Sunday 26 July 2015

பாகுபலி - பார்வை.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கித்தாயின் தாள்வாழ்க.


உலகெங்கும் இந்தியர்களும், திரை இரசிகர்களும், குறிப்பாக தென்னிந்தியர்கள் திரையரங்கு நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் இப்படி ஒரு படம் இதுவரைக்கும் இந்தியாவில் திரைக்கு வந்தது இல்லை எனும் அளவுக்கு பாரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது இத்திரைப்படம். இதற்காகத் தயாரிக்கப்பட்ட விளம்பரத்தட்டிகள் கூட கின்னசு சாதனைப்புதக்கத்தில் இடம் பெரும் அளவுக்கு எங்கெங்கு நோக்கினும் பிரமாண்டம். இந்தியாவில் பிராந்திய மொழிகளில் அதிக பொருட்செலவில் படம் எடுப்பது, அதன் வருமானம் கருதி, இயலாது எனும் கருத்தை உடைத்துக்கொண்டு, பாலிவுட்டுக்கும், ஹாலிவுட்டுக்கும் சவால் விடும் அளவிற்கு இப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழில் இரசினிகாந்து எனும் கலைஞருக்கு உலகம் முழுவதும் இருக்கும் இரசிகர்களால் இது ஏற்கனவே ஓரளவுக்கு சாத்தியமாகி இருந்தது.. பெரும்பொருட்செலவில் தென்னிந்திய மொழிகளில் படம் தயாரிக்கவும், அந்தளவுக்கு வசூலையும் செய்யமுடியும் என்பதற்கு எந்திரன் ஓர் உதாரணம். இந்த காரணத்துக்காகவே கமலகாசனுக்கு எழுதிய அந்த கதையில் இரசினி நடித்தார். ஆக, திரைத்துறை எனும் பகுதியைத்தாண்டி, தேய்க்கமுடியாத தெற்கு எனும் அரசியல் கருத்தையும் பாகுபலி  நமக்கு சொல்கிறது. வட இந்தியர்களையே திரையரங்குக்கு இழுக்கும் பாங்கு இப்படத்தின் பிரமாண்டத்துக்கு இருக்கிறது.
தொடக்கத்திலிருந்து நிறைவு வரைக்கும், நாம் திரையரங்கில் அமர்ந்திருக்கிறோம் எனும் உணர்வையே மாற்றி, நம்மையும் திரைக்குள் இழுத்து, ஏதொ கதை மாந்தர்களுடன் உலாவும் ஒரு மனிதனாக நம்மையும் இழுக்கும் அளவுக்கு, கட்புலன்களை காவு வாங்கிக்கொள்கிறது திரை. எவ்வளவு நேரம் படம் பார்த்தோம் என்பதை நம் மணிக்கூட்டைப் பார்த்துதான் நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற அளவுக்கு, காலத்தை காற்றுவேகத்தில் கடத்துகிறது கதை. ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கிப் புரியும் முன்னரே அடுத்த பிரமாண்டம் தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் இரண்டு கோடிக்கான செலவு என்பது திரையில் அப்பட்டமாகத் தெரிகிறது. எங்கோ ஓர் பிரமாண்ட அரசாங்கத்துக்குள் சென்றுவந்த மாதிரி இருக்கிறது அரங்கை விட்டு வெளியேறும்போது. கதையை முழுதும் உள்வாங்காத நிலையில், காலம் கணக்கற்று கடந்ததை மறந்ததால் படம் முடிந்த பின்னரும், திரையை விட்டு விலகாத நிலையில் இருக்கிறது நம் மனம், திரை அணைக்கப்பட்டு பாகுபலி(நிறைவுக்கான) காட்சிகள் காட்டப்பட்டு, அரங்கின் விளக்குகள் ஒளிரும்போது, வெளியேற மனமில்லாமல் போகிறது நமக்கு.
