Monday 7 November 2016

யார் பார்த்தசாரதி?.- இலக்கிய ஆய்வு.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கியம்மன் தாள்வாழ்க.

பார்த்தசாரதி- யார்?.

இது தமிழ்ப்பெயர் அல்ல. ஒருமுறை கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களிடம் பேசியபோது சொன்னார், சாரதி என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் வலவன் என்று. வலவன் ஏவா வானஊர்தி” எனும் சொற்றொடர் சங்க இலக்கியங்களில் இருக்கிறது என்றார். சாரதி ஒரு சமற்கிருத சொல்லாட்சி. தமிழ் தனித்தியங்கும் தன்மை கொண்டது என்பதில் யாருக்கும் ஐயமில்லை என்றாலும், வேற்றுமொழிகளில் இருக்கின்றது என்பதற்காகவே அச்சொல் தமிழில்லை என்பதில் அடியேனுக்கு முழு உடன்பாடு கிடையாது. தமிழின் அசை பிரித்து அது தமிழ்ச்சொல் தான் என்று அறிவது இப்போதைக்கு இயலாத ஒன்று. வேர்ச்சொல் கொண்டு தமிழின் வளற்சொற்களை அறியலாம் என்றாலும், அனைத்து சொல்லுக்கும் ஓர் வேர்ச்சொல் இருந்துதான் ஆகும் என்ற புரிதல் எனக்கு இல்லை. ஆக அது தமிழ்ச்சொல்லாகவும் இருக்கலாம்.

சாரதி என்பதன் பொருள் செலுத்துபவன். பொதுவில் வரலாற்றுக்காலத்தில் இடப்பெயர்வுக்கு, தானாக செலுத்தும் யானை குதிரைகள் போக, அதிகம் பயன்படுத்தப்பட்டவை தேர்கள் தான். இன்றைக்கு பெரும்பணக்காரர்கள் தங்கள் வாகனங்களை செலுத்த தனியாக ஓட்டிகள் வைத்திருப்பதுபோல. தேரைச் செலுத்துபவன் எனும் பொருளிலே இது அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது தேரோட்டி. இக்காலத்தில் மிகத்திறமையாக வாகனங்களை செலுத்துபவர்கள் மதிக்கப்படுவது மாதிரி, அப்போதும் போர்க்காலத்தில் தேரை இலாவகமாக செலுத்துபவர்கள் மதிப்புமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். ஓர் அரசனே இன்னோர் அரசனுக்கு சாரதியாக இருந்திருக்கிறான். பொதுவானக் கண்ணோட்டத்தில் ஆய்ந்தால், சாரதி என்பவன், வீட்டு வேலைக்காக வாகனங்களைச் செலுத்துபவன் அல்லன். அவன் மதிப்புமிக்கவன். திறமையான தேரோட்டி. போர்க்காலங்களில் அதிதிறமையாக தேரைச் செலுத்தும் ஆற்றல்கொண்டவன் என்பதே பொருளாக இருக்கிறது. பெயர்ச்சொல்லில் இது தொழிற்பெயர் வகை.

பார்த்தன் எனும் சொல்லை ஆயத்தொடங்கினால், அது ஒரு காரணப்பெயர். அக்காலத்தில் நாட்டின்பெயர் தொட்டு, தந்தைதாயின் பெயர்தொட்டு அரசர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு பாஞ்சாலநாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி, துருபதனின் மகள் என்பதால் திரௌபதி, இராதை எடுத்துவளர்த்த பிள்ளை என்பதால் கர்ணன் இராதேயன், குந்திபோஜனின் மகள் என்பதால் அவளுக்கு குந்தி என்று பெயர். இவர்களுக்கு எல்லாம் பெற்றோர் இட்ட பெயர் இருந்தபோதிலும் இந்த பெயர்களும் இணைந்தே வழங்கிவருகிறது வரலாற்றில். கமலகாசனுக்கு பெயர் பார்த்தசாரதி, இளையராஜாவுக்கு பெயர் ஞானதேசிகன், ஞானசம்பந்தனுக்கு பெயர் அங்குசாமி இப்படி. பார்த்தன் எனும் காரணப்பெயர் தாய்தொட்டு வந்த பெயர். பாண்டுவின் மகளான குந்திக்கு, இயற்பெயர் பிருதை. பிரீத்தி என்றும் சொல்லலாம். இந்த பிருதாவின் மகனானதால் அவன் பார்த்தன். பாண்டவர்கள் எனும் பெயர் அவர்களுக்கு தந்தையின் வழிப்பெயர். பார்த்தன் என்பது அர்ச்சுனனுக்கு தாய்வழிப்பெயர்.

