Wednesday 5 February 2014

தேசத்தின் சொத்து - தோழர் ஜீவா.

எல்லாமும் வல்ல இசக்கியம்மனின் திருவடிகளை என் மன, மொழி, மெய்களால் துதிக்கின்றேன்.


தேசத்தின் சொத்து தோழர் ஜீவா.

வாயற்ற நாய் கழுதை மலம் தின்னும் பன்றியும் வழியோடு செல்லலாமாம், மனிதர் நாம் சென்றிடில் புனிதமற்றுத் தீட்டு வந்துலகு மூழ்கி போமாம் –

      ஏன் இப்படி ஒரு காரியம் செய்தாய் என்று தன்னைத் திட்டிய தன் தந்தையிடம் இப்படித்தான் சொன்னான் அந்தச் சிறுவன். அந்த ஊரே இவன் மீது குற்றம் சாட்டியிருக்கிறது அவன் தந்தையிடம். வழிவழியாகத் தாங்கள் கடைபிடித்து வந்த நடைமுறைகளை உன் பையன் மீறப் பார்க்கிறான். அவன் செய்த காரியத்தால் நம் தெருவே அசுத்தமாகிவிட்டது என்று ஊர் முழுக்க, ஒவ்வொருவராக வந்து குறை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். கலங்கிப் போயிருந்த தந்தை, வீட்டுக்கு வந்த மகனிடம்
செய்த விசாரணைக்குத் தான் செய்த செயலை நியாயப்படுத்தும் விதமாக இப்படிப் பாடினான் அந்தச் சிறுவன். ஊர் முழுக்க தன் நற்பெயரைக் கெடுத்துக் குட்டிச்சுவாராக்கி விட்ட அந்த பிள்ளையை, அடிக்கப் போனார் அப்பா. கலங்காமல் தன் செயலைச் சரியென்று சொன்னான் அவன். முழுக்கவும் தீண்டாமைப் புரையோடிப் போயிருந்த அந்தச் சமுதாயத்தில் அவனது சமதர்மச் சிந்தனை எடுபடவில்லை. ஊரும் வேண்டாம், வீடும் வேண்டாம் என்று சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறினான். தவமிருந்து பெற்ற மகன், கண்ணெதிரே வீட்டைவிட்டு வெளியேறிப் போவதைக் கண்டு கலங்கினார் பட்டம்பிள்ளை.

ஆம். அவனை அவர்கள் தவமிருந்துதான் பெற்றார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து, சிலகாலத்திலேயே இறந்துவிட்டன. மகாபாரதத்தின் யட்சபிரசன்ன பகுதியில், தம்பிமார்களைக் காப்பாற்ற, அங்கே யட்சனாக நின்ற எமதர்மனின் கேள்விகளுக்குப் பதில்சொல்வான் தர்மன். “பெறுபவர்களுக்கு எது சிறந்தது?” என்ற  கேள்விக்கு “பெறுபவர்களுக்கு பிள்ளை சிறந்தது” என்பான். எத்தனை உண்மை இது. தனது வாழ்வு நீட்டத்தையும், பின்பு அதே வாழ்க்கையின் எச்சத்தை உலகில் விட்டுச்செல்வதிலும் விருப்பமில்லாதவர்கள் யார் இருக்கமுடியும்?. அதுவும் சமூக இறுக்கங்கள் கெட்டிப்பட்டுப் போன சூழலில், இறுக்கத்தைத் தளர்த்தும் விருப்பம் இருக்காதா  என்ன?. இறைவன் ஒருவனைத் தவிர வேறு  யாரிடம் இதை முறையிட முடியும்?. குலதெய்வமான சொரிமுத்தம்மனை சுற்றிவந்து விளக்கேற்றினாள் உலகம்மாள். அன்னை தன் அருளை ஆண்குழந்தை வடிவில் கொடுத்தாள் அவளுக்கு. அதே ஆலயத்தில் வைத்து அவனுக்கு முடிஎடுத்து காதுகுத்தி, மூக்கு வாளி பூறி, சொரிமுத்து என்றே பெயரும் வைத்தார்கள். பாசமும் நேசமுமாக வளர்த்த தவப்புதல்வனை வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு, கோபமாகத் திட்டவைத்த, அவன் செய்த செயல்தான் என்ன?.

