Sunday 14 April 2013

தெய்வத்துள் வைக்கப்படும். - ஓர் உரையாடலும், சில உண்மைகளும்.



மூவுலகையும் ஒரு குடைக்குக் கீழ் வைத்து அரசாளும் முப்பந்தல் இசக்கியம்மனின் மலரடிகள் சரணம்.

தெய்வத்துள் வைக்கப்படும்.  

 கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் இருக்கும் நந்திமலைச் சாரல்... மல்லிகை மலர்களை மலை உச்சியில் இருந்து யாரோ தொடர்ந்து உருட்டிவிடுவதைப்  போலவும், விண்ணுலகில் வாழும் வேத வியாசரின் வெண்தாடி அப்படியே தரை வரைக்கும் நீண்டு வீழ்ந்ததைப் போலவும், மெல்லிய அருவி ஒன்று மலை உச்சிமுகட்டில் இருந்து மெதுவாக விழுந்துகொண்டு இருந்தது. அதிகார துள்ளலுடன், வீறுகொண்டு விழும் அருவி, தன்னை எதிர்க்கும் சில கற்களில் மோதுவதும், சில கற்களை உருட்டுவதுமாக விழுந்து, பின்னர் தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டு இருந்தது. அருவியின் இந்த அமைப்பு, அதன் அருகில் தவம் செய்துகொண்டு இருந்த முனிவர் ஒருவரின் வாழ்வியலை அங்கு வருவோர்க்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருந்தது ஓர் ஆச்சரியம்தான்.

பாரத் மாதா கீ ஜெய்.......

அந்த அருவியின் அருகே அமைந்திருந்த சின்ன ஆலயத்துக்கு அருகில் இருந்த பாறையில்தான் அவர் அமர்ந்திருந்தார். பொதுவாக முனிவர்கள் சொல்லும் மந்திரம் போலல்லாமல் இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தார் அவர். நீண்ட தலைமயிர், தரைதொட்ட தாடி, கல்லையும் ஊடுருவ வல்ல கண்கள், சட்டையில்லாத மேனி, நினைத்ததை சாதிக்கும் நெஞ்சு, காவி உடை, என  கோபத்தில் முனிவரான கௌசிகனைப் போல இருந்தார்.

முப்பதுகோடி முகமுடையாள்
உயிர்மெய்ப்புறம் ஒன்றுடையாள் –இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும்
சிந்தனை ஒன்றுடையாள்.  

கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு, உள்ளுக்குள் உரத்து பாடிக்கொண்டிருந்தார்.

“சாமீ..........”

மெல்ல திறந்தன விழிகள். பரட்டைத்தலையும், தாடியுமாக, பரதேசி மாதிரி வந்து நின்ற மனிதனைப் பார்த்து ஆச்சரியப்பார்வையுடன் பேச ஆரம்பித்தார் சுவாமிகள்.

“வாங்க பிள்ளைவாள்......”

மெல்ல கண்களை மூடிக்கொண்டு  வருகை மொழி கூறினார். வந்தவர் சுவாமிகளின்  முகத்தை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு, அவர் அமர்ந்திருந்த கல்லுக்கு அருகே, அந்த பாறையில், குத்துக்காலிட்டு அமர்ந்தார். கல்லின் குளிர், உள்ளங்கால் வழி உச்சந்தலையை தொட்டது. ஆனால் உடலில் ஊடுருவிய அந்த குளிர் அவர் உள்ளத்தின் வெப்பத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை.

“.....பேசாம ஒங்கள மாதிரி சாமியாரா போயிருக்கலாம் சாமீ......”

மெல்ல கண்ணை திறந்து பார்த்தார் ஓங்காரனந்தா சாமிகள். தனது வாழ்வில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்தும் கலங்காத அந்த வைர நெஞ்சம், வந்திருந்த மனிதரின் கோலத்தை பார்த்து சற்று கலங்கியது. நெஞ்சம் திடுக்கிட்டதில் உடல் ஒருமுறை குலுங்கி அடங்கியது சுவாமிகளுக்கு. தான் திடுக்கிட்டது வந்திருப்பவருக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக, மீண்டும் உடலை நிமிர்த்திக்கொண்டு, தாடியை தடவிவிட்டார் சுவாமிகள்.

