Tuesday 16 July 2013

மக்கள் தலைவர் - காமராசர்.

உலகின் அசைவையும் அமைதியையும் தன் திரிசூலத்தால் திருப்பும், முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மலர்தாங்கும் தங்கத்திருவடிகளை சிந்திக்கிறேன்.

மக்கள் தலைவர் – கு.காமராசர்.

குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. – தெய்வத்திருக்குறள்.

பூர்ணா நதியில் குளித்துக்கொண்டு இருந்தான் அந்தச் சிறுவன். கரையில் அவனைப் பெற்ற தாய் ஆர்யா காத்துக்கொண்டு நின்றாள். உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த அவனை, முதலை ஒன்று பற்றி இழுத்தது. மெல்ல ஆற்றுக்குள் மூழ்கினான். கரையில் நின்று ஆர்யா கதறினாள். அவன் சொன்னான் “ சந்நியாசம் என்பது இன்னொரு பிறவி. எனக்கு துறவு நிலை தந்தால், இந்த முதலை என்னை விட்டுவிடும். குருகுலத்தில் எனக்குச் சொன்னார்கள்” என்றான். பிள்ளைப்பாசத்தில் “தந்தேன்” என்றாள். சாமான்ய சங்கரன், ஜெகத்குரு ஆதிசங்கரராக அவதரித்தார். முதலை காலை உமிழ, வெளிவந்த சங்கரனைக் கட்டிப்பிடித்தாள் ஆர்யா. விலக்கிவிட்டு மெல்ல வேறுதிசை நடந்தார் ஜெகத்குரு.

“என்ன கொண்டுவந்திருக்கிறான் இவன்?. அத்தனையும் உமி மூட்டைகள், இந்த தொழிலைத்தான் படித்தானா இத்தனைக் காலமாக?”, மகன் வெளிநாட்டு வியாபாரத்துக்கு சென்று கொண்டுவந்திருந்த பொருட்களை பார்த்துக்கொண்டே, கோபத்தில் ஒரு மூட்டையை எட்டி உதைத்தார் சுவேதாரண்யச்செட்டியார். வாய்பிளந்த மூட்டையில் இருந்து வைரமும், வைடூரியமும் கொட்டியது. விரிந்த கண்களும், மருங்கிய மனமுமாக மகனைத் தேடினார் செட்டியார். “எங்கே மருதவாணன்?, என் ஆசை மகன், ஆத்தா.... உன் பேரனை பார்த்தாயா, அப்பனை விஞ்சி விட்டான் தொழிலில், அத்தனையும் மின்னும் பொற்குவியல், எனக்கு உடனே அவனைக் கட்டித்தழுவ வேண்டும் போலிருக்கிறது ஆத்தா... எங்கே அவன்?”. ஞானக்கலை மெல்ல சொன்னாள், இந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, “அப்பச்சி கேட்டால் நான் போய்விட்டேன் என்று சொல், என்று சொல்லிவிட்டு போய்விட்டான்” என்றாள். ஏற்கனவே அவன் கொண்டு வந்த பொருளில் மிரண்டு போயிருந்த திருவெண்காடர், இன்னொரு அதிசயத்துக்கு ஏங்கும் மனதுடன் அதைத் திறந்தார். உள்ளே ஒரு காதறுந்த ஊசியும், ஓர் ஓலை நறுக்கும் இருந்தது. காதற்ற ஊசியும் வாராதுகாண்  கடைவழிக்கே  என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. இந்த ஒற்றைச்சொல் உண்டாக்கிய மயக்கத்தில், காவேரிப்பூம்பட்டினத்தின் கணக்கற்ற சொத்துக்களை, விட்டுவிட்டு கோவணாண்டியாக வீட்டைவிட்டு புறப்பட்டது ஒரு ஞானப்பிழம்பு. அவர்பெயர்தான் பட்டினத்தார்.