நாஞ்சில்நாட்டின் குறிப்பிடத்தக்க விழாக்களில் ஒன்று, பூதப்பாண்டியின், பூதலிங்கசாமி அருளாலயத் தேரோட்டத் திருவிழா. தான் பிறந்த அந்த ஊரில் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறான் மூக்காண்டி என்று பள்ளிகூடத்தால் அழைக்கப்படும் சொரிமுத்து.   மனிதகுலத்திற்கு கொஞ்சமும் ஒத்துவராத மனுதர்மத்தை, பெரும்பான்மை இந்துசமுதாயம் கட்டிக்கொண்டு அழுதகாலம் அது.   அதிலும் சைவசமய ஆகம  நெறிமுறைகளைக் கடைபிடிப்பதில், திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்களுக்கு இணையானவர்கள் நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்கள். பூதலிங்கசாமி ஆலயத்தில் கொடியேறிய நாள்முதல், ஆலயத்தில் முதன்மை வாயிற்தெருவில் தெருமறிச்சான் வைக்கப்பட்டது. தெருமறிச்சானைத் தாண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது. நுழைந்தால் அவர்கள் தீட்டால், அந்த தெரு அசுத்தமாகிவிடும் என்பது கணிப்பு. யாரும் நுழைவதும் இல்லை. அதுகுறித்து பெரிதாகக் கவலைப்படுவதும் இல்லை. ஏதொ இறைவன் என்பவன் ஆதிக்கசாதிக்கு மட்டுமே ஆதரவானவன் என்பதுவும், இவர்களால் அணுகமுடியாதவன் என்பதுவும் அவர்களது நினைப்பு. ஆதிக்கசாதி தனக்கிருந்த சாதியின் சாயத்தை சாமிக்கும் பூசி வைத்திருந்த காலமது. தனது தோழன், மாணிக்கத்துடன் அங்கே வருகிறான் மூக்காண்டி. தெருமறிச்சானுக்கு மேல் வரமறுத்த மாணிக்கத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அழைத்துக்கொண்டுபோனான் சொரிமுத்து. ஊரே கொதித்து அவன் வீட்டில் உலை வைத்தது. இப்படி ஒரு ஊரே தேவையில்லை என்று புறப்பட்டான் சொரிமுத்து.

இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஏற்கனவே இப்படி நடந்துகொண்ட வரலாறு மூக்காண்டிக்கு உண்டு. இங்காவது தெருவுக்குள் இழுத்துப்போனான் மாணிக்கத்தை. முப்பெரும் கடவுள்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, திருமால், சிவன் என மூவரும் உறையும் ஆலயம் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி ஆலயம். அந்த ஆலயத்தின் முதற் பிரகாரத்தில், ஒருகையில், தன் இடுப்பில் இருக்கும், பொத்தான் இல்லாததால் முழுவதும் பூட்ட முடியாத, கால்சட்டையைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையைத் தன் தோழனும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவனுமான, சோசப் பூதலிங்கத்தின் தோள்களில் போட்டவாறு, துள்ளிக்கொண்டு ஓடினான் சொரிமுத்து. வைதீக சமூகம் முழுக்கத் திரண்டு அடித்து விரட்டியது இவனை.  கால்களிலும் கைகளிலும் காயங்களுடன் வீட்டில்வந்து படுத்தான்.

தேசத்தின் விடுதலைப் வேள்வி  கனன்றுகொண்டிருந்த அக்காலத்தில், ஒத்துழையாமைப் போராட்டம், காந்தியின் தலைமையில் தேசமெங்கும் நடந்துகொண்டிருந்தது. பக்கத்து கிராமத்தில் காந்தியவாதி நடத்திய நிகழ்வொன்றில், நெருப்பு மூட்டி, தத்தமது வீட்டில் இருந்த அந்நியத்துணிகளைப் போட்டு எரித்துக்கொண்டு இருந்தார்கள் மக்கள். கேள்விப்பட்டு ஓடிய சொரிமுத்து, தான் கட்டியிருந்த மல்லுவேட்டியை அவிழ்த்து அத்தீயில் போட்டு, கொளுத்திவிட்டு, காந்திக்கு ஜே...காந்திக்கு ஜே....என்றவாறு, கட்டிய கோவணத்துடன் வீட்டுக்கு வந்தான்.

