Tuesday 24 July 2012

மின்னும் மூக்குத்தி.........சிறுகதை....


முன்னுரை.

நான் முதன் முதலில் எழுதிய சிறுகதை இது. மூன்றாண்டுகளுக்கு முன்னால். கட்டுரைகள்  மட்டுமே எழுதி எனக்கு பழக்கம் அப்போது. சிறுகதை எழுதலாம் என்று முனைந்த போது, இந்த கதையை முதலாவதாக எழுதினேன். அந்த வயதுக்கும், திருமணமாகாத நம் நிலைமைக்கும் பொருத்தமில்லாத இக்கதையின், மூல உரிமை எனக்கானது அல்ல. நான் மிக சிறுவயதில் எங்கோ படித்த கட்டுரையோ, நிகழ்வோதான் இந்த கதையின் கரு. அப்போது என் அலுவலகத்தில் இருந்த ஒரு எழுத்துருவைப் பயன்படுத்தி இதை எழுதி, அச்செடுத்து வைத்துக்கொண்டேன். நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பினேன். பல பதில்கள், பாராட்டுக்கள் வந்தன. ஆனால் அந்த எழுத்துரு, இந்த இணையத்துடன் பொருந்த வில்லை. அதனால் கதையை மீண்டும் இப்போது எழுத வேண்டியதாயிற்று. இதே போல இன்னும் ஐந்து சிறுகதைகளையும் இணையப்படுத்த வேண்டியிருக்கிறது. 

எழுதி முடித்த ஒரு படைப்பை, அதை படைத்தவன் மீண்டும் எழுதுவது என்பது எத்தனை சிரமம் ஆனது என்பது எனக்கு இப்போது புரிகிறது. பெற்ற பிள்ளையை மீண்டும் பெறச்சொன்னால் தாய்க்கு வரும் சலிப்பைப் போன்றது அது. இடையிடையே விலக்கவும், சேர்க்கவும் எனக்கு நிறைய தெரிந்தாலும், அப்படி செய்வது, பழைய சாரதிக்கு , புதிய சாரதி  செய்யும்   துரோகம் மாதிரி ஆகிவிடும் என்பதால் அப்படியே எழுதி முடித்திருக்கிறேன். இனி கதை உங்கள் வசம். 


மின்னும் மூக்குத்தி.........

தேவகி குளித்துக்கொண்டிருந்தாள். அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் குளித்து வீட்டு வேலைகளை சரிவர செய்து, முகமலர்ச்சியுடன் கணவனை எழுப்பும் அவளைப்போன்ற பெண்களை இந்தக்  காலத்தில் காண்பது அரிது. தனியறையில் தாள்போட்டுக் கொண்டு குளித்தாலும் ஆடையில்லாமல் குளிக்கும் பழக்கம் அவளுக்குக் கிடையாது.  அதுவும் தன்னுடைய உள்பாவடையையே மார்பு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டுக் குளிக்காமல், இராகவன் அவிழ்த்துப்போட்ட சாரத்தை உடுத்திக் குளிப்பதில் அவளுக்கு ஒரு சுகம். ஆடையில்லாமல் குளிக்கக் கூடாது என்று ஆசாரக்கோவை சொல்லிக்கொடுத்தவனுக்கு அவள்காட்டும் நன்றி அது. இன்று அவளுடைய அப்பாவும் அம்மாவும் ஊரிலிருந்து வருகிறார்கள். பார்த்து பலநாள் ஆகியிருந்தது.திருமணமான புதிதில் அடிக்கடி வந்தவர்கள் நாளாக நாளாகக் குறைத்துக் கொண்டார்கள்.

அவளைப் பார்த்து யாரும் கல்யாணமாகி எட்டுவருடம் ஆகிவிட்டது என்றோ, ஐந்து வயதில் ஒரு குழந்தை இருப்பான் என்றோ எடை போட்டுவிட முடியாது. அத்தனை அழகையும் அமைப்பையும் ஆண்டவன் அவளுக்குக் கொடுத்திருந்தான். மேலே ஊற்றிய தண்ணீர் மெல்ல அவளுடைய மேனியை நனைத்து கீழே இறங்க மனமில்லாமல் வழிந்து கொண்டிருந்தது. திமிறும் தனங்களை அடக்க முடியாமல் இராகவனுடைய சாரம் மெல்ல கிழிந்து கொண்டிருந்தது.