உலகம் போற்றும் இந்த இரண்டு துறவிகளும், துறக்காத ஓர் உறவு உண்டு. அதுதான் தாய் எனும் உறவு. மரணம் நெருங்கும் தருவாயில், சங்கரா.... என்று ஆர்யாம்பாளும், சுவேதாரண்யா... என்று ஞானகலையாச்சியும் ஈனஸ்வரத்தில் முனங்கிய ஒலி, எத்தனையோ யோசனை தூரத்தில் இருந்த இருவருக்கும் கேட்டு, கால் நடக்கவும், மனம் பறக்கவும், காலடிக்கும், புகாருக்குமாக வந்துசேர்ந்தார்கள். துறவிகள் செய்யக்கூடாத ஈமக்கிரியைச் சடங்குகளை அன்னைக்குச்  செய்தார்கள். அப்போது சங்கரர் புலம்பிய மாத்ருகாபஞ்சகம் கல்நெஞ்சையும் கரைக்கும். அன்னையின் சிதையைத் தீக்குத் தந்துவிட்டு, அதன் முன்னின்று பட்டினத்தார் அழுது தீர்த்த அருட்புலம்பல் உள்ளத்தை உருக்கும். இவ்விருவரும் தமிழ்த்துறவிகள் (ஆதிசங்கரரின் தாய்மொழி தமிழே). உலகின்பம் அத்தனையையும் துறந்த துறவிகள்கூட, துறக்கமுடியாமல் நின்ற உறவு தாயின் உறவு.


அந்த தாயையே துறந்துநின்ற ஒரு தவமுனிவனைத் தெரியுமா உங்களுக்கு?. அவனுக்கு பெயர்தான் காமராசர். தள்ளாதவயதில் விருதுப்பட்டி வீட்டின் ஒரு மூலையில் துவண்டு போய்க்கிடக்கிறாள் சிவகாமி அம்மாள். நாட்டை ஆளும் அரசனைப் பெற்ற தாய். “ஏம்பா மெட்ராசுல நீ இருக்க வீட்டுல, ஒரு ஓரத்தில ஒதுங்கிக் கிடந்துக்குவனே....என்னிய கூட்டிட்டுப் போயேன் காமராசு”. பொக்கை வாய்திறந்து புலம்பிய தாய்க்கு பதிலேதும் சொல்லாமல், வாகனத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்கிறான். முருகதனுஷ்கோடி சொல்கிறார் “ பெரியவரே....அம்மா பாவந்தான....”. யார் என்ன சொல்லத் தொடங்கினாலும், முதலடியிலேயே அவன் சொல்ல வந்த பொருளைப் புரிந்துகொள்ளும் அறிவு அந்த மாமேதைக்கு இருந்தது. விழிகளில் நீர் அரும்ப அந்த அரசியல்துறவி சொன்னான் “ எனக்கு மட்டும் என்ன பாசம் இல்லாமலா இருக்குன்னேன்... என்ன பண்ணட்டும்....அத்தைய பாக்க வாறேன், சித்திய பாக்க வாறேன்னு வரிசையா வந்து நிப்பான்னேன்.....அதுல எவனாவது ஒருத்தன் நம்ம வூட்டு போன எடுத்து நான் முதலமைச்சர் வூட்டுல இருந்து பேசுறேன் னு சொன்ன அன்னைக்கி, என் அத்தனை நேர்மையும் அடவுக்கு போயிருமா இல்லையான்னேன்.... இங்கேயே  இருக்கட்டும்..அப்பப்ப வந்து பாப்போம்னேன்....”.   இன்று எத்தனை வீடுகள்?. அங்கே எத்தனை உறவுகள்?. யார் யார் அதிகாரம் செய்கிறார்கள்?. சொந்தத் தாயைத் துறந்த தனயன் எங்கே?, இன்று உடன்பிறந்த, உடன்பிறவாத என்று அதிகாரம் பகிரும் இவர்கள் எங்கே?.அந்த மாமனிதன் அமர்ந்து ஆட்சி செய்த அதே நாற்காலிதான் இது.  ஆனால் காலம் எவ்வளவு மாறிவிட்டது?.