இப்படியெல்லாம் இளவயதிலேயே தேசத்தின் விடுதலைக்காகவும், சமூகத்தின் சமதர்மத்துக்காகவும், சிந்தனையைத் தாண்டி செயல்களையும் முன்னெடுத்த சொரிமுத்துதான், தீண்டாமையைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் ஊரே வேண்டாம் என்று கிளம்புகிறான். உயிர்களின் மீதுபாசம் கொண்டவன் என்ற பொருள்படும்படி தன் பெயரை ஜீவானந்தம் என்று மாற்றிக்கொள்கிறான். சொரிமுத்து – மூக்காண்டி- இனிமேல் நமக்கு ஜீவானந்தம்.  

வெள்ளையர்களோடு போர்முறை முரணியக்கம் நடத்த எத்தனித்து, சில தீவிர நிகழ்வுகளில் பங்குவகித்து, ஒரு காலகட்டத்தில் அமைதியாகிப் போனவர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள் நம் வரலாற்றில். வங்கத்தில் வீரமுழக்கம் செய்து, வெள்ளையர்களை கதிகலங்க வைத்த, அரவிந்தகோசு, சாமியாராகி பாண்டிச்சேரியில் அமைதியாக ஆசிரமம் நடத்திய கதை நமக்குத் தெரியாதது அல்ல. அதேபோலத்தான் வ.வே.சு.ஐயர் திருநெல்வேலிக்கு அருகே, சேரன்மகாதேவியில் பாரதமாதா
 ஆசிரமம் நடத்தி, சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய ஜீவா, நேரே இந்த ஆசிரமத்தில் வந்து இணைந்தார். அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினார். ஆனால் அந்த குருகுலத்தில், பிராமணக் குழந்தைகளுக்கு தனியே உணவு வழங்கப்படுவதைக் கண்டு, வருந்தி அதையும் விட்டு வெளியேறி, காரைக்குடி பக்கத்தில் சிராவயலில், தானே ஒரு ஆசிரமம் அமைத்து, அதற்கு காந்தி ஆசிரமம் என்று பெயரும் வைத்து, அங்குள்ள சிறுவர்களுக்கு தேசபக்தியை வளர்த்து வந்தார் ஜீவா. அப்போது ஜீவா வுக்கு வயது வெறும் இருபது.

சத்தியம் என்றும், சமுதாயத்தின் தேவை என்றும், தான்கருதிய சமதர்மத்தை ஏற்கவில்லை என்பதற்காக, வீட்டை விட்டே வெளியேறிய ஜீவாவின் வாழ்வில் இதேபோன்ற இன்னொரு நிகழ்வையும் சொல்லியாகவேண்டும். வேட்டியை அவிழ்த்துத் தீயில் போட்டு, வெறும் கோவணத்துடன் வீட்டுக்கு வந்த காலத்திலிருந்து ஜீவா, கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிந்துவந்தார். காந்தியைப் பின்பற்றி, கைராட்டை சுழற்றி நூல்நூற்கக் கற்றுக்கொண்டு, அந்நியத்துணிகளை அணிவதை எதிர்த்து வந்த காலத்தில், உலகம்மை இறந்து போனாள். சொரிமுத்தம்மனைச் சுற்றிவந்து, சுமந்து பெற்றெடுத்த தாய் செத்துப்போனாள். ஜீவா மூத்தமகன். இந்துசமய நெறிமுறைகளில் மகனுக்கென்று இருக்கும் ஒரு கடமை, பெற்றோர்களுக்குக் கொள்ளிவைக்கவேண்டியது. அனைத்தையும் துறந்த ஞானிகள் கூட, துறக்காத கடமை இது. இந்தக் கணினி காலத்திலும் கூட, ஆண்பிள்ளை வேண்டுமென்று அநேகர் நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஜீவா மொட்டையடிக்கப்பட்டார். புதுத்துணி கொண்டுவந்து கட்டப்போனார்கள். பார்த்தால், மல் துணி. மறுத்தார் ஜீவா. ஊரில் உள்ள பெரியவர்கள் யார் சொல்லியும் கேட்கவில்லை. கைத்தறித்துணி இருந்தால் மட்டுமே கட்டுவேன் என்றார். வண்டிகட்டி அலைந்தது உறவுகள் கூட்டம். கிடைக்கவே இல்லை. எந்த சமாளிப்புக்கும், சரிவரவில்லை ஜீவானந்தம். தாயின் பிணத்துக்குக் கொள்ளிவைக்கும் நேரத்தில் கைத்தறித்துணிதான் கட்டுவேன் என்று அடம்பிடிக்கும் ஜீவா வின் கொள்கைப்பிடிப்பு, அவர்களுக்கு புதிதல்ல என்றாலும், கொஞ்சம் அதிசயமாகத்தான் இருந்தது. தன் தம்பியின் கையில் தீக்கொள்ளியைத் தந்துவிட்டு தள்ளிநின்று அழுத ஜீவா வை வினோதமாகப் பார்த்தார்கள் பூதப்பாண்டி வெள்ளாளர்கள்.

