Friday 16 August 2013

ஜெயமோகனின் அறம்.

மூவுலகையும் ஒரு குடைக்கீழ் வைத்தரசாளும் முப்பந்தல் இசக்கியம்மனின் மலரடிகள் சரணம்.

அறம் –ஜெயமோகன்.

அன்பிலதனை அறம்.

 அறிமுகம்.-        புதிய இலக்கியப்பெருங்கதைகள் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஜெயமோகனை வாசிக்கவில்லை என்று சொன்னால், அவர் ஒரு வாசகர் என்பதையே இன்றைய இலக்கியவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த அளவுக்கு தன் எழுத்தின் திறத்தால் அவ்வுலகில் தனித்தன்மை மிக்க ஆளுமை ஜெ. அவரை அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் எனக்கு எப்படி அறிமுகமானார் என்பதை நான் சொல்லவேண்டும்.



பாசமிகு அண்ணன் பகத்சிங் அவர்கள், தான் வாங்கிய ‘புயலிலே ஒரு தோணி’ பெருங்கதை நூலை, சுடச்சுடத் தருகிறார். அதென்னவோ வேறு கைகள் இதுவரை வாசிக்கத் தீண்டியிருக்காத புத்தகத்தின் தாள்களைப் புரட்டுவதில் ஒரு சுகமுண்டு. ஒரு மாதிரியான மணம், சடசடக்கும் தாள்கள் என்று பல காரணங்கள். கைகள் கூட தன்போக்கில் கொஞ்சம் மென்மையாகவே கையாளும் புதுநூலை. பழைய புத்தகத்தின் தாள்கள் இணைந்திருந்தால், அதைப் பிரிக்க வாய் எச்சிலை அந்த தாளின் நுனியில் எந்த தயக்கமும் இல்லாமல் விரல்களைத் தடவச்சொல்லும் மனது , புதியவற்றை மெல்லக் காற்று ஊதிப் பிரிக்கச்சொல்லும். வாங்கியபோது இருந்த வாசிப்பு வேகம், அதை வாசிக்க வாசிக்கக் குறைந்துபோனது. வீட்டில் தரும் இஞ்சிசொரசத்தை வேகமாக நேராக தொண்டைக்குள் ஊற்றச்சொல்லும் நாக்கு, சுவைமிகுந்த பண்டம் ஒன்றை மெல்ல சுகிக்கச்சொல்வது போல. ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள காலம் அதிகமாக எடுத்துக்கொண்டது அறிவு. அந்த நூலை வாசித்தது குறித்து ஒரு கட்டுரை எழுதிவிடவேண்டும் என்று அப்பொழுதே நினைத்திருந்தேன். ஆனால் நடக்கவில்லை. சிலசமயம் அப்படி ஆகிவிடும். நான் எழுத நினைத்துத்  தவறிய கட்டுரைகள், சிறுகதைகள் எண்ணிப்பார்த்தால் ஏராளம் இருக்கலாம். ஒருமுறை தனிமையான பேருந்து பயணத்தின் போது, ஏகத்துக்கும் வெண்பாக்கள் தோன்றின. ‘அது தன்போக்கில் ஊறும், யாரும் எழுதுகிறேன் எனச் சொல்லி எழுதமுடியாது’ என்று கவிதை குறித்து ஷெல்லி சொல்வான். அப்படித்தான் சிறுகதை, கட்டுரைக்கான சிந்தனைகளும் கூட. தோன்றும்போதே எழுதினால்தான் உண்டு. இல்லையென்றால் காலம் அதை காவு வாங்கிவிடும்.


அதில் இரண்டு கதைகள் இருந்தன. இன்னொன்று ‘கடலுக்கு அப்பால்’. எழுதியவர் ப.சிங்காரம் ஐயா அவர்கள். வெளிநாட்டில் இருந்தபோது எழுதியிருக்கிறார். அவர் இறந்தபிறகு அதை மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள் தமிழினி பதிப்பகத்தார். அந்த கதைகள் குறித்த கருத்துரையை அதன் நிறைவில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் நூல்களில் இந்த அணிந்துரை, பதிப்புரை, ஆசிரியர் உரை எல்லாம், முதலிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கும். அதனால் அதில் இருக்கும் ஆசிரியர் குறித்த புகழுரைகள், அதையே அவர் மறுக்கும் பெருந்தன்மை, அவையடக்கம்  எல்லாவற்றையும் நூல் வாசிப்பில் இருக்கும் ஆர்வம் தரும் உற்சாகத்தால் கடந்து வந்துவிடலாம். நான் ஏற்கனவே நூல் வாசித்த களைப்பில் இருக்கிறேன். அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியது ஜெயமோகனின் உரைநடை. அதனால் எனக்கு ஜெயமோகனைப் பிடிக்காமல் போனது. தனக்கு தெரிந்த மொழியைப் பேசுவதில் என்ன பலனிருக்கமுடியும்?. வாசிப்பவனுக்கு அது புரியுமா என்று சிந்திக்கவேன்டாமா? என்று நான் நினைத்தேன். அதனால் ஜெ. வை அதற்கப்புறம் நான் அதிகம் தேடவில்லை.