கல்லிடைக்குறிச்சி இரயில்வே கேட். காமராஜரின் கார் நிற்கிறது. “ஐயா, கதவ தொறக்கச் சொல்லுவோமா?”, “ஏன் என்னிய இரயில்ல அடிபட்டு சாவச்சொல்லுதியோ.....”. அமைதியாக வண்டிக்குள் அமர்ந்திருக்கிறார் முதல்வர். “ஹேய்....சூ....சு..........” மாடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் கடந்து போகிறான். “ எய்யா இங்க வா?, நீ படிக்கப்போலையா?”. கேட்பவர் மாநிலத்தின் முதல்வர் என்று சிறுவனுக்குத் தெரியுமா என்ன?. அப்போதென்ன வண்ணத்தொலைக்காட்சி வழங்கப்பட்டதா?, இல்லை அதில்தான் முதல்வருக்கு ஆயிரம் பாராட்டுவிழா நிகழ்ச்சிகள் காட்டப்பட்டதா?. “ படிக்கப்போனா பிச்சைஎடுத்துதான் சாப்பிடனும்”. ஆய்ந்து அறியும் திறன் அரைநொடியில் வேலை செய்தது. “ஏல..  அப்ப சாப்பாடு போட்டா படிக்க போவியா...”....    “..போடச்சொல்லும் போறேன்..” அடுத்து அவன் மாட்டை விரட்டிய சத்தம் இரயில் கடந்துபோனதில் இவருக்குக் கேட்கவில்லை. வண்டியை நிறுத்தச்சொல்லி, அந்த கேட்கீப்பரை அழைத்து, “ அதிகாரத்துல உள்ள ஆளுக வந்தாங்கன்னு ஒங்க வேலைக்கு பங்கம் செய்யக்கூடாது, இப்படித்தான் இருக்கனும்னேன்...என்னா..”. ஒருவேளை தான் ஒன்றும் சொல்லவில்லை என்றால், தான் செய்தது சரிதான் என்று அவனுக்கு புரியாமல் போய்விடும், ஒருவேளை திறந்துவிட்டிருக்கவேண்டுமோ என்று அவன் நினைக்கக்கூடும் என்ற எண்ணத்தால், அவரை அழைத்துப் பாராட்டினார் பெருந்தலைவர். அந்த சிறுவன் உண்டாக்கிய பொறி, பறந்து பற்றியது. ஆம், இன்று நீங்களும் நானும் மேய்ப்பைக் கைவிட்டுவிட்டு மேலாண்மைக்கு வந்திருப்பதற்கு அவர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் தான் காரணம். பிற்காலத்தில் இராமச்சந்திரன் ஆட்சிகாலத்தில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. நாடெங்கும் பள்ளிகளும், அங்கே மதியம் ஒருவேளை உணவும். காய்ந்து கிடந்த வயிறுகள், சாப்பாட்டுக்காகவேனும் பள்ளிக்குச் சென்றது. உணவுடன் அறிவும் ஊட்டப்பட்டது.


இளைஞனாக காங்கிரஸ் கட்சிக்குள் அடியெடுத்து வைத்திருந்த காலகட்டம். விருதுபட்டி முனிசிபல் தேர்தல். காமாரஜரை வேட்பாளராக்க நினைக்கிறது கட்சி. அப்போதெல்லாம் சொத்திருக்கும் நிழக்கிழார்கள், வரிகட்டுபவர்கள் மட்டுமே வாக்களிக்கவும், தேர்தலில் நிற்கவும் முடியும். தென்மாவட்டத்தில் “காங்கிரசைக்காத்தான்”  என்று அதன் தேசியத்தலைவர்களால் புகழப்பட்ட தேவரவர்கள் சிவகாமியம்மாவிடம் வந்து, வீட்டை காமராசர் பேருக்கு எழுதி வைக்கச் சொன்னார்கள். தேவர் நா அசைந்தால் தென்பாண்டி நாடே அசைந்த காலம் அது.  “ஐயா எனக்கொரு பொட்டப்பிள்ள இருக்கு பாத்துகிடுங்க....இவன் கட்சி கூட்டமுன்னு அலையுதான், அத கரையேத்த என் கையிலன்னு ஒன்னு இருக்காண்டமா” என்று மறுத்தார் சிவகாமியம்மாள். தீர சிந்தித்த தேவர்திருமகன், ஒரு வெள்ளாட்டை தன் கைப்பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, அதை காமராஜரின் பெயரில், அவரது சொத்தாகப் பதிந்து, அதற்கு வரிகட்டி, அவரை வேட்பாளராக்கி வெற்றிபெற வைத்தார். இன்னொருமுறை தேர்தல் காலத்தில் அப்போதிருந்த ஆதிக்க நீதிக்கட்சிக்காரர்கள் காமராசரைக் கடத்தியே விட்டார்கள். அது அங்கே பரப்புரை செய்யவந்த தேவருக்குச் சொல்லப்பட்டது. “ நான் இந்த மேடையில் இருந்து கீழே இறங்கும்போது என்னெதிரே காமராஜ் நிற்கவேண்டும், இல்லையென்றால் அதற்குப்பிறகு இங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பல்ல” என்று மேடையில் முழங்கிவிட்டு, அலையும் தன் வேட்டியின் அழகிய தானையை கையில் பிடித்துக்கொண்டு, முருகனே இறங்கிவந்ததது போல, ஒளிரும் முகத்துடன் தேவர் இறங்கியபோது எதிரே காமராசர் நின்றார். காமராஜரை அரசியலுக்குக் கொண்டுவந்தவர் பசும்பொன் தேவரவர்கள். ஆனால்  பிற்காலத்தில் தென்தமிழகத்தில் நடைபெற்ற கலவர வழக்குகளில் தேவர் திருமகனை அநியாயமாகக் காமராஜ் அரசு சிக்கவைத்தது, என்னளவில் இன்றுவரை ஒரு புரியமுடியாத புதிராகத்தான் இருக்கிறது.


