Monday 20 May 2013

அவனருளாலே அவன் தாள் வணங்கி.... சிறுகதை.


உலகின் அசைவையும் அமைதியையும் தன் திரிசூலத்தால் திருப்பும், முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மலர்தாங்கும் தங்கத்திருவடிகளை சிந்திக்கிறேன்.

அவனருளாலே – சிறுகதை





ஓட்டமும் நடையுமாகவும், அவ்வப்போது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்ப்பதுமாகப்  பேருந்து நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தேன். இன்றைக்கென்னவோ அது வேகமாக சுற்றுவது மாதிரி தெரிந்தது எனக்கு. தொலைவில் வரும்போதே, பேருந்துநிலையத்துக்குள் வண்டி தெரிகிறதா என்று எட்டிப்பார்த்துக்கொண்டே ஓடினேன். அந்த நகரப்பேருந்தை அதன் பின்பக்கத்தை வைத்தே அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஒன்பதுமணிதான் அதன் நேரம். ஆனால் ஒன்றும் அப்படி கட்டாயக்கணக்குக் கிடையாது. அன்று வரும் ஓட்டுனர் நடத்துனரின் குடும்பப்பாசம் பொறுத்து அதன் நேரம் தீர்மாணிக்கப்படுவதுதான் அதிகம் நடந்திருக்கிறது. ஏற்கனவே ஐந்துநிமிடம் அதிகமாகியிருந்தது. இந்த நேரத்துக்கு அந்த பேருந்து, நிலையத்துக்கே வராமல் இருந்த காலங்கள் கூட உண்டு.


ஓடிப்போய் நின்ற வேகத்தில், ஒன்னாம் எண் கடைக்காரரிடம்  ‘மன்னர்நகர்  கடைசி வண்டி போயிருச்சா அண்ணன்’.  ஓடிவந்ததால் ஏற்பட்ட மூச்சிறைப்பில் சொற்கள் அரைகுறையாகவும் தள்ளித்தள்ளியும் விழுந்தன. ஆனாலும் புரிந்துகொண்டவர் போல   ‘போயிருக்கும்’, கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டே சொன்னார். எந்த வண்டியைக்  கேட்டாலும் இப்படித்தான் சொல்வார் போல இருந்தது அவரது அலட்சியப்பதில். என் ஊர்ப்பெயரைச் சொல்லி அவரிடம் வழி கேட்டிருந்தால் இன்னும் விவரமாக சொல்லியிருப்பார். அவருக்கு என் ஊரில்தான் பெண்ணெடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் திருப்பி முகவரி விசாரிக்கும்போது, சொல்லக்கூடிய அளவுக்கு ஏதும் இல்லாத ஏழைக்குடும்பம் என்பதால், சொல்லாமல் விட்டுவிட்டு, அவரது பதிலில் நம்பிக்கையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு இருந்தேன். ஒவ்வொரு வண்டியும் நிலையத்துக்குள் நுழையும்போது, மனது அவசரப்பட்டு அதன் ஊர்ப்பலகையைப் பார்த்து, ஏமாற்றத்தை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டது. வண்டி சென்றதோ இல்லையோ, ஆனால் இனிமேல் வருவதற்கு வாய்ப்பில்லை எனுமளவுக்கு நேரம் கடந்தபின்பு, திரும்பிச்செல்லும் முடிவுக்கு வந்தேன் நான். பேருந்துநிலையத்தை விட்டு வெளியேறும்போது, உள்ளே நுழைந்த நாகர்கோவில் வண்டி ஒன்றில், பின்பக்கம் பலகை இல்லாததால், ஓடிச்சென்று முன்பக்கம்  எட்டிப்பார்த்து, வெறுமையில் திரும்பினேன். மனது கனத்துப்போய் இருந்ததற்கு காரணம் உண்டு. வெளியே செல்லும் வழியில், பார்த்தவுடன் கைகூப்பச்செய்யும் அளவுக்குக்  கம்பீரமாக ஒரு தேவர் சிலை உண்டு. இல்லாவிட்டாலும் வணங்கும் வழக்கமும்  எனக்கு உண்டு. சுற்றிப்போடப்பட்டிருந்த கம்பிவேலி அந்த கம்பீரத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தது.


இசக்கியம்மன் ஆலயம் ஒன்று எதிர்த்தார்போலே இருக்கிறது. உலகம் முழுவதையும் அடக்கி ஆண்டும், எதுவுமே தெரியாத சின்னக்குழந்தை போல புன்னகை புரியும், இசக்கியம்மனும், அருகிலேயே அதற்கு முரணாக, இந்தா வெட்டிவிடுவேன் என்று அரிவாளைத் தூக்கிக்கொண்டு நிற்கும் சுடலைமாடசாமியும் அங்கே உறைகிறார்கள். ஏதும் வேண்டும் பழக்கம் எனக்கு இல்லையாததலால், அருகிலிருந்த தொலைபேசிச்சாவடிக்குள் நுழைந்தேன். வீட்டில் தொலைதொடர்பு வசதி கிடையாது. பக்கத்து சித்தப்பா வீட்டுக்கு அழைத்தேன். சித்திதான் எடுத்தார்கள். ‘வணக்கம் .. யாரு பேசுறது?’. சித்தி தனித்தமிழ் பேசுவாள் . அவசரத்துக்குக் கூட அடுத்த மொழியைப் பேச்சுவழக்கில் கலக்கும் பழக்கும் அவளுக்குக் கிடையாது. சித்தப்பாவைக் கட்டிக்கொண்ட பின்புதான் இந்த பழக்கம்  வந்தது. அதற்குக்காரணம் அப்பாதான். சித்தப்பா எடுத்தால் நேரடியாகத் தன் பெயரையே சொல்வார்கள். சித்திக்கு அந்த வழக்கம் இல்லை. யாரென்று தெரிந்துகொண்ட பின்புதான், தன் பெயரைச்சொல்லி நலம் விசாரிக்கத் தொடங்குவதோ, அவர்கள் வீட்டிலில்லை என்று தொடர்பை அறுப்பதோ நடக்கும்.