இந்நிலையில் ஈரோட்டில் புத்தகத்திருவிழா வருகிறது. நினைத்த மாத்திரத்தில், தோளில் பையைத் தூக்கிப்போட்டுக்கொண்டுப் புறப்பட்டுப்போகும் வாய்ப்பிருந்த காலம் அது. இப்போதெல்லாம் நினைப்பே வருவது இல்லை. ஆற்றினுள் மூழ்கும் போது இருக்கும் வெள்ளம் வேறு, எழும்போது தழுவியோடும் வெள்ளம் வேறு. கால இடைவெளியில் உள்ளமும், விருப்ப வெள்ளத்தை ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறது. இயலாமை குறித்து அதுவே புரிந்துகொண்டு அடக்கிக்கொள்கிறதா இல்லை, பருவமாறுபாட்டில் அது விரும்பியதை, அளவுக்கு அனுபவித்து திருப்திகொண்டதா என்பது புரியாதது. இரண்டுநாட்கள் சென்னையில் சேக்கிழார் விழாவில் கலந்துகொண்டபிறகு, ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தேன். சில பயணங்கள் மனதைத் தொடர்ந்து மகிழ்வாகவே வைத்திருக்கிறது. சிலவை ஆதி, அந்தம், நடு என்று எங்காவது கொஞ்சம் கலக்கத்தை உண்டாக்கிவிட்டு, பயணம் முழுக்க அதையே நினைக்கவைத்துவிடும். நான் பகலில் தெய்வத்திருமகள் படம் பார்த்தேன். இரவில் தமிழருவிமணியன் பேசுகிறார். நான் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன் நண்பர்களே...அப்படி ஓர் உரையை என் வாழ்நாளில் அதுவரை நான் கேட்டதேயில்லை. உள்ளத்தில் உண்மையில்லாமல் சொல்லலங்காரம் செய்பவர்களின் பேச்சுக்கள் ஒருபோதும், கேட்பவனின் அறிவுக்குள் புகாது. இரண்டரை மணிநேரம் நான் என்னை மறந்துபோய் உட்கார்ந்திருந்தேன். உடல் என்ற ஒன்றின் இருப்பே எனக்குத் தெரியவில்லை. தரையில் இருந்து சற்று உயரே மிதப்பது போல, உடல் எளிதாக உணரப்பட்டது என்னால். சடார்..சடாரென்று அறிவுக்கதவுகள் திறந்துகொண்டே இருந்தன. எதைக் கேட்கிறோம் என்பது குறித்து கேள்வியின்பம் தீர்மாணிக்கப்படும். கேள்வியினால் வரும் தியானம் அது. 415 வது குறளுக்கு இலக்கணம் அந்த உரை. அதன் பதிவு தமிழகம் முழுக்கக் கிடைக்கிறது இப்போது.  பேச்சை நிறைவு செய்யும் நேரத்தில் சொன்னார். ‘ஜெயமோகனின் இன்றைய காந்தி வாங்கி படியுங்கள்’ என்று, தொடர்ந்தாற்போல் ‘நான் ஜெயமோகனுக்கு விளம்பரமுகவர் இல்லை’  என்றார்.


கூட்டம் சிரித்து அடங்கியது. நான் சிந்தித்துக்கொண்டேன். கூட்டம் முடிந்தவுடன் நேர தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுவிட்டேன். ஒருமாதிரி அறிவுமயக்கம் வந்து நடையைத் தள்ளாடச் செய்தது. போதுமென்று தோன்றியது. பின்னர் ஒருமுறை மதுரையில் புத்தக்கத்திருவிழா. பங்காளி என்னைத் தமுக்கத்தில் இறக்கிவிட்டுச் சென்றான். கையிலிருந்த காசுக்கெல்லாம் வாங்கியபிறகு தமிழினியின் கடை வந்தது. ‘இன்றைய காந்தி இருக்கிறதா’?. ‘ஒன்றே ஒன்று இருக்கிறது. எத்தனை வேண்டும்?, அதிகம் வேண்டுமென்றால் நாளை கிடைக்கும்.’ ஒன்றுதான் வேண்டும் எனக்கு. பணப்பையைத் திறந்தேன். இல்லை. பறிபோய்விடக்கூடாது என்றொரு பரிதவிப்பு உள்ளம் முழுவதும் இருந்தது.   வாங்கிய புத்தகங்கள் அத்தனையையும் அவர்களிடம் அடகு வைத்துவிட்டு, எனக்காக இன்றையகாந்தியை வைத்திருக்கச் சொல்லிவிட்டு, சற்று தொலைவு நடந்து, வங்கியின் தானியங்கி எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு வந்தேன். மெல்ல வாசிக்கத் தொடங்கினேன். மனிதன் என்னைக் கவர்ந்துவிட்டார். எழுதப்பட்டிருந்த வாழ்வுக்குச் சொந்தமான மனிதனின் சரித்திரம் குறித்து, அவருக்கு இருந்த பார்வையால், நான் இழுக்கப்பட்டேன். ஜெயமோகனின் மீது எனக்கிருந்த மதிப்பீடு  அப்படியே மாறிப்போனது.  வெறும் அலங்காரச்சொற்களால் பக்கங்களைக் கடத்தாமல், ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கும்படி பார்த்துக்கொண்ட அவரது எழுத்துநடை என்னை ஈர்த்தது. நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் இன்றையகாந்தியை வாங்கிப் படிக்கசொன்னேன்.


