Wednesday 4 June 2014

வெள்ளை (நெடுங்கதை) பாகம்-1


எங்கும் நிறைந்த இசக்கியம்மனின் இணையடிகள் சரணம்.

பெரிய வீடு. மாளிகை மாதிரி, அரை அரண்மனை மாதிரி, புதுமுறையில் கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடு மாதிரி. அந்த வீட்டின் மூன்றாவது மாடிக்கும் மேலே, அதன் மேல்தளத்தில் இருந்து தொங்கும், ஊஞ்சல் போன்ற பலகையில் வாகாக அமர்ந்திருக்கிறான் அவன். அருகிலேயே இன்னொரு கயிற்றில் பெரிய வாளி ஒன்றில் சுண்ணம் கலக்கப்பட்டு அவனது அசைவுக்கு ஏற்ப அதுவும் அசைக்கப்படுகிறது. மேலச்சுவரில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு வெள்ளையடித்துக்கொண்டிருக்கிறான் நம் கதையின்நாயகன். கையில் இருக்கும் ஓரளவுக்கு நைந்துபோன தூரிகையைக் கொண்டு, வாளிக்குள் முழுக்குவதும், பின்னர் சுவற்றில் நேர்த்தியாகப் பூசுவதுமாக இருக்கிறான். வெள்ளையடித்தல் எனும் பெயர்தானே தவிர, இவன் ஒரு மாதிரி இளம்பச்சை நிறம் பூசிக்கொண்டு இருக்கிறான். ஏற்கனவே காய்ந்து நிறம் மங்கிப் போயிருந்த சுவர், மெல்ல புதிய நிறஆடையை அணிந்துகொண்டு இருந்தது. எந்த அளவுகோலும் இல்லாமல் கிடைக்கோட்டை இத்தனை நேராக இன்னொருவர் பூசமுடியாது அந்த குழுவில். பூமியின் தட்டைக்கு எந்த சரிவுமின்றி அவன் கோடுகளைப் பூசுகிறான் என்பது, புதியநிறத்துக்கும் பழைய நிறத்துக்கும் இருக்கும் வேறுபாட்டின் மூலம் பார்ப்போருக்கு தெளிவாகத் தெரிகிறது.பாட்டு பாடிக்கொண்டே இருப்பான் பாருங்கள். நடிகர் சரத்குமார் பாடல்கள் என்றால் கொள்ளைப் பிடித்தம். நாட்டாமை படத்தை அவனுக்கே கணக்கு தெரியாத அளவுக்கு, நானூறு முறையாவது பார்த்திருப்பான். ஓ...அவன் பெயரை நான் உங்களுக்கு சொல்லவே இல்லையா என்ன?. நேர்த்தியான சுண்ணம் பூச்சைக் கூர்ந்து கவனித்ததில் மறந்துவிட்டேன் போங்கள்... குமார். பிடித்த நடிகரின் பெயர்ப்பாதி என்பதில் அவனுக்கு அவன் பெயரின் மீது அதிக அவா. கேட்டால் கு-வை வல்லின உச்சரிப்புடன் க்குமார் என்பதுமாதிரி பெருமையாக சொல்வான். இப்போது போட்டிருக்கும் உடையில் அத்தனை அழகென்று சொல்லமுடியவில்லை என்றாலும், அலங்கார உடைகள் அணிந்தால் எடுப்பாகத் தெரியும் அளவுக்கு ஒரு அரசகுமாரத் தோற்றம் அவனுக்கு. ஏற்றி சீவிய கேசம், எடுப்பான மூக்கு, ஏறு நெற்றி, அரும்பு மீசை, உயர்ந்த தோள்கள், விரிந்த மார்பு, குறுகிய வயிறு, போதும், கட்டழகு கொண்ட 24 வயது வாலிபன். ஏன் இப்படி வெள்ளையடிக்க வந்தான்?