Wednesday 27 June 2012

பெருங்கொடை - சிறுகதை..


 சர்வம் சக்திமயம்.

அந்த ஆலயத்தின் கொடைவிழா நிறைவுபெற்று சில நாட்களாகிறது. இன்னும் கொட்டகை பந்தல் பிரிக்கப்படவில்லை. தட்டுப்பந்தல் மட்டும்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. பந்தல்காரனுக்கு வேறு வாடகை உடனேயே இல்லையோ என்னமோ?. அலங்கார சீலைகள் அவிழ்க்கப்பட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடந்தது. சீலை குத்த பயன்படும் காக்காமுள் தரையில் நிறைய கிடந்தது. ஆர்த்து நடக்கவேண்டும். காய்ந்த மாலைகள், பிளக்ஸ்பேனர்களுக்காக வைக்கப்பட்ட கம்புகள், சர்க்கஸ்காரர்களும், இராட்டினகாரர்களும் வெட்டிய குழிகள் என பெரிய திருவிழா நடந்ததற்கான அனைத்து அடையாளங்களுடனும் இருந்தது ஆலய வளாகம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும், பொங்கலிட வைக்கப்பட்ட கற்கள், அங்கங்கே ஆண்டவனுக்காக வெட்டப்பட்ட கிடாய்களின் இரத்தங்கள், கொரண்டிமுள் காட்டுக்குள் நடந்த கொடைவிழாவுக்கு அடையாளங்கள். பிளக்ஸ்பேனர்கள் பலவீட்டின் பந்தல்மேலுமாய், சில வீடுகளில் கக்கூஸ் மறைவுமாய் பயன்படுத்தப் பட்டிருந்தன. அமுதன் கொடைவிழாவுக்கு வந்திருக்க வேண்டும். வெளிமாநில வேலையினாலும், திடீரென பிளான்ட் டிரிப்பாகி போனதாலும் வரமுடியவில்லை. வந்தபோதாவது சாமி கும்பிட வேண்டுமென்று நிற்கிறான். பெரிய கூட்டமில்லை. ஒரு குடும்பம் கொம்பு திருகிய செம்புலிக்கிடாயைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது. வ்சாரித்ததில் ஆண்டான்குளம் என்று தெரிந்து கொண்டான். இன்னும் சிலபேர் அங்கொன்றும் இங்கொன்றுமாய். கொடைவிழாவில் கிடைத்த பலி திருப்தியால், எல்லாவற்றையும் ஏகாந்தமாய் பார்த்துக்கொண்டு நின்றார், ஒத்தப்பனை சுடலையாண்டவ்ர். பக்கத்திலேயே முண்டன், பேச்சி என துணைதெய்வங்கள். கல்தூணிலேயே செதுக்கப்பட்ட சிற்பம், உயிரோடு கண்ணை உருட்டுவது போலிருக்கும். நெருங்கி கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், பயம் வந்துவிடும் அளவுக்கு உயிர்த்துடிப்புள்ள சிலைகள். பூசாரி வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகுமென்று அங்குள்ளோர் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்து கொண்டான். வில்லுமேடையில் கொஞ்ச நேரம் உட்காரலாமென்று கழட்டி விட்டிருக்கும் செருப்பு கண்ணில் படும் படியான இடம் பார்த்து உட்கார்ந்தான். சாமி மீது அவ்வளவு நம்பிக்கை... கொடைக்கு வந்திருந்தால்......

சிலப்பதிகாரத்தில் இளங்கோ வரைந்திருக்கும் காவேரிப்பூம்பட்டினத்தின் இந்திரவிழா தோற்றுப்போகும். அத்தனை சிறப்பு. தேவாதிதேவரெல்லாம் இரண்டு நாளைக்கு முன்னரே வடக்கு விஜயநாராயணத்தில் ஆஜர். மாலை 3 மணிக்கு பால்குடம். இவனுக்கு தெரிந்து வேறெந்த பகுதியிலும் சுடலைசாமிக்கு இத்தனை பால்குடம் எடுப்பதாகத் தெரியவில்லை. நூற்றுக்கணக்கில். ஏற்கனவே மன்னர்குலமென்று பீற்றிக்கொள்ளும் மறவர் சமுதாயம் காட்டுகின்ற தோரணைக்கு அளவே இருக்காது. இத்தனைக்கும் அரசு விழா. ஒரே குடும்பத்து ஆட்கள்தான் தக்கார். திமுக ஆட்சிக்கு வந்தால் அண்ணன், அதிமுக ஆட்சிக்கு வந்தால் தம்பி. போனவருடம் உதயசூரியன் வரைந்த வீட்டின் கதவில் இதை வருடம் இரட்டைஇலை இருக்கும். கட்சி மாறுவது பணக்காரர்களுக்கு எளிது. ஏழைக்குத்தான் கஷ்டம். யானை, குதிரையுடன், தாரை தப்பட்டை முழங்க பால்குட ஊர்வலம். யார் வீட்டு மாடியிலாவது நின்று பார்த்தால். கரிகால் பெருவளத்தான் வட திசை நோக்கி படை திரட்டியது மாதிரி இருக்கும். அவர்களை மாதிரி வேட்டிசட்டை அணிவதற்கு தனியாக படிக்கவேண்டும். அத்தனை வெள்ளையாக எந்த கடையில்தான் விற்கிறார்களோ?. முப்பத்து முக்கோடி தேவர்களும் புடை சூழ பால்குட அணிவகுப்பு. தசராமடம் திரும்பியவுடன் பால்குடம் எடுத்தவர்களுக்கு சாமிவந்து முன்னே கயிறு கட்டி நிற்பவர்களை தள்ளிவிட்டு, ஆலயத்தை நோக்கி ஓட, அவரது மாமன் மச்சான்கள் குடத்தைப் பிடித்துக்கொண்டே அவர்கள் பின்னால் பாய, ஒட்டுமொத்தக் கூட்டமும் ஓட ஆரம்பிக்க, தப்பட்டைக்காரர்கள், ஓடவும் முடியாமல், அடிக்கவும் முடியாமல், பீடிக்கடைக்கு ஒதுங்க என்று பல சுவாரஸ்யங்கள். சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னால் தென்மண்டலத்தை கொடி கட்டி ஆண்ட பரம்பரை ஓட்டமும், நடையுமாக ஆலயம் செல்லும் அழகே அழகு. அமுதன் ஆச்சரியமாக பார்ப்பது, கணியான் கூத்து. மகுட ஆட்டம் என்று நவீனமாக அழைக்கப்படும் இதில், தாளம் தட்டுபவர்களிடம் இசை ஜாம்பவான்கள் பிச்சை வாங்க வேண்டும்.

