஐயம் வந்துவிட்டது. பிரச்சினையின் தீவிரம் மனிதனை அதி உச்ச சிந்தனைக்குக் கூடக் கொண்டுசென்று விடுகிறது பாருங்கள்.

அதிகம் நீர் குடிக்கவேண்டும், மோர் குடிக்கவேண்டும், இளநீர் குடிக்கவேண்டும் என்று மருத்துவ அறிவுரைகளைக் கொண்டு கொஞ்சம் சீராகி இருக்கிறேன்.


போகிற போக்கில் ஒரு வெண்பா எழுதி இறைவனை இறைஞ்சினேன். தமிழச்சங்கத்துக்கு தலைவர்கள் அல்லவா, சிவனும் முருகனும். வெறும் பிரார்த்தனையை விட வெண்பா எழுதினால் கவனிப்பார்கள் என்பது எனது கணிப்பு.

தண்சுமந்த கோவே நுதலில் நெருப்பெனும்
கண்சுமந்த தேவே வயிற்றினுள் - புண்சுமந்து 
நாயாய் புரளும் நனக்கருள் செந்தூர்வாழ் 
சேயா இதைச்சரி செய்

நன்றி சொல்லிக் கவிபாட வேண்டியதுதான் இனிமேல். எப்படியோ தப்பித்தாகிவிட்டது. திறமும் தெம்பும் இன்னும் முழுதாக வந்து சேரவில்லை. மெல்ல மெல்லத்தான் சரியாகும் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆக உணவே மருந்து என்பார்கள் தமிழர்கள். இப்போது புட்பாய்சன் என்கிறார்கள். நாம் உண்ணும் உணவே நமக்கு எதிரியாகிப் போய்விடுகிறது. சில ஆண்டுகாலமாக முழுக்க சைவ வாதியாக இருந்த காலத்திலேயே கூட நான் இதேபோல ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். அது உண்ணும் உணவு ஒன்றுக்கொன்று ஒவ்வாமல் இருப்பது. எங்கள் கிராமத்தில் பெரியவர்கள் இன்ன உணவு சாப்பிட்ட பிறகு இன்ன உணவு சாப்பிடக்கூடாது என்று கணக்கே வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் எளிதில் புறந்தள்ளி என்ன வேண்டுமானாலும் சாப்பிட நினைக்கும் நாநுகர்ச்சிப் பண்பாடு பாடாய்ப் படுத்துகிறது நம்மை. உணவில் கட்டுப்பாடும் கவனமும் அவசியம் என்பதுதான் இந்த சிக்கலில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். ஒரு காலத்தில் கிராமத்தில் குடித்து வந்த சுக்கு கசாயங்கள் காணாமலே போய்விட்டன. என் சிறுவயது காலங்களில் வேம்புக் கசாயமும் சுக்குச் சொரசமும் பண்ணித் தருவார்கள் விடுமுறைக் காலங்களில். குடிக்கமாட்டேன் என்று ஊர் முழுக்க ஓடியிருக்கிறேன். அப்படித்தான் எண்ணெய் தேய்த்து குளிப்பதும். எல்லாம் மறந்து மருந்து மாத்திரைகளுக்குள் நம்மை ஒளித்துக்கொண்டு வாழவேண்டி இருக்கிறது இப்போது.

சரி போகட்டும். பழைய காலம் மாதிரி கசாயம் குடித்துக்கொண்டு இப்போதெல்லாம் வாழ முடியாது. ஆனாலும் உணவில் கட்டுப்பாடு அவசியம் என்பது எனது கணிப்பு. இதில் இன்னொரு ஆச்சரியம் இணையதளங்கள் மனநிலையைக் கூட இதற்குக் காரணமாகச் சொல்கிறது. எனக்கு அதிலும் உடன்பாடு இல்லாமல் இல்லை. ஆக உள்ளமும் தெளிவாக இருக்கவேண்டும். தமிழின் ஆசாரக்கோவை க்கு தினம் ஒரு பாடலாக விளக்கஉரை எழுத எனக்கு ஆசை இருந்தது உண்டு. இன்னும் ஒழியவில்லை அவ்வாசை. ஆனால் அதன் பாடங்கள் இப்போது நகைக்கப்படும். வேதமும் ஆகமமும் போல அதையும் எதிர்க்கேள்வி கேட்காமல் கடைபிடிப்பது நல்லதென்று நான் நினைப்பேன். நேரம் கிடைக்கும்போது எழுதலாம் அதையும். வாழ்க...


அன்பன். ஆர்.பார்த்தசாரதி. 08.02.2016