படிக்கவில்லை ஒழுங்காக. அப்பாவுடன் பனையேற போவதும், பதநீர் காய்ச்சுவதுமாக காலம் தள்ளினால் ஆட்சிப்பணிக்கா போகமுடியும்?. ஊரில் பாதிசனம் பார்க்கும் தொழில் இதுதான். பல ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். யாராவது ஒருவருடன் இணைந்துகொள்ள வேண்டியது. சென்னை வரைக்கும் போய்வரலாம். விசையும் சூர்யாவும் நடித்த படமொன்றில் வடிவேலு வைத்திருப்பாரே ஒரு கூட்டம். அதில் ஒரு ஆள்தான் நம் குமார். ஆனால் இது ஒழுங்காக வெள்ளையடிக்கும் கூட்டம் பாருங்கள். இத்தனை நாட்களாக ஊர் சுற்றுப்புறங்களில் தான் வேலை செய்தான். வெள்ளையடிப்பது மட்டுமல்லாமல், வெள்ளையடிக்கும் போது வீட்டுப் பொருட்களை ஒதுங்க வைப்பதிலும் அந்த வீட்டுக்காரர்களுக்கு அதிகமாக உதவும் காரணத்தால், பலர் ஆசுடினிடம் சொல்லும்போதே,“எப்பா, குமாரையும் வரச்சொல்லுப்பா...கொஞ்சம் கூடாமாட ஒத்தாச பண்ணுவான்” என்று சொல்லத் தொடங்கினார்கள். அதனால் எப்போதும் வேலை இருக்கும் குமாருக்கு. அதுவும் பொங்கல் காலங்களில் தொடர்வேலைதான். சுற்றுப்பட்டியில் அவன் வெள்ளையடிக்காத வீடுகளே இல்லை. வெளியூர்களில் பலநிறங்கள் அடிக்கவேண்டி இருப்பதால், படம் பார்த்து சரியான அளவில் நிறக்கலவை செய்யத்தெரிந்தவர்கள் மட்டுமே செய்துவந்தார்கள். மெல்ல குமாருக்கும் நிறக்கலவை செய்யத் தெரிந்ததால், முதன்முதலில் கோவைக்கு வந்திருக்கிறான். பத்து பதினைந்து பேருடன், முதன்முதலில் வீட்டை விட்டு வெளியூர் வேலை. தொடக்கத்தில் அஞ்சினாலும், பிறகு ஒத்துக்கொண்டான். இன்றை நிறைவாகக் கொண்ட கடந்த அரைமாதத்தில் அவனுக்கு கோவை வாசம் பிடித்துப்போனது. சவரிமுத்து அண்ணனுடன் சேர்ந்து கொஞ்சம் சமையல் கூட கற்றுக்கொண்டான் குமார். அவர்களே பொங்கி சாப்பிட்டு, அருகே தூங்கிக்கொள்ளும் அளவுக்கு, ஒரு பெரிய அறையை அவர்களுக்கு ஒதுக்கித் தந்திருந்தார்கள்.“நாளைக்கு முடிச்சிருங்கப்பா.... அய்யாட்ட சொல்லிட்டு நாளைக்கு ராத்திரி புறப்பட்டுரலாம்”ஆசுடின் அண்ணன் சொன்னபோது, கோவையை விட்டு போகவேண்டும் என்றபோது வெறுப்பாகவும், முதன்முதலில் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குப் போகிறோம் என்றபோது விருப்பமாகவும் இருந்தது. மேலச்சுவரின் மூன்று தளத்து நீளஅகலத்தையும் இன்று மாலைக்குள் நிறம் பூசி முடித்துவிடவேண்டும் என்ற வேகத்தில் பூசிக்கொண்டு இருந்தான். உயரமாகக் கட்டப்பட்ட வீடு ஆதலால், அவன் தொங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து, வீட்டின் வாசல் தெளிவாகத் தெரிந்தது. இரண்டு காவலர்கள் ஊதல், கம்பும் கையுமாக அங்கும் இங்கும் அலைந்துகொண்டு இருந்தார்கள். வாசலில் இருபுறமும் இரண்டு ஒளிப்பதிவு கருவிகள் இருந்தன. அடிக்கடி வாசலைப்பார்த்துக்கொண்டு இருந்தான்.