இரவு நெருங்கவும் வில்லிசை. அந்த மேடையில்தான் இப்போது உட்கார்ந்திருக்கிறான். நொச்சிக்குளம் முத்துலெட்சுமி. இவனுடைய ஒரு சித்தி மாதிரி இருப்பாள். பக்கத்தில் பக்கவாத்தியப்பெண்ணின்  கருப்பில் இவள் இன்னும் அழகு. அணிந்திருக்கும் நகைகளும் அமர்ந்திருக்கும் வாகும், ஆட்டத்தின் அழகும் சரஸ்வதியே கதை பாடியது போலிருக்கும். பக்கத்தில் குடமடிக்க அவளுடைய கணவர், அப்போது பேமஸாக இருந்த ஓட்டை பனியனோடு, பத்துபவுன் சங்கிலி தொப்பையில் முட்ட, கையை சுழற்றி சுழற்றி அவர் குடமடிக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதிகமாக கிழடுகள்தான் உட்கார்ந்திருக்கும். அவ்வப்போது பணக்காரன் ஒரு நூறு ரூபாயை கொடுக்க உடனே,
  “..நமக்கு நூறு பவுன் பரிசளித்த .....பாசமிகு அண்ணன்.....”
“யார்...யாரம்மா...”
“வடக்கு விஜயநாராயணம் பெரியவீடு ராசாப்பாண்டியன் அவர்கள் குடும்பம், கொடி கொடி கோத்திரம், வழி வழி வம்முசமெல்லாம், நம்ம ஒத்தப்பனை சுடலைமாடசாமி அருளாலே....”
     என்று ஆரம்பித்து வாழ்த்துவார்கள். தமிழில் வல்லின, மெல்லின உச்ச்சரிப்புகளுக்கு எத்தனை மாத்திரைகளை தொல்காப்பியம் வகுத்திருக்கிறதோ, அதைச் சரியாகக் கடைபிடிப்பவர் முத்துலெட்சுமி ஒருவர்தான் என்று அமுதன் நினைக்கும் அளவுக்கு உச்சரிப்பு அட்சர சுத்தம். விசாரித்துபார்த்தால் அந்த ஆளுக்கு இப்போதைக்கு ஊரில் வீடே இருக்காது. ஆனாலும் பெரியவீடு பட்டத்தை விடமாட்டார். இந்த இடைச்செருகல் இல்லையென்றால் ஒரு மணிநேரத்தில் முடியும் சுடலைமாடசாமி கதையை ஒரு இரவு முழுவதும் இழுக்க முடியாது.

கிழக்கே கரகாட்டம் ஆரம்பித்துவிட்டால், வில்லுப்பாட்டுக்கு முன்பு இந்தக்கூட்டமும் இருக்காது. குருசாமித்தேவர் மகனும், கிட்டப்பா பேரனும் கொட்டி முழக்குவார்கள். ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தேவர் பாட்டு பாடியே ஆகவேண்டும். நேரம் ஆக ஆக, சிருங்காரத்தகவல்கள் ஆரம்பமாகும். குறவனும் குறத்தியும் மைக் பிடித்துவிட்டால், நல்லமனிதன் நின்று கேட்க முடியாது. அமுதனுக்கு கேட்க ஆசையாக இருந்தாலும் வேறு யாராவது பார்த்து வீட்டில் சொல்லிவிட்டால் என்ற பயமும் இருக்கும். ஊர் முழுக்கவும், ஆலய வளாகம் முழுவதும் டிஜிட்டல் போர்டுகளுக்கு பஞ்சமே இருக்காது. தேவர் படம், கார்த்திக் படத்துடன், தங்கள் தாத்தமார்களின் பழைய படங்களையும் தூசு தட்டி எடுத்து அச்சடித்து, அருகிலேயே கிடா மீசையுடன் தனது படத்தையும் பெரிதாக போட்டு, அரிவாள் இல்லாத குறையாக யாரையோ அடிக்கப்போவது மாதிரி போஸ் கொடுத்துக்கொண்டு, இரண்டாவது படிக்கும் தன் மகனுக்கும் வேட்டி சட்டை கட்டி, அவனையும் போர்டில் வீரனாக்கி, கீழே, இரா.சா.பா.உ. என்று பத்துதலைமுறை இனிஷியல்களையும் எழுதி பெயரை போட்டு, போகும்போதும் வரும்போதும் தானே பார்த்து பெருமைப்பட்டு, பக்கத்தில் நின்று போட்டோவும் பிடித்து அமர்க்களப்படுத்துவார்கள். கிலோமீட்டர் கணக்கில் மிட்டாய்க்கடைகளும், ஜம்போ இராட்டினங்களும், தரைவிரிக்கப்பட்ட பூலித்தேவர், மருதிருவர், வேலுநாச்சியார், சுபாஷ் சந்திர போஸ், தேவர் கார்த்திக்க படங்களும், சர்க்கஸ் கூடாரங்களும், மரணக்கிணறுகளும் என்று முழுக்கொடைவிழாவும் அமுதனின் கண்ணுக்குள் வந்து சென்றது. அனுபவிக்கமுடியாதது வருத்தமாக இருந்தது. எல்லோரையும் போலல்லாமல் பண்பாட்டுப் பிடிப்புள்ளவன் அமுதன். சாமி வேட்டைக்கு போவதையும், அவருடன் மகுட ஆட்டக்காரர்கள் பாடிக்கொண்டே செல்வதையும் பார்க்க பிரமிப்பாக இருக்கும்.
“....ஏ...ஒத்தப்பன ஆண்டவன்தான்....ஏ..ஏ....ஏ...”.   “ஏ..ஓடிவாரான் .....ஆடிவாரான்.....”
“பதுங்கி வாரான்....பாஞ்சு வாரான்....ஏ....ஏ.....ஏ.....”  :பனைமரத்த புடுங்கி வாரான்...........”
“...ஏ...ஆனப்பந்தம் கையிலேந்தி...ஏ....ஏ..ஏ.......”   “..ஆண்டவன்தான் மாயாண்டி....ஏ....ஏ.......ஏ.....”
உண்மையிலேயே சுடலைமாடசாமி வேட்டைக்கு கிளம்புவதைப்போல ஆச்சரியமாக இருக்கும். மூணு செட்டு மேளம், வில்லு கணியானோடு , இரவு பன்னிரண்டு மணிக்கு சாமக்கொடைக்கு சுடலைமாடசாமியை வரத்தும் பாங்கு, எல்லோரும் வாய்மூடி மவுனமாய் நிற்க, துவளைக்குட்டி வெட்டப்பட்டு, ஈரக்குலையும் தாமரைக்காயும் இறைவனுக்கு எடுத்து வைக்கப்பட்டு, சின்ன முனகலுடன் ஆட்டின் ஆட்டம் அடங்க, சரியான நேரத்தில் சேவலை வண்ணான் கழுப்போட, பரணியில் பன்றி ஒன்று நெஞ்சு கீறப்பட, சாமியாடிகள் மட்டும் ம்....ம்.......ம்..என்று கூச்சலிட, படைப்புத்திரை விளக்கப்பட, ஒரே நேரத்தில் அத்தனை வாத்தியங்களும் முழங்க சாமிக்கு தீபாராதனை காட்டப்பட, அப்படியே சுடலைமாடசாமி வானுலகிலிருந்து கூட்டத்துக்குள் வந்திறங்கிய மாதிரி ஓர் அனுபவத்தை அங்கிருக்கும் அத்தனை உடல்களும் அடையும். என்ன செய்வது?. எப்போதும் தான் சாமி இருக்கிறார். தன்னைத்தானே ஆறுதலடைந்து கொண்டான் அமுதன். பூசாரி வந்துவிட்டார்.