பார்த்தசாரதி என்றால், பார்த்தனுக்கு தேரோட்டியவன். பாரதப்பெரும்போரில் பார்த்தனான அர்ச்சுனக்கு தேரோட்டியவன் இறைவனின் அவதாராமாகிய கிருட்டிணன். அவன்தான் பார்த்தசாரதி. கட்டுரையின் நோக்கம் இங்கே முடிவடைகிறது. ஞானச்செல்வன் சொன்னார், தமிழில் சொல்வதானால் கண்ணன் என்று வைத்துக்கொள்ளலாம் என்று. ஞானச்செல்வனே கூட தமிழ்ப்பெயர் இல்லை. அதிருக்கட்டும். கண்ணன் என்றால் அவனுக்கு பல உருவங்கள் உண்டு.  பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் பல வடிவங்கள் கொண்டவன் கண்ணன். அவன் கதைசொல்லப்போனால் விரியும் இக்கட்டுரை. அத்தனையும் கண்ணன் கண்ணன் கண்ணன். ஆனால் பார்த்தசாரதி அப்படி அல்ல. அவன் தர்மத்தின் தலைவன், பாரதப்போரில் தர்மத்தின் பக்கம் நின்று தேரோட்டியவன், உலகம் புகழும் கீதையை அவன் சொன்னபோது அவன் பார்த்தசாரதியாகத்தான் நின்றிருந்தான். பார்த்தசாரதி என்பதன் பொருள் கண்ணனைக் குறிப்பது அல்ல. கிருட்டிணனுக்கு இருக்கும் பெயர்களில் சிறந்த பெயர் பார்த்தசாரதி. போரில் அவன் தர்மத்தின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு தர்மத்தை வெற்றிபெறச் செய்த வரைக்கு மட்டுமே அவன் பார்த்தசாரதி. பிறகு மீண்டும் அவன் கண்ணன். பதினெட்டு நாள் போர் நடந்த காலத்தில் ஒரு தேரோட்டியாக அவன் கீதை சொன்ன, பெரும்பலம் கொண்ட எதிரியை தர்மம் கொண்டு வென்ற காலம் மட்டுமே அவன் பார்த்தசாரதி. ஆக கண்ணன், கிருட்டிணன் என்பதெல்லாம் வேறு பார்த்தசாரதி என்பது வேறு. பெரும்பொருள் கொண்ட பாத்திரம் இது.

பார்த்தன் யார்?. பார்த்தன் என்பது பிருதாவின் மகன் என்பதனால், அர்ச்சுனன் மட்டுமா பார்த்தன்?. இல்லையே. பாண்டுவின் புத்திரர்களில் மூவர் குந்திக்கு பிறந்தவர்கள். அவர்கள் பாண்டுவிற்கு பிள்ளைகளா என்பதைவேண்டுமானால் கேள்விக்கு உட்படுத்தலாமே தவிர, குந்தியின் பிள்ளைகள் என்பதில் ஐயமில்லை. தருமன், பீமன், அர்ச்சுனன் மூவருமே பார்த்தர்கள் தானே?. ஏன்?, கர்ணன் கூட பார்த்தன் தான். இவர்கள் நால்வரும் பார்த்தர்கள் என்றால், இவர்களுக்கு தேரோட்டிய அனைவருமே பார்த்தசாரதி தான் இல்லையா?. கிடையாது. வரலாற்றில் பார்த்தன் என்று அர்ச்சுனன் மட்டுமே அறியப்படுகிறான். பார்த்தா பார்த்தா என்று கீதையின் பல இடங்களில் அர்ச்சுனனை விளிக்கிறான் கண்ணன். ஏன் அவனுக்கு மட்டும் பார்த்தன். மற்றவர்கள் அந்தப்பெயரை ஏன் அடையவில்லை?.