“உறவுக்காரன்...உறவுக்காரன்...உறவுக்காரன்... நான் கட்டிய தாலிக்கும் கட்டும் சேலைக்கும் உரிமைக்காரன்......”ஒருபக்கம் வாய் பாடிக்கொண்டிருந்தாலும் இன்னொருபக்கம் மனம் எதையவாது சிந்தித்துக் கொண்டிருக்கும் குமாருக்கு. என்ன நினைக்கிறான் இப்போது?. யாரிந்த அய்யா.... இந்த பெரிய வீட்டில் இதுவரைக்கும் உரிமையாளர் என்று ஒருவரைக்கூட காணவில்லையே..  எவரைப் பார்த்தாலும் வேலைக்காரர் மாதிரிதானே இருக்கிறார்கள். இரண்டாவது தளத்தின் ஒரு பகுதிக்கு இப்போது சுண்ணம் பூசவேண்டியது இல்லை என்று அண்ணன் சொன்னாரே...அங்கே யார் இருப்பார்கள். அண்ணன் சொன்ன அய்யாவுக்கு மனைவி மக்கள் உண்டா இல்லையா... ஆளில்லாத இந்த வீட்டுக்கு எதற்கு இத்தனை காவலும் வேலைக்காரர்களும்...அதிலும் அந்த சமையல்காரர் எதற்கு இத்தனை இங்க போடுகிறார்...நாம் அவருக்கு  எத்தனை வயது இளையவராக இருப்போம்... யாருக்கு சமைக்கிறார் அவர்.. எப்போதாவது ஒரு மகிழ்வுந்து போவதும் வருவதுமாக இருக்கிறதே, அதில் யார் வருகிறார், போகிறார்கள்....அந்த வண்டியைக் கண்டவுடன் நம் காவலர்கள் வைப்பார்களே ஒரு வணக்கம்...அப்பப்பா.....சரி அது அவர்கள் வேலை...சிந்தித்துக்கொண்டு இருந்தவனை கலைத்தது....சோசப் அண்ணனின் சத்தம்...சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் மேலும் கீழும் பார்த்தான்.... கீழே நின்றுகொண்டு இருந்தார்....“ஏல...வேல இன்னைக்கு முடிஞ்சுகிடாதாம்....நாம நாளைக்குத்தான் ஊருக்கு போகணுமாம்....ஆசுடின் அண்ணன் சொல்லிருக்கார்... மெல்ல அடி...”.“எதுக்காம்.....”கேட்டது சோசப் அண்ணனின் காதில் விழவில்லை சரியாக....:போடே.....கீழ வந்து பேசு....”.இன்றைக்கு போவது நாளைக்கு போவதில் ஒன்றும் வேறுபாடு இல்லையென்றே நினைத்தான் குமார். எதிரே சுவர் மட்டுமே இருப்பதால், எதிரொலியில் அவனது குரலை அவனே இரசித்து மகிழ்ந்தான்.ஒருவழியாக மேலச்சுவர் தனக்கு புதுநிறம் பூசிக்கொண்டு மின்னியது. கீழே விரிக்கப்பட்டிருந்த சாக்குகளை அள்ளிக்கொண்டு தங்கும் அறையில் போட்டான் குமார். சுண்ணம் படிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, கைகால் முழுக்க நீரால் கழுவி, புது ஆடைகளை அணிந்துகொண்டு, சீவி சிங்காரித்து கடைவீதிக்கு புறப்பட்டான். இப்படி அலங்கரித்தால் நம் ஆள் எப்படி இருப்பான் என்பதை ஏற்கனவே உங்களுக்கு சொல்லிவிட்டதாக நினைப்பு. அப்படித்தான் இருக்கிறான். வேலை முடிந்தபிறகு இப்படி கொஞ்சம் ஊர்சுற்றுவதில் அவனுக்கு விருப்பம். எட்டுமணிக்குள் வந்துவிடவேண்டும் என்று