திருநெல்வேலி டவுணில், ஒரு திரையரங்கத் திறப்புவிழா. திரையரங்கத்தின் உரிமையாளர், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர். திறந்து வைக்க இருப்பவர் மாநில முதலமைச்சர். ஆனால் முதல்நாள் வரைக்கும் மாவட்ட ஆட்சியாளர் திரையரங்க உரிமை வழங்கவில்லை. இன்னும் மின்கம்பி இணைப்பு வேலைகள் முழுமையாக முடியவில்லை என்பதற்குத்தான் அதற்கு காரணம். மறுநாள் காமராசர் வந்து நின்றார். சட்டமன்றஉறுப்பினர் சங்கரப்பண்ணையார் மெல்ல காதருகில் வந்து சொன்னார், “ஐயா கலெக்டரு இன்னும் பெர்மிஷன் தரல” “ ஏம்னேன்....” “ இன்னும் ஓயரிங் வேலையெல்லாம் முழுசா முடியலை”. “ அப்ப சரியாத்தான பன்னிருக்கான். நான் தொறந்து வைக்கிறேன்....நீங்க பெர்மிஷன் வாங்கிட்டு படத்த ஓட்டுங்கன்னேன்....”. என்று சொல்லிவிட்டு அரங்கத்தைத் திறந்து வைத்த, அந்த மாமனிதன், அதற்குப்பிறகு செய்த செயல்தான் இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். நேரே தனது வண்டியை மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கு விடச்சொன்னார். முதல்வர் தனது வீட்டுக்குச் செல்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட அந்த ஆட்சியர் ஒரு கணம் அரண்டுபோய்விட்டார். வீட்டுக்குள் சென்று அமர்ந்து காப்பி குடித்தார் காமராசர். அந்த ஆட்சியரின் அம்மாவை அழைத்துச் சொன்னார், “ இப்படி ஒரு புள்ளைய பெத்ததுக்கு நீங்க பெரும படனும் தாயி... முதலமைச்சர் வாராருன்னு தெரிஞ்சும், சரியில்லைன்னு லைசன்சு கொடுக்கல பாருங்க....இப்படி ஒரு நேர்மையான புள்ளைய பெத்த ஒங்கள ஒரு எட்டு பார்த்துட்டு போனும்னுதான் வந்தேன்”. என்றார். இப்படித்தான் தமிழகம்  முழுக்க தன்னைப்போலவே நேர்மையை வளர்த்தான் அந்த தலைவன். இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி நான் சொல்லவில்லை. நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். மணிமுத்தாறு அணைக்கட்டில், திட்டம், செலவு, மீதம் என்று கணக்கு எழுதி வைத்திருக்கிறது பொதுப்பணித்துறை. இன்றைக்கு எந்த பணியாவது திட்டத்துக்குள் அடங்குகிறதா இந்த நாட்டில்?. ஏன்?. இலஞ்சம், ஊழலைஎல்லாம் சேர்த்துத் திட்டமிடும் நாள் வந்தால், அது நடக்கலாம்.