தன்னுடைய வாழ்க்கையின் நிறைவுக்காலம் வரை மறக்கமுடியாத, ஒரு நிகழ்வை அனுபவிக்கப்போகிறோம் என்ற எண்ணம் அப்போது அமுதனுக்குள் எழுந்திருக்க வாய்ப்பில்லை ... வந்த வேகத்துக்கு பூசாரி, சாமியாடி சுடலைக்கன்னண்ணன் இன்னும் வரல.......”
கேட்டாரா இல்லை தகவலா தெரியவில்லை.
“இன்னும் வரலிய சாமி..” ஆண்டாங்குளத்து அம்மாள் பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாமக்கொடையில் சுடலைமாடசாமி குதிப்பதைப்போல சைக்கிளிலிருந்து குதித்தார் சுடலைக்கண்ணு பாண்டியன். வடக்கூரில் பெருநிலக்கிழார்.
“..இந்தா வந்துட்டோளே....ஆயுசு ஐநூறு......”
“..என்னவே குறக்கீரு...ஒத்தப்பன ஐயா அருளால ஆயிரம்னு சொல்லும்..”
பூசைக்கான ஏற்பாடுகளை செய்தார் பூசாரி. தொட்டித்தண்ணீரை எடுத்து பவ்யமாக சின்னக்குழந்தயை நீராட்டுவதுபோல, பயபக்தியுடன் சாமிக்கு அபிஷேகம் செய்தார். பட்டுத்துணியால் துடைத்தெடுத்து தான் கொண்டுவந்திருந்த பால், நெய், தயிர், இளநீர், திருநீறு சந்தனம் என்று அனைத்து பொருட்களாலும் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு முறையும் தீபாராதனை காண்பித்தார்.
“கடசி வெள்ளிக்கிழமல்லா...அதான்....” அபிஷேகங்களை நியாயப்படுத்தினார்கள் ஆண்டாங்குளத்தார்கள். அமுதன் கொடைக்கு வந்திருந்தால் கூட இத்தனை அழகாய் திருமுழுக்கு பார்த்திருக்கமுடியாது என்ற திருப்தியில், கூப்பிய கையைப் பிரிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சின்னதாய் அலங்காரம் செய்யப்பட்டு எண்ணெய் முழுக்கு நடத்தப்பட்டது. எண்ணெய் முழுக்கில், இருண்ட கண்களும், திரண்ட மீசையுமாய், உயிரோட்டமாய் காட்சியளித்தார் சுடலையாண்டவர். பூசைக்கான நேரம் ஆரம்பமானது. சன்னதியின் முன்பு ஒரு தடியங்காய், அதன்மேல் ஒரு தேங்காய், அதன்மேல் ஒரு முட்டை, அதன்மேல் ஒரு எழுமிச்சம்பழம் எல்லாவற்றையும் அடுக்கி அப்படியே நிர்கவைத்தார் பூசாரி. ஆச்சரியமாய் பார்த்தான் அமுதன். ஒவ்வொன்றை வைக்கும்போது சற்றுநேரம் சாமியைப் பார்த்து ஏதொ பிரார்த்தனை செய்தார். ஒரேமுறையில் அப்படியே ஒட்டினார்ப்போல நின்றுகொண்டது அத்தனையும். வெட்டரிவாளை எடுத்தார். “..ஹேய்......” உரக்கச் சத்தமிட்டுக்கொண்டே எழுமிச்சம்பழத்தில் வெட்டினார். நான்கு பொருட்களும் வெட்டுப்பட்டு எட்டு துண்டுகளாகின. தடியங்காயின் உள்ளே குங்குமத்தை தடவினார். மிகவும் அவசரப்படுகிற ஆள்மாதிரி வேகவேகமாக எல்லாமே சில நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. ஆண்டாங்குளத்துக்காரர்கள் கொம்பு திருகிய செம்புலிக்கிடாயை அவிழ்த்துக்கொண்டு வந்தார்கள். ஆடாமல் அசையாமல் நின்றது கிடா. அன்பே உருவான ஆண்டவன் சன்னதியில் ஆட்டுப்பலியா?. அமுதனுக்கு வித்தியாசமாக இருந்தது.
“....ம்.......கயித்த அவுறு.......”
ஒரு பழைய மாலையை எடுத்து வந்து ஆட்டின் கழுத்தில் சுற்றப்பட்டது. வெட்டப்ப்படப்போகிறோம் என்கிற எந்த பயமும் ஆட்டின் முகத்தில் இல்லை. சின்னவயதில் “..நாளைக்கு சாகப்போகிறோம் என்பது ஆட்டுக்கு இன்னைக்கே தெரிஞ்சிருமாம்...” என்று நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒருவேளை தெரிந்த காரணத்தால் தைரியமாக நிற்கிறதோ என்னவோ..?
“..கொஞ்சம் தண்ணி தெளிங்க சாமி...............ஒண கொடுக்கட்டும்......”
ஒண கொடுத்தல் என்பது, ஆடு தலையை ஆட்டுவது. அப்படி ஆட்டிவிட்டால் இறைவனுடைய பலிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதி வெட்டிவிடுவார்கள். அமுதன் கூட சின்னவயதில் அப்பாவிடம் “.....அந்த ஆடே தலைய ஆட்டுதப்பா...அப்புறம் வெட்டுனா என்னா...?”. வெகுளியாக கேட்டிருக்கிறான்.
“..ம்...தண்ணி ஊத்தாம வெட்டச்சொல்லு பாப்பம்...குளிருல தண்ணிய வெளிய தெறிக்கதுக்காகத்தான் அது தலய ஆட்டுது....  இல்லாம வெட்ட சம்மதமில்ல... ஒரு காலத்துல இருந்திருக்கலாம். இப்போதுதான் தண்ணி ஊத்தி சம்மதிக்க வச்சுடுறானுகள...தண்ணி ஊத்துனா எந்த ஆடுதான் தலய ஆட்டாது... அதுலயும் நேரமானா காதுக்குள்ளே ஊத்திரானுக... ஆட்டாம என்ன செய்யும்...” அந்த கூத்தை இப்போது அமுதனும் பார்க்கப்போகிறான். பூசாரி ஆட்டின் மேல் தண்ணீரை தெளித்தார். எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல எந்த உணர்ச்சியும் காட்டாமல் அது அப்படியே நின்றது....
“..இன்னும் கொஞ்சம் தெளிங்க சாமீ...”
ம்ஹூம்...எந்த எதிர்வினையும் காட்டவில்லை கிடா.
கொஞ்சம் இடதுகாதை மேலே தூக்கிக்கொண்டு “...ஊத்துங்க சாமீ.....”
எவனுக்கோ வந்த வினை போல நின்றது கிடா...மருந்துக்குக்கூட தலையை ஆட்டவில்லை.
“..வலுத்த கிடா....கூடகொஞ்சம் தண்ணிய ஊத்துங்க சாமீ.....” தொட்டியில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்து சாமியை நோக்கி காண்பித்துவிட்டு பொலபொலவென்று ஊற்றினார் பூசாரி. எந்த பதிலுமில்லை. அமுதனுக்கே கொஞ்சம் ஆச்சரியமாக போய்விட்டது. ஒருவேளை இந்த ஆட்டினுடைய தோலுக்கு உணர்ச்சி இல்லையோ...ஊற்றியிருக்கிற தண்ணீரைப் பார்த்தால் ஒருமுறையாவது தலையை ஆட்டவேண்டுமே... என்னது இது வித்தியாசம். இன்னொரு குடம் தண்ணீர் ஊற்றப்பட்டும்கூட கிடா எந்த அசைவும் காட்டவில்லை. நேரம் ஆக ஆக ஆண்டாங்குளத்துக்காரர்களுக்கு முகம் வாடிப்போனது. கிடா தலையை ஆட்டாமல் இருந்தால் குடும்பத்துக்கு நல்லதில்லை என்று யாரோ சொல்லிக்கேட்டிருக்கிறான் இவன்.