“..ம்.. ம்ஹூம்......” கரகர குரலை ஒருமுறை உயர்த்தி உறுமிக்கொண்டார் சுவாமிகள்.

சிக்காக சடை விழுந்திருந்த தலையை ஒரு முறை சொறிந்துகொண்டார் மாடசாமி பிள்ளை. தரையை பார்த்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“...சாமீ...... வருங்கால சமுதாயத்துக்கு ஒன்னு சொல்லணும் சாமீ... யாராவது நாட்டுக்காக போராடணும்னு வந்தா, அவன் கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி பெக்கப்பிடாது சாமீ... சந்நியாசியா போயிரணும்... ஒங்கள மாதிரி கடைசிகாலத்துல கவலைப்படாம இருக்கலாம். தப்பு தவறி கல்யாணம் பன்னுனான்னு வச்சுக்கோங்க.... பொத்திகிட்டு, பொண்டாட்டி புள்ளைய காப்போத்துனோமா, நிம்மதியா இருந்தோமான்னு இருந்திரனும். விடுதலை, வீரம்னு வீணா போயிரக்கூடாது... இத எப்படியாவது வருங்கால சந்ததிக்கு சொல்லணும் சாமீ....” அழுகைக்கு ஊடே பேசி முடித்தார் மாடசாமி பிள்ளை.

வெள்ளை அரசாங்கம் வெளிறிப்போகும் அளவுக்கு, வெற்றிகரமாக தான் செய்த செயலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாடசாமி பிள்ளை. அவர் இப்படி அலுப்பாக பேசி அவர்கள் குழுவிலே யாரும் பார்த்ததில்லை....



“.. குடும்பம் என்னப்பா குடும்பம்.. நம்ம ஒரு குடும்பத்த பாத்துட்டு கெடந்தா, நாட்டுக்கு நல்லது செய்றது யாரு?. எல்லாருக்கும் நாட்டுக்குள்ள நடக்கிறது தெரியிறதா என்ன?. தெரிஞ்ச நாமளே அத தட்டிக்கேக்க வரலைன்னா அடுத்தவன கொற சொல்லி என்ன புண்ணியம்ன்றேன்.....இங்க பாரு... பல ஆண்டுகாலமா நாம கோட்ட, கொடி கொத்தளம்னு அரசாட்சி செஞ்ச நாடு இது. இன்னிக்கி எங்கிருந்தோ வந்த வெள்ளக்காரன் நாந்தேன் உங்களுக்கு அரசன்றான். வுடப்புடாதுடா...வெரட்டிப்புடனும்.... வெட்டிப்புடனும்... நாம வெட்டுற வெட்டுல வெள்ளக்காரன் துண்ட காணோம், துணிய காணோமுன்னு, ஊரப்பாத்து ஓடணும்... கெடக்குறா நம்ம குடும்பம்.. நாளைக்கு நாம செய்ற செயலால நம்மள நாமே ஆளலாம். அப்புறம் எங்குடும்பம் ஓங்குடும்பம் இல்லடா....ஒட்டுமொத்த பாரதநாடே நல்லாருக்கும்.....”  சந்நதம் வந்தது போல பேசுவார் பிள்ளையவர்கள். அவரது பேச்சை கேட்ட யாருக்கும் தேச விடுதலை குறித்த சிந்தனையும், அதை செயலாக்கம் செய்ய உறுதுணை செய்யும் எண்ணமும் வந்து சேரும். பல்வேறு காலங்களில் குடும்பத்தை மறந்து கூட்டத்துடன் வாழ்ந்த மனிதர். வீட்டை பற்றி சிந்திப்பதை விட, நாட்டின் விடுதலை குறித்து அதிகம் சிந்தித்த மனிதர். இப்போது ஒன்றும் தோற்றுப்போகவும் இல்லை... அவர்கள் திட்டமிட்ட செயலை வெற்றிகரமாக முடித்திருந்தார்கள். செயலுக்கான வழக்கில், வெள்ளை காவலர்களிடம் சிக்காமல் இருந்த ஒரே குற்றவாளி ஓட்டப்பிடாரம் மாடசாமிபிள்ளை மட்டும்தான். அப்போதைய வெள்ளை அரசாங்கம் ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளையை பிடித்து தருபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தென்மாவட்டங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தது.