ஒருமுறை ஒரு ஆட்சியர் “ நான் நெனச்சா முதலமைச்சர் ஆவேன், ஒங்க காமராஜ் நெனச்சா கலெக்டர் ஆக முடியுமா” ன்னு கட்சிக்காரர்களிடம் கேட்க, வேட்டு வைக்கும் எண்ணத்துடன் அதை அவர்கள் பெரியவரிடம் பகர, அந்த மனிதன் சொன்னான், “ சரியாத்தான சொல்லிருக்கான்னேன்.. அவன் நெனச்சா தேர்தல் ல நின்னு அமைச்ச்சராயிருவான், நான் என்ன செஞ்சாலும் இனிமே படிச்சு கலெக்டராக முடியுமாடா....”என்று கலகல வென்று சிரித்திருக்கிறார் காமராசர்.


பத்தாண்டுகாலம் தமிழக சட்டமன்ற உறுப்பினர், பதினோரு ஆண்டுகாலம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், ஆறு ஆண்டுகாலம் தமிழகக் காங்கிரஸ் தலைவர், ஒன்பதாண்டுகாலம் தமிழகம் இதுவரைக் கண்டிராத பொற்கால ஆட்சியின் முதல்வர், ஐந்தாண்டுகாலம் எந்தத் தமிழனும் இந்தநாள் வரைக்கும் எட்டிப்பிடிக்க முடியாத, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர், சாகும்போது, பத்து வேட்டி, பத்துசட்டை, அறுபத்திமூன்று ரூபாய் கையில். அந்த மனிதன் ஏழையாகவேப் பிறந்தான், ஏழைகளுக்காக வாழ்ந்தான், தானும் ஓர் ஏழையாகவே வாழ்ந்தான், நிறைவில் ஏழையாகவே செத்துப்போனான். இன்றும் நிறைய அரசியல்வாதிகள் ஏழையாகப் பிறந்தவர்கள்தான். அவ்வளவுதான் சொலல் ஏலும்.


இந்த நாட்டின் இரண்டு பிரதமர்களை தீர்மானித்த உண்மையான கிங் மேக்கர் காமராசர் மட்டுமே. நேரு இறந்தபோது, சாஸ்திரி, சாஸ்திரி மறைந்தபோது இந்திரா. இந்தியாவின் பிரதமரை தென்தமிழகத்து ஏழை ஒருவன் தீர்மாணித்தான் என்பது எத்தனை ஆச்சரியம். சாஸ்திரி மறைந்தபோது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீங்கள்தான் அடுத்த பிரதமரா என்ற வினாவுக்கு இந்திரா சொன்னார் “ my future is in the hands of Kamaraj, go and ask him. அதே இந்திராதான் பிரதமரானபின்னர் மாநிலத்தலைமைகளை ஒழிக்க நினைத்தபோது, நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவரெட்டி, காமராஜ் போன்றவர்களுடன் முரண்பட்டு. அதே போன்றதொரு பத்திரிகையாளர் பேட்டியில் “Who is Kamaraj?”  என்று திருவாய்மொழிந்தார். அது காலத்தின் கொடுமை.


தமிழக அரசின் உயரதிகாரியாக இருந்த ராமமூர்த்தியின் மீது ஐயங்கள் வந்து, அது நிரூபிக்கப்பட்டபொழுது அவரை பணியிலிருந்து நீக்கினார் காமராஜ். நேருவிடமிருந்து அழைப்பு வந்தது. நேரு சொன்னார், “சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் பெரிய அதிகாரிகளை நீக்கினால் நிர்வாகத்தில் குறைபாடு வந்துவிடும். ராமமூர்த்தி சிறந்த நிர்வாகி, அவரை நீக்குவது அரசுக்கு நல்லதல்ல, அதனால் முடிவை மாற்றுங்கள்” என்றார். “ராமமூர்த்தி விஷயத்தில் நான் எடுத்ததுதான் முடிவு, வேறேதாவது இருந்தால் பேசுங்கள், இல்லையென்றால் போனை வைத்துவிடுங்கள்” எனச்சொல்லி வைத்துவிட்டார் காமராஜ். ஒரு வார்டு கௌன்சில் வேட்பாளர் தீர்வுக்குக் கூட, தில்லியை நோக்கும் இன்றைய காலகட்டத்தை நினைத்தால், அந்த மனிதனின் மீது எவ்வளவு பிடிப்பு வருகிறது பாருங்கள். எப்பேர்ப்பட்ட தலைவன்?.