சித்தியைப் பற்றி உங்களிடம் சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது. எங்கள் ஊரில் திருமணமாகாத ஒவ்வொரு இளையனும், இப்படி ஒரு மனைவி தனக்கு வந்தால் நலமாக இருக்குமென்று நினைக்குமளவுக்கு, திருமணமான பெரிசுகள் கூட,  ‘நமக்கு இப்படி வாய்க்காம போச்சே’ என்று வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு, யாரையும் பொறாமைப்பட வைக்கும் குணம் சித்திக்கு.  சித்திக்கு உடன்பிறந்த பெண்பிள்ளைகள் இருந்திருந்தால், எங்கள் ஊர் இளவட்டங்கள், சித்தி ஊரில் அதிகம் திரிந்திருப்பார்கள். பேசாமலும் இருக்கமாட்டாள், அதிகம்  பேசவும் மாட்டாள், அளவு வைத்துதான் பேசுவதும் சிரிப்பதும். காலையிலேயே எழுந்து சாணம் எடுத்துவந்து, கரைத்து, தூர்த்து தொளித்து என்று கதிரவனை வரவேற்கும் வழக்கம் உண்டு அவளுக்கு. நல்ல கோலம் போடுவாள். அட்டில் தொழிலில், வன்மை அதிகம். தெருவே மணக்கும் சித்தியின் சமையல். வீட்டில் பெண்கள் இல்லையென்றால், அதை காலையிலேயே அடுத்தவீட்டில் சொல்லி, அவர்களுக்கும் சேர்த்து சமைக்கச்செய்து, அங்கே சென்று சாப்பிடும் பழக்கம் உண்டு எங்கள் ஊர் ஆண்களுக்கு. சிலசமயம் மனைவிமார்களே சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ‘பேச்சித்தா அக்கா கிட்ட சொல்லிருக்கேன். சுந்தர் வீட்டுல இருந்தா கொண்டுவந்து தருவான், இல்லன்னா நீங்க ஒரு எட்டு போயி சாப்பிட்டிட்டு வந்துருங்க என்ன?’. அந்த வாய்ப்பு ஆண்களுக்குக் கிடைத்தால் எங்கள் தெரு முழுக்க தேர்வு செய்யும் வீடு சித்தப்பா வீடுதான். ‘தாயீ...சேத்து பொங்கிரு என்னம்மா?’. ‘சரின்னேன்’ ன சொல்லுக்கு மறுசொல் சித்திக்கு சொல்லத்தெரியாது. சாப்பிட்டு முடிச்ச கையோட.... ‘இவா தினசரி சந்தைக்கு போனா நல்லாத்தான் இருக்கும்’ என்று சொல்வார்கள். ‘மதினி வரட்டும் சொல்லிவைக்கிறேன்’ னு மிரட்டுவாள் சித்தி.... ‘சொல்லிராத ஆத்தா... அப்பொறம் அவா எளவுல நிக்க முடியாது, பத்ரகாளி எப்படி இருப்பான்னு பாக்கணும்னு ஆசன்னா சொல்லு..’. இன்றுவரை வீட்டுக்கு என்னென்ன தேவை என்று சித்தப்பாவுக்குத் தெரியாது. ஒருநாளாவது, இது இல்லை, அது இல்லை, வாங்கி வாருங்கள் என்று அவரை கடைக்கு அனுப்பும் வழக்கம் சித்திக்கு இல்லை. தானே எல்லாமும் செய்துவிடுவாள். பரிமேழலகன் சித்தியைப் பார்த்திருந்தால், தற்காத்து தற்கொண்டான் பேணி என்ற குறளுக்கு அமுதவல்லி என்று ஒரு சொல்லில் பொருள் எழுதிவைத்துவிட்டு போயிருப்பான். சுழன்று சுழன்று வேலை செய்வாள். மாலை நேரம் தன்வயதொத்த பெண்களிடம் கதைபேசுவதும் உண்டு. எல்லோரும் சித்தி வீட்டு முத்தத்துக்கு வருவார்கள். பிறர் சொல்லவருவதை அப்படியே புரிந்துகொள்ளும் அறிவு சித்திக்கு இருந்தது. யாரையும் குறைசொல்லும் விதத்தில் பேசமாட்டாள். அவரவர்க்கு தகுந்தாற்போலும், அதனூடே நல்லதுகெட்டதையும்  அழகாகவும் சொல்லிவிடுவாள். ஊரே வியக்கும் சித்தியைக் குறை சொல்லும் கூட்டமும் இல்லாமல் இல்லை. ‘அதென்னடே வாழ்க்க....நீ வேணா கேட்டுப்பாறேன்...அந்த புள்ள சந்தோஷமா இதெல்லாம் செய்யுதான்னு......இருக்காது.’. எனக்கும் அப்படி ஓர் எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கண்டுபிடிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பெரும்பாலான பெண்களுக்குத்  தன்னாசை துறந்து, மனைத்தக்க மாண்புடையளகாக நடப்பது, ஒரு இயல்பான குணமாகவே இருக்கிறது. தியாகம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.


‘நான் நரசு பேசுறன் சித்தி’ ‘சொல்லும்மா...இவ்வளவு நேரத்துக்கு எங்கேருந்து பேசுற?’. ‘கடைசி வண்டிய விட்டுட்டேன் சித்தி, அம்மாகிட்ட சொல்லிறேன்...நான் இன்னைக்கு வீட்டுக்கு வரலைன்னு’ சிலர் மீதான பாசம், வயதொப்பீட்டில் மிகக்கீழே இருந்தாலும், ஒருமையில் பேசும் உரிமையைத் தரும். ‘எங்க தங்கப்போற?, காலைல வந்திருவியா இல்ல சாய்ங்காலம்தான் வருவியா?’. இல்ல சித்தி இனிமே நாளைக்கு சாயங்காலம் தான் வருவேன், இங்க வேல பாக்குற எடத்துலேயே தூங்கிக்கிறேன்...அம்மாட்ட சொல்லிருங்க என்ன’. ‘சரிம்மா சொல்லிர்றேன்’ நான் தொலைபேசியின் ஒலிவாங்கியைக் காதை விட்டு விலக்கும்போது சித்தி ஏதொ கேட்பது போல இருந்தது. அநேகமாக இரவு உணவு சாப்பிட்டது குறித்ததாக இருக்கும்.. என் வீடு இருக்கும் தெரு முழுக்க, வெளியுலகத் தொடர்பு சித்தப்பா வீட்டின் வழிதான் நடக்கும். ‘அவன் இருந்தான்னா, என்ன ஏதுன்னே விசாரிக்கவும் மாட்டான், ஒடனே சொல்லிவிடவும் மாட்டான், அந்த புள்ள இருந்ததுன்னா நல்ல விசாரிச்சு, ஏதாவது ஒரு சின்னப்பயல்ட்ட சொல்லிவிட்டுரும் பாத்துக்கோ.’ இப்படி கதைப்பார்கள் கிழவிகள் எங்கள் தெருவில். அது உண்மைதான். வெளியூரில் இருக்கும் அவர்களது வாரிசுகள் அழைத்தால், சித்தி உடனே கூப்பிட்டு சொல்லிவிடுவார்கள். இவர்களை அழைத்து பேசவும் வைப்பார்கள். தகவலாக இருந்தாலும் முழுக்கவும் விசாரித்து சொல்வார்கள். என்னிடம் தாங்கும் இடம் குறித்தும், வீடு திரும்பும் நேரம் குறித்தும் சித்தி விசாரித்தது அந்த பழக்கத்தால்தான். சித்தப்பாவுக்கு அது  கிடையாது. அவரே சிலவற்றை விசாரித்துவிட்டு, ‘சொல்லிடுறேன்’ என்று வைத்துவிடுவார்.


மெல்ல நடந்துவந்தேன். மனத்தின் கொதிப்போ, ஓடிவந்த களைப்போ, வண்டியை தவறவிட்ட விரக்தியோ, உடல் சூடாகவும், கழுத்துப்பக்கம் அதிகமாக வியர்த்துக்கொண்டும் வந்தது. மெனக்கிடாமல் மெல்ல நடந்தேன். மேல்பக்கம் கடைகளுக்கு இடையில் செல்லும் சந்திலிருந்து காற்று வந்து மேனியை தழுவியது. ஒருமுறை தலையைத் தூக்கிச் சந்தைப் பார்த்தேன். இருட்டாக இருந்தது. ஏறக்குறைய எல்லாக்கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. சில கடைகளில் சுத்தம் செய்யும் வேலையும், சிலவற்றில் கல்லா எண்ணப்படும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. எதிரே இருட்டு பெருங்குகை போல இருந்தது. அந்தப் பெருங்குகைக்கு இட்டுச் செல்லும் வழிமாதிரி கிடந்த சாலை, நீளப்போக்கில் அகலம் குறைந்து குறைந்து பின்னர் காணாமல் போனது அவ்விருட்டுக்குள். குகையின் முடிவை எட்டிவிட்டதோ என்னமோ. ஒற்றையும் இரட்டையுமாய், மின்மினிப்பூச்சிகள் அந்தக் குகைக்குள் இருந்து கிளம்பி என்னை நோக்கி வருவதுபோலவும், என்னருகே மோதுவதுபோல வந்து, சற்றே திருப்பிக்கொண்டு சாலையில் பறப்பது போலவும் தெரிந்தது. வாகனங்கள் சீரான இடைவெளியில் ஒவ்வொன்றாய் கடந்தன.


