Thursday 20 March 2014

சொல்ல நினைத்தேன்- சொல்கிறேன்.

எல்லாமும் வல்ல இசக்கியம்மனின் திருவடிகளைச் சிந்திக்கிறேன்....


சொல்ல நினைத்தேன் - சொல்கிறேன்
இது தகவல்

தமிழகத் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர், தனது நாற்பதாவது ஆண்டுவிழாவைச் சென்னையில் கொண்டாடியது. அந்த விழாவின் நிறைவுப் பகுதியில், இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள், உச்சநட்சத்திரம் இரசினிகாந்து  அவர்களை செவ்வி கண்டார். ஒவ்வொரு கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்ன இரசினி, உனக்கு எந்தப் புத்தகம் புடிக்கும் என்று கேட்ட கேள்விக்கு, சற்றும் சிந்திக்காமல் பொன்னியின்செல்வன் என்று பதில் சொன்னார். அதற்கு பிறகு பொன்னியின்செல்வனைத் தேடிப்படித்த பல இளைஞர்களை நான் அறிவேன். ஓரளவுக்கு வாசிப்பின் மீது எனக்கு ஆர்வம் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் நானும் பொன்னியின்செல்வன் வாசித்தேன். அப்போதெல்லாம் எனக்கு, வந்தியத்தேவன் சிறையில் இருக்கும்போது, குந்தவைதேவி பார்க்க வருவதும், அவர்கள் இருவரும் சற்றுநேரம் இலைமறைகாயாக காதல் மொழி பேசுவதுமாக இருக்கும் பகுதி, நிரம்பப் பிடிக்கும். ஆனால் இப்போது என்னவோ, சோழமண்டலமே தனக்கு ஆதரவாக இருந்தும், உத்தமசோழனுக்குப் பட்டம்கட்டிவிட்டு அவரது காலத்துக்குப் பிறகு, தான் பதவியேற்றுக்கொண்ட அருண்மொழித்தேவனின் தியாகச்செம்மைதான்,   எனக்குப் பிடித்திருக்கிறது.

வாசிக்கத்தொடங்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்துக்குள்ளும் இறங்கி, அழகிய சிம்மாசனம் இட்டு அமைந்துகொள்ளும் இலக்கியம் அது. தொடக்கத்திலிருந்து நிறைவு வரை, முழுக்க முழுக்க அந்த கதையின் பாத்திரங்களாகவே நாம் மாறி மாறி சிந்திக்கும் அளவுக்கு நம்மை அறியாமலேயே மெல்ல அதனுள் நமை இழுத்துக்கொள்ளும் வல்லமை நிறைந்தது கல்கி.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துக்கள். எனக்கு கனவுகள் கூட பொன்னியின்செல்வன் கதைப்பகுதியாகவே வந்த நினைவு இருக்கிறது. கதை நிகழும் காலத்தை, அதன் களத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவார் கல்கி. அதுவும் ஓவியர் மணியம்செல்வத்தின் ஓவியத்தின் ஊடாக அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். வாசிக்க வாசிக்க நிகழ்வுகள் நம் மனக்கண்முன்னே விரியும். சரி...விட்டால் நாம் வந்தியத்தேவனின் புரவிக்குப் பின்னால் போய்க்கொண்டே இருப்போம். சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

இராசராசன் பதவியேற்றுக்கொண்ட பிறகான காலங்கள் படைக்கப்பட்ட இன்னொரு பெருங்கதைதான் உடையார். சற்றேறக்குறைய பொன்னியின்செல்வனின் தொடர்ச்சி என்றே சொல்லலாம். தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்ட வரலாறு, கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரச்சோழனின் வாழ்வு குறித்த நிகழ்வுகளை உள்ளடக்கிய, இந்த கதையை எழுத்துச்சித்தர் என தமிழக இலக்கியவாசகர்களால் போற்றப்படும் பாலகுமாரன் அவர்கள் எழுதி இருக்கிறார். இந்த நூல் இப்போது நமது கைகா நம்நூலகத்தில் (Readers’s Regale) ல் இருக்கிறது. அண்மையில் இந்தப் பெருங்கதையின் ஆறு  பாகங்களும் வாங்கி, நம் வாசிப்புக்காக நூலகத்தின் அலமாரியில் வைக்கப்பட்டிருக்கிறது
. வாசகர்கள் வாசித்து தமிழர்களின் தொன்மை வரலாறை அறிந்துகொள்ளவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 கூடவே 
இன்னொருதகவலையும் உங்களுக்குச் சொல்லாமல், இந்தப் பகுதி முழுமையாகாது. ஏறக்குறைய இரண்டாயிரம் உரூபாய் பணமதிப்பு கொண்ட இந்த நூற்களை, நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, பாசமிகு அண்ணன் பெரியார்குமார் அவர்கள் அன்பளிப்பாக நம்நூலகத்துக்காக வழங்கியிருக்கிறார். கைகா நம் நூலக வாசகர்கள் சார்பில், நம் நெஞ்சார்ந்த நன்றிகள் அவருக்கு.