காவலர்கள் அறிவுறுத்துவார்கள். சிலநேரம் அவர்களிடமும் உட்கார்ந்து கதையளப்பான். பள்ளிப்படிப்புதான் குறைவு ஆளுக்கு. அனுபவம் அதிகம் மாதிரி தெரியும் அவன் பேச்சில். எதைப் பேசினாலும் விடமாட்டான், அதுகுறித்த அவனது கருத்தைச் சொல்வான். அப்புறம் அதுதான் உண்மை. உண்மை மாதிரியே பிறருக்கும் தெரிகிற மாதிரி பேசிவிட்டு போய்விடுவான். ஒருநாள் கதை பேசும் பொழுது மகிழ்வுந்து கடந்து வீட்டுக்குள் போனது. காவலர்கள் வழக்கம் போல பெரிய வணக்கம். கதாநாயகன் எழுந்திருக்கக் கூட இல்லை. இனிமேல் எங்களிடம் கதைபேச வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். வண்டிக்குள் இருந்தவர்களைக் குறித்த விசாரணைக்கும் பதில் சொல்லவில்லை. அத்தோடு போச்சு, அவர்களுடனான பேச்சு.வாயிலைக் கடந்தவனை மறித்த சவரிமுத்து அண்ணன், சீக்கிரம் வரவேண்டும் என்றும், ஆசுடின் அண்ணன் வருகிறார், ஏதொ பேசவேண்டுமாம் எனவும் சொல்லிச் சென்றார்.

“சீக்கிரம்னா.....”“தொர எல்லாம் டயத்துக்குத்தான் பண்ணுவாரு.....சீக்கிரம்னா ஒரு காமணி நேரம் னு வைச்சுக்கோயேன்......”“அப்ப நான் போகவே இல்ல....”“ஏ....அர டப்பா பவுடர அள்ளி அடைஞ்சது வம்பாயிரப் போவுது....போயிட்டு வா......”“அண்ணே...என்னதான் வெள்ளையடிக்க வேலை பார்த்தாலும் வெளியே கிளம்பும்போது டீசண்டா தெரியான்டாமா....அதான்.... சரி தெனமும்தான் போறோம்...ஊருக்கு போற நாள்ல எதுக்கு போட்டுக்கிட்டு...வாங்க ரூமுக்கே போயிரலாம்...”திரும்பிவிட்டான். ஒரு அரைமணி நேரம் ஊர்க்கதை பேசிக்கொண்டு காலத்தைப் போக்கினார்கள். அதற்குள் குழு முழுவதும் அறைக்குள் வந்துவிட்டது. அவர்கள் ஊரைவிடவும் பக்கத்து ஊரான பல்கரையானேரி கதைதான் அதிகம் பகரப்படும் அங்கே. சுற்றுப்பட்டி கிராமத்துக்கெல்லாம் தலைமை பல்கரையானேரி. வம்பு வழக்கு, வாய்க்கால் தகராறு என அனைத்தையும் தீர்ப்பதால் சிற்றூர் முதல் சென்னை வரை அதிகாரம் கொண்ட கிராமம். ஏதேனும் ஒரு வழக்குக் கதை கிடைக்கும், அதிலும் நல்லவர் வழக்குபேசும் அழகே தனி பாருங்கள். அந்த வழக்கில் அப்படி பேசினார், இந்த வழக்கில் இப்படி மடக்கினார் என்று பெருமை பீற்றித் தள்ளும் எட்டுப்பட்டி கிராமமும். அன்றைக்குக் கிடைத்த வழக்கைப் பேசி முடித்தார்கள். ஆசுடின் அண்ணன் அழைப்பதாகக் கூறி, எல்லோரும் வீட்டுக்குள் போனார்கள்.