இதைப்போலவே இந்த நூலை பதிப்பித்திருக்கும் வம்சி பதிப்பகம் குறித்தும் சொல்ல எனக்குக் கொஞ்சம்  இருக்கிறது. பவா.செல்லத்துரையின் சிறுகதைகள், கட்டுரைகள் குறித்து என்றாவது எழுதும் காலம் வந்தால், அங்கே அதைப்பேசலாம். ஒரு அற்புதமான ஆளுமை அவர். ஒருமுறை அவருடன் அலைபேசியில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கனிந்தது. கனிவான குரல் அவருக்கு. அந்தக் குரலை வைத்துக்கொண்டு அதட்டும் தொனியில் பேசவே முடியாது. அது ஆண்டவன் கொடுக்கும் வாய்ப்பு. அண்மையில்கூட அவரது ’19 டி.எம். சாரோனிலிருந்து’ வாசித்தேன். அதில் பாலகுமாரன், ஜெயமோகன் குறித்து கருத்துப் பதிவிடும் இடம் என்னை வியக்கவைத்தது. நான் பாலகுமாரனை அப்படி நினைக்கவே இல்லை. பொற்றாமரை யின் விழாக்கள் இரண்டில், எனக்கு அடுத்தாற்போல அமர்ந்திருந்தார் அவர். அப்போதெல்லாம் இது எனக்கு தெரியாது. இல்லையென்றால் உண்மையில் பேசிக் கேட்டிருப்பேன். காவற்கோட்டம் பெருங்கதையை, இராமகிருஷ்ணன் ஆயிரம் பக்க அபத்தம் எனச் சொல்ல, அது சாகித்யஅக்காடமி விருதை அள்ளிக்கொண்டு வந்து நின்றது. அதெல்லாம் பிறழ்பார்வைகள். ஆனைகளே மறக்கவேண்டிய தன்னடி சறுக்கிய காலங்கள்.... இனி நூலுக்குள் செல்வோம். தப்பித்தேன்...  கேள்வியைப்போலவே சொல்வதும் ஓர் இன்பம் பாருங்கள்.....கலைஞானி கமலஹாசன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். நான் துய்த்த வாழ்க்கை முறையை, யாரேனும் நேர்பட சொன்னால் எனக்கு பிடித்துப்போகும். பிரியாமணியும், லெட்சுமிமேனனும் கூட இந்த வரிசையில் உண்டு. நீங்களும் வெல்லலாம் ஒருகோடியில் வந்து கமல் சொன்னார், இந்த நூலை வாங்கிப்படியுங்கள் என்று. எப்போதும் போல கிழக்குப்பதிப்பகம் மின்னஞ்சல் அனுப்புகிறது. நான் அந்த கொக்கியைத் தொடர்ந்து சொடுக்குகிறேன். என் வீட்டு அலமாரியில் அறம் வந்தமர்கிறது.


நூல்முகம்.-      வாசிக்கத் தொடங்கிய காலம்தொட்டு இன்றுவரை எனக்குள் ஒரு வினா வந்துபோகும். எதற்காக நான் வாசிக்கிறேன்?. இளவயதில் வீட்டில் அப்பா வாங்கிப்போட்ட புத்தகங்களுக்குள் என்னை பொருத்திக்கொண்ட தொடக்க காலங்கள் எதையும் எதிர்பார்க்காதவை. ஆனால் என்னையறிமாலேயே நான் எதையோ தெரிந்துகொண்டிருக்கிறேன். பொழுதுபோகாமல் நான் வாசித்த மகாபாரதமும், இராமாயணமும், அதற்குப் பிறகான எனது பொழுதுகளை சீர்படுத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது உண்மையில் எனக்கு பொழுது போதவில்லை. இதற்கென்று தனியே நேரம் ஒதுக்கி படிக்கிறேன். ஒருமுறை ஞானி திருப்பூரில் ஒரு கூட்டத்தில் சொன்னார். புத்தகவாசிப்பு கூட ஒரு போதைதான் என்று. ஒருவேளை அப்படித்தானோ என்று நான் ஐயப்பட்ட காலங்கள் கூட உண்டு. அறிவை மழுங்கச்செய்வதற்கும், கூர்தீட்டுவதற்கும் ஒரே பெயர் இருக்கமுடியுமா?. நான் அதை ஏற்றுக்கொண்டவனில்லை.