“... சாமீ....என்ன புடிச்சு குடுக்கிறவங்களுக்கு பல ஆயிரம் கொடுக்கிரோம்னு சொல்லிருக்கானுகலாம்...சட்டிப்போலீசு காரனுக.....என்னத்த பண்ணி என்னாத்துக்கு சாமீ..ஒன்னு தெரியுமா.... பசும்பொன் ல சின்ன ஜமீந்தார் ஒருத்தர் இருக்காராம். சுபாஷ் பாபு கூட ரொம்ப நெருக்கமாம். ரெண்டு பெரும் சேர்ந்து பேசி, கல்யாணம் பண்ணிக்க கூடாது, தேசவிடுதலைக்கு பாடுபடனும்னு தீர்மானம் போட்டிருக்காங்களாம். இந்த அறிவு எனக்கு இல்லாம போச்ச சாமீ... மகராசன் நீ நல்லா இருக்கணும்......”. தான் நினைக்கும் மனிதன் தனக்கு எதிரே நிற்பது போல் நினைத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தூக்கி ஆசீர்வதித்தார் மாடசாமி பிள்ளை.

பேசி முடிக்கட்டும் என்று நினைப்பது போல அமைதியாகவே இருந்தார் சுவாமி ஓங்காரநந்தா. சற்று நேரம் மௌனம் நிலவியது. இருவரின் உள்ளத்துக்குள்ளும் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

ஆயிரக்கணக்கில் பணம் புரளும் தன் வியாபாரத்தையும், எக்கச்சக்கமான சொத்துக்களையும், தவமிருந்து தான் பெற்ற ஒற்றை மகனையும், அன்பு கெழுமிய மனைவியையும் விட்டுவிட்டு விடுதலை போராட்டத்துக்கு வந்து சேர்ந்தவர் மாடசாமி பிள்ளை. வெள்ளை அரசாங்கத்துக்கு எதிரே ஆயுதம் தூக்கி யுத்தம் நடத்துவோம் என்று, தென்பகுதிகளில் திரண்ட பாரதமாதா சங்கத்தின் முக்கிய தளகர்த்தர். உயிர் வாழ்வதின் பொருளே, வெள்ளைக்காரர்களை விரட்டுவதும், தேசத்துக்கு விடுதலை வாங்கி தருவதும்தான் என்று வாழ்ந்தவர். நம்மை அடக்க நினைக்கும் வெள்ளைக்கூட்டத்தில் ஒருவனையாவது கொன்றுவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தவர். பல்லாண்டு காலம் வெள்ளை அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தலைமறைவாக வாழ்ந்தவர். அவர் இப்படி பேசுவார்  என்று சுவாமி ஓங்காரநந்தா எனும் நீலகண்ட பிரம்மச்சாரி நினைக்கவே இல்லை.

“........பிள்ளைவாள்....வாழ்க்கன்றது ஒருதடவதான் பாருங்கோ....வெள்ளைக்காரன் மெரண்டு போய் நிக்குறான், நாம செஞ்ச செயலப் பாத்துட்டு.....ம்......” அமைதியை கலைக்கும் விதமாக, மெல்ல கரகர குரல் ஒலியை காற்றில் பரவவிட்ட சுவாமிகள்...திடீரென ஆவேசம் வந்ததுபோல, தண்டத்தை கையிலெடுத்துக்கொண்டு எழுந்தார்.

