Sunday 2 August 2015

பேருந்து - சிறுகதை.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கித்தாயின் தாள்வாழ்க.
சிறுகதை
  அவனுக்கு எப்போதடா ஆறாம் வகுப்பு போவோம் என்று இருந்தது. தேர்ச்சியின் மீது ஆசையோ இல்லை கல்வி மீதுகொண்ட காதலோ அதற்கு காரணமில்லை. அவனது ஊரில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருக்கிறது. அதற்குமேல் படிக்க பக்கத்து ஊருக்கு போகவேண்டும். ஒரு காலத்தில் அந்த ஒன்னரை மைல்கல் தொலைவும் நடைதான். இப்போது பேருந்து வந்திருக்கிறது. குண்டும் குழியுமாக இருக்கும் கல்சாலையில் ஏதொ கப்பல் போவதுபோல வந்து போகும் அந்த பன்னிரெண்டாம் எண் பேருந்து. ஊரை விட்டு பேருந்து கடந்த பிறகு, கீழத்தெருவில் இருக்கும் ஒரே மாடிவீடான மாடசாமிதாத்தா வீட்டின் மாடியில் ஏறி நின்று பார்ப்பான். அவர்கள் வீடு என்னமோ கட்டைகுத்து மட்டப்பா வீடுதான். ஆனால் கல்வீடு என்றுதான் சொல்வார்கள். அவர்கள் இதற்கு முன்னர் வாழ்ந்த ஊரில், அவர்கள் தாத்தாமார் கல்லாலே வீடுகட்டி வாழ்ந்தார்களாம். அதனால் அப்படிப் பட்டப்பெயர் அவர்களுக்கு.

அந்த மாடியின் மீது நின்றுகொண்டு சாலையில் ஊர்ந்து செல்லும் பேருந்தைப் பார்த்துக்கொண்டே இருப்பான். கட்டம் கட்டமாக சிவப்பு ஓடுகள் பதிக்கப்பட்டு இருக்கும் மாடித்தரையில். ஆடு மாடு கோழி பிரச்சினை இருக்காது என்பதால் கீழத்தெரு இங்கே வந்து நெல் காயப்போடும். தாத்தாவுக்கு ஊருக்கு கிழக்கே எந்திரநீரேற்றி கொண்ட கிணற்றுடன் பெரிய தோட்டம் இருக்கிறது. அதனால் அவ்வப்போது ஆமணக்கு, கொப்பறைத் தேங்காய் கூட காய்ந்துகொண்டிருக்கும். எந்திரம் வருவதற்கு முன்னர் கமலைநீர் இறைக்க பயன்பட்ட கூனை ஓர் ஓரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அவ்வப்போது அதில் கோழி அடைப்பதும் உண்டு. உதிரிப்பூக்கள் படத்தில் நடித்ததற்காக தாத்தாவின் தம்பி வாங்கிய மரத்தாலான விருது உடைந்து போய் கிடக்கும். இத்தனையையும் தாண்டி மெதுவாக மேல்பக்க முனைக்கு வந்துவிட்டால், சாலையில் பேருந்து செல்வது தெரியும். காப்பிக்கடை தாத்தாவின் தோட்டம் தாண்டுகையில் மரத்தடியில் கொஞ்ச தூரத்துக்கு மறையும் பேருந்தை மீண்டும் சற்று நேரத்துக்கு பார்க்கலாம். அப்புறம் தெரியாது. மாடியில் இருந்து இறங்கும் போது, படிக்கட்டின் கைப்பிடியில் அமர்ந்துகொண்டு சறுக்கலாம். கடைசியில் இருக்கும் கொண்டையில் வந்து குண்டி இடிக்கும். அங்கிருந்து துள்ளி இறங்கிவிடலாம். கீழத்தெரு பையன்களின் கால்சட்டை சீக்கிரம் கிழிவதற்கு காரணம் இந்த சறுக்குத்தான்.

காப்பிக்கடை தாத்தா இவனுக்கு சொந்தம். ஒரு காலத்தில் காப்பிக்கடை வைத்திருந்தாராம். இந்த ஊரில் நிறைய பேருக்கு இப்படி அடைமொழி இருக்கிறது. இங்கே சொந்தப்  பெயர்கொண்டு அழைக்கப்படுபவர் குறைவுதான். கல்வீடு, பெரியவீடு, உண்டியல்கடை, கார்க்காரபோத்தி வீடு, ஒன்றும் இல்லை என்றால் முதல் எழுத்துதான் பெயர். ஆனாகோனா, சீனாமூனா  என்று வைத்துவிடுவார்கள். சிலருக்கு ஆங்கில எழுத்தும் கூட. என்டிஎஸ், ஏகேஎஸ்  இந்த மாதிரி. அம்பாள், கெளரி, இந்த இரண்டும் தான் அந்த ஊரில் காப்பி. இப்போது நரசூசு டிலைட் என்றொரு காப்பி எல்லோரும் குடிக்கிறார்கள். காப்பியை தனியே தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அதிலே சீனி போட்டு, அப்புறம் கொடிஅடுப்பிலே காயும் பாலை கலந்து காப்பி தயாரிக்கும் பழக்கம் அங்கே எல்லாருக்கும். யாருக்காவது கடுங்காப்பி வேண்டும் என்றால் பாலைக் கலக்கும் முன்னர் வாங்கிக் குடிக்கலாம். சமையல் முறைமை கூட ஊர் முழுக்க பொதுதான். ஒரு வீட்டு சாம்பாருக்கும் அடுத்த வீட்டு சாம்பாருக்கும் அதிக வேறுபாடு இருக்காது. அரைக்கும்போது மசாலா கூட இரவல் வாங்கி குழம்பு வைக்கும் வழக்கம் உண்டு என்றால் பாருங்களேன். ஆனால் காப்பிக்கடை தாத்தா வீட்டில் மட்டும் காப்பி சுவையாக இருக்கும். கடை வைத்திருந்தபோது பயன்படுத்தும் வடிகட்டியை இன்னும் வீட்டில் வைத்திருந்தார்கள். ஒருநாள் அம்மாவுடன் சென்றிருந்த போது ஆச்சி, அதை அம்மாவிடம் காட்டினார்கள்.