நான் இதுவரை வாசித்த அனைத்திலும் கண்டுகொண்டதுதான் என்ன?. அப்படி ஏதாவது இருந்தால் அதைத்தேடியிருக்கலாம் நம் மனதென்று, நாமே நினைத்துக்கொள்ளலாம். நான் இரண்டு நெடுங்கதைகளைச் சிந்திக்கிறேன். நெடுங்குருதியையும், ஆழிசூழ்உலகையும் உள்நின்று இயக்கியது எது?. வெறும் கதை மட்டும்தானா அவை?. என்ன தெரிந்துகொண்டேன் நான்?. நாகு ஏன் அப்படி கொல்லப்பட்டான்?. ரத்னாவளிக்கு ஏன் இப்படி ஒரு நோய்?. வியாகுலம்பிள்ளைக்கும் ஜஸ்டினுக்கும் ஏன் இப்படி ஒரு முடிவு?. இருக்கட்டும். வசந்தா ஏன் கஷ்டப்படுகிறாள்? சுந்தரி டீச்சர் மகனுக்கு ஏன் நல்ல பெண் வாய்க்கவில்லை?. கதையை வாசித்து முடித்தபின்னர் இப்படி சிந்தித்துச் சிந்தித்திருப்பேன். காலப்போக்கில் எனக்குக் கதை முழுமையும் நினைவில் இருக்காது. பல பெயர்கள் மறந்துபோகும். உள்ளத்தை உலுக்கிப்போட்ட சில நிகழ்வுகள் தவிர்த்து எதையும் மனது அடிக்கடி அசைபோடாது. ஆனால் ஒன்று மறக்காது. அதுதான் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை. அறம். அப்பா சொல்வார்கள். ‘ச்சாரு....கொள்ளையடித்தால் நன்றாக வாழலாம் என்று காட்டுவதற்கு உதாரணம் அதிகம் கிடைக்கும். ஆனால் நேர்மையாளன் வாழ்வான்  என்பதற்கு அத்தனை கிடைப்பதில்லை. ஏனென்றால் இங்கே வாழ்க்கை என்பதின் பொருளே பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அதனால்தான் முன்னது எளிதில் நம்பப்படுகிறது.’ என்பார். வாழ்வின் கால அளவு நம்மால் சரியாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. தற்காலிகம், நிரந்தரம் என்பதின் இன்பஅளவீடுகள் நமக்குத் தெரியவில்லை. ஆனால் தீமை வழக்கொழியும் என்பதையும், நன்மை வாழ்வாங்கு வாழும் என்பதையும் நாம் வாசிக்கும் நூல்கள் நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். அதனால்தான் புத்தகம் நல்ல நண்பன் என்று சொல்லப்படுகிறது. வாசிக்கும் ஒவ்வொரு நூலுக்குள்ளும் இந்த அறம் நின்று விளையாடுகிறது. நாம் வாசிப்பதென்ன, கற்பனையில் புனையப்பட்ட கன்னித்தீவா?, இல்லை மகேந்திரபுரி மன்னனின் கதையா?. நடைமுறை நிகழ்வுகளும், அதைச்சுற்றிப் பின்னப்படும் சிந்தனையும்தானே?.


எல்லா நூலும் அறம்தான் சொல்கிறதா?. பிரின்ஸ் சும், மெயின் கேம்ப் பும், மகாவம்சமும் அறம் சொல்கிறது என்று சொன்னால் அது நம்பப்படுமா?. நாம் என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும், உண்மையறிவுதான் மிகும் என்கிறானே நம் பாட்டன், அது எந்தக் கணக்கில் சேர்த்தி?. இந்த உண்மையறிவு என்பதென்ன?. அறத்துப்பாலில் ஊழியல் என்றொரு இயல் வைத்து, அதில் ஒரேயொரு அதிகாரம் மட்டும் வைக்கிறான் வள்ளுவன். அந்த அதிகாரத்தில்தான் இந்தக்குறளை எழுதுகிறான். ஆனால் ஊழின் மூலம் எது?. சொந்தக்காரன், நா ம் வளமாக வாழும் வரைக்கும் நம்முடன் இருப்பான். நல்ல மனைவி வீதி வரைக்கும் இருப்பாள். ஆசைஆசையாய் வளர்த்த அப்பா என்று, நாம் இறக்கும் காலத்தில், நம்முடன் இறக்கப்போகிறானா நாம் வளர்த்த மகன்?. கிடையாது. அவனுக்கொரு கடமை உண்டு. அதுவரைக்கும் வருவான். அதற்கப்புறமும் நாம் தனியாகப் போவதில்லை நண்பர்களே.... நம்முடன் இரண்டு வரும். ஒன்று பாவம், இன்னொன்று புண்ணியம். இதுதான் ஊழ். அந்த உள்ளறிவுதான் நாம் எதை வாசிக்கவேண்டும் என்பதைத் தீர்மாணிக்கிறது. குமுதம் வாசிப்பதோடு நாம் நிறுத்துகிறோமா, இல்லை குறள் படிக்கப்போகிறோமா என்பதை ஊழ் தீர்மாணிக்கும். அந்த ஊழை எது தீர்மாணிக்கிறது?. நாம் அதற்குத் தகநிற்கும் கல்வி. இஃதோர் காலச்சுழற்சிமுறை.