மிக எளிது. ஒரு குடும்பத்தின் பெயரை அக்குடும்ப வழிபிறப்புகளில் வலிமை பொருந்தியவன் மட்டுமே தாங்குகிறான். விற்போர் ஓங்கியிருந்த மாபாரத காலத்தில் யாராலும் வெல்லமுடியாத வில்லாளியாக, அதேசமயம் நேர்மையும் அன்பும் கொண்டவனாக அர்ச்சுனன் இருந்திருக்கிறான். ஐந்துபேரையும் சேர்த்து பாஞ்சாலி மணந்துகொண்ட அதே காலத்தில், அர்ச்சுனன் மீது ஆசைப்பட்டு பல பெண்கள் அவனோடு இணைந்திருக்கிறார்கள். அர்ச்சுனனின் அன்புதான் அதற்குக் காரணம். சதுரங்க சபையில் தோற்றபிறகு வீமன் கோபம்கொண்டு, சூதாடிய தருமனின் கையை எரிக்க தழல் கொண்டுவா என்று சகாதேவனைப்  பணித்தபோது அர்ச்சுனன் மறுக்கிறான், அண்ணனின் பெருமைகளைச் சொல்லி வீமனை அன்புவயப்படுத்துகிறான். அதைப்போலவே போர்புரிய வந்த காலத்திலும் தனது ஆசிரியர்களை, சொந்தங்களை எல்லாம் கொல்ல அஞ்சுகிறான். அவனது உயிர்கள் மீதான பாசம் போர்க்களத்தில் கூட தெறிக்கிறது. பெரும் வீரனாக இருந்தாலும் வீமன் ஒரு தடிமாடு. அர்ச்சுனன் கட்டிளங்காளை. பெண்தன்மை பொருந்திய பெருவீரன். போரே அர்ச்சுனனின் கைவசம் தான் இருக்கிறது. அர்ச்சுனனைக் கொன்றால் போர் முடிந்துவிடும் என்பதுதான் துரியனின் இலக்கு. அதனால்தான் கண்ணன் அர்ச்சுனனுக்கு தேரோட்ட வருகிறான். மட்டுமல்லாமல் கண்ணன் அர்ச்சுனனுக்கு மச்சினன். கண்ணனின் சகோதரியும் அர்ச்சுனனின் மனைவி. அவளுக்கு பிறந்தபிள்ளை தான் அபிமன்யு. பிறகு பரீட்சித்து. பரதவம்சம் தளைத்தது பாஞ்சாலியின் பிள்ளைகளால் அல்ல. மாறாக அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும்  பிறந்த அபிமன்யு வழி பிள்ளைகளாலேயே. ஐவரில் தளைத்தது அர்ச்சுனன் வழி மட்டுமே. பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கசன் கூட போரில் மரித்துப்போனான்.