இந்நேரம் அம்மாவிடம் சித்தி சொல்லியிருப்பார்கள். ‘மணி வீட்டுல தங்க சொல்ல வேண்டியதுதான, போமாட்டான’. அம்மா இப்படி சொல்லியிருக்கக் கூடும். இந்த மணி வேறு யாருமல்ல. எனக்கு தாய்மாமா. அத்தையும் பாசமானவள்தான். வந்தால், போனால் எட்டிப்பார்ப்பதோடு சரி, தங்குவதெல்லாம் சரிவராது என்பதே என் எண்ணமாக இருந்திருக்கிறது. மகன்  வீட்டுக்கு வரவில்லை என்பது  எந்த அம்மாவுக்கும் வருத்தமாக இருக்கும். என் அம்மா அப்படியில்லை. அதுவும் நாளை நான் செல்வதற்கு திட்டமிட்டிருக்கும் இடத்துக்கு, செல்லமுடியாது என்பதில் அம்மா இன்னும் மகிழ்ந்திருப்பாள். அண்மைக்காலமாக எனது நடைமுறைகளில் அம்மாவுக்கு அதிகம் குறைபாடு. அப்பாதான் ‘சும்மா சத்தம் போடாத.. அதெல்லாம் நல்லதுதான்’ என்று அதட்டி வைப்பார்கள். அது என் நட்புவட்டத்துக்கும் தெரிந்துபோகும் நிகழ்வொன்று போனவாரம் தான் நடந்திருந்தது. என்னைத்தேடிக்கொண்டு வந்த தோழன்  ஒருவரிடம் ‘இங்க பாரு..என்கிட்ட சொன்னதோட விட்டிரு, நான் சொல்லிக்கிருவேன், அவன பார்த்தா இத சொல்லப்பிடாது என்ன?’ என்று கொஞ்சம் கோபமாக பேசி அனுப்பியிருக்கிறார்கள். அதனால் அவன் என்னிடம் சொல்லவே இல்லை. ஆனாலும் எனக்கு தெரிந்துபோனது. அதுதான் அவனருளாலே என்ற சொல்மூலம். ‘அம்மா நாளைக்கு, வடக்கூர் கோயில் ல திருவாசகம் ஓதப்போறோம், காலையில போயிட்டு சாயங்காலம்தான் வருவேன்’ சொன்னபோது அம்மா ஆச்சரியப்பட்டார்கள். ‘யாருடே ஒனக்கு இதையெல்லாம் சொல்லுதா?’, சொன்னா கேக்கவா போற, அப்படி கேக்குற புள்ளையையா நான் பெத்துருக்கேன், எல்லாம் என் தலவிதி, இதுக்கு  ஆதரவு வேற பெருகுது, அய்யாவ ஒன்னும் சொல்லதுக்கு ஆவல’. அப்பா மீதும் குறைபட்டுக்கொண்டார்கள். அம்மா போகவேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னால், எங்கே செல்வதானாலும் நிறுத்திவிடும் வழக்கம் எனக்கு உண்டு. மீறிப்போனால் சென்ற செயல் திறம்பட நடவாத நாட்கள் பல. அம்மாவின் கற்பின் சக்தி மீது எனக்கு ஆச்சரியம். ‘எல்லாரும் சினிமா பாட்டு பாடிகிட்டு திரியிறான், நம்மாளு என்னான்னா திருவாசகம் ன்றான், தேவாரம் ன்றான், கம்பனுக்கு விழா, சேக்கிழாருக்கு விழா ன்னு புறப்பட்டு போயிடுறான்’ என்ன செய்யுறது அமுதா, தேறிருவானா?’. சித்தி நம்ம கட்சி. ‘பெரும படுவேளா, சும்மா பிதற்றிக்கிட்டு, எவம் படிக்கிறான் இந்த காலத்துல, ஒனக்கு தெரியாதுக்க்கா, இதையெல்லாம் தெரியிறவன் வாழ்க்கைய எப்படி நடத்தணும்னு புரிஞ்சிப்பான், அதெல்லாம் வருங்காலம் சொல்லும், இப்படி ஒரு புள்ளைய பெத்தொம்னு நீ பெரும படத்தான் போற பாரேன்’ சித்தி என்னவோ மிகைப்படுத்தி பேசுவது போல இருக்கும் எனக்கு.


எனக்கு நடந்து செல்லவே விருப்பம் இல்லாததுபோல, மெல்ல நடந்தேன். ஓடிவந்த வேகத்தில் உடனே நிற்கமுடியாமல், இன்னும் கொஞ்சம் உடலை இழுக்கும் விசையின் செயல்போலத்தான் நடந்தேன் நான். அப்படியே சாலையைப் பார்த்துக்கொண்டே நின்றுவிடவேண்டும் போல இருந்தது. தங்கும் அறைக்கு இன்னும் கொஞ்ச தொலைவு இருக்கிறது. சீக்கிரம் போகவேண்டும் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காத இசக்கியண்ணன் மீதும், இன்னும் யார் மீதெல்லாமோ, அம்மா மீது கூட, கோபம் கோபமாக வருவதும், அவனருளாலே என்ற சொல்மூலம் அதை அடக்குவதுமாக, உள்ளம் கொதித்து கொதித்து அடங்கியது. திருவாசகத்தின் பல பாடல்களின் சில வரிகள் மட்டும் நினைவுக்கு வருவதும் செல்வதுமாய் இருந்தன. மாய வாழ்க்கையை மெய்யென்றெண்ணி மதித்திடா வகை நல்கினாய், வேயதொளுமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினாய் என்ற வரிகள் நினைவுக்கு வந்தபோது, யாருமில்லாத அந்த இருண்ட சாலையில், அங்கிருந்து மெல்லிய நிலவொளியில் இலிங்கம் போலவே தெரியும் அந்த மலையை நோக்கி, சத்தம் போட்டு பாடவேண்டும் போல இருந்தது. அதற்குள் அவனருளாலே அவன்தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் என்ற வரிகள் வந்து சூழ்ந்துகொண்டன. அப்படியே அதை பின்பற்றி சென்றது மனது. என்ன வரிகள் இவை?. சிவபுராணம் ஓதினால், ஊழ் அத்தனையும் ஒய்ந்துவிடுமா என்றே கேள்வியை விட, சிவபுராணம் ஓதுவதற்கே சிவனருள் தேவை என்ற பதத்தின் மீதேறி நின்ற வினா, என்னை  சிந்திக்க வைத்ததது. அப்படியானால் தன்னடியார்களைக்கூட அவன்தான் தேர்ந்தேடுப்பானா?, நாமாக இறைவனை சிந்திக்க முடியாதா?, கைலாயத்தில் கையில் கம்பும் வேலுமாய் பூதகணங்கள் நிற்பது போலவும், நந்தியம்பெருமான் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, சிலரை பணிக்கு சேர்ப்பதும், சிலரை விலக்குவதைபோலவும் ஒரு தோற்றம் கண்ணுக்குள் வந்து சென்றது. நானும் அந்த வரிசையில் கிடா மீசையும், தொந்தி வயிருமாக, கிழிந்த குட்டைப்பாவாடைக் கட்டிக்கொண்டு நிற்கிறேன். என் நேரம் வரப்போகிறது, சேர்ப்பாரோ, விலக்குவாரோ தெரியவில்லை.


தொடர்ந்து சிந்திக்க பயம் கொண்டவனாக ஆனேன். மிகச்சிறிய கனத்தில், அம்மைக்கும் அப்பனுக்கும் அருகில் இருப்பதைப்போலவும், அம்மை தன் மடியில் அமர்த்தி, அழகிய வளைக்கரங்களால் என்னை அணைத்திருப்பதுபோலவும் தெரிந்தது. இரண்டாவது கண்ணைப் பிடுங்கப்போன திண்ணனின் கரங்களை பற்றித் தடுத்தாட்கொண்ட அதே பொற்கரம். அண்டசராசரம் முழுவதும் அன்னையின் கைவிரல் மோதிரம் என்று ஔவை சொல்லியிருக்கிறாளே, அந்த மோதிரத்தை எங்கே?. கையை இழுத்து பார்க்க அவா பருகிய சனத்தைக் கெடுத்தது ஒரு தானியின் ஒலி. மிக அருகில் வந்து ‘அண்ணே......நரசிம்மண்ணே’ பரிச்சயமான குரல். எங்கோ உயரத்தில் பறந்துகொண்டிருந்த வானூர்தி ஒன்று, திடீரென எந்தப்பிடியும் கிட்டாமல் வேகமாக தரையில் வந்து வீழ்வதைப்போல உணர்ந்தேன் நான்.