உலகநாடுகள் அனைத்தின் பாராளுமன்றத்திலும் எழுதவேண்டிய வரி ஒன்று நம் இலக்கியத்தில் இருக்கிறது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்று சிலம்பில் பதிந்தவன், அரசியல் எனும் பொருட்துறையைத் துறந்து, அறங்களில் முதன்மையானதை மேற்கொண்ட மனிதன். இளங்கோ எனும் பெயர்கொண்ட துறவி. அதெப்படி நடக்கும் என்று நமக்கே ஐயம் வருகிறதல்லவா?. இலக்கியத்தில் ஓர் உதாரணம்  காட்டிவிட்டால் போதுமா?. இலங்கையில் நடக்குமா இப்போது?. கோடி கோடியாகக் கொள்ளையடித்து மாடிவீடுகள் பலகட்டி வாழும் மனிதனுக்கு என்ன குறை வந்திருக்கிறது?. அவனைத்தானே உலகம் கொண்டாடுகிறது?. பிழைக்கத்தெரியாத பயல் என்பதுதானே உண்மையாக வாழ நினைக்கும் மனிதனுக்கு நாம் வைத்திருக்கும் பெயர்?. இதெல்லாம் பொய் என்று சொல்லும் நிலையில்தான் இன்றைய உலகின் நிகழ்வுகள் இருக்கிறது. ஏன் தெரியுமா?. வாழ்வின் கால நீளத்தை நாம் புரிந்துகொள்ளவில்லை. மேலைநாட்டுப் பண்பாட்டுக்குள் சிக்கும் நாம், மெல்ல அதன் சமயக்கோட்பாட்டுக்குள்ளும் நுழைந்துகொள்கிறோம். அனைத்தையும் குறுகிய காலத்தில் அனுபவிக்கவேண்டும் எனும் நுகர்வு வெறி நம்மை தீண்டி நிற்கிறது.  ஆகம, அனுமானங்களை விட்டுவிட்டு வெறும் காட்சி நியாயத்துக்குள் நாம் நிற்கிறோம். ஆனால் அறம் கூற்றாகும் என்பதில் எனக்கு இருகருத்து இல்லவே இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம் எனும், திருவிவிலிய வரிகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். அப்படி வருவது நல்லது. இல்லையெனில் இறைமகன் அவதரித்ததற்கு என்ன பொருள்?. ஆனால் எனக்கு சின்ன மாற்றுக்கருத்து உண்டு இதில். ஒரே நேரத்தில் வழங்கப்படுவது அல்ல அந்த ஊதியம் என்பதுதான் அது.


ஆமாம். எது அறம்?. சிலர் திருக்குறள்தான் அறம், நாலடியார்தான் அறம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியானால் கடைச்சங்க காலத்திற்கு முன்னர், அறம் இல்லையா?. அதை வகுக்க முனைந்தவர்கள் தமிழர்கள். கற்றறிந்தவர்கள் தனக்குத் தவறென்றுத் தெரிவதை அடுத்தவனுக்குச் சொல்லாவிட்டால், அவன் படித்தென்ன விளைவு?. இப்போதெல்லாம் சொன்னால், கெட்டித்தனம் காட்டுகிறான் என்பார்கள். எனக்கு வள்ளுவத்தைவிடவும் அறம் சொன்னதில் நாலடியார் பிடித்திருக்கிறது. அது இயல்பாக நேரிசை வெண்பாக்கள் மீது எனக்கிருக்கும் பிடிப்பு மூலமாக இருக்கலாம். ஆனாலும் நான் வள்ளுவனைப் பிடித்துக்கொண்டே வருகிறேன். அறத்துப்பாலில் நான்கு இயல். முதலில் பாயிரவியல். இதில்  இறைவணக்கம், வான்சிறப்பு, நீத்தார்பெருமையோடு நிற்காமல், அறன் வலியுறுத்தல் என்றொரு அதிகாரம் வைத்திருக்கிறார். இறைவணக்கம், அவையடக்கம், கருத்துரை இதுதான் இலக்கியங்களுக்கான பாயிரவியல் வரைமுறை. பொருள், இன்பம் குறித்து எழுத புகுந்தாலும், இவற்றிற்குள் நின்று, நான் பகரவிருப்பது அறமே என்பதுதான், அறன் வலியுறுத்தல் பாயிரவியலிலேயே வரும் காரணம். அறத்துப்பாலிலேயே  நிகழ்வாழ்வின் அறத்தைத் தேர்ந்தெடுக்கும் , எதிர்வாழ்வின் அறத்தைத் தீர்மாணிக்கும் என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் ஊழை, ஓர் அதிகாரமாக்கி நிறைவில் வைக்கிறார். இவையிரண்டுக்கும் இடையில் அறம் நிற்கிறது. அறத்தை இரண்டாகப் பிரிக்கிறார் வள்ளுவர். ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம். இல்லறத்தை முழுமையாக அனுபவித்தவன் தான் துறவியாகமுடியும் என்பது அவரது எண்ணம். அதனாலே துறவறம் அடுத்ததாயிற்று.