“... அடிமை விலங்கொடித்து அன்னை பாரதத்தாய், புரட்சி சிலம்பு பூணும் நாள் வெகு தொலைவிலில்லை......பாரத் மாதா கீ....ஜெய்......பாரத் மாதா கீ ...ஜெய்..........” முழக்கம்  மலையின் முகடுகளில் பட்டு எதிரொலித்தது. அமர்ந்தார் சுவாமிகள்.

இது ஒன்றும் புதிதில்லை மாடசாமி பிள்ளைக்கு. பாரதமாதா சங்கத்தின் காரியக்கூட்டத்துக்கு ஒருமுறை வந்தவன், அரிவாளை எடுத்துக்கொண்டு ஆங்கிலேயனை வெட்டினால்தான், ஆத்திரம் அடங்கும் அளவுக்கு, அவனுக்கு தேசவெறியூட்டும், பேச்சாளர்கள் அங்கே பலர் இருந்தார்கள். சுவாமிகளோ அவர்களின் தலைவர். கேட்கவா வேண்டும்?. சலனமில்லாமல் அமர்ந்திருந்தார் பிள்ளைவாள்.

“.. இது இன்று நாளை முடிகிற போராட்டம் இல்லை. கும்பினி கூட்டத்தை, குப்புறத்தள்ளும் வரைக்கும் நடக்கவேண்டிய மாபெரும் யுத்தம். இதில் நாம் பலரை இழக்க நேரிடலாம். இந்த துயந்த யுத்தத்தின் ஆரம்பமே, ஒரு இளைஞனின் இழப்பில்தான் தொடங்கியது என்பதை நீங்கள் உணராதவர் இல்லை பிள்ளைவாள். தேசம் என்று வந்துவிட்டபிறகு குடும்பம் நமக்கு இரண்டாம் பட்சம்தான்........” கண்களை மூடிக்கொண்டு கனிவான குரலில் பேசிய சுவாமிகள், இடையிலே விம்மல் சத்தம் கேட்டு, பேசுவதை நிறுத்தினார்.

மாடசாமி பிள்ளை அழுதுகொண்டு இருந்தார். இடையிடையே... வாஞ்சி, சிதம்பரம், கணபதி ...என்று முனகிக்கொண்டே இருந்தார். “.. சாமீ என் ஒரே மகன், கணபதி, போலீசுல வேல பாக்குறான். நான் இந்த காவி ஒடையில அவன பாக்க போனேன் சாமீ..... ஒங்க சத்தியமா, என்ன அவனுக்கு அடையாளம் தெரியல சாமீ.... பெத்த மகன், அப்பன அடையாளம் தெரியாம போகுற அளவுக்கு ஆனபின்னாடி, நானெல்லாம் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன் சாமீ.....செத்துரலாமுன்னு இருக்கேன் சாமீ...செத்துரலாமுன்னு இருக்கேன்....” நீலகண்ட பிரம்மச்சாரியின் கைகளை பிடித்துக்கொண்டு கதறினார் மாடசாமி பிள்ளை.

ஆத்திரத்தால் அழ நினைப்பவர்களை அடக்குவது நல்லதல்ல. அந்த அழுகை ஆத்திரத்தை குறைக்கும். அழட்டும் என்றே விட்டுவிட்டார் சுவாமிகள். ஆனால் அது குறைந்தபாடில்லை...பெருங்குரலெடுத்து, அடிவயிற்றின் ஆழத்திலிருந்து ஓ...வென்று கதறி அழுதார் மாடசாமி பிள்ளை. அவர் மண்டை ஓட்டுக்குள் ஏதொ ஒன்று அழுத்தியது மாதிரி தலை கனத்தது.  தொண்டைக்குழிக்குள், கற்கள் புகுந்துகொண்டது மாதிரி அடைப்பு ஏற்பட்டது. பெருமூளை, சிறுமூளைக்கு செல்லும் நரம்புகள் தனித்தனியாக துடிப்பது மாதிரி தெரிந்தது அவருக்கு. கண்களை திறக்க நினைத்து முடியாமல் போனது. அழமட்டும்தான் முடியும் போலிருந்தது.