இன்றைக்கும் விருதுநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு பழைய மின்விசிறி இருக்கிறது. அதன் கதை கேட்டால் நாம் வியந்துபோவோம். காமராஜரின் அம்மாவைப் பார்க்கவந்த ஆர்.வெங்கடராமன், வீட்டுக்குள் வெக்கை அடிப்பதைக் கவனித்து அதை வாங்கிக்கொடுத்திருக்கிறார். பின்னர் காமராஜ் வந்தபோது, “என்னது இது?, எப்படி வந்துச்சி இங்க?” என்று கேட்டபோது, “ ஒரே வெக்கையா இருக்கா .. அதான் வாங்கிக்கொடுத்துட்டு போனாங்க பசங்க” ன்னு சொல்லிவிட்டு அந்த சிலுசிலு காற்றின் குளுமையில் பொக்கை வாய்திறந்து சிரித்திருக்கிறாள் பாட்டி. “ இந்த ஊருல எல்லா கெழவிக்கும் வாங்கிக்கொடுத்துருக்கானான்னேன்...... நாளைக்கு இதை வச்சுக்கிட்டு எங்கிட்ட காரியம் சாதிக்க வருவான்னேன்......நமக்கு இதெல்லாம் வேண்டாம்னேன்...”. அப்படித்தான் அது காங்கிரஸ் அலுவகலத்துக்கு வந்திருக்கிறது. இதேபோல தன் வீட்டுக்கு மட்டும் அதிகாரிகள் தனியாகத் தண்ணீர்க் குழாய் அமைத்திருப்பதையும், எடுத்துவிடச்சொன்ன உத்தமர் காமராஜர். அவர் பெயரையெல்லாம் உச்சரிக்கும் தகுதிகூட, இன்றைய அரசியல்வாதிகள் ஒருபயலுக்கும் இல்லை.


அரசதிகாரத்தின் தான் வகித்த எந்த பதவியும் தன் சுயவாழ்வை கிஞ்சித்தும் பாதிக்காதவண்ணம் வாழ்ந்த தலைவர் காமராசர். இத்தனை அதிகாரங்கள் மிக்க பதவிகளை அவர் அலங்கரித்தபோதும், அவர் அப்படியேதான் இருந்தார். இன்றைக்கு ஒரு கட்சியின் கிளைச்செயலாளர், ஒரு வார்டு கவுன்சிலர் பதவி போதும், வசதியாக வாழ்வதற்கு. சென்னையில் குத்தகைக்கு அவர் வாழ்ந்தவீடு ஏலத்துக்கு வந்தபோது, கவியரசர் கண்ணதாசன், தேவர்பிலிம்ஸ் சின்னப்பத்தேவர் எல்லாம் சேர்ந்து, அதை மீட்டுக் கொடுத்து, தெரிந்தால் மறுப்பார் என்று மறைத்தேவிட்டார்கள். தொடக்ககாலத்தில் நாத்திகம் பேசி, திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பின்னால் திரிந்த கண்ணதாசன், பின்னர் காங்கிரசுக்கு வரநினைத்தபோதுதான், பட்டணத்தில் பூதம் படத்தில், அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி  என்று எழுதினார். மறுநாளே அவரை அழைத்துக் கட்சியில் இணைத்துக்கொண்டார் காமராசர்.