கலியமூர்த்தி எனக்கு நல்ல பழக்கம். ‘ஏறுங்கண்ணே’. என்ன செய்கிறேன் என்று தெரியாமலே தானியின் பின்பக்க இருக்கைக்குள் என்னை திணித்தேன். ஒருமுறை திரும்பிப்பார்த்து, சாலையில் வண்டி ஏதும் இல்லாததால் சாவகாசமாகத் திருப்பினான் மூர்த்தி. ‘வூட்டுக்கு பேசுனன்....வள்ளிப்பாண்டியன் இல்ல....நாச்சியார்தான் பேசுனாவ...நீங்க இங்கதான் இருக்கியன்னும், வண்டிய வுட்டுட்டீக ன்னும், கெடச்சா கூட்டிட்டு வா ன்னும் சொன்னாக.. நான் கோட்டையடி பக்கம் வரைக்கும் போயிட்டேன்....சரி பேச்சுத்தொனைக்கு ஆகுமென்னு திரும்பி வந்து தேடுனேன். கெடச்சிட்டியோ....சமுக முக்க தாண்டுன உடனே ஒரு பாலம் வரும் பாத்திருக்கேளா....அதுல ஒரு முனி உண்டுன்னு சொல்லிக்கிடுதாவ’. எனக்கு மூர்த்தியின் பேச்சில் மனம் இலயிக்கவில்லை. மீண்டும் அவனருளாலே என்ற சொல்மூலம் நினைவுக்கு வந்தது. பூதகணத்தின் வரிசையில் கலியமூர்த்தியும் நின்ற மாதிரி இப்போது தோன்றியது. ஆனாலும் சிந்தனை அதைத்தாண்டி போகவில்லை. மூர்த்தி ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். சமுகரெங்கபுரம் பாலத்தைத் தாண்டும்போது மட்டும் ஏனோ அமைதிகாத்தான். அதுவரை பேசிக்கொண்டே வந்தவன் சட்டென அமைதியான தருணம், எனக்குள்ளே கூட ஒரு அச்சத்தை உருவாக்கியது. வெளியே இருட்டுக்குள் எட்டிப்பார்த்தேன். வளைவான அச்சாலையின் கரையோரம் இடுப்பில் சிவப்புத்துண்டுடன் தலைசிலுப்பிகொண்டு நிற்கும் ஒரு வடலி, தூரமாகி, மெல்ல அருகி, பின்னே சென்றது, ஏதொ போல இருந்தது.


காஞ்சியின் வரமே, காமாட்சியின் அவதாரமே.....ஒலிபெருக்கிகள் அலற, அடித்துச் செல்லும் ஆற்றின் வெள்ளத்தில் அசைந்து வரும் குச்சி போல, சிறிய  காவித்துணி கட்டிய இரண்டு குச்சிகள் அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவில் மெல்ல நகர்வது தெரிந்தது. கூட்ட நெரிசலில் அங்கும் இங்கும் நகராமல் இருக்க, அருகிலிருந்த கொடிக்கம்பத்தைப் பிடித்துக்கொண்டேன் நான். அந்த கம்பத்தின் கொடியில்  அண்ணா, இறைவன் இங்கேதான் இருக்கிறான் என்று, அம்பாள் சன்னதியின் கோபுர உச்சியைக் காட்டிக்கொண்டு இருப்பதைப் போல தெரிந்தது  எனக்கு.  பாலபெரியவர் வடிவுடைநாயகி சன்னதியின் கோபுர உச்சிக்கு வந்து சேர, எனக்குப் பின்புறம் இருந்த, சிறிய திண்டில் இருந்த பாடல்குழு ஒன்று, சிவபெருமானின் புகழைப் பரவ, வேதகோசங்கள் முழங்க, திருக்குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று இரவு பேருந்தை தவறவிட்ட பிறகு, நான் தவித்த தவிப்பு இறைவன் எனக்கு வைத்த சோதனையாக தெரிந்தது. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, நம பார்வதி பதயே....அரகர மகாதேவா... என்று எங்கும் ஒலிகள் கிளம்ப, நகரமே விழாக்கோலம் பூண்டு நின்ற அழகை அனுபவித்த மனது, அடைந்த ஆனந்தத்தை எழுத்தில் எழுத என்னால் இயலாது.  கருனைக்கடவுளே கலியமூர்த்தி வடிவில் வந்தமாதிரி எனக்கொரு எண்ணம். சுற்றி ஒலித்த அத்தனை ஒலிகளும், அவனருளாலே என்ற திருவாசகச்சொல் மூலத்தின் சுழியில் அடங்குவது போல இருந்தது.


இது நடந்து பத்துவருடம் இருக்கும். அம்மா ஒரு நாள் வண்டியின் பின்னால் அமர்ந்திருக்கும்போது, உசிரே போகுதே....உசிரே போகுதே....என்று முணுமுணுத்துக்கொண்டே வந்தேன். ‘ஏண்டா ஏதாவது நல்ல சகுனமான பாடலாக பாடக்கூடாதா?’ என்றார்கள். வரும் சனிக்கிழமை  நெல்லையப்பர் கோயிலில் உழவாரப்பணி என்று திருநாவுக்கரசர் சிவப்பணிமன்றத்திலிருந்து சொன்னதாகச் சொன்னார்கள். அவர்கள் முன்னாலேயே வண்டியை நிறுத்திவிட்டு, இராமக்குட்டி அண்ணனை அலைபேசியில் அழைத்து, ‘வேலை அதிகமா இருக்கு அண்ணன், வரமுடியாது இப்போ’. அம்மா சிரித்தார்கள். அதே சனிக்கிழமை   நாகர்கோவில் சுவாமி திரையரங்கில் புதுப்படம் ஒன்றுக்கு சீட்டு வாங்கியாகிவிட்டது. படம் தொடங்க இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. அருகில்தான் நாகராஜா ஆலயம். ஆனாலும் செல்லாமல், ஆலயத்தின் பிரமாண்டநுழைவாயில் முன் இருந்த பெட்டிக்கடை பெஞ்சில் அமர்ந்து புகைபிடித்தேன். காற்று அதிகமாக இல்லாததால், சுருள் சுருளாக புகை, மெல்ல என்னை விட்டு விலகியது. அதன் வடிவம் ஏனோ, சங்காகவும், சக்கரமாகவும், உடுக்கை, சூலம் போலவும் கண்ணுக்குத் தெரிந்தது. மனம் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.


ஜான் சார் கூப்பிட்டார். ‘வணக்கம் இது நரசிம்மமூர்த்தி’ என்றேன். புகை கண்ணிலும் மூக்கிலும் நுழைந்து காந்தியது. ‘பவானில ஒரு வேல இருக்கு சார், உங்களத்தான் போச்சொல்லனும்றார் எம்டி’ அவசரமாக இடைமறித்து ‘கூட யாரு சார்’. ‘நம்ம இசக்கிமுத்து வருவார், செவ்வாக்கிழம நம்ம கம்னி வண்டியிலேயே போயிராலாம்....’ நான் என்ன சொல்லவருகிறேன் என்று கேட்காமலே தொடர்பு துண்டிக்கப்பட்டது. போகலாம், கூடவே அடுத்தவாரம் நடக்கஇருக்கும் பேராச்சியம்மன் கோயில்கொடை நினைவுக்கு வந்தது. ‘அங்க யார்க்கனவே நெரிய பேரு இருக்கானுவோ, அதெல்லாம் சொல்லிட்டு வந்துரலாம்டே, வா’. இசக்கியண்ணன் இப்படி சொன்னார்.