வாஞ்சி....நீ வீரன்.... ஒரே பொண்டாட்டி புள்ளத்தாச்சியா இருக்கும்போது, தேசம்தான் முக்கியம்னு, தியாகி ஆயிட்டடா.... நானும் ஓங்கூடவே வந்து செத்திருக்கணும்....விட்டுட்டேன்....,செத்திருக்கணும்.....,”

“ கணவதி....ஒங்கப்பன் சாதாரண ஆள் இல்ல.....அகிலத்துல அரவாசிய நாங்கதான் ஆளுரோம்னு திமிருல அலையுற கும்பினி கூட்டத்தோட போலீசுகாரன....திணறடிச்சவன்....என்னிய ஒனக்கு அடையாளம் தெரியாம போச்ச ராசா....நம்ம நெலத்த எல்லாம் வெள்ளைக்கார அரசாங்கம் சப்தி பன்னிருச்சாம் அப்படியாடா?... என் ஆத்தா...சிதம்பரத்தம்மா...அவா எனக்கு பொண்டாட்டி இல்லடா..ஆத்தா.... அவள ஒருதரம் பாக்க முடியாம போச்சடா....., ஓட்டப்பிடாரம் ஒலகம்ம்மன்  கோயிலில புலிவேஷம் கட்டி, உடுக்கடிச்சு, புலியாட்டம் ஆடுன ஆளு, நல்லா ஆடுறான்னு சொல்லி சிரிச்சியே....ராசா, அது ஒங்கப்பந்தான்னு ஒனக்கு தெரியாம போச்சடா.....கடவுளே எங்கள ஏன் இப்படி பண்ணுன.....ஏன் இப்படி பண்ணுன...”

“..சிதம்பரம்..ஒன்ன செக்கிழுக்க போட்டுட்டானாம்..அப்புடியாடா.. எப்பேர்ப்பட்ட குடும்பம்டா ஒன்னோடது....நீ ஏண்டா இப்படி கஷ்டப்படனும்.... நாடாம் நாடு....நாளைக்கு வரப்போற சாதிசனம் நம்மள எல்லாம் நெனைக்கவாடா போவுது.....ஆனா ஐயா...ஓங்கம்பெனி கப்பல ஓடவுடாம பன்னுனானே...ஒன்னையும் சிவாவையும் புடிச்சு செயில்ல  போட்டானே...ஆசு....அவன கொன்னுட்டோம் தெரியுமாயா......கொன்னே போட்டோம்....செத்தான்....செத்துட்டான்........இப்ப ஒனக்கு சந்தோஷமா?... நீ சந்தோஷமா இருக்கணும்.....அதுக்குத்தான்...செஞ்சோம்.”

அழுகையிலிருந்து மெல்ல வெளியேவந்தார் மாடசாமி பிள்ளை. சிதம்பரம் பிள்ளையை நினைத்தமாத்திரத்தில், தனது தியாகம் எல்லாம் அவருக்கு தூசாக தெரிந்திருக்கவேண்டும். நேரம் வரட்டும் என்று நினைத்து அமைதியாக இருந்த, நீலகண்டபிரம்மச்சாரி, இப்போது பேசலாம் என்றே நினைத்தார். அதற்குள் மாடசாமி பிள்ளையே பேச ஆரம்பித்தார்.

“சாமி....என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல... என் நெலத்த பூராம் ஜப்தி பண்ணி போட்டானுவோளாம். புடிச்சுக்கொடுத்தா பணம் தாரேன் னு சொல்றானுவோளாம். வாஞ்சிக்கு, காமா அம்மா கொடுத்த துப்பாக்கிய கொண்டுபோய் குடுத்தது நான்தான் ன்னு அவனுவோளுக்கு தெரிஞ்சி போச்சு....ஐயரு, நீங்க, தந்த கடுதாசிய  எல்லாம் , வாஞ்சி கிட்ட கொண்டுபோய் சேர்த்ததுல இருந்து, அவ்வளவு ஏன் சாமி....நான் ராமமூர்த்தி ன்ற பேருல இருந்ததையும் கூட கண்டுபிடிச்சுட்டானுக. எல்லாத்தையும் நம்ம ஆறுமுகம் சொல்லிட்டான் போல இருக்கு சாமீ......ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சாமி....நம்ம குருசாமி அய்யரும், சிங்கம்பட்டி சமீந்தாரும், ஆஷ் சவத்த தோள்ல சொமந்திருக்கானுவோ....என்னாத்த சொல்ல.”