அறம் எவ்வளவு எளிதாக இருக்கிறது?. ஒன்று திருமணம் செய்துகொண்டு துணையுடன் வாழ்வது, இன்னொன்று அதைத் துறப்பது. இதற்குத்தானா இவ்வளவு பேச்சு?. இங்கே எல்லோரும் அறம் செய்துகொண்டுதானே இருக்கிறோம்?. என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால் எது இல்லறம் என்பதற்கு இலக்கணம் சொல்கிறான் பாருங்கள் வள்ளுவன், மிரண்டு போகிறோம் நாம். சிலவற்றை கடமையாகச் சொல்கிறான். செய்யவில்லையென்றால், என்ன நடக்கும் என்பதுதான், இந்த கட்டுரையின் தலைப்பும், நூலின் தன்மையும். அறம் செய்ய விரும்பவேண்டும். அவ்வை சொல்கிறாள். அஃதோர் அறிவுரை. நமக்கு அது பிடிப்பதில்லை. விரும்பாவிட்டால் என்னாவோம் என்று நமக்குத் தெரியுமா?. அறம் இரண்டு நிலைப்பாடு கொண்டது. ஒன்று மனம், வாக்கு, காயம், எனும் மூன்றாலும், செயப்படுபவையின் தன்மையை எடைபோடும் அளவீடுகளில் அதுவும் ஒன்று. இன்னொன்று கூற்று. தமிழ் எமனை அறக்கடவுள் என்றே சொல்கிறது பாருங்கள். அதனால்தான் இது அமுதமொழி.


இந்தக் கட்டுரையின் தலைப்பாக இருக்கின்ற அன்பிலதனை அறம் என்பதை ஈற்றடியாகக் கொண்ட குறளின், பொருளை விளங்கினால், அறம் என்ன செய்யும்?, அதை எப்படிச் செய்யும்?, என்பதை நாம் விளங்கிவிடலாம். அறத்தின் செயல்பாட்டை விளக்க, வான்புகழ் வள்ளுவன், மிகச்சரியானதொரு உதாரணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். வெயிலில் உடலைக் கருக்கிக்கொள்ள வேண்டும் என்று எலும்பில்லாத உயிர்கள் வெயிலில் ஊர்வதில்லை. அதைக் கருக்கிவிடவேண்டும் என்று கருதி கதிரவனும் வருவதில்லை. வெயில் ஒளியாக அறியப்பட்டாலும், அதனுள் நின்றியங்கும் வெம்மைதான் இச்செயலை நடத்துகிறது. காரணம் எளிதில் அறியப்படாமல், இந்த காய்தல் நடக்கிறது. என்பில்லாததை வெயில் காய்ப்பது போல, அன்பில்லாததை அறம் காய்க்கும் என்ற வள்ளுவனின் வரிகளில், உள்ளீடாக உணர்ந்துகொள்வதற்கு நிறைய இருக்கிறது. அதுதான் அறியப்படாத அறத்தின் செயல்பாடு.


அன்புதான் அறத்தின் மூலம். அன்பினுடைய விளைவுதான் அறம். அந்த அறத்திற்கு ஒரு வலிமை இருக்கிறது. அது தன்னை விளைவிக்காத செயலின் மூலத்தை, அந்த  வலிமையினால் வாட்டுகிறது. ஊழின் வலிமை அதைவிடவும் பெரியது. அதனால்தான் அதை அறத்தின் நிறைவில், பொருளுக்கு முன்னால் கொண்டுவந்து புகுத்துகிறான் நம் பாட்டன். அதைப் பெருவலி என்கிறான். ஆனால் அந்த பெருவலியின் மூலம் கூட, பிறவிஇடைவெளி வினைகள்தாம். மேலும் வளர விரும்பாத நிலையில், வாழ்வின் நிறைவில் அது வெளிப்பட்டு, தன்னைக் கரைத்து, உயிரை தெய்வநிலைக்கு  உய்விக்கிறது. பகவான்ரமணமகரிஷியின் புற்றுநோயும், பசும்பொன்தெய்வத்தின் வெப்புநோயும், அந்த பெருவலியின் கழிவே.


தமிழுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கமுடியுமா?. அறம்பாடுதல் எனும் இலக்கணம் மற்ற மொழிகளில் உண்டா?. இருக்குமென்று நான் நினைக்கவில்லை. தமிழ்படித்தவனுக்கு, துரோகம் இழைப்பவனைத் தண்டிக்க, தமிழே ஆயுதமாகும். தானே அவனுக்கு புலமை கொடுக்கிறது. ஏழையாயிருக்கும் புலவன் எமாற்றப்பட்டால், எதை வைத்து அவன் போராடுவான்?. வாசிக்கும்போது எனக்கு கண்கள் கலங்கிப்போயின. மனதுக்குள் ஒரு நிம்மதி வந்து குடிகொண்டது. அப்படி நடக்கவில்லையென்றால், வெண்றாமரை மீதமர்ந்து வீணை வாசிக்கும் கலைமகள் வேசித்தனம் கொண்டவளென்று பொருள் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.


தரணி முழுக்க தர்மம் கெட்டுக்கிடக்கும் காலமிது. எது தர்மம் என்பதில் எப்போதும் குழப்பம் நமக்கு. பிறவியின் பருவமாறுபாடுகள், தொழிலின் தன்மைகள் கொண்ட பிரிவாக தர்மத்தை நமக்கு தமிழ் போதிக்கிறது. இந்த பாகுபாட்டுக்குள் நாம் நிற்கும் இடம் குறித்தே நமக்கான தர்மம் தீர்மாணிக்கப்படுகிறது. செயல்கொண்டு அல்லாமல், செயலின் மூலம் கொண்டு, அதன் விளைவுகொண்டு அது கணிக்கப்படவேண்டும். பிழையாய் நாம் அறத்தைப் புரிந்துகொள்கிறோம். சில வினைகளையே அறமல்லாததென்று அறிகிறோம். அது தவறு.


தனது ஆளுமைக்குட்பட்ட சீமையில், பிறந்த குழந்தையொன்றுக்கு முடிசூடும்பெருமாள் என்று பெயர்சூட்டப்பட்டதை அறிந்து, அரசு, அந்த பெயரை விலக்கச்சொல்லி ஆளனுப்புகிறது. முத்துக்குட்டியான முடிசூடும்பெருமாள், இன்று அய்யா வைகுண்டராகி, ஆளும்வர்க்கத்துக்குக் கூட அருள்பாலிக்கும் நிலைமைக்குள் நின்றியங்குகிறது அறம்.


தன்னைநோக்கி தவித்து வந்த, புறாவின் உயிர்காக்க, தன் எலும்பைக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் செயலுக்குள் இருக்கிறது அறம். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பது வள்ளுவனின் வாக்கு.
வெறுமனே வாசிக்காமல், அதை எழுதியவன் நினைத்தது நமக்கு சிக்குமானால், வாசிப்பில் பொருளிருக்கும். இந்த சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதைக்குள்ளும் நின்று ஜெயமோகன் சொல்ல நினைப்பதென்ன?. சில தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்கிறதே பாத்திரங்கள்?, அதற்கென்ன காரணம்?. செய்வது தவறென்று தெரிந்திருந்த காரணத்தால். ஔவை அழகாகச் சொல்வாள், அறம் செய விரும்பென்று. அறத்தின் தன்மையை முதலில் அறிந்துகொள்ளவேண்டும். பின்னர் அதைச் செய்ய விரும்பவேண்டும். அஞ்சுவது அஞ்சல் மடவார்தொழில் எனும் வாய்மொழிக்கு ஏற்ப, ஓர் அச்சம் நமைத் தொற்றிக்கொள்ளும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் தொடக்கம் என்று வேதாகமம் சொல்லும். ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளில் முதன்மையானது இறையச்சமே என்று திருக்குரான் சொல்லும். இறைவனே அறத்தின் வடிவம். சைவத்தில் இடவாகனம் அறத்தின் குறியீடு. அறத்தின் மீதர்ந்து அரன் ஆட்சிசெய்கிறான். அறவாழி அந்தணன் என்று வள்ளுவன் சொல்லவில்லை?. அச்சத்தின் விளைவால் காலப்போக்கில் அந்த விருப்பம் நமையறியாமலேயே செயல்படுத்தப்படும்.