முழுக்க புதுநிறம் பூண்டு, ஒதுக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் துடைத்து அதே இடத்தில் அழகுற அமைக்கப்பட்டு அரண்மனை போல மின்னியது அவ்வீடு. குமார் மெல்ல அதன் அழகுக்கலை நுணுக்கங்களை இரசித்துக்கொண்டே படியேறி நடந்தான். இரசனையில் பெரிய ஆள் நம் கதாநாயகன். எதையும் இரசிப்பான். இன்ன கலை பிடிக்காதென்றே அவன் பட்டியலில் இல்லை. அந்த வீட்டின் அமைப்புகள், அதன் வண்ணங்கள், அதிலிருந்த ஓவியங்களை எல்லாம் எப்படி இரசித்தான் என்று எழுதுவதற்கு ஏழு பக்கம் ஆகலாம் என்பது எனது கணிப்பு. அதனால் விரிவஞ்சி விடுகிறோம் அதை.“பராக்க பார்த்துட்டே வா.....சீக்கிரம் நடடே....”“ஒங்களுக்கு என்ன ரசன தெரியும்...நம்மூர்ல எவ்ளோ துட்டு வச்சிருக்கான்...எவனாவது இப்படி வூடு கட்டிருக்கானா...அவ்னுவோ துட்ட அள்ளி திங்கவா....நல்லவோ வீடு நல்லாருக்கும்னு சொல்லுரானுகளே....இப்படி இருக்குமா அண்ணன்...என்னைக்காவது அங்க வெள்ளையடிக்க ஆப்பர் வந்தா நம்மள கூட்டிட்டு போங்க......”“இப்படி....தொறந்த வாய மூடாம பாத்துகிட்டே போ, அவாள் வீட்டுக்குள்ள...வெட்டி போட்டுருவாணுக.....வெள்ளை அடிக்கனுமாம் வெள்ளை.....வாடே சீக்கிரம்”இவர்களுக்கு வெள்ளையடிக்க ஒதுக்கிக் கொடுக்காத வீட்டுக்குள் நுழைந்தார்கள். இந்திரலோகத்தில் எட்டிப்பார்த்தது மாதிரி இருந்தது குமாருக்கு. அறையில் அழகுமிகு இருக்கை ஒன்றில் நடுநாயகமாக வீற்றிருந்தார் நாச்சிமுத்துக் கவுண்டர். பார்த்தவுடன் புரிந்து போனது குமாருக்கு. வாசர்களுக்கு சொல்கிறேன், இவர்தான் வீட்டின் உரிமையாளர். கோவையில் பல ஆலைகளுக்கு முதலாளி. அவரது கிராமத்தில் அவர்தான் ஊர் நாட்டாண்மை. மனைவி பாவாயம்மாள். அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு, மகள் பாமா. பத்திரங்களில் இந்தப்பெயர்தான் இருக்கும். ஆனாலும் வீட்டில் அவளை பூங்கொடி என்றே அழைத்தார்கள். போதும் அவர்கள் கதை. அறைக்கு வருவோம். அறையில் ஒரு விளிம்பில், ஒரு பெண் தண்ணீரெடுப்பது மாதிரி இருந்த ஓவியத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் குமார். கடைந்தெடுத்த கால்களில் தழையும் கொலுசும், ஒருபக்கம் மெல்லத் தெரியும் முட்டி மதிப்பும், ஒரே ஆடையை சுற்றி அணிந்திருக்கும் அழகும், மேல்புறத்தில் விம்மும் தனங்களின் சிறு  விரிவும், குடத்தை வாகாகப் பிடித்திருக்கும் கரங்களும், குவிந்த குமுதம்போலும் இதழ்களும், விரிந்த கண்களும், ஏற்றிப் போட்டிருந்த இலகுக்கொண்டையும்....அந்த ஒய்யாரக்கொண்டை அழகிலிருந்து அவனது கண்ணை அவனாலே விலக்க முடியவில்லை. எத்தனை லெட்சம் கொடுத்து வாங்கினாரோ, இந்த ஓவியத்தை.