ஒரு கொசுறு தகவல். தந்தி தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஆறரை மணிக்கு, யாத்ரீகன் என்றொரு நிகழ்ச்சி வருகிறது. தற்போது அது வந்தியத்தேவன் சென்ற பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. பொன்னியின்செல்வன் வாசித்தவர்கள் மிகவும் இரசிக்க இயன்ற நிகழ்ச்சி இது. பாருங்களேன்.

இது நிகழ்ச்சி

சாதாரண மனிதர்கள் குறித்து, அவர்களின் வாழ்வு குறித்து சமூகம் அதிகமாக உரையாடுவதில்லை. எதையாவது செய்து பிரபலமாகிவிடவேண்டும் என்ற சிந்தனை எப்போதும் மனிதர்களின் உள்ளவேட்கையாக இருக்கும் காரணத்தால், எப்போதும் பிரபலமடைந்தவர்கள் குறித்தே அவர்கள் பேசுகிறார்கள். பிரபலமானவர்கள் வாழ்வு குறித்தே அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். பெரும்பாலும் தவறு செய்தே பிரபலமாகியிருக்கும் இன்றைய பிரபலசமூகம் தரும் தவறான செய்திகள், இயல்பாக மனிதர்களின் உள்ளத்தில் இறங்கிவிடுகின்றன. ஓரளவுக்கு சின்னத்திரை நம் நேரப்போக்கில் பெரும்பகுதியை அடித்துக்கொண்டிருக்கும் காலமிது. எப்போது பார்த்தாலும் அரசியல், திரைத்துறை, கல்வித்துறை, வியாபாரத்துரை என்று எந்தத்துறை குறித்த நிகழ்வானாலும் பிரபலங்கள்தான் அங்கே வந்து பேசுகிறார்கள். அவர்கள் தன்னைப்பற்றியும், அடுத்தவர்கள் பற்றியும் கதைத்து அதிலேயே நம் காலத்தையும்  வீணடிக்கிறார்கள். சாமான்யமனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் சொல்வதற்கு இந்த ஊடகங்கள் என்றாவது முயற்சி செய்யுமா என்று சிந்திக்கிறவர்களின் ஏக்கத்தைப் போக்கும் நிகழ்ச்சிதான் சாமான்யர்களுடன் ஒரு நாள். அப்படி சிந்தித்தவர்களில் நானும் ஒருவன்.

மாபெரும் அலங்கார அணிகலன்களுடன், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு வரும் ஆட்களாகவே காணப்படும் சின்னத்திரையில், தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளியமக்களின் வாழ்வியலை நோக்கிப் பயணம் செய்கிறது இந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு நாளும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு, தமிழ்நாட்டில் இவர்கள் குடும்பம் எப்படி வாழ்கிறது எனக் காட்டுவதற்கு, காலை முதல் மாலை வரையிலான அவர்களது வாழ்வின் ஒரு நாளை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நிகழ்ச்சி. அவன் எப்படி பணக்காரனான், இவனுக்கு எப்படி வாகனம் வந்தது, இந்த நிறுவனத்தை இவன் எப்படி நடத்துகிறான், இவ்வளவு பணம் நமக்கிருந்தால் எப்படி இருக்கும், நம்மால் ஏன் இப்படிஎல்லாம் ஆகமுடியவில்லை, என்று மட்டுமே சிந்தித்து சிந்தித்து பழக்கப்பட்ட நம் உள்ளம், இந்த நாட்டில் ஓர் ஏழை எப்படி வாழ்கிறான், அவனது குடும்பம் எப்படி பிழைக்கிறது என்பதை சிந்திக்கத் தவறிவிட்டது.