குக்கர் இரண்டாவது விசில் அடித்தது. அடுத்த ஸ்டவ்வில் பால் நுரை தள்ளியது. “..தேவி...கல்யாணத்துல பாலும் நீரும் போல வாழ்கன்னு வாழ்த்துவாங்க கேட்டிருக்கியா... ஏன்னு தெரியுமா?...தன்னோட இருக்கிற தண்ணி ஆவியாகுறது பொறுக்காம அதுக்குக் காரணமா இருக்குற தீயை அணைக்க அந்த பால் பொங்குது பாரு....அதுக்குத்தான்....”. எதெற்கெடுத்தாலும் விளக்கம் கொடுப்பதில் இராகவன் போல யாரும் இருக்க முடியாது.
“..அய்யோ....தத்துவ திலகமே....நிறுத்துறேளா... தாங்க முடியல.....” என்று அழுக்கும் வரை இலக்கிய உரை நிகழ்த்துவான். திருமணமான புதிதில் பல காப்பியங்களை இவளுக்குக் கதையாகச்  சொல்லியிருக்கிறான். அவன் கதை சொல்லும் அழகுக்கே அவனிடம் கேட்கலாம். தினமும் பால் கொதிக்கையில் இந்த உவமைதான் அவளுக்கு நினைவுக்கு வரும்.

“என்னங்க....காப்பி கொண்டாரவா.........”
“....ம்...........”
அப்போதுதான் குளித்து முடித்து, தலை துவற்றிய துண்டோடு சேர்த்துக் கொண்டை போட்டு, காட்டன் சேலையை சுற்றிக்கட்டிக் கொண்டு அவள் காபி கொண்டு வரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். அதற்காகவே காபி வரும்வரை, விழித்துவிட்டாலும் கட்டிலில்தான் கிடப்பான் இராகவன். அவிழ்த்துவிட்டால், அவள் அழகத்தனையும் மறைக்க அவளுடைய கூந்தலே போதுமென்று நினைக்கும் அளவுக்கு, முதுகில் அலைமோதும் கூந்தல் காணக்கிடைக்காது என்றாலும், கொண்டைக்குக் கீழ் தெரிகின்ற சுருள் முடிகளும், பின்னங்கழுத்தின் அழகும், தோள் திமில்களும் இப்போது மட்டுமே காண முடிபவை.
காபியுடன் அறைக்குள் நுழைந்தாள். நீலநந்தி அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். ஸ்கூல் லீவு விட்டு ரெண்டு நாளாகியிருந்தது. மெல்ல அதை எடுத்து விட்டவள் “. என்னங்க....அப்பாவும் அம்மாவும் வாராளாம். .. மாமா வந்திருக்காங்க ன்னு சொல்லிட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்திடுங்க...டிபன் மட்டும்தான் ரெடி பண்ணிருக்கேன்....”
சாரத்தை சரிசெய்துகொண்டு எழுந்தவன், “ என்ன விஷயமாம்......கலாவுக்கு ஏதாவது மாப்ள பாத்திருக்காங்களாமா......?”
“...தெரியல....நீலன கிராமத்துக் கூட்டிட்டு போலாம்னு சொன்னாங்க......வரச்சொல்லிட்டேன்......காபி எப்படி இருக்கு....”.
எங்கோ பார்த்துக்கொண்டு “என்னைக்கும் விட இன்னைக்கு சூப்பரா இருக்கு....”
தன்னை சோதித்துக்கொண்டவள் மாராப்பை சரி செய்துகொண்டாள். இருவருக்கும் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம்.

