Saturday 2 July 2016

நாதசுரக்கலைஞர் நயினார் - நேர்காணல். 12.06.2016



இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கியம்மன் தாள்வாழ்க.

நாதசுரக்கலைஞர் நயினார் - நேர்காணல். 12.06.2016

எங்கள் வீட்டு வாசலின் முன்னால் அமர்ந்து தவில்களையும் நாதசுரத்தையும் சுரம் பிடிப்பதும் இறுக்குவதுமாக இருந்த குழுவினருடன் நயினார் தாத்தாவும் இருந்தார். நான் அவரைப் பார்த்து பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நேற்றிலிருந்தே எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டு இருந்தேன். காலையில் வருவார் என்றார்கள், ஒருவழியாக மாலையில் வந்திருக்கிறார். நான் அப்போதுதான் பார்த்தேன். நேரடியாக நம்மைச் சொன்னால் நினைவில் இருக்கிறதோ இல்லையோ....மெல்ல பேசுவோம் என்று தொடங்கினேன். 

நான்: இந்த தவில் ஒண்ணு என்ன வெல இருக்கும்?.

தாத்தாவே பதில் சொல்லத் தொடங்கினார்.

தாத்தா: பத்து பன்னிரண்டாயிரம் இருக்கும். கட்ட மட்டும். அதுக்கு பிறகு நாம தோல் எல்லாம் வாங்கிக் கட்டனும்.

நான்: அவ்ளோ வெலையா... நான் கொஞ்ச நாளைக்கு முன்னால மங்களூர்ல ஒரு கடைல கேட்டேன்.. ஆறாயிரமோ ஏழாயிரமோ தான சொன்னான். அப்ப எங்கிட்ட அவ்ளோ பணமில்ல. இல்லைன்னா வாங்கியிருப்பேன். ஒரு சுருதிப் பெட்டி வாங்கிட்டு வந்துட்டேன்.

தாத்தா: அது நல்ல கட்டையா இருந்திருக்காது. நான் சொன்னதுகூட கொஞ்சம் குறைவுதான், நல்ல தவிலுன்னா இருபதினாயிரம், கட்ட மட்டும், வாசிச்சா கோயில் ல மணி அடிச்ச மாதிரி இருக்கும். பண்ருட்டி இல்ல பண்ருட்டி அங்கதான் கிடைக்கும்.

நான்: இது என்ன மரம் தாத்தா.

தாத்தா:. இப்ப எல்லா மரத்துலயும் செய்றாணுக. வாகை, வேம்பு இப்படி. பலா ல மட்டும் இருபது வகை மரம் இருக்கு. அதுல கரும்பலா ல செஞ்ச கட்ட சுரம் நல்லா இருக்கும். அதுதான் நல்ல கட்ட. வெல கூடுனது.

இதற்கிடையில் அம்மா வந்துவிட்டார்கள். “ஏல உன்னிய நயினாரு கேட்டாரு....” இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே தாத்தா...”கோவால் மகனா.....” என்றார். “எங்க போவும் புத்தி..தாத்தா ன்னு கூப்பிடும்போதே நெனச்சன்”

தாத்தாவுக்கு கண்கள் இரண்டும் தெரியாது. நான் அறிந்த காலத்திலிருந்து தெரியாது. ஆனால் காதுகளை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்களை அடையாளம் கண்டுகொள்வார். கையைப் பிடித்துக் கொண்டுபோய் வாசிக்கவேண்டிய இடத்தில் விடவேண்டும். 

நான்: நாதசுரம் என்ன கட்ட தாத்தா?.
 
தாத்தா: அதுவும் தவில் மாதிரியே கட்டைதான். 

நான்: சீவாளி

தாத்தா: அது நாணல் தண்டு. நம்ம ஊருல எல்லாம் கிடைக்காது. தஞ்சாவூரு பக்கம்தான் கெடைக்கும். காவேரிக் கரை நாணல். நான் வாசிக்க தொடங்கும்போது ஒண்ணேகால் ரூவா ஒரு சீவாளி. இப்ப நூத்திஎழுபது ரூவா ஆயாச்சு..

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மடியில் இருந்து பிளேடை எடுத்து ஒரு சீவாளி யை, இருபக்கமும் சீவி, சரி செய்து.. பீப்....பீப்... என்று ஊதிப்பார்த்துக்கொண்டார். பின்னர் பிளேடை அப்படியே மடித்து மடிக்குள் வைத்துக்கொண்டார். கண்கள் தெரியாத நிலையிலும் அந்த கலைநுணுக்கத்தை நானும் அம்மாவும் வியந்து பார்த்துக்கொண்டு இருந்தோம்.