நான் இந்த நிகழ்வின் தொடர் நேயன். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரெண்டரை மணிக்கு இந்நிகழ்ச்சி, புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஏதேனும் ஒரு வகையில் நம்மை விடவும் வசதியான மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து நமக்கு நாமே வருத்திக்கொள்ளும் காலத்தை மாற்றி, “தம்மில் மெலியாரைத் தாம் எண்ணி தமதுடமை அம்மா பெரிதென்று கொள்” என்று தமிழ் சொல்லும் இலக்கணத்துக்குக் தகுந்தாற்போல வாழ்வதற்கு இந்நிகழ்ச்சி நமக்கு வழிவகுக்கும். உனக்கும் கீழே உள்ளவர் கோடி, எண்ணி பார்த்து நிம்மதி தேடு என்பான் கண்ணதாசன். அந்தவகையில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மூலம் நமக்கு ஒரு வருமானம்கூட இருக்கிறது பாருங்கள். அதற்காக மட்டுமல்லாமல், நமது சிந்தனையிலான ஒரு சின்ன கரிசனம் அவர்கள் வாழ்வுக்கு உதவலாம் என்பதற்காவது இந்நிகழ்ச்சியை நாம் பார்க்கவேண்டும். இது உங்கள் சகோதரனின் அன்பு வேண்டுகோள்.

இது பார்வை

கருணை மனுவை ஆயாமல் காலம் தாழ்த்திய காரணத்தால், மிக நீண்ட நாட்கள் அவர்கள் சிறையில் இருந்ததைக் காரணம் காட்டி, இந்தியாவின் உச்சநீதிமன்றம், இராசீவ் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைதான மூவரின் தூக்குத்தண்டனையைக் குறைத்து வாழ்நாள்சிறைத் தண்டனையாக மாற்றியது. ஏற்கனவே இப்படி சிலரின் தண்டனைகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, இவர்களது தண்டனையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் அவர்களைத் தூக்கில் போடமுடியாத அளவுக்கு மக்களின் அபிமானத்தை அவர்கள் பெற்றுவிட்ட பிறகு இது சரியென்றே தோன்றுகிறது. ஆனால் தீர்ப்போடு விடாமல் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் நிறைவில், எப்படி எல்லா வாழ்நாள்சிறைத் தண்டனையையும் குறைக்கும் உரிமை, மாநில அரசுக்கு, சில சட்ட விதிகளின்படி இருக்கிறதோ, அதைப்போலவே இந்தத் தண்டனைக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதாவது மரணதண்டனையில் இருந்து குறைக்கப்பட்ட காரணத்தால், அந்த அதிகாரம் இதற்கு பொருந்தாது என்றில்லை, சட்டத்தின்படி இதுவும் வாழ்நாள்சிறைத்தண்டனை தான், அரசுகள் நினைத்தால், நன்னடத்தை அடிப்படையில் நாட்களைக் குறைத்து, அவர்களை விடுதலை செய்யலாம் எனும் மேலதிகத் தகவலையும் தனது தீர்ப்பின் நிறைவில் நீதிமன்றம் தருகிறது.

ஏற்கனவே வாழ்நாள்சிறைத்தண்டனைகளைக் குறைத்து, பதினான்கு ஆண்டுகளில், பதினாறு ஆண்டுகளில் கைதிகளை விடுதலை செய்யும் வழக்கம் உண்டு. போதாதென்று ஒருமுறை அண்ணா பிறந்தநாளன்று எட்டரை ஆண்டுகளே தண்டனை வகித்தவர்களைக் கூட அரசு விடுதலை செய்திருக்கிறது. இதைத்தான் பிடித்துக்கொண்டார் செயலலிதா. தேர்தல் நெருங்கும் வேளையில், ஏற்கனவே இவர்கள் தண்டணையைக் குறைக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மாணம் முன்மொழிந்து, வெற்றிபெறச் செய்து, மக்களாதரவை கைக்குக் கொண்டவந்தவருக்கு, இந்தத் தீர்ப்பு அதே ஆதரவுக்கனியை வாய்க்கும் கொண்டுவரும் வாய்ப்பைக் கொடுத்துவிட்டது. சட்ட நிபுணர்களை ஆலோசிக்கிறார், அமைச்சரவையைக் கூட்டுகிறார், விடுதலை செய்வோம் என்றே அறிவித்துவிடுகிறார்.