கிட்டத்தட்ட ஆறுமாத காலமாக இவர்கள் தாம்பத்யம் பேச்சிலேதான் கழிகிறது. நீலநந்தி இருவருக்கும் இடையில்தான் படுப்பான். உண்மையிலேயே நந்தி. அவனை கதை சொல்லி தூங்க வைக்கும் முன் படாத பாடு படுவாள் தேவகி. அம்மா மீது கைபோட்டுக்கொண்டுதான் தூங்குகிறான் இப்போதெல்லாம். விடியற்காலையில் எழும் போதும் மெதுவாக கையை எடுத்து அப்பா பக்கம் தள்ள வேண்டும். இடையில் எப்போதாவது கையை எடுத்துவிட்டால் விழித்துக்கொள்வான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் அவர்கள் படும் பாடு பெரும்பாடு.
“ஏண்டி...இப்படி தூங்க மாட்டேன்றான் ஒம்புள்ள........”
“.நீங்கள் ஒழுங்காத்தூங்கினாதான அவனும் தூங்குவான். என்ன பாடு படுத்துவீங்க....நல்ல மாட்டிக்கிட்டீங்க....” சொன்னாலும் அவளுக்கும் சில நாள் எரிச்ச்சலாகத்தான் இருக்கும்.  
ஒரு நாள் பிரகலாத சரித்திரம் சொல்லிக்கொண்டு இருந்தாள். பெரும்பாலும் சேலை கட்டிக்கொண்டுதான் தூங்குவாள். பின்னர் எழுந்து நைட்டிக்கு மாறுவாள். காலையில் மீண்டும் சேலைக்கு வந்துவிடுவாள். நீலநந்தி அம்மாவை நைட்டியில் பார்த்ததே கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் இடையில் எழ முடியாததால் நைட்டியை துவைத்து ஆறுமாதம் ஆகிறது.
“ஹிரன்யனுக்கு ரொம்ப நாளா குழந்த இல்ல.....அப்புறம் பலகோவில் நடையேறி பிரார்த்தனை, தானதர்மம் எல்லாம் செஞ்சி, இந்த தெய்வக்குழந்தை பிறந்தான்......”
இராகவன் பண்ணி என்னும் சொல் தமிழில் இல்லையென்றும் அதனால் அதை சொல்லக்கூடாது என்றும், அதற்கு பதிலாக செஞ்சி என்று சொல்லலாம் என்றும் சொல்லியிருந்தான். இப்படி சொல்லும்போது அவளுக்கு ஒரு பெருமை. நீலனின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு எதிர்புறம் தன்னைப்பார்த்தே படுத்திருக்கும் இராகவனைப் பார்த்தும் புன்னகை புரிவாள். கிட்டத்தட்ட நந்தியும் அப்படித்தான். மூன்று வருடங்களாக குழந்தையில்லாமல் வேண்டாத கோயிலில்லை. கடைசியாக இசக்கியம்மன் கோயிலில், பொங்கல் வைத்து, சேவல் வெலி கொடுத்து வேண்டியதன் விளைவு இவன் பிறந்தான். அதே கோயிலில் வைத்து அவனுக்கு நீலநந்தி என்று இரண்டு தாத்தாக்களின் பெயரையும் சேர்த்து வைத்தார்கள். முதல் மொட்டையும் அங்கேதான் போட்டார்கள்.