காந்தியைத் தலைவராகக் கொண்டு, தான் நடத்திவந்த குருகுலத்துக்கு அவரது பெயரையே வைத்திருந்த ஜீவா, காந்தியின் வருணாசிரமக் கொள்கையில் தனக்கிருக்கும் முரண்பாடுகளைக் கோடிட்டு அவருக்கு ஒரு கடிதம் வரைந்தார். தனக்கு வரும் கடிதங்கள் அத்தனையையும் படித்துப் பார்த்து, தேவையானவற்றிற்கு பதிலும் எழுதும் வழக்கம் காந்திக்கு இருந்தது. மாலை வேளையில் தன் வாசிப்புக்கு வந்த ஜீவா வின் கடிதத்தை, இரவு முழுக்கப் படித்தார் காந்தி. விடியும் பொழுதில் கைப்பட ஜீவா வுக்கு பதில்கடிதம் எழுதினார் இப்படி. “ அன்பு ஜீவா... நீண்ட நெடிய உன் மடல் முழுமையையும் வாசித்தேன். எனக்கு நானே பலவாறாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். நீ சொல்லியிருப்பதுதான் சரி....மதராசுக்கு வரும்போது உன்னை நேரில் சந்திக்கிறேன்” என்று கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.

காரைக்குடி மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார் காந்தி. “இங்கேதானே அருகில் சிறாவயலில் இருக்கிறார் ஜீவா. அவரை நான் சந்திக்கவேண்டும்”. அழைத்துவரக் கிளம்பினவர்களை மறித்தார். தானே போகவேண்டும் என்றார். ஆம், தேசம் முழுக்க மகாத்மா என்று மக்களால் வழிபடப்பட்ட மனிதர், இருபது வயது இளைஞன் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரமத்துக்கு அவனைப் பார்ப்பதற்கு தானே சென்றார்.  காந்தியை வரவேற்று, தானே கையால் நூற்ற கதராடை ஒன்றைப் பரிசாகக் கொடுத்த ஜீவாவிடம், காந்தி கேட்டார் “ ஜீவா...உனக்கு ஏதேனும் சொத்துக்கள் உண்டா?”. “இல்லை.. இந்த தேசம்தான் என் சொத்து”. “காந்தி சொன்னார்” கிடையாது, நீதான் நம் தேசத்தின் சொத்து”. சிறிது நேர
உசாவலுக்குப் பிறகு  காந்தியிடம் ஒரு கேள்வி கேட்டார் ஜீவா. “ காந்திஜி, மனிதனின் குலம் அவனது குணத்தின் அடிப்படையில்தான் தீர்மாணிக்கப்படுகிறது என்று கீதை சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?”. எப்போதும் கீதையும் கையுமாக அலையும் காந்தி “ஆம், ஏற்றுக்கொள்கிறேன் என்றார்”. “ நீங்களோ பிறப்பால் வைசியர், ஆனால் அந்தணர்களினும் செந்தண்மை பூண்டொழுகும் உங்கள் குணத்தால், நீங்கள் பிராமணர். பிறப்பால் பிராமணன் ஒருவன் தவறு செய்வானே ஆனால், அவன் சூத்திரன். இது சரியா?” கேட்டார் ஜீவா. “ காந்தி சொன்னார், இல்லை. நான் ஒழுக்கமாக இருந்தால் நான் நல்ல வைசியன், அவன் மோசமானவனாக இருந்தால் அவன் கெட்ட பிராமணன்”. சொல்லிவிட்டு காந்தி ஆசிரமத்தை விட்டு மட்டுமல்ல, ஜீவா வின் உள்ளத்திலிருந்தும் வெளியேறினார். ஜீவா எனும் மாபெரும் கொள்கைக்காரன், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினான்.