தாத்தா: இத தண்ணில நனைக்காண்டாம்னு சொன்னேன் கேக்க மாட்டாணுவோ, ஏல யாரும் குழல எடுத்து ஊதுனேளா...

“ஒரே ஆளு கை வைக்கல உங்க குழலு ல......”: குழுவில் ஒருவர் சொன்னார்.

நான்: எதுக்கு தாத்தா இத்தன சீவாளி இருக்கு....

தாத்தா: ஒவ்வொன்னும் ஒரு சுதி. ஒவ்வொரு பாட்டுக்கு தகுந்த மாதிரி சீவாளி மாத்தி வச்சு ஊதனும்.

நான்: எத்தன வயசுல கண்ணு தெரியாம போச்சு.

தாத்தா: எனக்கு எழுபத்தியாறு வயசாச்சு. முப்பது வருசத்துக்கு முன்னாடி பகல் ல நல்லா தெரியும். வெளிச்சம் மங்குனா தெரியாது. 

நான்: அப்பவே சரிபார்த்து கண்ணாடி கிண்ணாடி போட்டிருந்தா நல்லா தெரிஞ்சிருக்கும் என்ன தாத்தா.

தாத்தா: இல்லப்பு, இது பிறவிக்குருடு சரிபண்ண முடியாது. அது போகட்டும் விடு. இப்ப சுகரு பிரசறு எல்லாம் வந்தாச்சு.
 
நான்: எப்ப இருந்து...

தாத்தா: ஒரு வருஷம் ஆச்சு... நாகல்குளத்துல அய்யா கோயில் லதான் வாசிச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு பாட்டு வாசிச்சு இரண்டாவது பாட்டுக்கு போகும்போது, தலை கிறுகிறு ன்னு வந்துட்டு. அப்படியே விழுந்துருக்கேன்... அப்புறம் நூத்திஎட்டு வந்து கூட்டிட்டு போயி பாத்து சுகரு பிரசறு எல்லாம் இருக்குனு மாத்திர....இப்ப மாத்திர லதான் ஓடிட்டு இருக்கு பாரு...இன்னைக்கு கூட வள்ளியூருல ஆசுபத்திருக்குதான் போயிட்டு வாரேன்.... அதென்ன ஆசுபத்திரி பசுடாண்டு க்கு கீழ் பக்கம்.....

அம்மா: சுகம் ஆசுபத்திரியா....

தாத்தா: அப்படித்தான் னு நெனைக்கேன்..
..
நான்: சங்கரன் ஆசுபத்திரியா.....

தாத்தா: ஏ....கரெக்டு...கரெக்டு...சங்கரன் ஆசுபத்திரியேதான்.... அவரு ஏற்கனவே சாப்பிடுத மருந்து எல்லாம் சரிதான்...இப்படி தூர தொலைக்கு எல்லாம் வராண்டாம், சாத்தான்குளத்துலேயே பாத்துகிடுங்க ன்னு சொல்லிட்டாரு.....

நான்: தாத்தா வுக்கு எந்த ஊரு..

தாத்தா: கருங்கடல்...

நான்: ராமநாதபுரம் கருங்கடலா....

தாத்தா: ச்ச...சாத்தான்குளத்துக்கும் பேக்குளத்துக்கும் எடைல இருக்கு...அதான் பொறந்த ஊரு. சாத்தான்குளத்துல கல்யாணம் பண்ணி அங்கே இருந்தாச்சு அப்புறம்.
ஏனோ தாத்தா மெல்ல சிரித்துக்கொண்டார்.

அருகில் இருந்த ஆளிடம் அம்மா கேட்டார்கள் “ பெருசு போதையா...”

தாத்தா: ச்ச....குடிய விட்டு இருபது வருஷம் ஆச்சு அம்மா...

நான்: நம்ம ஊருல ஒருதடவ குடிச்சிட்டு கோயில் ல வாசிச்சார் னு நம்ம ஊருகாரங்க ஏசிபுட்டாங்க தாத்தாவ தெரியுமாம்மா....

தாத்தா: அது இல்ல...எனக்கே பெரிய அவமானமா போச்சு.... எம் மகன் நீ குடிச்சன்னா நான் செத்திருவேன் ண்னான். அப்பா வுட்டது, இப்ப என்னடான்னா அந்த அறதிலி குடிச்சிட்டு ரோட்டுல கெடக்கு... நான் என்னாத்த சொல்ல....

நான்: அப்படியா.... இப்பத்தான் கடைய மூடுவோம் னு கவர்மெண்டு சொல்லுதே....அதனால கொஞ்ச நாள் கழிச்சு சரக்கு கிடைக்காதுல்லா....