இந்த விடுதலை செய்யும் அதிகாரம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு மாநில அரசுக்கு உண்டு என்றாலும், மத்தியஅரசின் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் அல்லது தண்டிக்கப்பட்டவர்கள்,  மத்தியப் புலனாய்வு காவல் பிரிவுகளினால் விசாரிக்கப்பட்டவர்கள்,  வெளிநாட்டு விவகாரங்கள் எனச் சிலவைகளில் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அனுமதி பெறவேண்டும், ஆலோசிக்கவேண்டும் என்பனவற்றில் இன்னும் சட்டசிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அதனால் ஒரு முன்னெச்சரிக்கையாக மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கிறார் மத்திய அரசுக்கு. இந்தியத் திருநாட்டில், மத்திய அரசுக்குக் காலக்கெடு விதித்த மாநிலஅரசு தமிழகமாகத்தான் இருக்கமுடியும். பதறிப்போய் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, விடுதலைக்குத்தடை வாங்குகிறது. பின்னர் மாநில, மத்திய அரசுகளின் சார்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதான் இப்போதைய நிலைமை. இந்த நிகழ்வை நாம் எப்படிப் பார்க்கிறோம்?.

மூன்று நாட்கள் கெடு விதிக்கப்பட்டபோது, ஒருவேளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநிலஅரசுக்கு இல்லையென்றால் மத்திய அரசு, அவர்களாகவே சட்டத்தைச் சுட்டிகாட்டி, தமிழகஅரசுக்கு பதில் எழுதி இருக்கலாம். செய்யாமல், நீதிமன்றத்துக்கு ஓடியதில் இருந்தே, விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இராசீவ் கொலை என்பது ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல, அது ஒரு பழிவாங்கும் நிகழ்வு என்று ஏற்கனவே தீர்ப்பில் பதிவாகியிருக்கிறது. இந்த வழக்கு தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தடா சட்டமே இப்போது இல்லை. வழக்கை மத்தியப்புலனாய்வுத்துறை விசாரித்தது என்பதாலும், வெளிநாட்டு குற்றவாளிகள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதாலும் மட்டுமே இது மத்தியரசுடன் கலந்தாலோசிக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் சுமூக உறவு இல்லாத நிலையில், இன்னார்க்கு அதிகாரம் என்று வகுக்கப்படாத நிலைமையில், இது போட்டிக்கே வழிவகுக்கும். அப்படித்தான் ஆகியிருக்கிறது. ஏற்கனவே மத்திய காங்கிரசு அரசைக் கரித்துக்கொட்டி வரும் செயலலிதாவுக்கு இது மேலும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. என்னளவில் மாநில அரசு நினைத்தால், இந்தத்தடை அகற்றப்பட்ட பிறகு, அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அதனால் செய்யவும்கூடும். ஆனால் அது தேவையா?.

அரசியல்காரணங்களுக்காக செயலலிதா இந்த முடிவை எடுக்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும்கூட, அந்த அரசியல்காரணம் என்பதுதான் என்ன?. மக்களாதரவும், அதனால் கிடைக்கும் வாக்குகளும். அப்படியானால் இவர்களை விடுதலை செய்வதை தமிழக மக்கள் விரும்புகிறார்களா என்ன?. அதுதான் உண்மை. தமிழக மக்கள் இந்த எழுவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்றே விரும்புகிறார்கள். மக்களின் ஆசையை, தவறாக இருக்காதபட்சத்தில் செய்யவேண்டியதுதான் அரசின் கடமை. ஆக அது தவறில்லை. சரி, விடுதலை செய்யவேண்டும் என்று மக்களில் பெரும்பான்மை நினைக்கிறதே, அது சரியா?. இந்த நாட்டின் முன்னாள் பிரதமரை, மீண்டும் பிரதமராக வருவார் என்று கணிக்கப்பட்டவரைக் கொலை செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து, வீதியில் உலாவவிட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்களா என்ன?. இராசீவ் மீது தமிழக மக்களுக்குப் பாசம் இல்லையா?. இந்த விடுதலையை ஆதரிக்கும் தமிழகமக்களைத் தவறாக நினைக்கும் வடநாட்டு ஊடகங்கள், தமிழக மக்கள் அமரர்.இராசீவ் மீது வைத்திருந்த பாசத்தை அறிவார்களா?. தமிழகத்தில் எத்தனை பேருக்கு இராசீவ்காந்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது தெரியுமா அவர்களுக்கு?. எத்தனை இல்லங்களில் இராகுல், பிரியங்கா என்று பெயர்சூட்டப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்?. உண்மையில் இராசீவ் கொலையினால் உண்டான அலையில்தான் அப்போது அதிமுக ஆட்சிக்கே வந்தது. அப்படியானால் ஏன் இப்படி ஒரு நினைப்பு இங்கே இருக்கிறது, காரணம் ஒன்றேதான்.