“...ஏ..ஒத்தப்பன அய்யா...நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சு இந்த பலிய ஏத்துக்கணும் சாமீ...ஒன் விளயாட்ட இந்த சின்னப்பிள்ளேல் கிட்ட காமிக்காதா ஆண்டவா....”
உயிருள்ள இறைவனிடம் பெசுவதுமாதிரி பூடத்தின் முன்னின்று வேண்டினாள் ஒரு பெரிய அம்மாள். அவர்களின் அம்மாவைக் இருக்குமென்று நினைத்தான் அமுதன். கிடைக்கு ஊற்றிய தண்ணீர் சற்று அவனுடைய காலிலும் பட்டதால் இவனுக்கே கொஞ்சம் குளிர்விறைப்பு மாதிரி தோன்றியது. ஆனால் மங்குணி  மாதிரி நின்றது கிடா. கிட்டத்தட்ட ஆண்டவனைப்பார்த்து அழக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டார்கள் ஆண்டாங்குளத்துக்காரர்கள். “....ஒணகொடுக்கலன்னா வெட்டப்பிடதப்பா....” பெரிசு ஒன்று கருத்து தெரிவித்தது. அவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.

யாருக்கும் என்ன பேசுவது என்றே புரியவில்லை. எல்லோர் முகத்திலும் கலவரம் கலந்த பயம் குடிகொண்டிருந்தது. அமுதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அமைதியாக கிடாயையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
“...ஏய்.........ம்..ஹூம்....ம்ஹூம்..........ஆ...........ஏய்ய்............................”
சும்மா ஏனோதானோவென்று எல்லோருடனும் சாமிகும்பிட்டுக்கொண்டிருந்த சுடலைக்கண்ணுப்பாண்டியனுக்கு சந்நதம் வந்துவிட்டது. சட்டை கழட்டப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. சாமிக்கு போட்டிருந்த மாலைகளில் ஒன்றை கழற்றி பாண்டியனுக்கு போட்டு, பூசாரியிலிருந்து அத்தனை பெரும் பவ்யமாய் இவருடைய முகத்தையும், சாமியின் சிலையையும் பார்ப்பதுமாக இருந்தார்கள்.
“..என்ன நெனச்சிகிட்ட ஒத்தப்பனயான......ம்....... எம் பொருள எதுக்குப்பா....லேட் பண்ணுன.......” சாமி தங்கிலீசில் பேசியது.
ஆண்டாங்குளத்துக் கோனாரின் மொத்தக்குடும்பமும் தேவரின் காலில் விழுந்தது. திருநீற்றுக்கொப்பறையை கையில் கொடுத்தார் பூசாரி. இன்னும் அவர் கையை ஆட்ட, சாமி முன்னிருந்த வல்லயமும், ஒரு இலையில் கொஞ்சம் உதிரிப்பூவும் மடித்து கொடுக்கப்பட்டது. வல்லயத்தை தரையில் ஊன்றிக்கொண்டு அதன்பிடியில் நின்று ஆடினார் தேவர். எழுந்த மனிதரின் கையில் திருநீற்றைத் திணித்து.
“....யார ஏமாத்தப்பாக்க...நீ......ம்..........ம்.............” பலமாக அதட்டினார். ஆண்டாங்குளத்து கோனாருக்கு அழுகையே வந்துவிட்டது.
“கொடையோட கோயம்புத்தூருல மகா வீட்டுக்கு போயிட்டோம் சாமீ........ என்ன குத்தம் இருந்தாலும் நீதான்யா மன்னிக்கணும்....”
“..இது ஒனக்கு கடைசி எச்சரிக்க......இனி வருஷம் தப்பாம எம்பொருள எங்கிட்ட சேத்துரனும்.....சொல்லு.....சேப்பியா.........”
“ஒரு வருஷமும் தவறல சாமி..... இந்த வருஷந்தான் தப்பிப்போச்சு..... ஒத்தப்பன அய்யாதான் பிள்ளேல் குத்தத்த மன்னிக்கணும்.......”
“....ம்..ஏய்...புடி...திருநாற......இனி ஒனக்கு ஒரு கொறையும் வராது....நான் ஓங்கூடயே இருப்பேன்...என்ன காரியம் செஞ்சாலும் என்ன நெனச்சுகிட்டு ஆரமி..... ஒரு கொறையும் வராது......கலங்காத.....இப்போ ஊத்து தண்ணிய....”
அவருக்கு அருள் இறங்கியது மாதிரி தெரிந்தது. இருந்தாலும் வல்லயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தார். நடந்ததத்தனையும் பார்த்துக்கொண்டு கல்லுளிமங்கன் மாதிரி நின்ற கிடாய் மீது பூசாரி பேருக்கு தண்ணீர் தெளித்தார். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது மாதிரி, வலதும் இடதுமாக மூன்றுமுறை தனது திருகிய கொம்பு தரைதட்டுமளவுக்கு ஆட்டியது செம்மறிக்கிடா.... வெட்டப்பட்டது. தலை துண்டானதில் பீய்ச்சிய குருதி சாமி பீடத்தை தொட்டு வடிந்தது. சாய்வாக இருக்கும் சாமியின் கல்கொண்டை கொஞ்சம் நிமிர்ந்தது மாதிரி தெரிந்தது அமுதனுக்கு. நடந்த அதிசயத்தில் பிரமித்துப்போன அமுதனுக்கு அடுத்தது புரியவில்லை. நின்ற எல்லோரும் பாண்டியனின் காலில் விழுந்து திருநீறு வாங்கினார்கள். சாமியை கும்பிட்டுவிட்டு இவனும் திருநீறு வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான்.
சாமியாட்டம் பொய்..... அது ஒரு வகையான நரம்புத்தளர்ச்சி.... தண்ணி ஊட்தாவிட்டால் கிடாய் தலையை ஆட்டாது. தலையாட்டுவது ஒரு ஏமாற்று வேலை. அன்பே உருவான ஆண்டவனுக்கு பலி தேவையில்லை. இறைவனின் பெயரைச் சொல்லி நாம் இறைச்சி உண்கிறோம் என்ற அமுதனின் கொள்கைகளெல்லாம் நடந்த நிகழ்ச்சிகளால் காற்றி பறந்து கொண்டிருந்தன. ஆண்டவனை, அவன் தன்மையை இன்னும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான் அவன். ‘’’’ உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியவன்.....” அருண்மொழித்தேவர் எத்தனை பெரிய ஞானி.........