கர்ணனும் பார்த்தன்தானே?. அவனும் அர்ச்சுனனுக்கு இணையான வில்லாளிதானே?. சிறந்த கொடையாளியாக வேறு இருந்திருக்கிறானே?. சூதனால் வளர்க்கப்பட்ட காரணத்தால், தாழ்ந்தகுலத்தில் வளர்ந்த காரணத்தால் அவனுக்கு இப்பட்டம் மறுக்கப்படுகிறதா என்ன?. பாரதத்தில் கர்ணனும் குந்திக்கு பிறந்தவனே என்பதை அறிந்தவர்கள் சிலர் மட்டுமே. கர்ணன், குந்தி, கண்ணன், இன்னொருவன் சூரியன். ஆக அவனுக்கு பார்த்தன் என்ற பெயர் இயல்பிலேயே மறுக்கப்படுகிறது. கர்ணனை அரசகுலமாக்க துரியோதனன் விரும்பி அவனை அங்கதேசத்துக்கு (இன்றைய பீகாரின் ஒரு பகுதி) அரசனாக்கும் பொது, அரசவை அதை மகிழ்வோடு ஏற்கவில்லை. வரலாற்றுப்பின்னடைவு என்று பழ.கருப்பையா இன்னிகழ்வைக் குறிப்பிட்டிருப்பதை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் அவனது திறமைகளைத் தாண்டி, நட்புக்காக எதையும் ஏற்க தயாரான மனிதனாக இருந்திருக்கிறான். தான் நிற்பது அநீதியின் பக்கம் என்பதை அவன் அறிந்திருக்கிறான். துருபதனின் செல்வி பெரும் சபை முன்னர் துகிலுரியப் பட்டபோது அந்த சபையில் கர்ணனும் இருந்தான். இராமன் சுக்கிரீவனிடம் நல்லவரே ஆனாலும் உனக்கு பகைவர் எனக்கும் பகைவர் என்று உருசியமூகமலை மீது சத்தியம் செய்துகொண்டதைப் போல கர்ணனும் நட்புக்காக நீதியை ஆயாமல் நடந்துகொள்கிறான். அதனால் அந்தப்பட்டம் அவனுக்கு உரியது இல்லை. சங்க இலக்கியம், அண்ணன் தம்பிகளுள் தம்பி அறிவாளியாக இருந்தால், சமூகம் அண்ணனை ஒதுக்கி தம்பியை ஆராதிக்கும் என்கிறது. சரி தருமனுக்கு என்ன குறை?. தான் தாங்கும் தருமத்தால் பூமியில் சக்கரம் படாமல் ஓடும் தேரைக்கொண்டவன் தருமராசன். ஆனால் அசுவத்தாமா எனும் ஆனை செத்துவிட்டது என்று அவன் சொன்னபோது, அவனது தேர் தரைதொட்டு ஓடத்தொடங்கியதை பாரதத்தில் நாம் அறிகிறோம். ஈன்று புறம் தருதல் எந்தைக்குக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே எனும் சங்க இலக்கியச்சாயலில் நின்று எவன் சான்றோன் ஆனானோ அவனே அக்குலத்தின் வழியாக அறியப்படுகிறான். அர்ச்சுனனின் வில்லில் நாணேற்றும் ஒலிதான், பாரதப்போரின் வெற்றிச்சங்கமுழக்கத்தின் மூலம். தன்மகனைச் சான்றோன் எனக்கேட்கும் வாய்ப்பு குந்திக்கு அர்ச்சுனனைப் பெற்றதன் மூலம் மட்டும் கிடைத்திருக்கும். இத்தனைக் காரணங்களால் அர்ச்சுனன் மட்டும் பார்த்தன் என்று அறியப்படுகிறான். அதில் பெரும் நியாயமும் இருக்கிறது.

இனி சாரதிக்கு வருவோம். அர்ச்சுனனுக்கு தேரோட்டிய காரணத்தால் இந்த பெயர் வந்திருக்கிறது என்றால், அர்ச்சுனனுக்கு தேரோட்டிய அனைவருமே பார்த்தசாரதி தானே?. விராடபருவத்தில் ஒருவருட காலம் திருநங்கையாக பிருகண்ணளை எனும் பெயருடன் அர்ச்சுனன் வாழ்ந்த காலத்தில், சைரந்தரி என்ற பெயருடன் இருந்த பாஞ்சாலியை சீண்டினான் என்பதற்காக கீசகன் எனும் மல்லனை  கொலை செய்துவிடுகிறான் வீமன். கீசகனைக் கொலைசெய்யும் வன்மை வீமனுக்கு மட்டுமே உண்டு என்பதை அத்தினாபுரம் அறிந்திருந்த காரணத்தால், பாண்டவர்களின் இருப்பிடம் அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. தெரிந்த கதை என்பதால் எளிதாக சொல்கிறேன். கௌரவர்கள் ஆநிரை கவர்ந்து செல்ல, அவர்களைப் பிடிக்க விராடநாட்டு இளவரசனான உத்தரகுமாரன் செல்கிறான். இந்த உத்தரகுமாரனுக்கு தேரோட்ட பிருகண்ணளை யாக இருக்கும் அர்ச்சுனனை, கங்கரான தருமனின் ஆலோசனையின் பேரில் அனுப்புகிறான் அரசன். பாதிவழியில் தான் யார் என்பதை அர்ச்சுனன் சொல்லி, அவனை தேரோட்ட சொல்லிவிட்டு தங்களது தெய்வீகபாணங்களை எடுத்துக்கொண்டு போர் செய்கிறான். இப்போது நடக்கும் இந்தப்போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியவன் உத்தரகுமாரன். ஆக இவனும் பார்த்தசாரதி தானா?. மட்டுமல்லாமல் அர்ச்சுனன் நகர்வலம் வந்தபோது, அவன் திசைப்போக்கு போர்கள்  செய்தபோது என்று பலர் அவனுக்கு தேரோட்டி இருக்கலாம். அவர்கள் எல்லாம் கூட பார்த்தசாரதிகள் தானா?. இல்லையே. ஏன் கண்ணன் மட்டும் பார்த்தசாரதி?.