பேருந்தில் நீளமாக, அம்மன்கோயிலில் நெடும்போக்காக இருப்பது போல, இங்கே கிடைப்போக்காக  சிவப்பு வண்ணமும் அலுமினிய வண்ணமுமாக  நிறம் பூசப்பட்டு இருக்கும். பின்னும் முன்னும் 12.திசையன்விளை என்று எண்ணுடன் பெயர்ப்பலகை இருக்கும். திரும்பும்போது நாங்குநேரி ஆகிவிடும். இந்த பெயர்ப்பலகை அடிக்கடி காணாமலும் போகும். ஊருக்கு அருகே வரும்போது பின்பக்கம் இருக்கும் பலகையை எடுத்து வெளியே போட்டுவிட்டால், பேருந்து சென்ற பிறகு போய் எடுத்துக்கொள்ளலாம். படி இருக்கும் வீட்டுக்குள் சைக்கிள் ஏற்ற, சன்னலில் வெயில் அடிக்கும்போது மறைக்க, சைக்கிள் பஞ்சர் ஓட்டும்போது டியூப் மடக்கி தேய்க்க, அதன்பிறகு கீழே போட்டு உட்கார, இப்படி பல பயன்கள் அதற்கு உண்டு. அடுப்படியில் போட்டால், குடம் மூடுவது முதல், சூடான மண்சட்டி இறக்கி வைப்பது வரை சொல்லவொண்ணா பயன்கள்.

 வெள்ளிக்கிழமை திசையன்விளை யில் சந்தை. மூணரை மணி பேருந்தில் செல்வதும், எட்டரை மணி பேருந்தில் வருவதுமாய் இவனது ஊர்க்காரர்களால் நிரம்பி தளும்பும் பேருந்து. அம்மாவும் போவார்கள். ஏறும்வழி, இறங்கும் வழி எல்லாம் எழுதப்பட்டு இருப்பதை அங்கே யாரும் மதிப்பது இல்லை, முன்வழி பெண்களுக்கு, பின்வழி ஆண்களுக்கு, அதுதான் சட்டம். கூடையும் கையுமாகக் காத்திருப்பார்கள் பேருந்துக்கு. திரும்பி வரும்போது பேருந்து வந்து திரும்பும் முக்கில், சிறுவர்கள் வந்து சேர்வார்கள். இவனும் நிற்பான். அவரவர் அம்மாக்கள் இறங்கும்போது அந்த பையை கொஞ்சம் கைகொடுத்து வாங்குவதில் ஒரு சுகம். ஏதொ விமானத்தில் இருந்து இறங்கும் மனிதர்களை வரவேற்பது போல இருக்கும் இவனுக்கு.

ஒரேயொருமுறை பேருந்தில் பயணித்த அனுபவம் இவனுக்கும் உண்டு. சிறுவர்களுடன் சண்டை போட்டு காலில் பெரிய காயம். ஏடிஜே அமுதன் ஆஸ்பத்திரி க்கு அம்மாதான் அழைத்துப் போனார்கள். மடியிலேயே உட்காரவைத்துக்கொண்டார்கள். முன்பகுதியில் அமர்ந்து இருந்ததால், சாலை முழுக்க நன்றாகத் தெரிந்தது. இவன் இருந்த பக்கத்தில் இருந்து பார்த்தால் பேருந்து சாலைக்கு வெளியேயும் இருப்பது மாதிரி இருந்தது. பேருந்தின் முன்கண்ணாடிகளில் ஒன்றுக்கு உள்ளேயே முழுச்சாலையும் அடங்கிவிட்டது. நீண்டு நெடிந்து கிடந்த சாலையின் வளைவுகள் பேருந்துக்கு அருகில் வரும்போது மெல்ல நேராகி கீழே ஒளிந்துகொண்டிருந்தது. வளைவு அருகும்போது ஓட்டுநர்தான் வண்டியைத் திருப்புகிறாரா, இல்லை சாலையே வளைந்து வண்டிக்குள் வந்துவிடுகிறதா என்று ஐயம் இவனுக்கு. அருகில் உள்ள மரங்கள் பின்னால் செல்வதும், தொலைவில் தெரியும் மரங்கள் மீண்டும் முன்னால் வருவதும் போல வட்டம்  அடித்துக்கொண்டிருந்தது.. அவ்வப்போது கிடங்குகளில் இறங்குவதும், உறுமிக்கொண்டு ஏறுவதுமாக சென்றுகொண்டு இருந்தது. பீப் என்ற ஊதலின் ஒலிக்கு  நிற்பதும், பீப் பீப் என்றால் புறப்படுவதுமாக இரண்டு மூன்று நிறுத்தங்கள் கடந்தன. அவனது ஊரில் பேருந்து பின்னால்  திரும்பும்போது பிப்பிப்பீப் என்று சற்று நீளமாக ஊதுவதை கவனித்து இருக்கிறான். சன்னலுக்கு மேல் இருக்கும் கண்ணாடியில் எதிர்ப் பக்க காட்சிகள், ஓடிக்கொண்டிருந்தது தொலைகாட்சி பார்ப்பது மாதிரி இருந்தது அவனுக்கு. அம்மா ஒருமுறை அவனே கீழே இறக்கி பேருந்துக்குள் விட்டபொழுது, மரப்பலகை அவனை இழுத்துக்கொண்டு போகவில்லை என்பதை உணர்ந்தான். அப்படியானால் எதுதான் போகிறது என்ற ஐயம் அவனுக்கு இன்று வரைக்கும் இருக்கிறது.