இடஒதுக்கீடு குறித்து ஏதும் பேசவில்லை என்பதற்காக, காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திலே வந்துசேர்ந்தார் ஜீவா. தொடர்ந்து தமிழகம் முழுக்க நடத்தப்பட்ட சுயமரியாதை மாநாடுகளில் சிங்கமென முழங்கினார். இனபேதம் பார்க்கும் இந்துமதத்தை வெறுத்த ஜீவா, இலக்கியக்கூட்டங்களில் எப்போதும் பேசிவந்தார். காரைக்குடியில் கம்பனடிப்பொடி கணேசன் அய்யா நடத்திவந்த, கம்பன் விழாக்களில் கலந்துகொண்டு கம்பராமாயணம் குறித்து கருத்துரைகள் வழங்கினார். தமிழ்மீதும் அதன் இலக்கியங்கள் மீதும், மதம் தாண்டி  ஜீவா பாசம்கொண்டவராக இருந்தகாலத்தில்தான், சென்னையில் மறைமலைஅடிகள் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார். வைதீகமதத்தின் கலப்பால், தமிழில் இணைந்து அதன் அங்கமாகிப்போயிருந்த வடமொழிச்சொற்களைக் களைந்து, சுத்தத்தமிழில் மட்டுமே பேசுவதுதான் அதன் கோட்பாடு. அதைத் தொடங்கிவைத்த வேதாச்சலம், தன் பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டதைப்போலவே தமிழகம் முழுக்க, பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. ஜீவாவும் மாற்றிக்கொண்டார். ஜீவானந்தம் என்று இருந்த தன்பெயரைத் தமிழில் மாற்றி உயிரின்பன் என்று வைத்துக்கொண்டார். இப்படி சொரிமுத்து-மூக்காண்டியாகி, மூக்காண்டி- ஜீவானந்தம் ஆகி- ஜீவானந்தம் உயிரின்பன் ஆகினார்.

சமகாலத்தில் ஜீவா வோடு வாழ்ந்த இன்னொரு தலைவரான தெய்வீகத்திருமகன் பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவருடன் இணக்கமான நட்பு வைத்திருந்தார் ஜீவா. மதுரை மகாலெட்சுமி ஆலயத் தொழிலாளர் நலன் காக்க, சங்கம் தொடங்கப்பட்ட போது, அதன் தலைவராக தேவரும், துணைத்தலைவராக ஜீவா வும் இருந்தார்கள். தொழிலாளர் நலனுக்காக போராட்டம் நடத்திய தேவரவர்களை, அரசு கைது செய்து சிறையில் அடைத்தது கண்டு, பொங்கிய ஜீவா, அப்போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்தினார். சமூகத்தில் இனபேதம் போலவே, ஆலைகளில் முதலாளி, தொழிலாளி எனும் வர்க்கபேதமும் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என ஊர்தோறும் பேசிவந்தார்.  