பவானி சுற்றுசூழல் அருமையாக இருந்தது. என் ஊர் மாதிரி இல்லாமல், எங்கே பார்த்தாலும் மரியாதையாக பேசினார்கள் மக்கள். வெள்ளிக்கிழமை வாக்கில் விடுமுறை கேட்கலாம் என்று நினைத்து, கேட்டும்விட்டேன். ‘ராம்குமார் வேற லீவுல இருக்கான், இப்ப போகமுடியாது, ரெண்டுநாள் கழிச்சு வியாழக்கிழமை போங்களேன்’. ‘சார், நான் என்ன சொந்தக்காரங்கள பாக்குறதுக்கா போறேன், கோயில்கொட சார், அப்ப போனாதான் உண்டு’. ‘நாட் பாசிபுள் மிஸ்டர் நரசிம்மன்’


எனக்கு விவரம் தெரிந்தபிறகு, நான் விடப்போகும் முதல்கொடை இது. என்ன வேலை இருந்தாலும், போட்டுவிட்டு ஓடிவிடுவேன், அப்படி ஒரு சூழ்நிலை அமைவதுபோலவே இருக்கும். இப்போது மனம் கனமாக இருந்தது. அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே பாடமுடியவில்லை. தொண்டை அடைத்துப்போய் இருந்தது. நான் பகலிலும், இசக்கியண்ணன் இரவிலுமாக பணியமர்த்தப்பட்டதில், சங்கடத்தைப் பகிரமுடியாமல் மனம் அதிகமாக சஞ்சலப்பட்டது. அவனருளாலே என்ற சொல்மூலம்  அண்மைக்காலமாக எனக்கு அந்நியமாகிப்போனது.


செவ்வாய்க்கிழமை பகல்நேரம் மிக நீண்டதாகத் தெரிந்தது எனக்கு. எவ்வளவு வேலை செய்து நேரம் தொலையவில்லை. சாப்பிடவும் மனசு வரவில்லை. எந்த கற்பனைக்குள்ளும் மனது நிரந்தரமாக நிற்க மறுத்து, ஓடியாடியது. சுற்றிப்பார்க்க வந்த ஜான் சார் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். ‘நரசிம்மன், நீங்க ஊருக்கு போகலை?’. கோபமாக வந்தது எனக்கு. ‘நீங்கதான் போகமுடியாதுன்னு சொல்லிட்டீங்களே சார்’. ‘ராம்குமார் நாளைக்கு வந்துருவேன்னு சொன்னாப்ல, ஒருநாள் தான சமாளிச்சுக்கலாம், போச்சொல்லுங்கன்னு, எஸ்கிமுத்து கிட்ட சொன்னேனே, அவரு சொல்லலியா, சரி நல்லாதா போச்சு, இன்னைக்கு ஒரு ஆடிட் இருக்கு, நீங்க இருந்தா இன்னும் நல்லா இருக்கும்’, உள்ளத்தின் வேதனை புரியாமல், அதுபாட்டுக்கு பேசிவிட்டு சென்றார்.


அவசரமாக அலைபேசியை உருவினேன் பைக்குள்ளிருந்து. ‘அண்ணன், ஜான் சார் என்னிய ஊருக்குப் போலாமுன்னு சொன்னாரா?’. ‘ஆமா நீ போகலியா என்ன, நீ ஊருல இருக்கன்னுதான் ஒனக்கு பேசவே இல்ல நான்’. ‘அடப்பாவிங்களா, ஏன் எங்கிட்ட சொல்லல?’. கோபமாகப் பேசினேன் நான். ‘அவரு சொல்லிருப்பாருன்னு நெனச்சேன்’. ‘ச்ச...’. யாரை குறைசொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.


நான் நேரில் கேட்ட விடுமுறைக்கு ஜான்சார் என்னிடமே ஏன் பதில் சொல்லவில்லை?. வரும்போதே இதுகுறித்து சொல்லியிருந்தும், அவர் சொன்னதை இசக்கியண்ணன் ஏன் எனக்குச் சொல்லாமல் விட்டார்?. வீணே அழைத்து வீட்டுக்கதைகளைக் கொட்டும் மனிதர், இரண்டுநாட்களாக ஏன் கூப்பிடவில்லை?. நானே கூட இன்னொருமுறை, ஜான்சாரிடமோ, இசக்கியண்ணனிடமோ ஏன் கேட்கவில்லை?. ஏன் அமைதியாகிக்கொண்டேன்?. இராம்குமாரிடம் எப்போது வருவீர்கள் என்று கூட ஒருமுறை விசாரித்திருக்கலாமே நான்?. ஏன் செய்யத் தோன்றவில்லை?. கேள்விகளால் துளைத்துத் துளைத்துப் புண்ணாகியது நெஞ்சம். கணேசனை அழைத்து ஒரு பெட்டி புகைக்குழல் வாங்கி வரச்சொன்னேன்.  கண்களை மூடிக்கொண்டேன். பேராச்சியம்மன் ஆலய மண்டபத்துக்குள், விரிசடை வீசி அவள் ஆடுவதுபோல தெரிந்தது. அவனருளாலே அவன்தாள் வணங்கி எனும் திருவாசக வரிகள் என்னை விட்டு விலகியது போல இருந்தது எனக்கு. அதற்கு காரணம் நான் அறியாதது அல்ல. 


தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும், தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே... எனும் திருவருட்பா வரிகள் என்னை உடுத்திக்கொண்டன. அதைச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

செல்வியின்செல்வன்



Thursday 2 May 2013

ஆழிசூழ்உலகு - வாசிப்பு அனுபவம்./


உலகின் அசைவையும் அமைதியையும் தன் திரிசூலத்தால் திருப்பும், முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மலர்தாங்கும் தங்கத்திருவடிகளை சிந்திக்கிறேன்.
ஆழி சூழ் உலகு

நான் இதுவரை படித்திராத ஒரு புது புத்தகத்துடன் என்னை சந்திப்பவர், என் மனதுக்கு இதமான நண்பனாகிறார் என்று யாரோ சொல்லிஇருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. ஊரிலும் சரி, அதன்பின்னர் கற்பதற்காக நான் தங்கியிருந்த இடங்களிலும் சரி, இன்று பணியாற்றும் நகரிலும் சரி, எனது புத்தகங்கள் பல, அங்குள்ள பலரது வீடுகளிலும் இருக்கும். வள்ளுவன், கற்றறிந்தவனுக்கு ஓர் இலக்கணம் வைக்கிறார். அவன் எப்படி இருப்பானாம், தான் அறிவு பெற்று இன்புறுவதைப்போல உலகமும் இன்புறவேண்டும் என்று ஆசைப்படுவானாம். அதிகம் படித்தவன், நிறைய பேசுவதற்கு இதுதான் காரணம் என்று நான் நினைப்பதுண்டு. அவன் கற்றுக்கொண்டதை அடுத்தவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற ஆசையை, அந்த கல்வியே அவனுக்கு கொடுக்கிறது. அப்படி பயிற்றுவிக்கும் ஆசை இருந்தால்தான் அவன் கற்றறிந்தவன் என்று, உலக உயிர்க்கெல்லாம் வாழ்விலக்கணம் வகுத்த வள்ளுவம் சொல்கிறது.