படிப்பில்தான் அவன் சுட்டி, விளையாட்டில் கிடையாது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனை இரண்டாம் வகுப்புக்குத்தான் மதிக்கலாம். இதில் அதிகம் வாய்பேசுகிறான் என்று கை, தலைசுற்றி காதுதொடும் தகுதியை எல்லாம் தள்ளிவைத்து பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். இரண்டாம் வகுப்பில் இன்னொரு வருடம் இருக்கட்டும் என்ற அப்பாவின் கோரிக்கை, சம்மனசு டீச்சரிடம் எடுபடவில்லை. கூட படிக்கும் பையன்கள் எல்லாம் வளர்ந்து நெடிதாக இருக்கையில் இவன் மட்டும் கொஞ்சம் சவலை. என்ன பிரச்சினை என்றாலும் அடிவாங்கிக் கொண்டுதான் வருவான். அதுதான் முடியாதே என்று பிரச்சினை பண்ணாமலும் இருக்கமாட்டான். ஏதொ அடுத்தநாள் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது உதவுவான் என்பதற்காகவே இவனது நியாயங்களை பொறுப்பார்கள் சகமாணவர்கள். அதெல்லாம் சொல்லிக்கொடுப்பான்.

ஒருநாள் பம்பரம் விளையாட்டில் சேர்க்க சொல்லி அடம்பிடித்தான். இவன் வயது பையன்கள் சேர்க்கவில்லை. ஒருசிலர் வகுப்பு உதவிகள் கருதி, சேர்க்க நினைத்தாலும் சில அடாவடிகள் அவனுக்கு ஆடத்தெரியாது, நமது ஆட்டத்தையும் கெடுப்பான் என்று சொல்லி ஒதுக்கினார்கள். சின்னப்பையன்களுடன் போய் விளையாடுமாறு கேலி பேசி சிரித்தார்கள். தனக்கும் ஆடத்தெரியும் என்று பைக்குள் இருந்து பம்பரத்தை எடுத்துக் காண்பித்தான். அவர்கள் பம்பரம் வீசி, தள்ளிநின்று கொண்டு கொக்கி போல கயிறு வீசி கோசு எடுத்து கையிலும் சுழல விட்டார்கள். இவன் சுழலும் பம்பரத்தை மூன்று சுற்றுகள் சுற்றி கோசு எடுத்தும் கைக்குள் நிற்காமல் பம்பரம் விலகிப்போனது. ஆடத் தகுதி இழந்தவனாக அறிவிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டான். போகட்டும் என்று வீட்டுக்குப் போயிருக்கலாம். சிலநாள் அப்படிப் போவதும் உண்டு. என்ன விளையாட்டு என்றாலும் இவனுக்கு வேடிக்கையாளன் தான் பதவி. எப்பவாவது கபடி போன்ற ஆட்டங்களில் மதிப்பெண் குறிக்கும் பணி கிடைக்கும். மற்றபடி கோலிக்காய், குச்சிகம்பு வில் சிலசமயம் சேர்ப்பார்கள். பேயம்பந்து பிள்ளையார்பந்து களுக்கு இவனே போவது இல்லை. எறிபட்டால் முதுகு அதிகம் வலிக்கும் இவனுக்கு. அப்படியே சுருண்டு உட்கார்ந்துவிடுவான். இவன் வயது பையன்கள் எல்லாம் ஊரில், ஆட்டுமூளையை ஆம்லெட் மாதிரி உருக்கச்சட்டியில் வரட்டி, அப்படியே அல்வா மாதிரி வாய்க்குள் ஊற்றுகையில், இவன் துண்டு மீன் கூட திங்க மாட்டான். சாளை மீன் கொஞ்சம் சாப்பிடுவான்.