தமிழகக்காங்கிரஸ் என்றால் காந்திக்கு, இராஜாஜி யைத்தான் தெரியும். 1946 ல் சென்னை மாகாண பிரீமியர் தேர்தலில் காந்தியின் கண்கள் இராஜாஜி யை நோக்கியும் கூட, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரகாசம் பிரீமியராக வந்ததற்குக் காரணம் காமராசர். பிரகாசம் ஆந்திரகேசரி என்று அழைக்கப்படும் மாபெரும் விடுதலைவீரர். தில்லி ஆந்திரபவனின் முன்னர் இவருக்கு முழு உருவ வெண்கலச்சிலை ஒன்று இருக்கிறது. காந்தி மறைமுகமாக இதுகுறித்து தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அப்போதே குழுக்கள் தமிழகக் காங்கிரசில் தொடங்கிவிட்டதுபோலும்.
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும், அனைத்து உயிர்களுக்கும் நல்லதையே நினைத்த காமராசர் எனும் மாமனிதர், இந்திராகாந்தியின் செயல்களால் மனம் புண்பட்டு தனியே கட்சி தொடங்கி நடத்தினார். 1968 –ல் தமிழகம் முழுமைக்கும் எழுந்த திராவிட எழுச்சியில் அந்த மனிதனும் வீழ்ந்துபோனார். அது தமிழனின் நண்டுக்குணம். நேதாஜி குறித்த உண்மைகளைச் சொல்கிறார் என்பதற்காக, நேருவின் கட்டளைப்படி  தேவரை சிறையில் தள்ளுவதற்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தென்மாவட்டத்தில் பலத்த இழப்பு ஏற்பட்டது. உலகம் போற்றவேண்டிய ஓர் உத்தமத்தலைவர், ஓர் இளையவேட்பாளரிடம் தன் சொந்த ஊரில் தோற்றுப்போனார். வென்றவர்கள் காமராசரை சந்தித்து ஆசி பெற்றார்கள். இராஜாஜி தனிக்கட்சி தொடங்கியபோது, அவருடன் கூட்டணி வைத்தது காமராஜரின் ஸ்தாபனக்காங்கிரஸ். இவ்விரண்டும் இந்திராவுக்கு எதிராக  மத்தியில் இன்றைய பாரதீயஜனதாவின் மூலமாக அப்போது இருந்த ஜனசங்கத்துடன் கூட்டணி அமைத்தன. இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை அந்த மாமனிதர்கள் அப்போதே புரிந்துகொண்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.


காமராசர் இல்லையென்றால் இத்தனை கல்வி வளர்ச்சி இல்லை. போதிய நிதி ஆதாரம் இல்லையென்று இராஜாஜி ஆறாயிரம் கல்விச்சாலைகளை மூடினார். ஆனால் அதற்குப் பிறகு வந்த காமராசர் மேலும் பதினாலாயிரம் பள்ளிகளைத் திறந்தார்.


காமராசர் இல்லையென்றால் இத்தனை நீராதாரங்கள் இல்லை. மணிமுத்தாறு தொடங்கி மேட்டூர், வைகை என்று பல அணைக்கட்டுகள் அவரது காலத்தில் கட்டப்பட்டன. கே.டி.கோசல்ராம் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர்.


காமராசர் இல்லையென்றால் இத்தனை தொழில்வளர்ச்சி இல்லை. இன்று ஊடகங்களில் போராட்டம் காரணமாகப் பேசப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், அந்த மனிதன் கொண்டுவந்தத் திட்டம். நிதிப்பற்றாக்குறையின் காரணமாக நேருவிடம் கையேந்தி அதைத் தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் பல தொழிற்பேட்டைகள் அந்த மனிதன் கொண்டுவந்தது.


ஆனால் அதே காமராசை அண்டங்காக்கை என்றும், அமெரிக்க வங்கியில் பணம் வைத்திருக்கிறார் என்றும் திட்டி, தோற்கடித்த பெருமக்கள் நாம். முழங்கால் வரை நீளும் பெருங்கைகளை கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினான் அந்த மனிதன். தனது ஆட்சிக்காலத்தில் பரமேஸ்வரன் எனும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவரை அறநிலையத்துறை அமைச்சராக்கி அழகுபார்த்தார். உள்ளே வரக்கூடாதென்றும் வந்தால் தீட்டென்றும் கோசமிட்ட ஆதிக்கசக்திகள், அவருக்கு மாலையணிவித்து, பரிவட்டம் கட்டி, பூரணகும்ப மரியாதையுடன் அம்பாள் முன்னால் அர்த்தமண்டபத்தில் அவரை நிற்கவைத்த காட்சியைக் கண்டு, மகிழ்ந்தார் காமராசர். அந்தணன் என்போன் அறவோன் என வள்ளுவன் வகுத்த இலக்கணத்துக்கு, வாழ்ந்துகாட்டிய கக்கன் ஐயா அவர்களும்  காமராசர் கண்டெடுத்த மாமனிதர்.