இந்த வழக்கு சரியான கோணத்தில் விசாரிக்கப்படவில்லை என்றே தமிழகம் நினைக்கிறது. அந்த வழக்கை விசாரித்த அதிகாரி எழுதிய நூல், அப்போதைய ஜனதா கட்சி பிரமுகர் ஒருவரின் வாக்குமூலம், தடா நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், செயின் ஆணைய, வர்மா ஆணைய அறிக்கைகள், நிறைவில் பேரறிவாளனிடம் விசாரித்த அதிகாரி, அவர் சொன்னதைத் தான் திரித்து எழுதியதாகச் சொன்ன ஒப்புதல், என எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறது இந்த வழக்கில். ஒரு முன்னாள் பிரதமரின் கொலைவழக்கு இவ்வளவு மோசமாகக் கையாளப்பட்டமுறை வேறெங்கும் நடந்திருக்க முடியாது. இப்போது உள்ளே இருக்கும் எழுவரும், நிகழ்வில் தொடர்புடையவர்களா இல்லையா என்பதைத்தாண்டி, அதில் தொடர்புடைய பலர், விசாரிக்கபடாமல் வெளியே திரிகிறார்கள் என்கிற எண்ணம், உள்ளிருப்பவர்கள் மீது ஒரு அனுதாபத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பேரறிவாளனுக்கு இந்த நிகழ்வு தெரிந்தே இருக்கவில்லை என்றே தமிழகம் நினைக்கிறது. அதில் பெரிதும் உண்மையும் இருக்கிறது. ஆக அப்பாவியான  பேரறிவாளனை வழக்கில் சேர்த்து, அவருக்குத் தண்டனையும் வாங்கித்தந்த அறிவிலித்தனம் தான் இத்தனைக்கும் காரணம் என்று நான் நினைப்பது உண்டு. எல்லோருக்கும் வழக்கின் போக்கு குறித்தும், அதன் தண்டனை குறித்தும் ஐயம் இருந்துவந்த காரணத்தினால்தான், இதன் தண்டனை நிறைவேற்றம்கூட இத்தனை காலதாமதம் ஆகிவிட்டது. இப்போது புலனாய்வின் தலைமை அதிகாரி, விசாரணைக்குழு தலைமை அதிகாரி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி என எல்லோருமே இந்தத் தண்டனைக்குறைபை ஆமோதிப்பதற்கு காரணம் கூட, அவர்களின் செயல்பாட்டிமீது அவர்களுக்கே இருக்கும் ஐயம்தான். இத்தனைக் குறைபாடு உள்ள வழக்கில், பெரும்குற்றவாளிகள் எல்லாம் வெளியே திரியும் நேரத்தில், இந்த எழுவரை மட்டும் இழுத்துவந்து தூக்கில்போடுவதைத் தமிழகம் விரும்பவில்லை என்பதுதான், இவர்களுக்கு இருக்கும் மக்களாதரவுக்கு மூலம்.

நான் மரணதண்டனைக்கு ஆதரவாளன். இந்த நாட்டுக்கு அது தேவை என்றும் நினைப்பவன். ஆனால் இப்படி குழப்பம் மிகுந்த வழக்கில், சிலருக்கு மட்டும் மரணதண்டனை அளிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு வாழ்நாள்தண்டனை வழங்கப்பட்டதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் விடுதலையே செய்துவிடவேண்டுமா என்ன?. சில ஆண்டுகளுக்கு முன்னரே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட நளினிக்கு எங்கள் ஊர்தான் என்பது, இதை வாசித்துக்கொண்டிருக்கும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கேக் கூட சென்ற மாதம்தான் தெரியவந்தது. ஜூவி வெளியிட்ட அந்தத்தகவல் குறித்து எங்கள் ஊரே ஆச்சரியமாக விசாரித்துக்கொண்டு இருக்கிறது.