அந்த பம்பரவிளையாட்டில் ஒருவன் உள்ளேயே இருந்த பம்பரத்தை, காலை வைத்து வெளியே தள்ளியதை, யாரும் கவனிக்கவில்லை, இவனைத்தவிர. சும்மா இருந்திருக்கலாம். சொல்லிவிட்டான். சண்டையில் விளையாட்டே ஓய்ந்துபோனது. பம்பரத்தை வெளியே தள்ளியவன் எல்லாரும் போனபிறகு, இவனிடம் வந்து பம்பரம் கொடு என்று கேட்டு வாங்கி, பேருந்து நிலைய இருக்கையில் வைத்து, அவனது பம்பரம் கொண்டு குத்தோகுத்து என்று குத்திவிட்டான். தெக்கூர் ஆசாரி பட்டரையில் ஆணி வைக்கப்பட்டது அவனுடைய  பம்பரம். கூர்மையாக இருந்தது. அகலிகை மோகம் கொண்ட இந்திரன் போல மேலெல்லாம் குழி சுமந்து காயப்பட்டு போன பம்பரத்தை எடுத்துக்கொண்டு அவனை அடிக்கப்போனான். கைகலப்பாகி, அவன் கையிலிருந்த பம்பரம் இவன் தொடையில்  கிழித்துவிட்டது. மெல்லிய வலி எடுத்தபோது காலைப்பார்த்து அதிர்ந்து போனான். கீறிய பனைமரம் போல, வெள்ளை பனஞ்சோறு மாதிரி தெரிந்தது. காலைப்பிடித்துக்கொண்டு கதறி அழுது தெருவில் உருண்டான். அம்மா வந்து தூக்கிப்போனார்கள். விளையாட போனதற்கு நொந்துகொண்டார்கள். தான் எதுவும் தவறாக செய்யவில்லை என்று அழுகையின் ஊடாக நியாயம் பேசிக்கொண்டு இருந்தான் அவன். அப்போதுதான் வாய்த்தது அந்த பேருந்து பயணம். இன்றைக்கும் அந்தத் தடம் இருக்கிறது அவன் காலில், செத்த பூரான் படுத்திருப்பது போல இருக்கும்.

அவனது ஊர்ச்சாலை ஒரு தொடர்ச்சாலை இல்லை. அந்த ஊரைத்தாண்டி அந்த பேருந்து வேறு எங்கும் போகவேண்டியது இல்லை. அதனால் அந்த ஊருக்குள் வந்து திரும்பும். அப்போதெல்லாம் புதுப்புது பேருந்துகள் பெருநகரங்களை இணைக்க மட்டுமே அனுப்பப்படும். கிராமங்களுக்கு பழைய பேருந்துகள்தான். ஆங்கிலத்தின் ற்றி வடிவ முக்கில், நேராக சென்று, பிறகு ற்றியின்  கால் வழியாக பின்னோக்கி திரும்பி, மீண்டும் வந்த வழியே செல்லவேண்டும். ஓட்டுனர் வண்டியின் பற்சக்கரங்களை இயக்கும்போது, பயங்கர சத்தத்துடன் வண்டி நிலைக்கு வரும். இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை இப்படி நடப்பது உண்டு. மாலைவேளை என்றால், பணிமனை பேருந்து மறுநாள் வரும். ஆக, இரவு முழுக்க பேருந்து சிறுவர்களுக்குத்தான் சொந்தம். ஓட்டுநரோ, நடத்துனரோ ஒரு ஆள், இராமமூர்த்திமாமா வீட்டு திண்ணையில் படுத்து தூங்குவார். அந்த தாத்தாவும் ஒரு காலத்தில் ஓட்டுநராக இருந்திருக்கிறார். சிலசமயம் வண்டி திருப்பத்தெரியாமல் ஓட்டுனர்கள் முழிக்கும்போது எழுந்து வந்து கருத்து சொல்வார். சொக்கலால் பீடி குடிப்பார் தாத்தா. நடராசதாத்தா கடையில் இவன் தான் வாங்கிக்கொடுப்பான். வேறு யாரிடம் சொன்னாலும் போக மாட்டார்கள். எப்போதும் நம்மிடமே சொல்கிறார்களே என்று இவனுக்கு எரிச்சலாக இருந்தாலும், எதிர்த்து பேசவோ, மறுக்கவோ தெரியாது. அப்படிப் பழக்கமில்லை. இதேபோலத்தான் கீழத்தெரு செல்லையா தாத்தாவும். அவர்களுக்கு செய்யதுபீடி. வயதாகி கண் மங்கும் வேளையிலும் இருவருக்கும் இவன் தெருவில் நடப்பது மட்டும் எப்படியோ தெரிந்துவிடும். நடராசதாத்தாவுக்கு இரண்டு பெறும் மச்சினன் முறை. நல்லா குடிக்க சொல்லு, ரொம்ப காலத்துக்கு வாழலாம் என்பார். சொக்கலால் பீடி இணையாக இருக்கும். சின்னத் தாள் சுற்றி ஒட்டியிருப்பார்கள். செய்யது பீடி தனித்தனியாக இருக்கும். கட்டுப்பீடி எல்லாம் அப்போது வாங்கி குடிப்பார் இல்லை. நாலணாக்கு நாலு மூணு இப்படி கிடைக்கும்.