“தோள் கண்டார், தோளே கண்டார், தொடுகழல் கமலம் அன்னதாள் கண்டார் தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதேவாள்கொண்ட கண்ணார்  யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்தார் அன்னார் உருவுகண்டாரை ஒத்தார்”என்ற கம்பனின் வரிகளாய் கரைந்துபோனான் குமரன். அந்த பாவையின் ஒவ்வொரு வடிவும் அவனை மயங்கச் செய்தது. அறையை மறந்தான், அழைத்தவனை மறந்தான்,  ஆசுடினை மறந்தான், அத்தனையும் மறந்தான், அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டு இருந்தான். கால்களில் அழகைக் கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு, அவள் அவனைப்பார்த்துக் கண்ணடிப்பதைப்போலத் தோன்றிற்று ஒருமுறை. அதிர்ந்துபோனான்...இல்லை, ஓவியம்தான் அது. அத்தனை உயரத்தில் சுற்றிலும் ஆணி வைத்து அறைந்திருக்கிறார்களே... அவள் கையின் வளைகளும், காலின் தண்டைகளும் எப்படி ஒலியெழுப்பும் என்ற எண்ணத்தை இழுத்து நிறுத்தியது இன்னொரு ஒலி.“எல்லாம் நம்ம பசங்கதான் அய்யா....” ஆசுடின் விளக்கிக்கொண்டு இருந்தார். இவனுக்கே தெரியாமல், எல்லோருடனும் சேர்ந்து இவனும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கிறான்.நாச்சிமுத்துக்கவுண்டரின் கூரிய கண்கள், அனைவரின் இதயத்தையும் ஊடுருவி அலசியது. எல்லோரிலும் இளையனான குமரனை சற்று நிதானித்துக் கவனிக்க அவர் தவறவில்லை. “சாப்பாடு தங்குற எடம் எல்லாம் வசதியா இருந்துச்சாங்க......” அவரும் இங்க போடுவார் என்று குமரன் நினைக்காதிருந்ததை அதிசயித்துக் கொண்டிருந்தபோது, சவரிமுத்துஅண்ணன், வேகமாக தலையாட்டினார். ஆசுடின் அண்ணனும், கவுண்டரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஊருக்குள் சாரம் பனியனோடு சுற்றும் ஆசுடினுக்கு இப்படி வெள்ளையும் சொள்ளையுமாக உடுத்தத் தெரியும் என்பதும், இத்தனை பெரிய மனிதர்களுடன் சரிக்குசமமாக அமர்ந்து அவரும் பேசுவார் என்பதே ஆச்சரியமாக இருந்தது குமரனுக்கு. தனக்குள்ளாக ஆசுடினின் பிம்பம் கொஞ்சம் பெரிதாவதை அவனால் தடுக்க முடியவில்லை.இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, பின்பக்க வாயில் மெல்லத் திறந்துகொண்டது. எதையோ அப்பாவிடம் சொல்வதற்கு வாயெடுத்த பாமா, ஆட்கள் அதிகம் இருப்பதை அறிந்து அமைந்தவாறு, அடுத்த கதவைத் திறந்தாள். கதவின் ஓசை கேட்காவிட்டாலும், அப்பாவிடம் பேசுவதற்குத் தொடங்கிய கிளிமொழியின் கிறக்கத்தில் குமரன் விழவும், அந்த தேனினும் இனிய குரல் வந்த திசைக்கு அவன் திரும்பவும், திரும்புவதற்கு முன்னரே அடுத்த வாயிற்கதவை திறந்து அந்நடையை அவள் கடக்கவும், “பூ’’ என்ற குரலெடுத்து கவுண்டர் மகளை அழைக்கவும், குரல் கேட்காமலோ, அல்லது ஆட்கள் அதிகம் இருக்கும் இடத்தில் பேசவிரும்பாமலோ, பூங்கொடி கடந்து செல்வதற்கும் சரியாக இருந்தது.