சாதாரண வழக்கல்ல இது. ஒரு நாட்டின் இளைய தலைவர் ஒருவரை, ஈவிரக்கமின்றிக் கொலைசெய்த நிகழ்வின் விசாரணை வழக்கு. கொலை செய்தவர்களுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். குற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைப் பிடித்துக்கொண்டு போனால், இங்கே எதுவும் குற்றமாக இருக்காது. அதனால் இவர்களை விடுதலை செய்துவிடுவது நாட்டுக்கு நல்லதில்லை. பேரறிவாளன் ஒருவருக்காக அத்தனை பேரையும் விடுதலை செய்யும் கட்டாயம் இருக்குமானால், அதைத் தவிர்ப்பதே நல்லது என்பதுதான் நான் நினைப்பது. தமிழக அரசு முடிந்தால், செயின் ஆணைய, வர்மா ஆணைய அறிக்கைகளைப் பின்பற்றி விசாரணையை நெறிப்படுத்தலாமே தவிர, இவர்களை ஒட்டுமொத்தமாக விடுதலையே செய்துவிடுவேன் என்பது சரியாகப்படவில்லை. நாட்டின் நலனுக்கும், காவலுக்கும் இது கேடு என்றே நான் நினைக்கிறேன்.


இது அரசியல்

விரிவஞ்சித்தான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திவிட்டேன் இப்போதெல்லாம். மட்டுமல்லாமல் இன்றைக்கு அரசியலைப் புரியாதவர்கள் யாருமே இல்லை எனுமளவுக்கு, கட்சிகள், தலைவர்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகிவிட்டன. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு மக்களைக் கொண்டுவந்த பிறகு, என்ன செய்தால் என்ன ஆகிவிடப்போகிறது, எனும் நிலைமைக்கு நம் அரசியல் போய்விட்டது.  எத்தனை பெரிய கொள்கைப் பிறழ்வு, எவ்வளவு பெரிய ஊழல், என்ன நடந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகசமப்பா....எனும் நகைச்சுவையை மக்களே ஏற்றுக்கொண்ட பிறகு, தலைவர்களுக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் புதிதாகச் சொல்வதற்கென்று நமக்கும் ஏதும் இல்லை. இப்போது சிலவற்றை சொல்லநினைப்பதால் கொஞ்சம் பேசலாம், வாருங்கள். தில்லிதான் இப்போதைக்கு நம் இலக்கு.

தொடக்ககாலம் முதலே என் எழுத்துக்களை வாசித்து வந்திருப்பவர்களுக்கு, சன்லோக்பால் பில் வேண்டுமென்று போராட்டம் நடத்தியபோதே, இந்த போராட்டம் அவசியமற்றது என்றும், இந்த மாதிரி ஒரு சட்டமே நம் நாட்டுக்கு தேவையில்லை என்றும் நான் சொல்லிவந்திருப்பது தெரிந்திருக்கும். ஆக முழுக்க முழுக்க வீணான ஒரு போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் சவால் விட்டார்கள் என்பதற்காக அதே அரசியல்களத்துக்கு வந்தார் அரவிந்துகேசிரிவால் அவர்கள். சரிதான். ஒன்றும் தப்புகிடையாது. ஆனால் எனக்கு பதவி ஆசைகிடையாது, அரசியலுக்கே வரமாட்டேன் என்று ஒரு காலத்தில் சொன்னவர்தான் இவர். இவருடைய கட்சிக்கும் ஆட்கள் இப்படித்தான் வந்து சேர்கிறார்கள். அண்மை உதாரணம் அண்ணன் உதயகுமார் அவர்கள். ஒவ்வொருமுறையும் தொலைகாட்சி செவ்வியின்போது அரசியல்குறித்து வினாக்கள் வைத்தால் இலாவகமாக மறுப்பார் அண்ணன். இன்று அங்கேதான் வந்து நிற்கிறார். தலைவர் எவ்வழி, தொண்டர் அவ்வழி. அதுவும் தப்பு கிடையாது.