தாத்தா: ஆமா அந்தாள சும்மாதான் இருந்துருவானுவோ... சவத்த பேசி புண்ணியம் இல்ல...
சலிப்பு தட்டியது தாத்தாவின் வார்த்தைகளில்.சற்று நேரம் கழித்து தாத்தாவே பேசினார்.

தாத்தா: உன் அக்கா தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க....

நான்: அக்காவை ஆதித்தநல்லூரில் கட்டிக்கொடுத்து இருக்கிறோம். அத்தான் பிடபிள்யூடி ல வேலை பாக்குறாங்க...அக்காவும் இப்ப டீச்சர் ஆயாச்சு....

தாத்தா: ஆதிச்சநல்லூர் அம்மன் கோயில் ல என் தம்பிதான பூசை வைக்கான். முத்தையா கம்பர் னு பேரு...எனக்கு அய்யா கூட பிறந்த சின்னியா மகன். கொம்பையாத்தேவரு, கணபதித் தேவரு...லசுகரு ராமரு.... 

அம்மா: ராமரைத் தெரியுமா உங்களுக்கு..

தாத்தா: தங்கமான பயல் லா.... அந்த சித்தி என்னியன்னா பாசமா இருப்பா... ஒரே மகன்...செல்லாமா வளர்த்தா...கக்குளத்து பார்வதியம்மன் கோயில் ல அவனுக்கு பால்குடம் எடுக்கும்போது நான்தான் மேளம். கோயில் தெருவுல தெக்க பாத்த வீடு. வீட்டு முன்ன ஒரு கோயில்...

நான்: உங்களுக்குத்தான் கண்ணு தெரியாத...இதெல்லாம் எப்படி யாவம் இருக்கு தாத்தா...
தாத்தா: அப்பெல்லாம் கொஞ்சம் தெரியும். ராத்திரிதான் ஒருமாதிரி இருட்டுமே தவுர பகல் ல நல்லா தெரியும்...

அம்மா: அந்த ராமரு மகனுக்குத்தான் என் மகளை கட்டிக்கொடுத்திருக்கு... ராமரு போயி சேந்தாச்சு.. அவரு வேலைதான் மருமகனுக்கு கிடைச்சிருக்கு.....

தாத்தா: சற்று அதிர்ந்து ...ராமர் செத்துட்டானா....

நான்: ஒரே குடி... ஒருநாள் ராத்திரி குடியோட போயாச்சு.....

தாத்தா: ச்ச நல்ல பையன் லா.....அந்த மாதிரி சேட்டை எல்லாம் கிடையாத அவன் ட்ட...

நான்: எம்மா இங்க பாரு தாத்தா என்ன சொல்லுதோ ன்னு....

தாத்தா: இல்லப்பு.. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் குடிச்சிருப்பான்....எனக்கு தெரியல...நம்ம ஊருல இந்தா எதுத்த வீட்டு ஆறும அண்ணன், அவரு மகன் ராமச்சந்திரன், ஆக்சிடேன்ட் ஆயிடுச்சு.. அப்புறம் முத்துப்பாண்டி சுப்பையா.... 

நான்: அட...இவ்ளோ பேரு உங்களுக்கு எப்படி நினைவு இருக்கு தாத்தா.... நீங்க சொன்ன சுப்பையா இப்பத்தான் காருல போனாரு நம்ம முன்னாடி....

எங்களைக் கடந்து சென்ற பார்ச்சூனர் காரின் சத்தம் தாத்தாவுக்கு கொஞ்சம் கேட்டிருக்கும்.

தாத்தா: முத்துப்பாண்டி முன்னாடி சவுளி யாவாரம் பாத்தாரு.. மூர்த்தி எங்க இருக்காரு இப்ப,..மேக்க வீடு...வட்டிக்கு எல்லாம் கொடுப்பாரு....

நான்: எந்த மூர்த்தி.....

தாத்தா: வீடு மேக்க....
..
நான்: அவங்க இப்ப புதுவீடு கட்டி கிழக்க குடிவந்தாச்சு.  கண்ணுதெரியாம எப்படி தாத்தா இவ்ளோ யாவம் இருக்கு உங்களுக்கு.