 ஐசு பால் ரெடி, தொட்டு புடிச்சி தளங்களில் பேருந்தும் இடம் பெறும். எல்லோரும் விளையாடப்போனால் பேருந்தின் முன்விளக்குகளில் ஒன்றுதான் தாச்சி. அப்போது ஊரிலேயே ஒருசில வீட்டில்தான் மின்சாரம். இவனது குச்சி வீட்டைப்பற்றி சொல்லவா வேண்டும். ஐந்து உறுப்பினர்கள் அளவாக படுத்து உறங்கலாம், அவ்வளவுதான் இடம். அதிலே கூட இரண்டு முறை புரண்டால், மண்சுவர் இடிக்கும். ஆனால் பேருந்துக்குள் இவர்கள் விளையாடும் வரை விளக்கு எரிய அனுமதி உண்டு. விளையாட்டு நொறுங்கும். பேருந்தின் ஓட்டுனர் இருக்கை, நடத்துனர் இருக்கை என்று விருப்பப்படும் இடமெல்லாம் உட்கார்ந்து விளையாடலாம். கட்டுக்கோப்பான கிராமத்துக்குள் இருக்கிறோம் என்பதால், பேருந்துக்கு காவல் இருப்பவர் ஒன்றும் சொல்வதில்லை. பேருந்தின் ஒவ்வொரு பாகமும் இவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். முன்பக்கமும், பின்பக்கமும் இருக்கும் பிரிக்கப்பட்ட  பெருங்கண்ணாடிகள், மரப்பலகைத்தரை, அதன் குறுக்குவெட்டுக்கள், அதை இணைக்கும் அலுமினியப் பட்டை, பஞ்சு பொதிந்த இருக்கை, மேலிருந்து கீழிறங்கும் அந்த வளைவு சாளரமூடி, சாளரங்களை இணைக்கும் நீளக்கம்பிகள், என்று எக்கச்சக்கம், அனைத்தும் விந்தையாக இருக்கும். வண்டி ஓடும்போது அந்த மரப்பலகைதான் ஓடும் என்று அவன் நினைத்திருக்கிறான். ஆனால் அது ஓடவில்லையே அன்று. அப்படியானால் எதுதான் ஓடுகிறது என்று பார்த்துவிடவேண்டும் என்று ஆசை அவனுக்கு. ஊருக்குள் அம்மன் கோவில் கொடைவிழா என்றால் இந்த பேருந்துக்கும் பின்னரும் சுவரொட்டி ஒட்டப்படும். கொடை முடிந்தபிறகு சிறுவர்கள் கொடை நடக்கும். ஒடங்காட்டுக்குள் பெரிய கூண்டை செதுக்கி, மின்கம்பங்கள் தோறும் சிரட்டை கட்டப்பட்டு, புட்டானை புடித்து வந்து கிடாய் வெட்டி, இப்படி. அப்போது பள்ளிக்கூட குறிப்புத்தாளில் கையெழுத்தாக வடிவமைக்கப்படும் ஒரு சில சுவரொட்டிகளில் ஒன்று பேருந்துக்கும் உண்டு.

அவனது பெருங்கனவு நனவாகும் நாள் அருகி இருந்தது. ஆம், ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டான். தனியே பேருந்தில் அனுப்புவதில் அம்மாவுக்கு உடன்பாடு இல்லை. எப்படி ஏறி, இறங்கப்போகிறான், கூட படிக்கும் பையன்கள் எல்லாம் இடித்து நசுக்கி விடுவார்களே, அழவல்லவா செய்வான் என்று கவலை அவர்களுக்கு. அப்பாவிடம் தினமும் மிதிவண்டியில் கொண்டுபோய் விட்டுவிட்டு கூட்டிவரமுடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை அப்பா அதற்கு உடன்படவில்லை. இவனது அக்காவும் அதே பேருந்தில்தான் தினமும் பள்ளிக்கு சென்றுவருகிறாள். இரண்டு வகுப்பு இவனை விட அதிகம். அக்காவுடன் முன்னாலே ஏறிக்கொள்ளவேண்டும், அக்கா பக்கத்திலேயே நின்றுகொள்ள வேண்டும்  என்று அம்மா சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இவன் அதற்கு சம்மதிக்கவில்லை, ஆண் பையன்களுடன் பின்னால்தான் ஏறுவேன் என்று அடம்பிடித்தான்.

அந்தக் கனவு அப்படி கலைந்துபோகும் என்று அவன் நினைக்கவில்லை. அவனது ஊருக்கு தார்ச்சாலை அமைக்க அரசாணை வந்திருக்கிறதாக பேசிக்கொண்டார்கள். சரக்குந்துகள் பெருங்கல்லும் சரளியமாக சீரான இடைவெளியில், சாலையின் இருமருங்கிலும் குவித்துக்கொண்டிருந்தன. பேருந்து வருவதற்கு ஐந்தாறு மாதங்களாவது ஆகும் போல இருந்தது. அதுவரைக்கும் பள்ளி செல்லும் அனைவரும் நடந்துதான் போகவேண்டும். அம்மாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஒருமாதம் கழித்துதான் வேலை தொடங்கும்போல இருந்தது. ஆனால் இப்போதே பேருந்தை நிறுத்திவிட்டார்கள். சாலை அமைக்கும் பணியாளர்கள் ஊருக்கு அருகே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். கையில் பெரும் கோடாரிகள், பிக்காசுகள் மண்வெட்டி, சவல், சாந்துசட்டி, ஒரு எண்ணெய் டின்னை ஒருபக்கம் பாதிக்கு வெட்டி, இன்னொருபக்கம் கண்ணாப்பை மாதிரி ஓட்டை ஓட்டை யாக இருக்குமாறு செய்து ஒரு கருவி, தார் பேரல்கள், காய்ச்சுவதற்கு வாய்பிளந்த கொப்பரை மாதிரி பேரலை வெட்டி வைத்த ஒரு பாத்திரம் எல்லாம் வந்து இறங்கியது. சாலையை இறுக்க ஒரு கல்சக்கரம் கொண்ட வண்டி வந்திருந்தது. ஒரு காலத்தில் மண்சாலை, சரல்சாலை, கற்சாலை அமைக்கும்போது, இறுக்குவதற்கு பெருங்கல் ஒன்று உண்டாம். இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து அதை கயிறு கட்டி இழுப்பார்களாம். ஊருக்கு வடக்கே நாலுமுக்கு அருகே கிடக்கிறது அந்தக்கல். சிறுவர்கள் ஏறி சறுக்கலாம். சந்தனக்கல் மாதிரி பெரிதாக இருக்கும். இவனும் அதில் ஏறி சறுக்கி இருக்கிறான்.