என்றும் அன்புடன்....
இரா.பார்த்தசாரதி.....
(போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....)

Tuesday 19 June 2012

இதிகாச சிறுகதை...எங்கள் ஊர் பெயர் ஏன்?.


அருள்தரும் முப்பந்தல் இசக்கியம்மன் துணை.

நிகழ்வுக்காலம்.

இது துவாபர யுகம். இவ்வுகத்துக்கு முந்தையதான அந்த மூன்றாவது யுகத்தின் முடிவும், இன்றைய கலியுகத்தின் தொடக்கமும் கனியும் காலகட்டம். பாண்டவர்கள் பன்னிரு ஆண்டுகள், அபாயங்கள் நிறைந்த அடவிக்குள்ளும், பின் ஓராண்டு உத்தரகுமாரனின் விராட நாட்டிலும் வாழ்க்கையை முடித்திருந்தார்கள். அதர்மத்தின் மொத்த வடிவமாக அந்த யுகத்தில் பிறந்திருந்த துரியோதனன், பாண்டவர்களுக்கு ஒரு அடி நிலம் கூட கொடுக்க முடியாது என்று தூது வந்த கண்ணபெருமானை துரத்தி, இரண்டு புறமும் படைதிரட்டிக்கொண்டு, மாபாரத பெரும்போர், நிகழ இருக்கும் நேரம். அர்ச்சுனனும் அவனுக்கு சாரதியாக இருக்க இசைந்திருக்கும் கன்னபெருமானும் அடிக்கடி, போர்ச்சூழல்கள் குறித்தும், போரில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் குறித்தும் விவாதித்துக்கொண்டிருக்கும் வேளை.. இங்குதான் நம் சரித்திரம் தொடங்குகிறது...

கதை.


“ கண்ணா... ஒரே மன சஞ்சலமாக இருக்கிறதடா.... என் பெரியப்பா பையன் ஏன் இப்படி செய்கிறான்..சாகும் போது இந்த உலகத்தில் யார் எதை எடுத்துக்கொண்டு போகப்போகிறோம்?. ஒரு ஐந்து வீடுகள் தானே அண்ணன் கேட்டார். அதைக்கூட ஏன் தர மறுக்கிறான்?. வீணாக இந்த போரில் அவன் செத்து மடிய போகிறான் என்று எனக்கு கவலையாக இருக்குதடா..”

மூத்தவன் என்றாலும், அளவுக்கதிகமான வயது வித்தியாசம் இல்லாத காரணத்தாலும், அத்தைமகன் என்பதாலும், அடிக்கடி அத்தான் என்று அழைத்தாலும் பெரும்பாலும் நீ, நான், வாடா, போடா என்று கண்ணனிடம் அவர்கள் பேசிக்கொள்வது வழக்கமாக இருந்தது.

“ ஒனக்கு வேற வேலை இல்லடே.. எப்ப பாத்தாலும் இதே நினைப்பு...அவன் முடிஞ்சா வந்து மோதிப்பாரு ன்றான்..நீ என்னடான்னா...அவன் சாவுவான், இவன் சாவுவான் ன்னு அழுதுகிட்டு இருக்க.....உன்னிய கொல்லதுக்கு ஆள்வேணும்னே அவன் கர்ணன வளக்கான்.. வெளங்கும்.. பேசாம அவன் பக்கமே போயி சேந்துருக்கலாம்... வீரன்னு நெனச்சு உங்க கூட வந்தா..என்னையும் கோழை ஆகிட்டுத்தான் மறு சோலி பாப்பீரு போல இருக்கு....சும்மா மனச போட்டு குழப்பாத...கெட்டவன் சாவனும்கிறது உலக நீதியப்பா...இது நீ என்ன..அவன் என்ன...”

ஒவ்வொரு முறையும் இப்படி தேற்றுவதே கண்ணபெருமானுக்கு வேலையாக இருந்தது...

“ உமக்கு என்ன அத்தான்..ஒட்டு உறவு ஒன்னும் கிடையாது.. எல்லாம் வேஷம் பீரு... எவனுக்கு எப்போ ஊதலாம்னு சங்க கையில எடுத்துட்டு அலையுறதே ஒம்ம வேலை... நாங்க அப்படியா..சின்ன வயசுல ஒண்ணா விளையாண்ட ஆட்கள்.... இப்போ திடீர்ன்னு சண்டைக்கு வந்துட்டு அவன கொல்லுன்னா.. ..”

இப்படி பலவாறாக அவ்வப்போது பிதற்றிக்கொண்டிருப்பதையே தொழிலாக வைத்திருத்தான் அர்ச்சுனன். பல ஆண்டுகள் காட்டிலேயே வாழ்ந்துவிட்டதாலும், ஓராண்டு பேடியாக வாழ்ந்து காலம் தள்ளியதாலும், உறவுகள் மீதான பாசம் அர்ச்சுனனுக்கு அதிகமாகி இருந்தது. இவனை கொஞ்சம் ஊர் சுற்ற கொண்டுபோனால் திருந்துவான் என்று நினைத்தார் கண்ணபெருமான்.