“..உங்கப்பன் பேர்தானடா......சொல்றதுக்கு என்ன.....? எல்லோரும் சொல்றாங்களா இல்லையா......நீ மட்டும் ஏண்டா இப்படி பிராணன வாங்குற.....சொல்லு.....ஓம் ஹிரண்யாய நமக.........” ஒங்கப்பன் பேர்தானடா என்று சொல்லும் போது இராகவன் சிரிப்பான். இவளும் சிரிப்பாள். தின்பதற்காக மட்டுமின்றி தின்னப்படுவதற்கென்றே படைக்கப்பட்ட அய்யாரெட்டு பச்சரிசி பற்களில் மின்னல் வெட்ட சிரிப்பாள். சிரிக்கும் போது அவளுக்கு மூக்குத்தி மின்னும். இராகவன் அடிக்கடி சிரிக்கச் சொல்லி இரசிப்பான்.
பள்ளிகொண்ட பரம்பொருள் போல் ஒருபக்கம் சாய்ந்துகொண்டு கதை சொல்வதுதான் அவள் பழக்கம். எதிர்த்தாற்போல் அதே சயனையில் அவன். நடுவில் நீலநந்தி. இதுதான் இப்போது படுக்கையறையின் அமைப்பு.  கதை சொல்லும்போது இராகவனின் கண்கள் அவள் இடுப்பு மீதுதான் இருக்கும். அவள் அப்படி படுத்திருக்கும் போது இளம் இடுப்பில் ஒரு சிறு மடிப்பு விழும். முழுமடிப்பாக இல்லாமல், ஒரு சின்ன பள்ளம் போல இருக்கும். இரண்டு பக்கமும் மாநிறமும், நடுவில் பள்ளத்தால் ஒரு சிறு கருப்பும், இதற்கு நிறைய உவமைகள் காட்டியிருக்கிறான் அவன். அவ்வபோது கிள்ளவும் செய்வான். உடலசைவினால் கொலுசும் வளையலும் ஒலி எழுப்பும். கண்ணை மூடிக்கொண்டு “.......ம்.......” போட்டுக்கொண்டிருந்த நந்தி விழித்து விடுவான். “...அப்புதம்.........”
“கொஞ்சம் ச்சும்மா இருக்கேளா.......இவன தூங்க வச்சுடுறேன்.........”
“அதுக்கப்புறம் மட்டும் என்னவாம்..... கிழிஞ்சிடும்......போடி போ....நீயும் ஒம்புள்ளையும்.....நானும் தூங்குறேன்....ஒழுங்கா தூங்கினான்னா எழுப்பு.......”

அதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. ஆனால் இதனால் அவர்களின் அன்பு குறைந்துவிடக்கூடாது என்பதில் இருவருமே கவனமாக இருந்தார்கள். தனது வீட்டில் சின்னப்பிள்ளைத் தனமாக சுற்றிக்கொண்டிருந்தவளை எப்படி மாற்றிவிட்டான் இவன். நினைத்து நினைத்து பெருமிதம் கொள்வாள். இன்று அவள் நந்திக்கு சொல்லும் பல்வேறு கதைகள், கல்யாணமான புதிதில் அவளுக்கு அவன் சொல்லிக்கொடுத்ததுதான். அவனுடைய நேர்மை, உண்மை பேசும் உதடுகள், தமிழார்வம், அடுத்தவர்களின் ஆழ்மனதை அழகாக எடை போடும் மனது, மனதில் பட்டதை ஒழிவு மறைவு இல்லாமல் பேசும் பாங்கு.....அப்பப்பா அத்தனையும் அவளுக்குப் பிடித்திருந்தது. அதனால் தான் இத்தனை தாபம் இருந்தும், ஒருநாள் கூட பொய் சொல்லி பகலில் லீவு எடுக்காமல் இருந்தான். எப்போதும் வேலையிருக்கும் இவனுக்கு. அதனால் அற்பசுகத்துக்காக பொய் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போவது அவனுக்குப் பிடிக்கவில்லை. மெல்ல மெல்ல அவன் வழிக்கு மாறியிருந்ததால் இப்போது அவளும் அதை ஏற்றுக்கொண்டிருந்தாள்.

இதோ அந்த நாளும் வந்துவிட்டது. நீலகண்டத்தேவரும், தெய்வானை ஆச்சியும் ஆட்டோவை விட்டு இறங்கினார்கள். தாத்தா வந்திருக்கிறார் என்பதைவிட, ஊருக்குப் போகப்போகிறோம் என்பதால் நந்தி மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். இந்து, மது, இராஜா எல்லாரும் வந்திருக்கிறார்களா என்று கேட்டு, அனைவரும் வந்திருக்கிறார்கள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அவனுக்கு. இங்கே தேவகிக்கும் இராகவனுக்கும் பல மடங்கு மகிழ்ச்சி. இதுவரை அனுபவித்ததே கிடையாது என்பது மாதிரி இருவரும் கற்பனைக்கனவில் மூழ்கினார்கள். அவன் கோப்பை தன் மேஜையிலேயே வைத்துவிட்டு அலுவலகம் முழுவதும் தேடினான். வீட்டுக்கு வந்தால், இரசத்தில் உப்பே போடவில்லை. அவளைப் பார்த்து கன்னடித்துச் சிரித்தான். அவளுக்கு மூக்குத்தி மின்னியது.