வேலை தொடங்கிவிட்டது. பழைய சாலை கொத்தி போடப்பட்டது. பல் பல்லாக இருக்கும் மண்வெட்டிகள் சாலையை பதம் பார்த்தன. பழைய கற்களை உருட்டி பொறுக்கி கரையில் போட்டார்கள். மிதிவண்டிகள் கூட சாலையில் செல்லமுடியவில்லை. சாலைக்கு இருபுறமும் இருக்கும் சிறுபாதைதான் நடக்கவும், மிதிவண்டி செல்லவும் உதவியது. காவி பாய்ந்து போயிருந்த பழைய கற்களை ஊரில் சிலர் பொறுக்கிக் கொண்டு போனார்கள், வீட்டில் எதற்காவது உதவலாம். பெருங்கற்களும், செம்மண்ணும், சரளுமாக சாலை இறுக்கப்பட்டு தார் ஊற்றும் காலம் நெருங்கி, காப்பிக்கடை தாத்தா தோட்டம் வரைக்கும் சாலை தயாராகி இருந்தது. சாலையின் தரம் சரியில்லை என்று ஊரில் பேச்சு அடிபட, ஒப்பந்தக்காரர் அதை ஒத்துக்கொள்ளாமல் போக, இரவோடு இரவாக போட்டிருந்த சாலையை பிய்த்துப்போட்டது ஊர். அதெல்லாம் பெருங்கொண்ட வீரம். இந்தமாதிரி ஏடாகூட வேலைகள் என்றால் எளிதில் செய்துவிடுவார்கள். பிறகு பேசி சரிசெய்து வேலை தொடங்கியது. சாலையின் சரிவில் தார் காய்ச்சல் தொடங்கியது. தன்னையே உரமாக்கிக் கொள்ளும் தழை கொண்ட மரங்கள் போல, தாரையே ஊற்றி நெருப்பை அதிகமாக்கி தாரைக் காய்ச்சினார்கள். மாலை நேரங்களில் சிறுவர்கள் தார் எடுத்து விளையாட, சட்டை டவுசர் என்று எங்கும் தார்மயம். துவைத்தால் போகாது. மண்ணெண்ணெய் ஊற்றி தேய்க்கவேண்டும். சிலர் பொந்து அடைக்க, பனங்கம்புகளில் பூச என்று டப்பாவில் இருந்து சுரண்டிப் போனார்கள். கையில் தண்ணீர் தொட்டுக்கொண்டு கைவைத்தால் ஒட்டாது. ஈரமான விரலை பொதுக் கென்று தாருக்குள் குத்தி, தடம் பதித்து விளையாண்டு கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். ஒருவழியாக சாலை தயாரானது. ஆறுமாதங்கள் ஆகியிருக்கும்.

அரசின் இலவச பேருந்துப்பயண அடையாள அட்டை, ஆறாம் வகுப்புக்கு மட்டும் இன்னும் வரவில்லை. ஏழாம் எட்டாம் வகுப்புக்கு எல்லாம் கொடுத்துவிட்டார்கள். தமிழகத்தை ஆளும் பெண் முதலமைச்சரின் படம் அதில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இப்போதைக்கு துட்டு கொடுத்துதான் பயணம். அதிகமில்லை எழுபத்தைந்து காசுகள். அம்மா சொன்னதைக் கேட்காமல் பின்வாசல் வழியாக ஏறவும் இறங்கவுமாக பழகிவிட்டான். பையன்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்தார்கள். கீழே விழுந்துவிட்டால் அவர்களுக்கும் கூட இழப்புதானே. ஏறியவுடன் எப்படியாது உள்ளே நெருங்கி சென்று, நடத்துனரை அருகி, பயணச்சீட்டு வாங்கிவிட்டுதான் வேறு வேலை. அதுவரைக்கும் ஒரு பதட்டமாகவே இருக்கும் அவனுக்கு. ஆனால் அது தொடக்க காலத்தில்தான். இப்போதெல்லாம் அப்படியில்லை, படிக்கட்டுக்கு அருகிலேயே பயணம் செய்ய பழகி இருந்தான். படிக்கட்டில் பயணம் செய்யாதீர் என்று எழுதப்பட்டு இருந்ததில் ப அழிக்கப்பட்டு இருந்தது. உண்மையில் அவனது ஊர் மாணவர்களில் கூட பலர், ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்வதையும், நடத்துனர் கேட்டால், வாங்கிவிட்டதாகவோ, இலவசப்பயண அடையாள அட்டை இருப்பதாகவோ எளிதாக பொய் சொல்லிவிடுவார்கள். இறங்கியபிறகு அதைப் பெருமையாகப் பேசுவதையும் பார்த்திருக்கிறான். இவனுக்கும் என்றைக்காவது தானும் பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்யவேண்டும், சக மாணவர்களுடனான தனது கழிவிரக்கத்தை அது கரைக்கும் என்றும், தானும் பெரியவன் என்ற நிலையில் அவர்களுக்கு சமமான நிலைக்கு அது நம்மைக் கொண்டுசெல்லும் என்றும் நினைத்தான்.