நான் இப்படி நிறைய கற்றறிந்தவர்களை பார்த்திருக்கிறேன். தேசியமாமகன் தேவர் இதயநாதம் எனும் நூலை தந்த, அன்புதாத்தா இராமச்சந்திரன் ஆகட்டும், இருபதாம் நூற்றாண்டில் மறவர்களின் பங்கு எனும் ஆய்வு நூலை தந்து படிக்கச்  சொன்ன, நாலந்துலா இராமச்சந்திரபாண்டியன் ஆகட்டும், கம்பரசம் தந்து என்னை கவர்ந்த மதிப்புமிகு சகோதரர் மணிவண்ணன் ஆகட்டும், அண்மையில் தனிமையில் விளையாடும் பொம்மை என்னும் பழநிபாரதியின் கவிதை நூல் ஒன்றை நம் கைகளில் திணித்த பாசமிகு அண்ணன் வல்லநாடு சுடலைமணி ஆகட்டும், அப்பாவுக்குப் பின்னர் அந்த வரிசையில் இப்படி சிலர் இருக்கிறார்கள். அரசு ஒன்றும் மாவரைக்கும் எந்திரம், மின்விசிறி மாதிரி இதை விலையில்லாமல் இவர்களுக்குக் கொடுத்துவிட்டு போகவில்லை. பணம் கொடுத்துதான் வாங்கியிருக்கிறார்கள். அப்படியும் ஏன் எனக்கே தந்துவிட்டார்கள்?. அறிவுபுகட்டும் ஆசை அவர்களுக்கு இருந்திருக்கிறது. என்னளவில் இவர்கள் அனைவரும் கூட எனக்கு ஆசிரியர்கள். நான் கூட படித்துவிட்டு தந்துவிடவேண்டும் என்றுதான் நூல்களைக் கொடுப்பேன். சிலவை வரும். ஆனால் வராது.

இந்த வரிசையில் எனக்கு இன்னொரு ஆசான், சிங்கப்பூரில் வசிக்கும் அண்ணன் ஜோ மில்டன் அவர்கள். நல்ல வாசிப்பாளர். அலுவலகத்துக்காகக்   காலையிலும் மாலையிலும் அவர் பயணிக்கும் நேரமும், சிங்கப்பூர் நூலகமும் அவரது ஆசைக்குக் கிடைத்த சரியான தீனி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நாள் நீண்ட உரையாடலின் ஊடே, எனக்கு கடலில் கட்டுமரத்தில் பயணம் செய்ய இருக்கும் ஆசையை அவரிடம் சொன்னபோது, ஊருக்கு வரும்போது நாம் சேர்ந்து போகலாம் என்றொரு வாக்குறுதி தந்தார். ஆனால் காலப்போக்கில் இந்தியாவுக்கான அணுசக்தி தேவை குறித்த வாதங்களில், எங்கள் உறவு பலமிழந்து போனது. அந்த விவாதம் எத்தனை வேகமாக எனக்கு பல நண்பர்களைக் கொண்டுவந்து சேர்த்ததோ, அதை விடவும் அதிக வேகத்தில், மனதுக்கு உகந்த சில மனிதர்களை பிரித்தும் போட்டுவிட்டது.

முகநூலில் என்னை குழுக்களில் இணைப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும். நானே பலமுறை செய்யாதீர்கள் என்று கெஞ்சியும் இருக்கிறேன். ஒவ்வொரு மாதமும், தேவையில்லாத குழுக்களில் இருந்து என்னை விலக்கிக்கொள்வதை ஒரு வேலையாக வைத்திருக்கிறேன் நான். ஆனால் தமிழினம் வாழவேண்டும் என்றால் திரைப்படம் ஒழியவேண்டும் என்று சொன்ன பெரியாரின் வாழ்க்கையையே, திரைப்படம் எடுத்துச் சொல்லவேண்டி வந்த முரண் போல, அண்ணன் பெரியார்குமாரின் விருப்பத்தின்பேரில் நானே ஒரு குழுவை ஆரம்பித்தேன். அதற்கு வாசிப்போர் வளாகம் என்று பெயர்சூட்டி, என்னை ஒரு பாடல் குழுவில் இணைத்ததற்காக, எந்த ஜோ அண்ணனை கடிந்துகொண்டேனோ, அதே மனிதனை அந்த குழுவில் கொண்டுவந்து இணைத்தேன். வாசிக்கும் நூல்கள் குறித்த பதிவுகளை பகிரும் ஒரு குழுவில், நாள்தவறாமல் வாசிக்கும் ஒரு மனிதனை இணைப்பதை நான் தவறென்று கருதவில்லை. என்னை போல அவர் கேள்விகேட்கவில்லை. பெரியமனிதர் என்பதை நிரூபித்தார். தனது வலைப்பூவில் தான் வாசித்த, ஆழிசூழ்உலகு எனும் நாவல் குறித்த கருத்துரையின் சுட்டியை, இந்த குழுவில் கொழுக்கிவிட்டார். கடலுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என ஆசைப்பட்டாயே, கடற்தொழில் செய்பவனின் கடினம் உனக்கு தெரியுமா?, இந்த நெடுங்கதையை  வாசித்துப்பார் என்று எனக்கு சொன்னதுபோலவே அந்த பதிவை நான் எடுத்துக்கொண்டேன்.  ஜெயமோகன் தனது கடிதம் ஒன்றில் இந்த நெடுங்கதை குறித்து எழுதியிருந்ததாக பதிந்திருந்தார். ஜெயமோகன் மீது எனக்கு அப்போதிருந்த மதிப்பீடு வேறு, இப்போதிருக்கும் மதிப்பீடு வேறு. ஒரு கருத்தைக் குறித்த அறிதலின் அளவு, அதன் மீதான மதிப்பீட்டைக் காலஇடைவெளியில்  மாற்றுகிறது. ஜெயமோகனுக்கு விரைவில் ஒரு கடிதம் வரையவிருப்பதால், எனது மாறுதல் குறித்தத் தகவல்களை அதில் எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

கடற்புறத்தின்மீது எனக்கு பாசம் அதிகம். என் சொந்த ஊரான, சங்கனாங்குளத்தில் உற்பத்தியாகும் பொருளின் பெரும் சந்தை கடற்புறம்தான் என்பது மட்டுமல்ல, மறவனும் பரவனும் ஒன்றுதான், நாம் நிலப்போராளிகள், அவர்கள் கடற்போராளிகள் என்று இளவயதில் நாங்கள் பேசிக்கொள்ளும் அளவுக்கு உறவுபாராட்டி வாழ்ந்த இனங்கள் இவையிரண்டும். கடல் மீதும், மீனவர்களின் வாழ்க்கை மீதும், எனக்கு இருந்த ஆசை, அதை அறிந்துகொள்ளும் தேடலை அதிகப்படுத்திவிட்டது. இந்த நாவலை வாங்கிப் படிக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.
எழுத்து எனும் கருவறை என்ற தலைப்பில் என் இதயநேசிப்பிற்குரிய வைகோ ஆற்றிய உரையை, தாயகத்தின் மூலம் நான் பெற்றுக்கொண்டபின்னர், எனக்கு ஈரோடு புத்தகத்திருவிழாவின்மீது அதிக ஆசை வந்துவிட்டது. அதில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். அதிலும், பேசுவதால் பயனில்லை எனும் தலைப்பில் கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ் பேசுகிறார் என அறிந்தபோது, ஆவல் அதிகமானது என்பதுதான் உண்மை. அங்கேதான் தமிழினி பதிப்பகத்தில் இந்த நாவலை வாங்கினேன். நெடுங்கதையை நான் அனுபவித்த பாங்கை, அந்த கதைமாந்தர்களோடு உலாவியவன் எனும் பெருமையில், அவர்களுக்கு உறவினன் எனும் உரிமையில், ஒரு வாசகனின் இதயமாக இருந்து உங்களுக்கு வழங்குகிறேன். வாருங்கள்.