என் பிள்ளைகள் சத்தியமாகச் சொல்கிறேன், காங்கிரசு , பாசக வுடன் ஒருக்காலும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொன்னவர், பின்னர் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். ஆட்சியிலும் பங்கு கொடுக்கவில்லை. கேட்டால், நாங்கள் கேட்கவில்லை, அவர்களாகக் கொடுத்தார்கள் என்று அவர்களே சொல்லிக்கொண்டார்கள். அப்படியானால் கையூட்டு கூட அடுத்தவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம், நாமாகக் கேட்டால்தான் தவறு என்பதுபோலாகிவிடாதா?. அதென்ன கொள்கையோ நமக்குப் புரியவில்லை. சரி, பெரும்பான்மை இல்லாதபோது அவர்கள் ஆதரவு கொடுத்தார்களே, அவர்களுக்கு ஆட்சியில் பங்காவது கொடுக்கவேண்டாமா?. அதையும் செய்யவில்லை. இங்கேதான் கேச்ரிவாளின் முதல் தவறு தொடங்குகிறது. அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றார், அதெல்லாம் நடக்காது என்று நமக்கேக் கூட முன்னமே தெரியுமாதலால் அதுபற்றியெல்லாம் பேச விரும்பவில்லை. இருக்கட்டும். நான் எனது வீட்டிலேதான் இருப்பேன் என்றார், பின்னர் கடிதம் எழுதி இரண்டு  பெரியவீடுகள் வாங்கிக்கொண்டார். உண்மையில் நான் மேற்கு வங்கம் சென்றிருந்த போது, முதல்வர் மம்தா இன்னும் தன் சொந்த வீட்டில்தான் இருக்கிறார் என்பதும். அந்த வீட்டை நான் பார்த்தபோதும் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. செயலலிதா, மனோகர் பாரிக்கர் என பல முதல்வர்கள் தன் சொந்தவீட்டில்தான் இருக்கிறார்கள். அதிருக்கட்டும். எனக்கு பாதுகாப்புத் தேவையில்லை என்றார், பின்னர் ஏற்றுக்கொண்டார். அதுவும் பாருங்கள், அந்த பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே சீலாதீட்சித்தின் பாதுகாவலராக இருந்தவர். அவர் பாதுகாப்பு அதிகாரி என்பது மக்களுக்குத் தெரியுமாதலால் அவரை வேண்டாம், புது ஆட்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இப்படி பல பிறழ்வுகளை நாம் பார்க்கிறோம்.

தில்லி காவல்துறை செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி, அதற்கு முதல்வரே காரணம் என்றும் குற்றம் சாட்டியவர்கள், தனது செயல்பாடுகளினால் தில்லியின் காவல்துறை தில்லி முதல்வர் கையில் இல்லை என்பதை இந்தியாவுக்குக் காட்டிவிட்டார்கள். எந்த முதல்வர் மீது நடவடிகை எடுப்போம் என்று சொன்னார்களோ, அதே முதல்வர் இன்று நடவடிக்கை எடுக்க முடியாத பதவிக்கு வந்துவிட்டார். சீலாதீட்சித்து கேரள ஆளுநராவது  குறித்து ஒரு விமர்சனமும் அவர்கள் வைக்கவில்லை. நிறைவில் தன்னால் நிர்வாகம் செய்யமுடியாமல் ஆட்சியைக் கைவிட நினைத்தவர்கள் அதற்கு சன்லோக்பால் பில் என்ற ஒன்றைக் கொண்டுவருகிறார்கள். வாச்பாய் ஆட்சி காலத்தில் தில்லியில் புதிய சட்டங்கள் கொண்டுவர, மத்தியஅரசின் அனுமதி வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றி வைத்திருப்பது தெரிந்தும் இந்த சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். ஆட்சி போய்விட்டது. ஆட்சிக்கு வருவதற்கு மக்களைக் கூட்டி கருத்துக்கேட்டவர்கள் ஆட்சியை விட்டு விலகுவதற்கு மக்களைக் கேட்கவில்லை, ஏனோ தெரியவில்லை.

ஏற்கனவே லோக்பால் பில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியாகிவிட்டது. அதனடிப்படையில் மாநிலங்களில் லோகாயுக்தா கொண்டுவரப்படும். ஏற்கனவே தில்லியில் லோகாயுக்தா இருக்கிறது. பின்னர் இதென்ன புதிதாக சன்லோக்பால் என்று நமக்குப் புரியவில்லை?. அதுவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இந்தியா டிவியின் ஆப்கிஅதலாத் த்துக்கு வந்த கேச்ரிவால் , இந்த சட்டத்தை ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னால் நிறைவேற்றுவேன் என்றார். ஆக அவர்களுக்கு அதுதான் முக்கியக் கொள்கை என்றால், ஆட்சிக்கு வந்த அடுத்தநாளே, அதைப் பரீட்சித்துப் பார்த்திருக்கலாமே?. ஓரளவுக்கு முடியாது என்று ஆனபிறகு, அந்த அம்பை கையிலெடுத்து ஏவி, விலகிக்கொண்டார் என்றுதான் இதைப் பார்க்கவேண்டி இருக்கிறது.