எனக்குப் பிடித்த பதிவுகள் குறித்து நான் எழுதும்போது, எப்போதும் பதிவின் சாயலல்லாமல், பதிவில் நான் படித்துக்கொண்ட சாயலையே தெரிவிக்க விரும்புகிறேன். எந்த இடத்திலும் கதையை நான் தொட்டுவிடவில்லை. கதை என்னை எதனால் தொட்டது என்றே எழுதியிருக்கிறேன். அது அதை படைத்தவனின் சிந்தையை ஒத்திருக்குமானால் நான் பேறுபெற்றவன். இதிகாசங்களே நமக்கு அறம் சொல்ல வந்தவைதானே. நீங்களும் வாசியுங்கள். ஒவ்வொரு கதைக்குள்ளும் நின்றியங்கும் அறத்தை அறிந்துகொள்ளுங்கள்.


நண்பர்களே.. இருவினையின் வழிநின்று அறிவுப்பொறி உயிருக்கு அமைக்கப்படுகிறது என்றாலும், மாற்றமுடியாதது அல்ல ஊழ். முன்வினையினால் ஏழையாய் வாழ விதிக்கப்பட்ட வீட்டில், தங்கமழை பொழியவைத்தானே சங்கரன், அன்புதானே காரணம். செத்தே தீரவேண்டிய சத்தியவானைக், காப்பாற்றி விடுகிறாளே சாவித்திரி, அன்புதானே காரணம். கல்வியின்மையால் அறிவிழந்தோம், அறிவில்லாததால் வளர்ச்சி இழந்தோம், வளர்ச்சியின்மையால் சொத்திழந்தோம், சொத்தில்லா காரணத்தாலே சூத்திரர்கள் ஆனோம், எனும் ஜோதிராவ்புலே யின் வரிகள் உண்மையானவை. நல்ல கல்வி அறிவை வளர்க்கும். அறிவு நல்லது கெட்டதை உணர்த்தும். அதனால் ஒழுக்கம் உண்டாகும். ஒழுக்கம் அன்பைக் கொண்டு தரும். அன்பு அருளை நோக்கி இட்டுச்செல்லும். இடையில் உண்டாகும் மருளும், தெருளும் இல்லறத்தானால் தாண்டமுடியாதது. அதனால்தான் வள்ளுவன் அன்புடமையை இல்லறவியலிலும், அருளுடமையை துறவறவியலிலும் எழுதுகிறான். பகவான் இரமணமகரிஷி, ஜெகத்குரு சந்திரசேகரேந்திரசரசுவதிசுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார், தெய்வீகத்திருமகன் பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் போன்ற துறவிகளுக்கு அருள்நிலை வாய்த்தது. நமக்கு அன்பு வாய்த்தாலே அதிகம்.


அறம் மனோவயப்பட்டது. அது அனைவரின் உள்ளத்துக்குள்ளும் இருக்கிறது. ஆனால் புறவயப்பட்டவர்களாக நாம் அகத்தின் மீதே ஐயம் கொள்கிறோம். ஐயத்தை வளர்க்கும் நோக்கிலேயே நமது கல்வியும் அமைக்கப்படுகிறது. அது நல்லதல்ல. உலகில் சடம் முதல் உயிர்ப்பொருட்கள் அனைத்திற்கும் ஓர் ஒழுங்கு இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். அந்தந்த ஒழுங்கை விட்டு அவை மாறவில்லை. ஆனால் மனிதம் மட்டும் கற்கிறோம் பேர்வழி என்று ஒழுங்கு வட்டத்தை விட்டு விலகிவிடுகிறது. ஒவ்வொருவராக, ஒருவர்பின் ஒருவராக விலகியபின்னர், ஒழுங்கை உணரும் மனிதனும் கூட, அதனுள் இயங்கமுடியாதவனாகிவிடுகிறான். சிலவற்றைக் கற்கும்போது உள்ளம் நமையறியாமல் ஓர் மகிழ்வில் திளைக்கும். அதைப்போன்றதொரு நிகழ்வை எதிர்நோக்கும். உள்ளத்தில் அறம் இருப்பதனால் வரும் விளைவு அது. நாம் பெறும் அறிவென்பது அறத்தை வளர்த்தெடுப்பதாக இருந்தால், அது நிர்மாணிக்கும் செயல்கள் நமக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும், நமை எப்போதும் மகிழ்வில் வைத்திருப்பதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. நல்லறிவு பெறுவோம். நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்போம். அறத்தின் வழிநின்று ஒழுகுவோம். இந்த சிறுகதைத் தொகுப்பை, எனது நண்பர்கள் அனைவரும் வாசிக்கவேண்டும் என மனநிறைவுடன் வேண்டி அமைகிறேன். வணக்கம்.

கணிணியில் வாசிக்கும் வழக்கம் கொண்டோர், ஜெயமோகனின் இணையதளத்தில் இக்கதைகள் அத்தனையையும் வாசிக்கலாம்.






அன்புடன்.....செல்வியின்செல்வன்.... ................................. .......