ஒருக்காலமும் தன்னை ஒரு அதிகாரம் மிக்கவனாகக் கருதாமல், மக்கள்தொண்டனாகவே நிறைவுக்காலம் வரை வாழ்ந்தவர் காமராசர் எனும் மாமேதை. எனக்கென்னவோ நான் தொடக்கத்தில் எழுதியிருக்கும் குறள் அவருக்கு மிகப்பொருத்தமாகத் தோன்றியது. தமிழில் நெட்டெழுத்துக்கள் சில காரணங்களுக்காக அளபெடுக்கும். இந்தக் குறளில் வினைக்காக அது அளபெடுத்து நிற்கிறது. வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்து செயல்பட்ட காமராசரின் கட்டுரைக்கு இந்தக் குறள் சாலப்பொருத்தம்.
கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டு என்று எப்போதும் நான் நினைத்ததே கிடையாது. காரணமுண்டு. நான் பார்த்த பல மெத்தப் படித்த மேதாவிகளைவிட, எங்கள் கிராமத்தில் மழைக்குக் கூட பள்ளியின் தாழ்வாரத்தில் ஒதுங்காத தாத்தாக்களிடம் நான் கற்றதுதான் அதிகம். அதற்கு இன்னொரு உதாரணம்தான் படிக்காத மாமேதை கர்மவீரர் காமராசர். தான் முதல்வராக இருந்தகாலத்தில் எங்கள் ஊருக்கு வருகைதந்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமை.


சாதித்த பல தலைவர்கள் எல்லாம், தமிழகத்தில் சாதிவட்டத்துக்குள் அடைக்கப்படும் பண்பாடு தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கேக் கூட ஒரு காலத்தில் காமராசர் மீது நன்மதிப்பு இருந்தது கிடையாது. ஒரு கருத்தின் மீதான நமது பார்வையை, அதுகுறித்து அறியும் முன்னரே நாம் வைத்திருக்கிறோம் என்பதும், அதை அறிய முயலாமல், அதே நிலைப்பாட்டில் நின்றுகொள்கிறோம் என்பதும், நம் அறிவுக்கு நாம் போடும் வேலி. பலநிலைகளில் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும். மெல்ல அதன் மீதான தேடலை நாம் செலுத்தும்போது, அது மாறுகிறது. தெளிவுதான் அந்த மாற்றத்தைத் தீர்மாணிக்கிறது. கால ஓட்டத்தில் எந்த கருத்தின் மீதான பார்வையும் மாறுதலுக்கு உட்பட்டதுதான். ஆனால் அந்த மாறுதல் தேடலின் மூலமாகவும், அதனால் விளையும் தெளிவின் காரணமாகவும் வரவேண்டும். பின்னரும் தேடிக்கொண்டே இருக்கவேண்டும். தேடுதலில் நம் அடிப்படையை அசைக்கும் மாறுபாடு கிடைக்கும் வரைக்கும், நம் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கவேண்டும். வள்ளுவன் தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறுதலும் நன்மைக்கல்ல என்கிறான். இன உணர்வு இல்லாதவனுக்கு எந்த உணர்வுதான் இருந்துவிடமுடியும். வள்ளுவன் இல்லறவாதிகளின் கடமையில் ஒக்கல் என்று எதைச் சொல்கிறான்?. செய்திருந்தால் தப்பில்லை. அது அடுத்தவர்களைப் பாதிக்காதவரை. அதன் எல்லைக்குள் நான் நுழைய விரும்பவும் இல்லை.

வளர்க காமராசரின் புகழ்..........................

              என்றும் அன்புடன்..................................................................................