நிர்வாகத்திற்கும், தனிமனித நேர்மைக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது. நாம் தனியாக இருக்கும்வரைக்கும் நம் நேர்மையும் நம்முடன் இருக்கும். சமூகத்துடன் கலக்கத் தொடங்கும் காலத்தில் நேர்மைக்கு அறைகூவல் விடப்படுகிறது. தனிமனித நேர்மையைக் கூட பாராட்டும் சமூகத்திலோ, அதை ஆதரித்து வளர்க்கும் எண்ணம் கொண்ட சமூகத்திலோ நாம் இல்லை. அவர்களையும் இழுத்துவந்து திருட்டுக்கூட்டத்தில் சேர்க்கும் எண்ணம்தான் இன்றைக்கு நிலைமை. பொதுவில் நேர்மையாளர்களுக்கு இருக்கும் தற்பெருமை  கேச்ரிவாலுக்கும் இருக்கிறது. தப்புகிடையாது. ஆனால் நேர்மை என்பது ஒப்பீட்டு அளவானது இல்லை. சுத்தமானது. அதனால் தம்பட்டம் அடித்துக்கொண்டவர்கள் கொஞ்சம் கலப்படம் அனுமதித்தாலும் அதைச் சமூகம் பெரிதாக ஊதும். இங்கே ஒருவரும் சுத்தமில்லை என்று சொல்லத்தான் பெரும்பான்மை நினைக்கிறது. அதில் தனியனாக நின்றுகொண்டு நேர்மை காப்பதே பெரிய சங்கடமாக இருக்கும்பொழுது, அரசியலில் அது எத்தனை கடினம், அதை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதையெல்லாம் கேச்ரிவால் அறிந்திருக்கவில்லை என்பதுதான் அவரது செயல்பாடுகளில் இருந்து நான் அறிந்துகொண்டவை. அதுதான் நடந்துமிருக்கிறது. இப்போதும் கூட ஒப்பீட்டு அளவில், தன்னை உயர்வாகக் கருதும் காரணத்தால் தான், ஊடகங்கள் குறை சொல்லும்போது, அவர் பிறரைக் குறை சொல்ல விரும்புகிறார். எப்போதும் நேர்மையாளன் தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தன்னளவில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லையா?, இவர்கள் செய்யவில்லையா என்று கேட்ட அன்றே நேர்மை குறைந்துவிட்டதை தான் ஒப்புக்கொண்டதைப் போலாகிவிடும். அதனால்தான் அண்மையில் ஊடகங்களைக் குறைசொல்லத் தொடங்குகிறார் அவர்.  பெரும் புரையோடி இருக்கும் சமூகத்தைத் திருத்த நினைக்கும் நேர்மையாளன் ஒருவன், அதற்கான காலத்தையும் கணக்கிட்டிருக்க வேண்டும். செல்லம்மாள் சொல்வாள், “இன்று பாரதி பாரதி என்கிறார்கள், ஆனால் அவர் இருந்தபோது நான் ஒரு பைத்தியக்காரனின் மனைவியாகத்தான் பார்க்கப்பட்டேன்” என்று. அப்படியானால் காலநீளம் என்பது நம் வாழ்நாளையும் தாண்டியதாகக் கூட இருக்கலாம் பாருங்கள். இனிமேல் வேறு வழியில்லை. இருக்கும் பல கட்சிகளின் ஊடே, அவரது கட்சியும் ஒன்றாகப் பார்க்கப்படும். அவ்வளவுதான் அவரது போராட்டத்துக்கான பலன். விவாதிப்பதற்கு ஒன்றுமிலாத அளவுக்கு தனது அரசியல் வாழ்வை அவரே சுருக்கிக்கொண்டார். இவையத்தனைக்கும் காரணம் என்று நான் சிலவற்றைப் பார்க்கிறேன். அதுகுறித்து இன்னொருமுறை நாம் பேசலாம். வணக்கம்.

பாசமுடன்... செல்வியின்செல்வன்..