மாலையில் மனதுக்குள் எடுத்த முடிவு, விளையாட்டோடு விளையாட்டாய் கரைந்துபோனது. நொண்டி, கிளியாந்தட்டு, கல்லாமண்ணா, ஒருகுடம் தண்ணி எடுத்து, கோட்டைக்குள்ளே நாராங்கி, மழையிலே தீப்பிடிக்குது, நாடுபிடித்தல் என்ற இருபால் விளையாட்டுக்களில் எப்போதும் போல நாள் கழிந்தது. தண்ணீர்க்குள்ளே வாத்து போகுது குவா குவா குவா, எல்லாம் கீழத்தெருவில் இருந்து, மேலத்தெரு ஊர் எல்லைவரை தொட்டுத் திரும்பினார்கள். அம்மாக்கள் எல்லாம் தெருவுக்கு தெரு, ஏதேனும் ஓர் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து பேசுவதும், இளம்பெண்கள் எல்லாம் தாவணியும் குடமுமாக தண்ணீர் எடுக்க போவதும், இடையில் பெரிய பையன்களின் கபடி, இதற்கு ஊடே இவர்களின் விளையாட்டு என்று ஊரே காச் மூச் சத்தம். பின்னிரவுகளில் மெல்ல அடங்கி, தரைவிளையாட்டுக்களுக்கு வந்தார்கள். கோழி பறபற, பூசணிக்காய், காதுக்குள்ள பூச்சொல்லி, நகைகள் பழங்கள், இழுத்து புடிச்சுக்கோ, தந்திபோகுது தபால் போகுது, சாப்பிடும் போது கூட எல்லோரும் ஒரே வீட்டு முத்தத்தில் சாப்பாடு கொண்டுவந்து சாப்பிட்டு, அப்போதும் விளையாட்டுதான் அங்கே. மறுநாள் பேருந்தில் எப்போதும்போல அவசர அவசரமாக பயணச்சீட்டு வாங்கும் போதுதான், தனது திட்டத்தை அவன் மறந்துபோனது நினைவுக்கு வந்தது.

அன்றுமாலை அவனுக்கு விளையாட்டில் அதிக ஆர்வமில்லை. எப்போதும் இவனது சத்தம்தான் ஓங்கிக் கேட்கும், அன்று எப்போதாவதுதான் கேட்டது. நொண்டி விளையாட்டிலே இலகுவாக சறுக்கியபோது, அதுதான் சாக்கு என்று வீட்டுக்கு போய்விட்டான். நண்பர்கள் அழைத்துப்பார்த்து விட்டுவிட்டார்கள். வெகுநேரம் விழித்திருந்தது அவனுக்கு நினைவிருக்கும் அளவுக்கு தூக்கம் வரவில்லை. இது நமக்கு தேவையில்லாத வேலை என்று சிலசமயம் சிந்தனை வந்தாலும், அதற்கான எதிர் சிந்தனையும் சேர்ந்தே விளைந்தது. இப்படியெல்லாம் நம்மால் செய்ய முடியாது என்பதற்காகவே தான் தள்ளிவைக்கப்படுவதாக அந்த சிந்தனை அவனுக்கு சொன்னது. ஒருபக்கம் பதட்டம் இருந்தாலும், தனது கழிவிரக்கத்தின் அழுத்தம் கொடுத்த அதிக தைரியத்தால் அதைக் கடந்தான்.  விடிந்தது, எப்போதும்போல அம்மா இரண்டு எட்டணா, இரண்டு நாலணா பயணச்சீட்டுக்கு என்றும், அறுங்கோண இருபதுகாசு ஒன்று மிட்டாய் வாங்குவதற்கு என்றும் கொடுத்தார்கள். இன்றைக்கு நிறைய மிட்டாய் சாப்பிடலாம் என்று நினைத்தான். பேருந்தில் ஏறியதும், வழக்கமானதுபோல முன்னே செல்லாமல், பின்பக்கமாக நின்றுகொண்டான். நடத்துனர் ஒரு தாத்தா. டிகிடு டிகிடு என்றுதான் சொல்வார். அப்போதுகூட பற்கள் ஆடும் அவருக்கு. எல்லோரையும் போல காக்கி சட்டை இல்லாமல், கப்பற்படை வீரர்கள்மாதிரி வான்நீல, கருநீலச் சீருடை அணிந்திருப்பார். பேருந்து பாதி தொலைவு தாண்டியபிறகு, பயணச்சீட்டு வாங்குவதும், இலவசஅட்டை காண்பிப்பதும் ஒன்றிரண்டு ஏமாற்றுகளும் முடிந்துவிட்ட மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு பயமும் உதறலும் இருந்தாலும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