அந்த வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தான் குமரன். ஒருகாலை நடையைக் கடந்து வைத்தவளாகவும், இன்னொருகால் இவர்கள் இருக்கும் அறையிலேயே இருப்பதாகவும், ஒற்றைக்கைகொண்டு, சிற்ப வேலைப்பாடுகள் நிரந்த அக்கதவைத் திறக்கும் இன்னொரு சிற்பமாய் அங்கேயே நின்றாள் பூங்கொடி. மாங்கனி வடிவப் பட்டுசரிகை கொண்டு பச்சைப் பாவாடை, ஆணையின் மத்தகத்தை மறைக்கும் முகப்பட்டம் போல, அவளது பின்புறத்தின் ஒருபகுதி மீது புரண்டிருக்கும் செந்நிறத்தாவணி, அதே பச்சைநிறத்தில் சிறியசரிகை கொண்ட பட்டுச்ச்சட்டை, பழுத்தும் பழுக்காத இளம்மா நிறத்தில் இருந்த வலமேற்கையால்  மறைக்கப்பட்ட வளங்கள், எழிலார்ந்த இளந்தோள்கள், நுனிக்கழுத்தில் புறழும் மெல்லிய மயிர்கள், காதுக்கருகில் கன்னத்தைத் தொடும் ஊசிக்கேசம், அரைப்பாதியாய் தெரிந்த அங்கயற்கண்கள், மாசில்லாமல் மின்னும் தெளிவுமிகு நெற்றி, குறத்திக்கொண்டை....கண்ணைக்கசிக்கினான் குமரன். அவள் எப்போதோ கடந்து போயிருந்தாள். என்னதான் கதாசிரியன் எனும் உரிமை  இருந்தாலும், ஒரு இளம்பெண்ணை அவன் இரசித்த பாங்கினை நாம் அறிந்திருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன். அதன் தாக்கத்தால் அவனது அடுத்த கற்பனைகளில் நாம் புகுவதிலிருந்து விடைபெறுகிறோம்....தலையைத் திருப்பிக்கொண்டான். ஆசுடின் அண்ணனும், நாச்சிமுத்து அய்யாவும் என்னவெல்லாமோ சொன்னார்கள். ஒன்றும் கேட்கவில்லை குமரனுக்கு. வேலையில் அவருக்கு ஏகதிருப்தி என்றும், அடுத்த முறையும் நீங்களே வரவேண்டும் என்று விரும்புவதாகவும் ஆசுடின் சொன்னது மட்டும் கொஞ்சம்போல காதில் விழுந்தது.

பேசிமுடித்து கீழே வரும்போது, மறுநாள் வேலை இல்லையென்றும், வேண்டுமானால் எல்லோரும் சேர்ந்து திரைப்படம் பார்க்கலாம் என்றும் முடிவு செய்தார்கள். குமரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தூக்கமும் வரவில்லை.ஒரே அறையில் பார்த்த ஓவியமும், உண்மையும் அவனை உருக்குலையச் செய்தன. தன்னிலை உணர்ந்து தவிர்க்க நினைத்து, பாட முனைந்தவனுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. அதே நினைப்பு மீண்டும் மீண்டும் அவன் உள்ளத்துக்குள் ஓடியது.. யாராக இருக்கும் அவள்?. வாரிசு என்றால், இத்தனை சொத்துக்காரி, இப்படி தாவணி அணிந்திருப்பாளா என்ன?. இக்காலத்து வசதிவாய்ப்புள்ள பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்?. ஒருவேளை வேலைக்காரியாக இருக்குமோ?. இருந்தால் இப்படி அய்யாவிடம் அவசர அவசரமாக பேச வருவாளா?. அந்த அறைக்குள் படுத்தவாறு பலவாறாக சிந்தித்தான் குமரன். அந்த சிந்தனைக்குள் நாமும் நுழையலாம்....தொடரும் செல்வியின்செல்வன்......வெள்ளை.