ஆட்டோ சென்றவுடன் கதவைச்சாத்திவிட்டுக் கட்டிப்பிடித்துக் கடித்தான்.
“..அய்யோ....விடுங்க....எலும்பு ஒடைஞ்சுட போகுது....பொண்டாட்டிய புடிக்கிற மாதிரியா புடிக்கிறீங்க.....ச்சீ.....காஞ்ச மாடு.......”. கல்யாணம் ஆன புதிதில், விட்டுவிட்டுக் கட்டிப்புடிப்பானே இப்போது மறந்துவிட்டானோ, என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், எப்போதும்போல பெண்மை, மென்மை காட்டியது. “...கோயிலுக்கு போணும்.....இப்பத்தான் குளிச்ச்சன்.....திருப்பியும் குளிக்கவச்சுடாதீங்க......எல்லாம் ராத்திரிதான்......”, ஓடிப்போனாள். இவனுக்கும் விஜயன் எங்கோ வெளியே போகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வர, கிளம்பத் தயாரானான். எப்போதும் சட்டை போடும்போது பாரதியின் கண்ணம்மா பாட்டில் ஒரு பல்லவி பாடுவான். சமீப காலமாக மறந்திருந்தான்.
    “பாயுமொளி நீயெனக்கு...... பார்க்கும் விழி நானுனக்கு........
     தொயுமது நீயெனக்கு........தும்பியடி நான் உனக்கு......” உச்சஸ்தாயியில் பாடினான். அறை முழுவதும் எதிரொலித்தது அவன் ஆலாபனை. தேவகிக்கு மூக்குத்தி மின்னியது.

இரவு எட்டுமணிக்கு வீட்டுக்கு வந்தான். தலை நிறைய மல்லிகைப்பூவுடன் கதவைத் திறந்தாள். முதலில் எல்லாம் எப்போது கதவைத் திறந்தாலும் “.........வாங்க.....” என்று வாய்நிறைய  அழைப்பாள். நீலநந்தி பேச ஆரம்பித்த பிறகு, பைக் சத்தம் கேட்டால் போதும், வீட்டிலிருந்தாலும், வீதியிலிருந்தாலும் ஓடோடி வந்து “...அய்....அப்பா வந்தாச்சு........” என்று எல்லா வீட்டுப்பிள்ளைகள் மாதிரி சொல்லி விட்டு, பின்னர் இவன் முறைத்த பின்பு, “வருக....வருக......வணக்கம்......” என்று இரண்டு கைகளையும் கூப்பிச்சொல்வான். “...ண ...” வராத காலத்தில் அவன் “..வ.....க்கம்...” என்று சொல்வதை இருவரும் இரசிப்பார்கள். ஆனால் இன்று என்ன சொல்வது என்று அவளுக்கும் புரியவில்லை....அவனுக்கும் புரியவில்லை...மெல்லியதாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வெட்கமாக இருந்தது அவளுக்கு.
“...........கோயில்ல இன்னைக்கு ஏகப்பட்ட கூட்டம்.......”
பதிலே சொல்லவில்லை அவன். சாப்பிட உட்கார்ந்தார்கள். தனக்கென்று ஒரு தனித்தட்டு வேண்டுமென்று அடம்பிடித்து வாங்கி, அதிலே கையையே வைக்காமல் இரண்டு பேர் தட்டிலும் கையை குழப்பி, சோற்றை அள்ளி வீசி....... வெறுமையாக இருந்தது இருவரின் மனதும். இராகவனுக்கு தன்னுடைய தட்டில் அடுத்தவர் கையை வைப்பதே பிடிக்காது. தேவகிக்கூட அதே நிலைதான். ஆனால் நீலநந்தி ஒருபக்கம் விளையாட, அடுத்த ஓரத்தில் ஒன்றுமே தெரியாதது போல சாப்பிடுபவனைப் பார்த்துச் சிரிப்பாள் அவள். கைகழுவும்போது நந்தியின் விரல்களை சூப்பும்போது இவனை பார்த்து ஆயரம் அர்த்தங்களுடன் கண்ணடிப்பாள். இருவருக்குமே அதிகமாக உணவு செல்லவில்லை.