ஏற்கனவே சாரதி எனும் விளக்கத்தில் நான் அப்பெயருக்கான தொழிலில் திறமையான தேரோட்டி என்று சொல்லி இருக்கிறேன். உத்தரகுமாரன் தேரோட்டியபோது பெரும் சாகசங்கள் செய்யவில்லை அவன். வெறுமனே ஒரு வண்டியோட்டியாக அவன் இருந்திருக்கிறான். அதைப்போலவே அவனது பயணங்களுக்கு தேரோட்டிய மனிதர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் கண்ணன் அப்படியில்லை. திறமையாக தேரோட்டுகிறான். வீரன் மயங்கும் வேளையில் கீதை சொல்லி அவனைப் போருக்கு தயார்ப் படுத்துகிறான். கண்ணனைப் போன்ற ஒரு தேரோட்டி கிடைத்திருக்காவிட்டால் அர்ச்சுனன் சோர்ந்து படுத்து, போர்க்களம் விட்டு ஓடியிருப்பான். அதுமட்டுமல்ல. கண்ணனே கூட அஞ்சி, குந்தியை தூது அனுப்பி, நாகபாணத்தை ஒருமுறைக்கு மேல் ஏவக்கூடாது என்று கர்ணனிடம் சத்தியம் வாங்கும் அளவுக்கு வலிமை வாய்ந்த பாணத்தில் இருந்து அர்ச்சுனனைக் கண்ணனே காக்கிறான். தேரை நான்கு அங்குலம் தேருக்குள் அழுத்தி, கழுத்துக்கு வந்த பாணத்தை மௌலி யை மட்டும் எடுத்துச்செல்ல வைக்கும் அசகாய செயலைச் செய்தவன் கண்ணனே. தேரில் இக்காலத்து அதிர்வுதாங்கிகள்(shockabsorber) மாதிரி ஏதேனும் அந்தத் தேரில் இருந்திருக்கக்கூடும். வெறுமனே தேரோட்டியாக இல்லாமல் அந்த போரையே நடத்திய சாரதியாக கண்ணன் இருக்கிறான். வெறி கொண்டு போரிட்டுக்கொண்டிருந்த துரோனாச்சாரியாரை கண்ணனே திட்டம் வகுத்து கொலை செய்கின்றான். வீடுமரைக் கொல்ல சிகண்டியை முன்னிறுத்தும் யோசனையை அவனே வகுக்கிறான். ஆக பார்த்தனுக்கு மட்டுமன்றி போரின் பெரும் பாகத்தில், அதன் சாரதியாக இருந்து தர்மத்துக்குப் பாடுபட்டவன் கண்ணனே.

ஆக, பார்த்தன் என்ற பொதுப்பெயர் முழுக்கவும் அர்ச்சுனனுக்கும், பார்த்தசாரதி என்ற தொழிற்பெயர் முழுக்கவும் கண்ணனுக்கே பொருந்தி வரும் காரணத்தால்....வேறென்ன சொல்லப்போகிறேன், பார்த்தசாரதி என்ற பெயர் மாபாரதத்தின் கண்ணனுக்கே பொருந்தும் எனச்சொல்லி நிறைகிறேன்.
வாழ்க.
அன்பன்.
இராசகோபால்பார்த்தசாரதி.
07.11.2016.