இந்த நெடுங்கதையின் தலைப்பு, காலத்தால் அழியாத காவியம் படைத்த கம்பன் கொடுத்த கடன். தலைப்பு வாங்கிய கடனை, கதைநகர்வை சமைத்த திறமை மூலம், கந்துவட்டி போட்டு கம்பனுக்கு தந்திருக்கிறார் கதாசிரியர். உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்று இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கமுடியாத கடல், அதன் ஓயாத அலைகள், ஓர் அதிசயம். அதைப்போலவே அவர்களின் வாழ்க்கையும். கன்னியாகுமரிக்கு சென்றால், விவேகானந்தரும், பசும்பொன்தெய்வமும் அமர்ந்து தவம் செய்த அந்த பாறைக்கு பின்பக்கம் நின்றுகொண்டு, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு கடலைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் நான். குமரிக்கண்டம் என் மனக்கண்முன் விரியும். இரண்டுமுறை படகு வந்துசென்றபின்னர்தான் திரும்புவேன். பெரிய மணற்பரப்பு இல்லாத, அந்த கடல் எனக்கு மிகவும் பிடிக்கும். கடலின் மீது இருக்கும் ஆச்சரியத்தின் தொடர்ச்சி, கடற்தொழில் செய்வோரின் மீதும் ஆச்சரியம் எனக்கு. எங்களுக்கு உறவு என்பதைத்தாண்டி, எங்கள் ஊருக்கும் கடற்புபுறத்து மக்களுக்கும் இன்னொரு தொடர்பும் இருந்தது. அதுதான் தூயசவேரியார் ஏற்படுத்திய சொந்தம். பெரும்பான்மை என்ன, முழுக்கவும் மறவர்கள் வாழும் எங்கள் ஊரில், அந்த புனிதருக்கு ஓர் ஆலயம். நாங்களே புதுப்பித்து, நாங்களே விழா நடத்தி, திருத்தேரில் அந்த புனிதரை பவனி வர செய்து, விஜயநாராயணம் பெருமாள் வெள்ளிக்குதிரையில் வரும்போது சாற்றும் மலர்மாலை அளவுக்கு, எங்கள் ஊரின் பாதுகாவலரான சவேரியாருக்கும் சாற்றி, திருநெல்வேலி மாவட்டமே ஆச்சரியப்படும் அளவுக்கு அவரைக்  கொண்டாடும் வழக்கம் எங்களுக்கு இருக்கிறது. அதே புனிதர்தான் ஒட்டுமொத்த மீனவ மக்களையும், காலம் இவரை மையமாகக் கொண்டு வகுபடும் அளவுக்கு ஒரு பெரும் மாற்றத்தை மனித சமூகத்தில் கொண்டுவந்த இறைமகன் இயேசுகிறித்துவின்  பக்கம் திருப்பியவர். இந்த காவியம் அந்த புனிதருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் செய்தியை படித்தபோது மனம் இன்னும் ஆனந்தம் அடைந்தது. ஏதொ பரிச்சயமான ஒரு கூட்டத்தை பார்க்கபோகிறோம் எனும் உணர்வோடுதான் உள்ளே புகுந்தேன் நான்.

ஆமந்துறை என்று அந்த நாவலில் சுட்டப்படும் அந்த ஊரின் இன்றைய பெயருக்கு, பொருளே, கடல் என்பதுதான். வார்த்தைசித்தர் வலம்புரிஜான் பிறந்த ஊர். தொழில்நிமித்தமாக எங்கள் ஊர்க்காரர்கள் பலருக்கு வாழ்வின் பெரும்பகுதி கரைந்த இடம். அப்பாவுக்கு அங்கே பங்குதாரர் பெயர், வருவேல். கதையில்கூட அப்படி ஒரு பாத்திரம் வருகிறது.
வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு கூட்டத்தின் ஒரு கால கட்ட செயலை அப்படியே பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர். எந்த கற்பனையும் இல்லாமல், நடந்தவை நடந்தவையாக, உருவகம், புணர்வு, தற்குறிப்பு  என்று எந்த அணியும் செய்யாமலே அந்த வரலாறு அழகாக இருக்கிறது. உண்மைக்கு என்றொரு அழகு உண்டல்லாவா?, அது கதை முழுக்க மின்னுகிறது. அங்கேயே அவர்களோடு ஒருவராக வாழ்ந்த ஒரு மனிதனால் மட்டுமே இதை பதிவு செய்யமுடியும். இதை படித்துவிட்டால், கடற்புரத்து வாழ்க்கையை அறிய, வேறெதுவும் இல்லை எனுமளவுக்கு, அந்த பகுதியின்  மூலை முடுக்குகளிலெல்லாம் நடக்கும் நிகழ்வுகளை நேர்த்தியாக அரங்கேற்றியிருக்கிறார். இனத்தின்மீதும், அது கட்டிக்காக்கும் பண்பாட்டின் மீதும் பெரும் பிடிப்பு கொண்ட, ஒரு தேர்ந்த திறனாய்வாளனால் மட்டுமே இது இயலும். அவர்கள் வாழ்க்கைய அணு அணுவாக, அவர் இரசித்த பாங்கு, அதை விவரிக்கும்போது விளங்குகிறது. பெருங்கவனிப்புடன் ஆசை ஆசையாய் அவர்களோடு வாழ்ந்த காரணத்தால், நிகழ்வுகள் மறக்காமல் நெஞ்சுக்குள் நிற்கின்றன அந்த மனிதனுக்கு. இரத்தமும் சதையுமாய் அதை அப்படியே தந்திருக்கிறார் தாள்களில்.

திருடன் தான் இரகசியம் காக்க வேண்டும். நேர்மையாளனுக்கு மறைப்பதற்கென்று  என்று எதுவுமே இருக்காது. எந்த இடத்திலும் உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் ஒரு கூட்டம் எதற்கு அஞ்சாததாகத்தான் இருக்கமுடியும். கிறித்தவமும் அதன் குருமார்களும் கதை மாந்தர்களால் அலசப்படும் போது, பதியப்படும் கருத்துக்கள், இன்னொரு இனத்தை சார்ந்த கிறித்தவர்களால் பேசப்படுமா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்லிவிடமுடியும். இதற்கிடையில் கண்ணியமிக்க குருவான காகு சாமியாருக்கு அவர்கள் காட்டும் நன்றி, உதவி செய்த ஒருவருக்கு, அவருக்கான தேவை வரும்போது, மறக்காமல் செய்யும் பதில்  என, இறந்தகாலம் குறித்த கைப்போ, எதிர்காலம் குறித்த கனவோ இல்லாத வெள்ளந்தியான ஒரு கூட்டம், இன்னும் இருக்கிறது என்பது ஆச்சரியமே.
வாநீவாடு, கருப்பு, சொழவெலங்க, ஆழிவெலங்க என எண்ணற்ற கடல்மொழிகள் நமக்கு மெல்லத்தான் புரிகிறது. அவ்வப்போது நிறைவுப்பகுதியில் இருக்கும் அருஞ்சொற்பொருளைத் தேடவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி பட்டப்பெயர்கள், நினைவில் வைத்துக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் மாபெரும் அச்சம் இறப்பு குறித்ததாகத்தன் இருக்கமுடியும். பொழுது விடுந்து போழுதுபோனால், தொழிலுக்கு போனவன் திரும்பவருவான் என்ற நம்பிக்கையில்லாமல், எப்போதும் இறப்பை எதிர்நோக்கி வாழும் கூட்டத்தின் வரலாறு, ஒவ்வொரு இறப்பின்போதும் நம்மை கலங்கச் செய்துவிடுகிறது.