முக்கால்வாசி தூரம் கடந்தபிறகு, அவனால் இருப்புகொள்ள முடியவில்லை. பேசாமல் சீட்டு வாங்கிவிடலாமா என்றுகூட நினைத்தான். நடத்துனர் முன்பகுதிக்கு முன்னேறிக்கொண்டு இருந்தார். இனி இறங்குவதற்கு முன்னர், அவர் பின்பக்கம் வராமல் போவதற்கான வாய்ப்பு அதிகம். இறங்கியபிறகு, எல்லோர் மத்தியிலும் தான் பயணச்சீட்டு வாங்காமல் ஏமாற்றிவிட்டதை பெருமையாக பேசும் காட்சி கண்ணுக்குள் வந்துபோனது. மத்தியானம் நிறைய மிட்டாய் வாங்கி சாப்பிடலாம். அடிக்கடி இப்படி செய்து தனது மதிப்பை உயர்த்திக்கொள்ளலாம். சிந்தித்துக்கொண்டு இருக்கும்போதே ஊதல் நீளமாக ஒலித்தது. இறங்கும் இடம் வந்தாகிவிட்டது. எப்போதுமே இடித்துக்கொண்டு இறங்குவதில்லை இவன். கடைசியில்தான் இறங்குவான். இன்றைக்கும் அப்படித்தான். பையைக் கையில் எடுத்துக்கொண்டு படிக்கட்டில் கால் வைக்கும் நேரம், நடத்துனர் பின்பக்கம் வருவதற்கு சரியாக இருந்தது. திடீரென பெரும் பதட்டத்துக்குள்ளாகினான். இரண்டாது படிக்கட்டில் காலை வைக்கும்போது, டிகிடு வாங்கியாச்சா என்று நடத்துனர்  கேட்பது காதில் விழுந்தது.  இவனைத்தான் கேட்கிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் பதட்டத்தால் தன்னைத்தான் கேட்கிறார் என்று நினைத்தான். இலவசம் என்றோ, வாங்கியாச்சு என்றோ எப்போதும் ஏமாற்றுபவர்கள் சொல்வது மாதிரி சொல்லலாம் என்று தலையைத் தூக்கினான். அவனை கவனித்த நடத்துனர் வாங்கியாச்சா என்று திரும்பவும் கேட்டார். பயந்துபோய் இல்லை என்றான். அனிச்சை செயலாக ஒரு கை சட்டைப்பைக்குள் கையைவிட்டு ஒரு எட்டணாவும் ஒரு நாலணாவும் எடுத்தது. தாத்தா என்னமோ சொல்லி ஏசிக்கொண்டு இருந்தார். இவனைத்தான். சின்னவயசிலேயே இந்த கள்ளப்புத்தி, இதெல்லாம் எங்க உருப்பட போவுது என்பதுமாதிரி சாபங்கள் கேட்டன காதுகளில். இன்னும் என்னமோ சொல்லப்போனவரை தடுத்தது இன்னொரு குரல். அது மூர்த்திமாமா. நல்லவேளையாக அன்று பேருந்தில் அவரும் வந்திருந்தார். ஊரில் பணக்காரவீட்டு பிள்ளை. அவர்கள் அப்பா அப்பவே இந்திய கைப்பந்துஅணி வீரர், தென்மாவட்டங்கள் முழுக்க அவர்கள் குடும்பம் பரிச்சயம், நடத்துனர் உட்பட. ஊரில் பேருந்து பழுதுபட்டு காவல் இருக்கும்போது, இவர்கள் சித்தப்பா வீட்டில் இருந்து சாப்பாடு, போர்வை தலையணை எல்லாம் வழங்கப்படும். சீட்டை வாங்கிவிட்டு பேருந்தில் இருந்து துள்ளி இறங்கும்போது, சரி விடுங்கோ, அவன் நல்லா படிக்கிற பயல், இன்னைக்கு ஏதொ மறந்திருப்பான், நீங்க ரொம்ப நேரம் முன்னாடியே நின்னிகள்ளா.... அதான் என்று மூர்த்தி மாமா சொல்லிக்கொண்டு இருப்பது காதில் விழுந்தது.

மனது முழுக்க நிறைந்து பெருமையையும் மகிழ்ச்சியுமாய் பையை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு நடந்தான் பள்ளியை நோக்கி. நேற்றிலிருந்து நெஞ்சில் நிறைந்திருந்த பதட்டம் சீட்டு வாங்கிய ஒரு கணத்தில் ஓடிப்போய் விட்டதை உணர்ந்தான். தன்னால் ஏன் முடியவில்லை என்ற தன்னிரக்கம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் இன்பமாகவும் இருந்தது அவனுக்கு. . ஆனால் எப்போதும் ஏமாற்றும் சகநண்பர்கள் இப்படி பதட்டம் அடைந்து அவன் பார்த்ததில்லை. ஆணவமாக பதில் சொல்லி நடத்துனரையே சிலசமயம் அதட்டி பார்த்திருக்கிறான். நல்லவேளை இவன் ஏமாற்ற நினைத்ததை சகநண்பர்கள் யாரும் பார்க்கவில்லை. இல்லையென்றால் முயன்று முடியாமல் போவது இன்னும் பகடி செய்யப்பட்டிருக்கும்.
-------------முற்றும்------------
இராசகோபால்பார்த்தசாரதி.

02.08.2015