“மாப்ள..எங்கூட வாடே..கொஞ்சம் ஊர சுத்திப்பாத்துட்டு வரலாம்...”
“ சரித்தான்..அண்ணன்கிட்ட சொல்லிட்டு வாறன்...”

“அப்புறம் சொல்லிக்கலாம்வே... என் கூட போயிருக்கான்னு சொன்னா அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாரு... சகாதேவன் கிட்ட சொல்லிட்டு போகலாம் வா....”

சற்று தொலைவில் போருக்கான நாள் குறிக்கும் சாத்திரங்களை படித்துக்கொண்டு இருந்த சகாதேவனிடம் சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள். கண்ணன் தன் திவ்யமான இரதத்தை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்தினான்... இருவரும் புறப்பட்டு தென்திசை நோக்கி வந்தார்கள்.

வருகிற வழியெங்கும் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

“ மாப்ள அங்க பாரு ஒரு கருடன் நம்ம தேருக்கு மேல பறக்குது.....”

அர்ச்சுனன் மேல் நோக்கி பார்த்தான்..அங்கே ஒரு காகம் அவர்கள் தேருக்கு அருகில் பறந்துகொண்டு இருந்தது.

“ஆமா..அத்தான் நீர்தான்  கொஞ்ச நாளா அத கவனிக்கிறதே இல்லையே... அதான் கவலையில சுத்துன மாதிரி தெரியுது..”

அவனது மனம் கொஞ்சமும் தேறவில்லை என்பதும், இன்னும் கவலையிலேயே அவன் ஆழ்ந்திருக்கிறான் என்பதும் கண்ணனுக்கு புரிந்தது.

“யோவ்..அது கருடன் இல்லவே....காக்கா...”

“ஆமா காக்காதான்...”

“அப்போ..நான் கருடன் ன்னு சொன்னப்போ..என்னவோ கத சொன்னீரு...”

“ நான் காக்கா ன்னு சொல்ல..நீர் கருடன் ன்னு சொல்ல... அப்புறம் நான் பாக்கிறப்போ..அதே காக்காவ நீர் கருடனா மாத்த...ஒம்ம சக்தி நமக்கு தெரியாதா....வெளையாடாம வண்டிய ஒழுங்கா ஓட்டும்....”

கேலி செய்வதற்கு கூட வாய்ப்பில்லாமல் அர்ச்சுனன் விவாதத்தை முடித்து வைத்தான்.

சகடத்தின் சக்கரங்கள், செல்வத்தின் நிலையாமையை சொல்வது போல ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. கொஞ்ச நேரமாக தேர்த்தட்டில் சத்தமே இல்லை. அவனாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கண்ணன் விட்டுவிட்டதாகவே தெரிந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை...

சில நேரத்துக்கு பின்னர்.... தேர்த்தட்டில் விசும்பும் ஒலி கேட்டது கண்ணனுக்கு... திரும்பி பார்த்தான். தேர்க்காலில் ஒன்றை பிடித்தபடி, இரதத்தின் அடிப்பாகத்தை பார்த்தபடி, அழுதுகொண்டிருந்தான் அர்ச்சுனன்.. கடிவாளக் கயிற்றை இறுக்கி இழுத்து, வண்டியை நிறுத்தினான் கண்ணன்..

“ இப்போ எதுக்குடே அழுத....”

சாரதியின் இருக்கையை விட்டு இறங்கி அர்ச்சுனனின் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டான் கண்ணன்..

“ எனக்கென்னவோ இந்த சண்டையில நாம செயிப்போம்னு தோணல...”

“ச்ச..ஒன்ன கூட்டிட்டு எவனாவது ஊர்சுத்த போவானா... ஒருவருஷம் தானடே..பேடி வேஷம்..இன்னுமா கலையல... “

“ இல்லத்தான்..எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் துரியோதணன் பக்கம்..நெனச்சு பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு....எப்படி நாம செயிக்க போறோம்...போறாத குறைக்கு நம்ம அண்ணமார் எல்லாம்  அர்ச்சுனன் இருக்கான்..அர்ச்சுனன் இருகான்னே சொல்றாங்க...ஒருவேள தோத்து போயிட்டோம்னு வையி..எல்லாரும் என்னையவே கொற சொல்வாங்க..தேவையா இந்த அவப்பழி எனக்கு.. எங்கேயாவது கெணத்துல விழுந்துசெத்துரலாமான்னு தோணுது கண்ணா...” ******

திருந்த மாட்டான் என்று நினைத்தவனாக, பதிலேதும் சொல்லாமல் அழுது முடிக்கட்டும் என்று விட்டுவிட்டு, மீண்டும் இரத்தத்தை செலுத்தினான் கண்ணன்.

ஒரு கல்தொலைவு தாண்டியிருப்பார்கள்...

“யோவ்..வண்டிய நிறுத்தும்யா... “

நிறுத்தினான் கண்ணன்..ஒரே குதியாக குதித்து தேரை விட்டு கீழிறங்கினான் பார்த்தன்.*********

“..நான் பாட்டுக்கு அழுதுகிட்டே இருக்கேன்.. நீர் பாட்டுக்கு ஒன்னும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்...என்னிய பார்த்தா கிறுக்கனா தெரியுதா ஒமக்கு..பெரிய மனுஷன் ன்னு சொல்லி கூட வந்தா, இப்படி தனியா புலம்ப விட்டுட்டு ஒம்ம பாட்டுக்கு இருக்கிற... இனிமே நான் வரலை...நீர் மட்டும் ஊருக்கு போம்...செயிச்சாலும் சரி..தோத்தாலும் சரி...அண்ணன் கேட்டா அர்ச்சுனன் செத்துட்டான்னு சொல்லும்.”

காண்டீபத்தை தரையில் ஊன்றிக்கொண்டு வெறுப்பாக சொன்னான் அர்ச்சுனன்.

கண்ணனும் இரத்தத்தை விட்டு இறங்கினான். அர்ச்சுனனை அரவணைத்துக்கொண்டு அங்கிருந்தா பாறை திடலில் அமர்ந்தார்கள் இருவரும்... போரில் மாபெரும் வெற்றியை அர்ச்சுனனுக்கு ஈட்டிக்கொடுக்க இருக்கும் காண்டீபமும், தர்மத்தின் வெற்றியை உலகமெல்லாம் முழங்க இருக்கும் பாஞ்சசன்யமும், தங்களது திறமைக்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் தரையில் கிடந்தன. 