ஆரம்பம் முதலே எனக்கொரு ஆசை இருந்தது என்பதை நான் மறைக்க விரும்பவில்லை. அது எங்கள் ஊருக்கும், உவரிக்கும் இருந்த தொடர்பு  எங்காவது காணக்கிடைக்காலம் என்பது. ஆனால் தேவர்மார் ஊரிலிருந்து வந்த சாராயம் என்ற ஒரு வரியைத்தவிர, வேறெதுவும் கிடைக்கவில்லை. சங்கனாங்குளத்து அம்மன் கோவில் கொடைவிழாவுக்கு உவரிக்காரர்கள் வருவார்கள். நான் இளவயதில் பார்த்திருக்கிறேன். குதிப்பும், சீலாவும், வாவலும் தேவர்மார்களுக்கு கொள்ளை ஆசை. எங்கள் ஊரில் அம்மன்கோவிலுக்கு கால் நாட்டினால், திசையன்விளையில் மீன் விலை குறைந்துவிடும் அளவுக்கு, வாங்குவார்கள் எங்கள் ஊர்க்காரர்கள். எங்கள் உற்பத்தி மீது அவர்களுக்கும், அவர்கள் தேடுதல் மீது எங்களுக்கும் ஓர்  ஆசை தானாகவே இருக்கிறது. அதுகூட அபரிமிதமான உறவுக்குக் காரணமாக இருக்கலாம். நாங்கள் சாராயவடிப்பை விட்டுவிட்ட பிறகு, ஏதொ ஒரு சில குடும்பங்கள் தவிர , எல்லோருக்கும் இருந்த பழைய உறவு இப்போது இல்லை.

எனது பள்ளிக்காலத்தில் எங்களுக்கான சுற்றுல்லாத்தலம் இந்த கதை நிகழும் களம். கிறித்தவக்கன்னியர்கள் நடத்தும் பள்ளிதான் என்றாலும், இரண்டு உவரிக்கும் செல்வோம். அப்படியே கப்பல்மாதா ஆலயத்தின் முன் நின்று,
..உம்மை தேடிவந்தோம் குறை தீரும் அம்மா....
உலகாளும் தாயே .. அருள்தாரும் அம்மா.....உலகாளும் தாயே...அருள்தாரும் அம்மா...
என்று உள்ளமுருக பாடும்போது, அலங்கரிக்கப்பட்ட நிலையில், பூமிப்பந்தின்மீது கையில் குழந்தையுடன் நிற்கும் ஆரோக்கியமாதாவுக்கும், என் குலதெய்வமான அருள்தரும் இசக்கியம்மனுக்கும் எனக்கு வேறுபாடு தெரியாது. முழங்கால் தாளிட்டு, உள்ளமுருக பாடியிருக்கிறேன். அந்த ஆலயம் கட்டப்பட்ட வரலாறு இந்த நாவலில் வரும்போது எனக்கு நினைவுக்கு வந்தது எங்கள் பள்ளிக்கால சுற்றுலா. சந்தியாகப்பர் ஆலயம்தான் இங்கே பங்குக்கோவில். ஆனால் அழியாத நா கொண்ட அந்தோனியார் திருவிழா, தென்பகுதி மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்று.

கடல்கொண்ட தென்னாடான குமரிக்கண்டம் தான், உலகநாகரித்தின் தொட்டில் என்றால், மீனவன்தான் நாகரிகத்தில் மூத்தவன். மகாபாரதம் எனும் மாபெரும் காவியம் படைத்தவரும், குருகுலத்தின் முதல்வரும் ஆன, வேதவியாசர் ஒரு மீனவப்பெண்ணின் மகன் என்பதை நாம் மறக்க இயலாது. அதனால்தான், வஞ்சகம் இல்லை அந்த மக்களிடம். அடுத்தவனை கெடுக்கும் சிந்தையில்லை. நெஞ்சம் முழுவதும் நேசமே நிறைந்திருந்த காரணத்தால்தான், வெளிநாட்டில் இருந்து மதம் பரப்ப வந்தவர், என்ன மொழி பேசுகிறார் என்று புரியமுடியாத மனிதராக இருந்த சவேரியார், இவர்களுடன் தங்கிவிட்டார். எங்களுக்காக இயேசுவிடம் எந்நாளும் இறைஞ்சும், உயிர் இரக்கம் கொண்ட, அந்த கருணைக்கரங்களுக்கு அருகில் இருக்கிறேன் என்பதும், ஆண்டுக்கு நான்குமுறை அந்த புனிதரின் பொன்னுடலைப் பார்க்கும் வாய்ப்பை பெறுகிறேன் என்பதும், இறைவன் எனக்கு கொடுத்த பேறு.

நாவலில் நடக்கும் மனிதர்களுடன் நானும் நடந்தேன். ஓரளவுக்கு ஒருநாள் கடலுக்கு சென்றுவந்த அனுபவம் கூட, எனக்குக் கிடைத்துவிட்டது. தமிழகத்தின் ஒரு தொன்மை இனத்தின் வரைவியலைப் புரிந்துகொள்ள நினைக்கும் அத்தனை பேரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய நூல், ஆழிசூழ்உலகு.  சங்க இலக்கியங்களில் கடல் குறித்தும், நெய்தல்நிலம் குறித்தும், கிடைக்கும் பாடல்களை, ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னும் பதிந்திருக்கிறார் எழுத்தாளர். அது மீனவர்கள் குறித்த பாடல் என்பதைத் தவிர எதுவும் எனக்கு புரியவில்லை. அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசை.

எந்த தங்கு தடையும் இன்றி, சலிப்பின்றி ஓயாது ஓலமிடும் கடலலை போல, கதை நகர்வு சென்றுகொண்டே இருக்கிறது. அவ்வப்போது கோபமும், அவ்வப்போது அமைதியுமாய், பன்முகம் கொண்டதாக கடல் இருந்தாலும், உலக உயிர்க்கெல்லாம் உப்பு வழங்கும் உன்னத தாயுள்ளம் அதற்கு இருப்பதைப்போலவே, அந்த இனத்தின் வாழ்க்கையும் இருக்கிறது.

தன்னுள் தேடும் மனிதனுக்கு சிலசமயம், பெரும் செல்வத்தை கொடுப்பதும், சிலசமயம் தேடுதல் நடத்தும் மனிதனின் உயிரை தனக்கெந்த தேவையுமின்றி எடுப்பதுமாய் இருக்கும் ஆழி, அதுகுறித்த எந்த மகிழ்வோ, கவலையோ இன்றி, தொழில் செய்வதுபோலவே, அந்த மக்களும் மகிழ்வையும், மனவருத்தத்தையும் மிக எளிதில் கடந்துவிடுகிறார்கள்.

அல்லறை சில்லறை அரசியலில் அதிகம் பங்குகொள்ளாமல், தலைவனுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக இல்லாமல், ஒவ்வொருவரும் ஒரு இராச்சியம் நடத்துகிறார்கள் இங்கே. தமிழகம் முழுவதும் சாராயக்கடைகளைத் திறந்துவிட்ட காலத்தில், மதுவிலக்கு சங்கம் ஆரம்பித்து, குடிப்பதை நிறுத்தும் தன்னார்வ அமைப்பு முதன்முதலில் தோன்றியது இந்த நாவல் நகரும் நகரம் தான் என்பது பெருமைக்குரிய செய்தி.

தமிழகம் இந்த நெடுங்கதையை வாசிக்கவேண்டும். சமகால நிகழ்வை அழகாக பகிரும் இந்த இலக்கியம், வாசிக்கும் மனிதர்களின் இதயத்தை நேசமாக வருடுகிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் வலிந்து எந்த கனவையும் காணாமல், உண்மையை சொல்லியிருக்கும் காரணத்தால், வாசிக்கும்போது, இப்படியும் ஒரு இரசனை இருக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சில பதிவுகள்  நம்மை அறியாமல், நாமே எளிதாக கடக்கும் நிகழ்வுகளை, நினைத்து அசைபோட வைக்கிறது. அப்போதெல்லாம் நான் புத்தகத்தை மூடிக்கொண்டு, சற்று நேரம் அண்ணாந்து பார்த்து சிரிப்பேன். அது ஓர் ஆனந்தம். அதை இந்த நூல் கொண்டுவந்து கொடுக்கிறது. நீங்களும் வாசியுங்கள். வணக்கம்

.என்றும் அன்புடன் .................செல்வியின்செல்வன்.