ஒன்று சொல்கிறேன் பாருங்கள், சிலர் சிலநேரத்தில் அழகாகத் தெரிகிறார்கள். நாமே கூட நம்மைக் கொஞ்சம் அலங்கரித்து சாயமெல்லாம் பூசிக்கொண்டு ஆடிமுன்னால் நின்றால் அழகாகத் தெரிகிறோம். சாமி, பீமா, கிரீடம் ஆகிய படங்களில் அழகு தேவதையாகத் தெரிந்த திரிஷாவை, மங்காத்தாவில் மனம் இரசிக்கவே இல்லையே. தெய்வத்திருமகள் அனுஷ்கா மீது இப்போதும் ஓர் ஆசை இருக்கத்தான் செய்கிறது. இந்தப்படத்தில் இப்போதைக்கு அனுஷ்கா அதிகம் அழகில்லை. ஆனால் பாகம் - 2 ல் அழகாகத் தெரிவார் போல இருக்கிறது. அதற்கான காத்திருப்பின் மனவலியை போக்குவதற்கு என்று ஒரு பெண் இருக்கிறாள். அடடா மழைடா...அட மழை டா.....ஆகா... தமன்னா. தமன்னா என்றாலே விருப்பம்  என்றுதான் பொருள். அருவியின் சாரலில், அங்கங்களின் அழகில், வானத்திலிருந்து தேவதை ஒன்று வந்து இறங்கியதைபோல, இது இதெல்லாம் இப்படி இருக்கவேண்டும் என்று அளவு சொல்லி செய்த பதுமை போல.... மனதிற்குள் மயிலிறகு கொண்டு தடவுகிறது அக்காட்சி. புலன்களில் செவிக்கு அதிகக்குறட்பாக்கள் செலவிட்டிருக்கும் அய்யன், இருந்திருந்தால் கொஞ்சம் கண்களுக்கும்  எழுதி வைத்திருப்பார் என்பது என் எண்ணம். திரையிலே பார்க்கும்போது மேனி சில்லென்று சிலிர்க்கிறது ஒரு கணம். ராஜமௌலி என்றாலே அரசர்கள் தரிக்கும் மணிமுடி என்றுதான் அர்த்தம். அதை அப்படியே காட்டியிருக்கிறார் தன் இயக்கத்தில். தனக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும், குறிப்பாக தெலுங்குக் காரர்களுக்கும் மணிமுடி சூட்டிவிட்டார் இயக்குனர் என்றே சொல்லவேண்டும்.
கதையா...அது யாருக்கு புரிகிறது?. இந்தக்கட்டுரையின் தலைப்புப்படத்தில் இருக்கும்  குழந்தை யாருடையது என்று ஒருமுறைப் படம் பார்த்த யாரும் இதுவரைக்கும் சொல்லவில்லை. இரண்டாம் பாகத்தில் கதை முழுக்க தெரியவரலாம். எல்லாமே பெரிதாக இருக்கும் இப்படத்தில் கதை கொஞ்சம் சின்னதாக இருந்தால்தான் என்ன?. அந்த பாடல் ஒன்று தேவையில்லாமல் இருப்பதாகவும், தென்னிந்திய சினிமா என்று அப்பாடல் அடையாளம் போடுவதாகவும் சிலர் சொன்னார்கள். அதற்கென்ன?. இரசிகர்கள் பலவகை. எல்லோருக்கும் ஏதேனும் இருக்கவேண்டும். இல்லையென்றால் உத்தமவில்லன் மாதிரி படம் எடுத்துவிட்டு ஒழுங்காக ஓடவில்லையே என்று கவலைப்படலாம்.
இடைவேளைக்கு அப்புறம் ஒரே சண்டைமயமாக இருந்தாலும், அதன் தந்திரங்கள், போர்முறைகள், துல்லியமான காட்சிகள் வியக்க வைக்கின்றன. சிலர் நீளமாக இருக்கிறது என்று குறைபடவும் செய்கிறார்கள். பாகுபலி என்றதும் எனக்கு சிரவனபெலகொலாவில் சிலையாக நிற்கும் கோமதீச்வரர்தான் நினைவுக்கு வந்தார். அதற்கான ஒப்பீடுகள் எல்லாம் இரண்டாம் பாகம் வந்தால்தான் தெரியும்.
நண்பர் ஒருவர் முந்தநாள் சொல்லிக்கொண்டு இருந்தார், இந்தப் படத்தின் முதற்பகுதி பார்த்தவர்கள் கட்டாயம் இரண்டாம் பகுதியும் பார்ப்பார்கள் என்று. நமக்கு அந்த கட்டாயம் பொருந்தாது. ஏன்?. ஏனென்றால் நான் முதற்பகுதியையே பார்க்கவில்லையே. அப்புறம் என்ன விமர்சனம் எழுதுவது?. படம் பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டுமா என்ன?. அப்படி ஒன்றும் அவசியம் இல்லை. கண்ணை விட காதே பெரிது என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே?. கேள்வியால் தோட்கப்பட்ட செவி தந்த வினைதான் இவ்விமர்சனம். இன்னும் நிறைய படம் குறித்து எழுத எனக்கு இருக்கிறது. படம் பார்க்காமல் அப்படி அதிகம் எழுதுவது நல்லதில்லை. ஆதலால் விடை பெறுகிறேன். வாழ்க.  ஆர்.பார்த்தசாரதி. 26.07.2015