தாத்தா: ரூவா நோட்டு எண்ணிருவேன் தெரியுமா உனக்கு.... மொத மொதல்ல தசரா நடந்தப்ப சங்கனான்குளத்துக்கு நான்தான் மேளம். உங்க அப்பாதான் அப்ப இஞ்சார்ச்சு... ஏழாயிரத்து ஐநூறு பேசி கூட்டிட்டு வந்தாக...அஞ்சு நாள் தசரா அப்ப.... நான் பொம்பள வேசம் போடுவேன். எனக்கும் கும்பக்காரிக்கும் ஒரு சின்ன பிரச்சினை வந்துட்டு. அப்பாதான் சரிபண்ணுனாப்ள. அப்பெல்லாம் ஐநூறு ரூவா தாளே கிடையாது. நூர்ரூவா தாளு, அம்பது ரூவா தாளு, இருபது ரூவா தாளு, பத்து ரூவா தாளு, அஞ்சு ரூவா தாளு, ரெண்டு ரூவா தாளு, ஒர்ரூவா தாளு ன்னு ஏழாயிரத்து ஐநூறு ரூவா....எண்ணி வச்சாங்க... நயினாறு ஒருதடவ எண்ணிக்கோ ண்ணாங்க....அய்யா எண்ணுனதுக்கு அப்புறம் நான் எதுக்கு எண்ணனும்னேன், எண்ணுனா எனக்கும் ஒரு திருப்தி ண்ணாங்க..... அப்பா முன்னாடி வச்சு தாள பாத்து பாத்து ஏழாயிரத்து ஐநூறு ரூவாயும் எண்ணிட்டேன்.... சபாசு ன்னு அப்பா கைகொடுத்தாப்ள......

நான்: தாத்தாவுக்கு எத்தன புள்ளைங்க....

தாத்தா: ஒரு ஆணு ஒரு பொண்ணு...கல்யாணம் முடிஞ்சு ஆளுக்கு ரெண்டு புள்ளைங்க... மவன் தான் சொன்ன பேச்சு கேக்காம குடிச்சிட்டு அலையுதான்.... போன வருசம் தவுல் வாசிக்க வந்தான இங்க... 

நான்: நாதசுரம் வாசிப்பாரா....

தாத்தா: ம்க்கும்... அதுக்கெல்லாம் எவ்ளோ ஞானம் வேணும்....அது அந்த மூதிட்ட கெடையாது....

நான்: வருசாவருசம் நீங்கதான வாசிக்க வாறீகோ

தாத்தா: புதுக்குளம் நாராயண ஆசாரி, பருத்திப்பாடு தங்கவேல் ஆசாரி எல்லாம் சேர்ந்து இந்த கோயில தொடங்குனாங்க.. அப்ப இருந்து நான்தான் மேளம். எடைல ரெண்டு வருஷமா உங்க தாத்தா வேற ஆள கூட்டிட்டு வந்துட்டாக....அவன் சரியா வாசிக்கலை...சுத்துப்பட்டி ஊருல அய்யா கோயிலுக்கு வாசிக்க என்னமாதிரி வேற யாரும் கிடையாது. அப்புறம் ஆறுமுகநயினாரு நீதான் வந்து வாசிக்கணும் னு கூட்டிட்டு வந்துட்டாக...

நான்: எவ்ளோ தாத்தா வாங்குவீங்க...

தாத்தா: எவ்ளோ தருவாகளோ...எனக்கு தெரியல..

நான்: உங்க பேரு ஆறுமுக நயினாரா?...

தாத்தா: ஆமா.. எங்க தாத்தா பேரு... அதனால அம்மா நயினார் நயினாரு ன்னு சொல்லி அதே நெலச்சிருச்சு...

பேசிக்கொண்டு இருக்கும்போதே நீலக்கண்ணன் ஒரு வாழை இலை பகுதியைக் கொண்டுவந்து கொடுத்து, இது எத்தன ரூவா சொல்லுங்க தாத்தா ன்னுட்டு சிரிச்சான்.

 கைல வாங்கி பாத்துட்டு எல.. ன்னு சொன்னவுடனே சிரிச்சுக்கிட்டே...நம்ம லெட்சுமி மவந்தான.. கண்ணா....கண்ணா..... அவன் கையைப் பிடித்து இழுக்க....மெல்ல எழுந்து அவனது கையைப் பிடித்துக்கொண்டே ஆலயத்துக்குள் நடந்தார் ஆறுமுகநயினார் தாத்தா.

தாமரையில் உதித்த சோதி......தரணியில் அரசாள வாரும் கண்ணே...... பாட்டுக்குப் பிறகு...க...க......மா....மா.......கக....மா............மா........ஓங்கி ஒலித்தது தாத்தாவின் நாதசுரம். 

ஊருக்கு வந்ததில் தாத்தாவுடன் சற்றுநேரம் பேசிக்கொண்டு இருந்த காலம்....வாழ்வின் பொற்காலம்.

வணக்கம்:
அன்புடன்.
இராசகோபால் பார்த்தசாரதி.
16.06.2016.