“யாரது .. போஸ்ட் மேனா...?” அந்த வீட்டுக்குள் இருந்து அப்படி ஒரு குரலை, அதன் கதவை உயிரின்பன் தட்டியபோது எதிர்பார்த்திருக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளே வந்தவருக்கு இன்னும் ஏமாற்றம், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உயிரின்பனிடம், மறைமலை அடிகள் கேட்டார் “ என்ன காரணத்துக்காக என்னைப் பார்க்கவந்தீர்கள்?”.  “ அய்யா...காரணம் என்பதே தனித்தமிழ் இல்லையே... மூலம் என்றொரு சொல், இருக்கிறதே, அதைச் சொல்லலாமே”. “காரணம் என்பது தமிழ்ச்சொல்லா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை”. உயிரின்பனாக அந்த வீட்டுக்குள் நுழைந்த மனிதர், ஜீவனந்தமாக வெளியே வந்தார்.
தான் கொண்ட கொள்கைகளில் இருந்து, எந்த நிலையிலும் பிறழாமல், அதற்காக எதையும் துறக்கத் தயாராக இருந்த ஜீவா, பெரியாருடன் முரண்பட்ட கதையையும் உங்களுக்கு சொல்லவேண்டும். தமிழகத்தின் பல ஆலைகளில், பணியாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டித்து, தேவரவர்களுடன் போராட்டங்கள் நடத்திவந்த ஜீவா, தான் சார்ந்திருக்கும் சுயமரியாதை இயக்கமும் இதற்காகப் போராடவேண்டும் என்று நினைத்தார். அதை ஒரு மேடையில் பெரியாரை வைத்துக்கொண்டே பேசினார். இனபேதம் தாண்டி, வர்க்கபேதத்தை ஒழிப்பதற்கும் இந்த இயக்கம் பாடுபடவேண்டும் என்று பேசினார். அதற்கு பின்னர் பேசிய பெரியார், தன்னைவிட வேகமாக செயல்பட நினைப்பவர்கள் தனியே செயல்படலாம் என்று பொருள்படும்படி, ஜீவா வைக் குறிவைத்தே பேசினார். ஜீவா வின் வாழ்வில் அடுத்த அத்தியாயத்தைக் காலம் எழுதத் தயாரானது. ஆம்.. பெரியாரை விட்டு விலகினார் ஜீவா.

பெரியாருக்கு ஒரு குணம் இருந்தது. மேடையில் பேசும்போது “ நான் சொல்றத எல்லாம் நீங்க நம்பனும்னு ஒன்னும் இல்லீங்கோ....நீங்களா யோசிச்சு முடிவு பண்ணுங்கோ...” என்பார். ஆனால் அவர் நேரில் யாரும்
அவரை எதிர்த்து பேசமுடியாது. பேசியதால்தான் ஜீவா வெளியேறவேண்டி வந்தது. அப்படி தனது கருத்துடன் முரண்பட்டு வெளியேறிய மனிதர்களை பெரியார் மதிப்பது கிடையாது. அடுத்தடுத்த மேடைகளில் சகட்டுமேனிக்கு திட்டுவார். அண்ணாத்துரையை பெரியார் எப்படியெல்லாம் ஏசினார் என்று பார்த்தால் அதிர்ச்சி வரும் நமக்கு. ஆனாலும் தன்னை எதிர்த்த பெரியாரையே அண்ணா, விடாமல் பிடித்துக்கொண்டது பெரும் அரசதந்திரம். தன்னை விட்டு விலகியர்களில், பெரியார் திட்டாத ஒரே மனிதன் ஜீவா. அதுதான் ஜீவா வின் கொள்கைப்பிடிப்பு.

தன்னாலே உயிரினும் மேலாக ஒழுக முடியாமல் போகும் கொள்கைகள் காலப்போக்கில் நிலைக்காமல் நீர்த்துப்போகும்  என்று ஜீவா நினைத்தார். தனது கருத்துக்களுக்கு, தானே தீக்களம் அமைத்து அதன் மேல்நடந்து, கொள்கைகளைத் தனித்துவப்படுத்திக்கொண்டு, அதற்காகவே வாழ்ந்தார். தனக்காக, குடும்பத்துக்காக, தான் சார்ந்திருக்கும் இயக்கத்துக்காக, தனது கொள்கைகளைப் பலியிட ஜீவா வால் முடியவில்லை. அது தனது சிந்தனைக்குத் தான்செய்யும் துரோகம் என்றே நினைத்தார். கட்டிக்காக்கும் கொள்கைகள் மட்டுமே, காலப்போக்கில் கெட்டிப்படும் என்று எண்ணினார். தன்னாலே கூட திறம்படக் கடைபிடிக்கமுடியாத கொள்கைகளை மேடைகளில் பேசுவதற்கு அவரது உள்ளம்  உடன்படவில்லை. தன்னை வருத்தி வருத்தி, அதைக் காப்பாற்றினார். கொள்கைப்பிடிப்பின் காலநீட்டம் மட்டுமே ஜீவாவின் வாழ்க்கை.  தனது நிறைவுக்காலம் வரைக்கும் அந்த கொள்கைகளே அவரை வழிநடத்தின. பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வாழும் காலம் முழுக்க அதற்காக உழைத்தார்.

தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக் கண்டு சிரித்துடுவார் – யாம்காணோம்
துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
அன்புச் சுமைதாங்கும் ஆள்

என்று பாடியதற்கு முழுதும் பொருத்தமானது அவரது வாழ்க்கை.
ஒருநாள், ஜனசக்தி அலுவலகத்தில் அமர்ந்திருந்தார் ஜீவா. அவரைச் சந்திக்க இரண்டு இளம்பெண்கள் வந்திருந்தார்கள். அதில் ஒரு பெண் மட்டும் ஜீவாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். உடன் வந்திருந்த பெண் அமைதியாகத் தரையைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஜீவா கேட்டார் “ இந்த பெண் ஏன் பேசாமல் இருக்கிறாள்”.  ஒரு துண்டுச்சீட்டில் அந்த பெண் ஒரு தகவலை எழுதிக்கொடுத்தார். அதில் “ என் தாத்தா பெயர் குலசேகரதாஸ், என் தாயின் பெயர் கண்ணம்மாள், என் பெயர் குமுதா, நான் உங்கள் மகள் “ என்று எழுதப்பட்டிருந்தது. வாங்கி படித்த ஜீவா வின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. தன்னை மறந்து, தன்குடும்பம் மறந்து தேசத்தின் பணிகளில் ஈடுபட்ட மாபெரும்தலைவன் ஜீவா. குலசேகரதாஸ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.
தமிழகம் முழுக்க, பள்ளி கல்லூரிகளில், சாதி, வர்க்க ஒழிப்புக்காக பேசிவந்த ஜீவா, தாம்பரத்தில் ஒரு குடிசைவீட்டில் தங்கியிருந்தார். பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை பள்ளிக்கூடம் ஒன்றைத்திறக்க அவ்வழியே போனபோது, “ இங்கேதானே ஜீவா இருக்கிறான், வண்டிய அங்கே விடுங்கள்” என்றார். “போகிறபாதை தானே ஜீவா, அதன் உன்னையும் கூட்டிட்டு போகலாம் னு”. “சரி காமராஜ், உக்காரு, நான் புறப்படுறேன்” என்றவர் வெளியேவர வெகுநேரம் ஆயிற்று. “வேட்டி ஒன்னுதாண்டா இருக்குது, துவைச்சு காயப்போட்டிருந்தேன்...அதான் கொஞ்சம் நேரமாயிட்டுது...சரி சரி வா...போகலாம்” என்றார். கலங்கிப்போனார் காமராஜர். தமிழகத்தின் மாபெரும் பொதுவுடமைத் தலைவர், ஒற்றை வேட்டியுடன் ஒழுகும் ஓலைக்குடிசையில் வாழ்ந்தார் என்றால், இன்றைய பகட்டு அரசியலைப் பார்க்கும் இளைஞர்கள் நம்புவார்களா என்பதே ஐயம்தான் எனக்கு. காமராஜர் உதவுகிறேன் என்று சொன்னபோதும் ஏற்கவில்லை ஜீவா. அப்போது நடிகராக இருந்த எம்ஜியார் செய்தி அறிந்து, ஜீவாவின் தம்பி மகன் வழியாக, அவருக்கே தெரியாமல் உதவி செய்து, வீட்டை ஒழுகாமல் கட்டிக்கொடுத்தார்.

அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பும் ஒவ்வொருமனிதனும், தனது கொள்கைகள், உண்மை என்றும் உலகுக்கு நல்லதென்றும்   நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கற்றறிய வேண்டிய வாழ்க்கை வரலாறு ஜீவாவினுடையது. ஜீவா நான் பெரிதும் மதித்துப் போற்றும், பின்பற்ற நினைக்கும் மாபெரும் தலைவர். அந்த மகத்தான மனிதரின் புகழ் பரவட்டும். அண்மைக்காலத்தில் ஜீவாவைப் போலவே, பொதுவாழ்வுவேள்வியில் தன்னையே ஆகுதி செய்துகொண்ட மனிதர் தோழர் நல்லக்கண்ணு. அவர்குறித்தும் எழுதுவேன் அடுத்து. வணக்கம்

அன்பன்.
இரா.பார்த்தசாரதி.



No comments:

Post a Comment