கதவு தாளிடப்பட்டது. விளக்கை அணைக்கப் போனான். “..வேண்டாம், கத சொல்லுங்க.......”
படுத்தார்கள். அவன் அவளைப்பார்த்தும், அவள் அவனைப்பார்த்தும் ஒருக்க்களித்துப் படுத்தார்கள். இடையில் நீலநந்தி இல்லை. இருவரது கண்களும் சந்தித்தன. எந்த உணர்ச்சியும் அந்த கண்களில் இல்லை. இருவரும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் நின்றார்கள். தேவகியின் கண்களில் நீர் குளம் கட்டி நின்றது. கரை எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும் போல இருந்தது. கதை சொல்லும் தேனினும் இனிய தேவகியின் குரல், “...ம்............ம்..................ம்...........” என்று ஒரே சீரான இடைவெளியில் ஒலிக்கும், குழலினும் யாளினும் இனிய நந்தியின் குரல், இவனுடைய சின்ன சின்ன சில்மிஷன்களால் நெளியும், கால்கை அசைவுகளினால் உண்டாகும் வளையல், கொலுசு சத்தங்கள், ஏதுமில்லாமல் அறை வெறிச்சோடிப்  போயிருந்தது. மிகப்பெரிய கற்பனையாளன் என்று தன்னை நினைத்துக்கொண்டு திரிந்த இராகவனின் மனம் இறுகிப்போய், சலனமில்லா குளமாய் சமைந்து கிடந்தது.

எதற்கடா தூங்க மாட்டேங்கிறான் என்று நினைத்தவன் இப்போது இல்லவே இல்லை. அவனைத் தேடின நான்கு கண்களும். இராகவன் உணர்ச்சிகளை கடக்க எண்ணி மெல்ல கையை அவள் இடுப்பில் வைத்தான். அவள் சினுங்கவோ, பதிலோ சொல்ல வில்லை. அப்படியே மரத்தைப்போல கிடந்தாள். அளவில்லா சுகத்தை அள்ளித்தருவாள் என்று நினைத்தவளை, தேற்றவேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன். தினமும் எப்படி கதை சொல்வது என்று நினைத்தவள், இப்போது கதை சொல்ல ஆசைப்படுகிறாள். கேட்பவனை எங்கே? கொஞ்சம் நெருங்கி கழுத்தை அவள் கழுத்தோடு புதைத்தான். மெல்ல விசும்பினாள். ஒருகையால் தலையையும், ஒரு கையால் உடலையும் இழுத்தான். உடன்பட்டாள். உடல்பரிசம் உணர்ச்சியை வென்றது.
பேசவேண்டிய அவசியமே இல்லை. அங்கே மௌனம் மொழியானது. அன்றுதான் திருமணம் ஆனவர்கள் போல வெறியுடன் கூடிக் கலந்தார்கள். அவள் அவனை பலமுறை தின்றாள். அவன் அவளை மூன்று முறை வென்றான். இருவருக்கும் இடையில் காற்று புகமுடிந்து கஷ்டப்பட்டது.
காலையில் எழுந்து குளிக்கும் முன், நைட்டியை லேசாக அலசி காயப்போட்டாள். காபி கொடுக்கும்போது, “...ஏங்க.....நீலனை திருப்பியும் வரச் சொல்லியிரலாமா....?”
“.....ம்.......” ஏறிட்டு பார்த்தவன்...... “...வேண்டாம் பள்ளிக்கூடம் தொறக்கும் போது வந்தா போதும்.......” என்றான். 
தேவகிக்கு மூக்குத்தி மின்னியது....

முற்றும்........
                                         – செல்வியின்செல்வன்.