பன்னெடுங்காலமாக தலைமறைவாக, புதுச்சேரியில் வாழ்ந்ததால் , நடந்த நிகழ்வுகள் பல மாடசாமிபிள்ளைக்கு தெரியவில்லை என்பதை சுவாமி ஓங்காரநந்தா தெரிந்துகொண்டார். வழக்கு சென்ற திசையையும், அதில் தான் அளித்த சாட்சியங்கள் குறித்தும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை, அவரது பேச்சின் மூலமாகவே உணர்ந்துகொண்டார்.

“...சொல்றத கேளுங்க பிள்ளைவாள்...பேசாம திருப்பியும் புதுச்சேரியில போய் இருந்துக்கோங்க.... இன்னும்  கொஞ்ச நாள் கழிச்சு திருப்பியும் வாங்க...ஒங்க புள்ளைக்கு உங்கள அடையாளம் தெரியாமலா போயிரும். நேதாஜி இம்பால் பக்கம் நெருங்கியிருக்காராம். சீக்கிரத்துல இந்த வெள்ளைநாரைகள் வெளியேறிரும். அதுக்கப்புறம் நம்ம குடும்பத்தோட, இந்த நாட்டுல நிம்மதியா வாழலாம். அதனால அதிகமா மனச வருத்தாம...இன்னும் கொஞ்சநாள் பாண்டிச்சேரியில போய் இரிங்க பிள்ளைவாள்.. எல்லாம் நல்லதாவே நடக்கும். பாரத் மாதா கீ ஜெய்.....”

அடியார்களை ஆசீர்வதிப்பது போல ஆசீர்வதித்தார் சுவாமிகள். பெரும் குழப்பத்துக்கு இடையில் பதிலேதும் சொல்லாமல் மெல்ல நடந்தார் ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை......


--------- இந்திய விடுதலைக்காக போராடிய ஒரு மானுடன் இந்த மாடசாமிபிள்ளை. விடுதலைக்கு போராடிய பலர், தன்னளவில் ஏதேனும் இழந்தாலும், குறைந்தபட்சம் வரலாற்றிலாவது இடம்பிடித்துவிட்டார்கள். ஆஷ் கொலைவழக்கில் கடைசி வரை, தலைமறைவாக வாழ்ந்து மடிந்த மாடசாமிபிள்ளையை வரலாறு அதிகம் அறிந்திருக்கவில்லை. இவருடைய மகன் கணபதி, தந்தையை தன்னால் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத சோகத்தை நினைத்து, நினைத்து பைத்தியமாகி விட்டார். பின்னர் தன் தந்தையை காணாமலேயே மறைந்தார். விடுதலை கிடைத்தபின்னர், பெருந்தலைவர்.கு.காமராசர் முதல்வரான பின்னர், தூத்துக்குடிக்கு வந்திருந்தபோது, மாடசாமி பிள்ளையின் மனைவியை  சந்தித்து, சொத்துக்களை திருப்பிகொடுத்து, ஓய்வூதியமும் கிடைக்க வழி செய்தார். இந்த நாட்டின் விடுதலைக்காக தானும், தன் குடும்பமும் பாதிக்கப்பட்ட, மாடசாமிபிள்ளை போன்றோரின் தீரத்தை வருங்கால சமுதாயம் உணரவேண்டும் என்பதே நம் விருப்பம். வணக்கம்.       

அன்புடன்.இரா.பார்த்தசாரதி.