“மாப்ள.... சொல்றத கேளும்....”

“போதும் நிறுத்தும்..நீர் சொன்னத கேட்டுத்தான் நாங்க வெளங்காம போனோம்....திரேதா யுகத்துல இப்படித்தான் பிள்ளை கூட சேர்ந்துகிட்டு அப்பனையே கொன்ணீரு... கிருத யுகத்துல தம்பி கூட சேர்ந்துகிட்டு அண்ணனுக்கே வேட்டு வச்சீரு... இப்போ எங்க சொக்காரன் கூடயும் எங்கள சண்டைக்கு இழுத்து விட்டு வேடிக்க பாக்கலாம்னு நெனக்கீரு...ஒமக்கு இதே வேலையா போச்சு..ஏதாவது கேட்டா, பெரிய அறிவாளி மாதிரி பேச வந்துறது....”

அருமையாக வளர்த்த பாட்டனையும், அறிவு சொல்லிக்கொடுத்த ஆசானையும் எதிர்க்க திராணியில்லாத காரணத்தாலும், போரில் தோற்றுவிட்டால் எங்கே எல்லோரும் தன்னையே குறை சொல்லிவிடுவார்களோ என்னும் தேவையில்லாத கழிவிரக்கதாலும் அர்ச்சுனன் பேசுவதை கண்ணன் உணர்ந்துகொண்டான். அவனுக்கு கீதை உபதேசித்து விடலாமா என்று சிந்திந்தான். எத்தனை சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும், பழங்கதைக்கே திரும்பிவரும் அவனுடைய சுபாவத்தை ஏற்கனவே எடைபோட்டிருந்தான் கண்ணன். ஆதலால் கீதை, போருக்கு முன்னர்தான் உபதேசிக்கப்பட வேண்டும் எனவும், உபதேசம் முடிந்தவுடன் போர் தொடக்கம் தான் சரியாக இருக்கும் எனவும் கணித்து வைத்திருந்தான் கண்ணன். ஆதலால் இப்போதைக்கு கீதோபதேசம் தேவையில்லை என்று முடிவுகட்டினான்.

“ மாப்ள... நான் சொல்றத..கேளு....வீணா போட்டு மனச குழப்பாத...”

அர்ச்சுனன் தலையை நிமிர்த்தி பார்த்தான்.

“ தர்மம்தான் உலகில் எப்போதும் வெல்லும்.. அதனால இந்த போர்ல நாமதான் ஜெயிக்க போறோம்..உன்னாலதான் ஜெயிச்சோம்னு எல்லாரும் ஒன்ன கொண்டாடுவாங்க...யுகயுகாந்திரத்துக்கும் வில்லுக்கோர் விஜயன் னு எல்லாரும் ஒன்ன பத்தி பெருமையா பேசுவாங்க....”

கர்ணனின் கனத்த மார்புகளில் கணை தொடுக்க காத்திருக்கும் காண்டீபத்தையும், துரோணரை துரோகத்தால் கொல்ல துடித்துக்கொண்டிருக்கும் பாஞ்சசன்யத்தையும் பார்த்தான் அர்ச்சுனன். அந்த இடத்தில் அவனுக்குள் ஒரு தெளிவு பிறந்தது...

“எத்தான்..நீர் சொல்லுறது மட்டும் நடந்துதுன்னு வையும்...இதே இடத்துல ஒமக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோம்வே...”

“சரி..சரி..வா..ஊருக்கு கிளம்பலாம்..”

கொஞ்சம் அவன் தேறி இருப்பதாகவும், இப்போதே அவனை கிளப்புவதுதான் நல்லது என்றும் கண்ணன் நினைத்தான்.

வழி நெடுகிலும் இருவரும் கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அர்ச்சுனன் தெளிவாகிவிட்டதை கண்ணன் நம்பவில்லை..அவனுக்கு கீதை உபதேசிக்கும் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.

மாபெரும் பாரத போர் மூண்டது... பதினெட்டாம் நாள் போர்முடிவில் சூது கவ்வியிருந்த தர்மத்தின் வாழ்வு தழைத்தது. அம்பு படுக்கையில் கால மாறுபாட்டுக்காக படுத்திருந்த பிதாமகன் இறைவனடியில் தன்னை இணைத்துக்கொண்டார். கண்ணன் தன் வேலை முடிந்து துவாரகை திரும்ப எண்ணினான்.

“ மாப்ள... ஊருக்கு போலாம்னு இருக்கேண்டா...”

“வம்சமே அழிஞ்சு போச்சே அத்தான்..இதான் வீரமா?..”

“அடச்சீ...நீ திருந்தவே மாட்டியா....உத்தரை வயித்துல வளரும் குழந்தை குருவம்சத்தை விருத்தி ஆக்குமப்பா...சும்மா....ஆமா...போர் முடிஞ்ச ஒனக்கு ஒரு கோயில் கட்டுவேன்னு ஒரு பாறையில வச்சு சொன்னிய.. நெனப்பு இருக்கா...”

“யோவ்..நல்ல வேளை சொன்னீரு... நான் அக்கா கிட்ட பேசுறேன்..நீர் அடுத்த வாரம் ஊருக்கு போம்...முதல்ல அந்த இடத்துக்கு  போய் பாத்துட்டு வருவோம்... என்ன சொல்லுதியோ..”

“நான் சொல்லதுக்கு என்னவே இருக்கு...ஒம்ம அக்காகிட்ட பேசவேண்டியது ஒம்ம பொறுப்பு...அவா ஊருக்கு போனும்னு நிக்கா...அங்க ஊரே நம்மள எதிர்பார்த்து காத்திருக்கு...எனக்கும் அந்த இடத்துக்கு போனும்னு ஆசையாத்தான் இருக்கு...அந்த இடமே ஒரு திவ்யபூமி வே...அங்க கால் வச்சாலே கோழைக்கும் வீரம் வந்துரும்..சரி..சரி..நீ..புறப்படு...”

அந்த பூமி குறித்து தான் மனதில் நினைத்ததை கண்ணன் அப்படியே சொன்னதில் அர்ச்சுனன் அரண்டு போனான்.

இருவரும் புறப்பட்டு தென்திசை நோக்கி வந்தார்கள். கண்ணன் ஓரிடத்தில் தேரை நிறுத்தினான்..

“எடம் வந்துட்டு நினைக்கிறேன் வே...”
“இல்ல..இன்னும் போகணும்....”

இருவருக்கும் அந்த இடத்தின் அருகில் வந்துவிட்டோம் என்பது தெரிந்தது. தேரை மெல்ல செலுத்தி, அந்த பாறை எங்காவது தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தார்கள் இருவரும்.

இடத்தை கண்டுபிடிக்க முடியாத கவலையில் இருவரும் இருந்த போது, இருவர் உள்ளத்துக்குள்ளும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வந்தது. அன்று கண்ணனை தேற்றியபின் அர்ச்சுனன் உள்ளத்தில் தோன்றிய அதே உணர்வு... எந்த வீரவிவேகத்தை அந்த மண் தந்ததாக அவர்கள் பேசிக்கொண்டார்களோ...அதே உணர்ச்சி...இடம் வந்துவிட்டதில் இருவருக்கும் அளவிட முடியாத ஆனந்தம். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே...************

கண்ணன் தனது தெய்வீகமான பாஞ்சசன்யத்தை கையில் எடுக்க, அர்ச்சுனன் தந்து திவ்யமான தேவதத்தை வாயில் பொருத்த....முழக்கம்...சங்கில் நுழைந்து சத்தமிட்ட காற்று, வளியின் அதிர்வுகளை கிழித்துக்கொண்டு, மூவுலகும் அதிர முழங்கியது. உலகெங்கும் அந்த முழக்கத்தால் ஆட்டம் கண்டது. தர்மத்தை அனுசரிப்போருக்கு ஆதரவு போலவும், அதர்மவாதிகளுக்கு ஏதோ அசம்பாவிதம் போலவுமான அனுமானத்தை அது உண்டாக்கிற்று.

முடிந்த அளவுக்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து முழங்கினார்கள் இருவரும்.

“மாப்ள..கீழே இறங்கு...இந்த பூமியில் உன் காலடிகளை பதித்து வணங்கு...”

கண்ணன் சொல்லுக்கு மறு சொல் உண்டா?. பார்த்திபன் காண்டீபத்தை தரையில் ஊன்றி காலை அந்த மண்ணில் பதித்தான். அவன் மேனியில் ஒரு நடுக்கம் உண்டாயிற்று. வீரம்..வீரம்..வீரம்..தர்மம்..தர்மம்..தர்மம்...என்ற சொல்லுடன்  அவனுடைய நாடி நரம்புகளில் எல்லாம் ஒரு மின்னூட்டம் பாய்வதை அவன் உணர்ந்தான்.

“ஹஹஹஹஹா...ஹஹஹ்ஹா....ஹாஹஹஹா.......”

நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தார்கள் இருவரும்.

“அத்தான்..என்ன சிரிப்பு.....”

அவனும் சிரித்துவிட்டு தன்னிடம் காரணம் கேட்கிறானே என்று நினைத்தான் கண்ணன்..

“இல்ல மாப்ள...அடுத்த யுகத்தில் இந்த இடத்தில் ஒரு ஊர் தோன்றும். ஒரு குளத்தின் கரையில் மக்கள் வாழ்வார்கள். தர்மத்தின் வெற்றியை உலகுக்கு அறிவிக்க நாம் சங்கநாதம் செய்த காரணத்தால் அந்த குளம் சங்கநாதன்குளம் என்று அழைக்கப்படும். நான் படைத்த நான்கு வருணத்தாரும் இணக்கத்துடன் வாழ்வார்கள். முச்சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் முக்குலத்துப்புலிகள் இந்த ஊரை அரசாட்சி செய்வார்கள். வெற்றி முழக்கத்தில் பிறந்த இந்த ஊரில் பிறப்போருக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியாக முடியும். பயம் என்றால் என்னவென்றே அறியாத வீரர்கள் இங்கே உதிப்பார்கள். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் குழந்தைகள் இங்கே பிறப்பார்கள். முத்தமிழ்நாட்டை முடிசூட்டி ஆளப்போகும் ஆட்கள் இங்கே அவதரிப்பார்கள். இறைதூதர் ஒருவர் இந்த ஊரில் தங்கியிருந்து மறை அருளுவார். நாம் சங்கம் முழங்கிய இவ்வூரில், காலையிலும் மாலையிலும் சங்க முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கும்..” இதழோரங்களில் புன்னகையை தவழவிட்ட படி கண்ணன் இன்னொன்றும் சொன்னான். “..இப்படி நாம் இங்கே வந்துசென்றதை அக்காலத்தில் அறிவிப்பதற்கு என்றே ஒருவன் இங்கே பிறப்பான். அவனுக்கு காலம் என் பெயரையே சூட்டி மகிழும்....”. சந்நதம் வந்தது போல, மனக்கண் முன் தோன்றிய வருங்கால நிகழ்வுகளை அர்ச்சுனனுக்கு சொன்னான் பார்த்தசாரதி.

இருவரும் கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, ஒரு கல்தொலைவில் இருந்த பாறைக்கு வந்தார்கள்.

“கண்ணா.. இந்த இடத்தில் உனக்கொரு ஆலயம் அமைப்பேன். எங்களை ராஜாக்களாக்கி அழகு பார்த்த உனக்கு இராஜகோபாலசாமி என்று பெயர் மொழிவேன். ஐம்பொன்னால் உனக்கொரு சிலை அமைப்பேன். உன்னை வழிபடும் மக்கள் வாழ்வுயர மாபெரும் குளம் ஒன்று இப்பாறையின் கரையிலேயே சமைப்பேன். எனது வழி வழி வம்முசங்கள் மூவுலகுக்கும் இறைவனாக உன்னைக் கொண்டாடும். குதிரையிலும் தேரிலும் உன்னை அமர வைத்து, விழா நடத்தும். நம் இருவரின் பெயரால் இந்த ஊர் விஜயநாராயணம் என்றே அழைக்கப்படும்...”

கருடபகவான் வட்டமிட்டு, காலில் இருந்த ஓலையை இவர்களுக்கு அருகில் கழற்றி விட்டு போனான்.

“உடனே திரும்பி அத்தினாபுரம் வரவும். – அண்ணன்..”


1.அர்ச்சுனனுக்கு போர் குறித்த அச்சம் வந்து அவன் அழுத இடம்..---விஜயஅச்சம்பாடு. எங்கள் ஊரில் இருந்து இரண்டு கல்தொலைவு.

2. வெற்றி சங்கம் முழங்கிய இடம் – சாட்சாத் எங்கள் ஊர்தான்..காலத்தால் மருவி சங்கனாங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

3.அர்ச்சுனன் கண்ணபெருமானுக்கு ஆலயம் அமைத்த இடம் ---விஜய நாராயணம். எங்கள் ஊரில் இருந்து ஒரு கல் தொலைவு. ஐம்பொன் சிலையே மூலவராக இருக்கும் அதிசய ஆலயம். பலகாலம் பாண்டவர்கள் வழிபட்ட சிலை இது. பிரம்மதேவன் அர்ச்சுனனுக்கு அளித்ததாக செவி வழி செய்திகள்.

அன்புடன்.
இரா.பார்த்தசாரதி
(தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்)