Wednesday 14 September 2016

எங்களுக்காக இயேசுவை மன்றாடும்

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இசக்கித்தாயின் தாள்வாழ்க.

எங்களுக்காக இயேசுவை மன்றாடும்.....சிறுகதை.


பல்கரையாநேரியின் கரையில் பல்லூழிக்காலமாய் நிற்கும் வீரசங்கிலிபூதத்தின் காலடியில், ஒரு பாம்பு போல சுருண்டு கிடந்தது அந்த கிராமம். அதன் வேதகாலப்பெயரை சொன்னால் உங்களுக்கு புரியாமல் போகலாம். அதன் தற்போதைய பெயர் சங்கனாங்குளம். இறைவனால் உதைக்கப்பட்ட வெய்யிற்பந்து போல சங்கிலிபூதத்தின் சடைகளுக்குள் சுழன்றுகொண்டிருந்தது கிராமத்தின் வாழ்க்கை. அந்த கிராமத்தின் வண்டித்தடத்தில் ஒரு பிரிவைப் பிடித்துக்கொண்டு, சீரான இடைவெளியில் குளம்படிகள் ஒலிக்க, அந்த மனிதனை சுமந்துகொண்டு நடந்துகொண்டிருந்தது அந்த வெள்ளைக்குதிரை.


அவனுக்கும் அந்த கிராமத்துக்கும் தொடர்பு கிடையாது. அவன் ஒரு வழிப்போக்கன். கிராமத்தாரின் எந்த சாயலும் அவனுடன் ஒட்டவில்லை. போகிற போக்கில் தென்படும் பகுதிகளில் தங்குவதும் செல்வதுமாக அவன் போய்க்கொண்டே இருந்தான். புழுதி பறக்கும் பாதை அவனை ஊருக்கு அருகே அழைத்து சென்றுகொண்டே இருந்தது. சேணம் கட்டப்படாத அந்தக்குதிரை, அம்மனிதனின் மனதுக்கு கட்டுப்படும்படி மந்திரம் போடாத குறையாக, அவனது சிந்தைக்கு ஏற்ப சென்றுகொண்டு இருந்தது. தனக்கே பழக்கப்பட்ட அந்தக் குதிரையின் மீது, தனக்கும் நோகாமல், குதிரைக்கும் நோகாமல் என்று வாகாக அமர்ந்திருந்தான் அவன். நீல ஒளி பாய்ந்திருந்த அவனது கண்கள், ஊரின் தொலைவை அளந்துகொண்டிருந்தன. இன்றிரவு அங்குதான் தங்கல் என்று ஏறக்குறை அவன் முடிவு செய்திருப்பதை அறிந்தது போல, அளைந்துகொண்டே நடந்தது புரவி.


அப்படி ஒரு மனிதனை சங்கனாங்குளம் இதுவரைக்கும் பார்த்தது இல்லை. ஏதோ அயல்தேசத்து மனிதன் என்பது அவனைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்துபோனது. கிறுக்கன், உளவாளி, ஒற்றன் என்ற சிந்தனைக்கெல்லாம் அவனது கருணை ததும்பும் கண்கள் இடமளிக்கவில்லை. எப்போதும் வேற்றூர்க்காரர்களைக் கூட கேலி செய்யும் சங்கனாங்குளத்து சிறுவர் கூட்டம், இந்த மனிதனை பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. புரவியை அவன் எங்கும் கட்டிவைக்கவில்லை. ஆனாலும் அது அவனை விட்டு விலகவில்லை. சிலர் கொள்ளு கொண்டுவந்து குதிரை முன்னால் கொட்டினார்கள்.

“எந்தூரையா.......” மாடசாமிபோத்தி தான் கேட்டார்.

ஊருக்கு யார் வந்தாலும் இப்படி விசாரிப்பது அவருக்கு வழக்கம். அது வெறும் விசாரிப்பு மட்டுமல்ல, ஊருக்கான பாதுகாப்பும் கூட. அதிலும் இந்த மனிதன் வித்தியாசமாக வேறு இருக்கிறான். கருப்பு அங்கி கால்வரைக்கும் மூடி இருந்தது. காலை பொதிந்து மூடும் புதுவகைக் காலணியை சங்கனாங்குளம் அப்போதுதான் பார்க்கிறது. மேலே ஒரு வெள்ளைத்துணி. முழுக்கையையும் மறைக்கும் கருப்பு அங்கியின் மேல் முதுகை மூடி, முழங்கை வரைக்கும் கிடந்தது அந்த வெள்ளைத்துணி. சின்ன கருப்பு கயிறு ஒன்று கழுத்தில் கிடந்தது. கையில் ஒரு குறுக்குச்சட்டம். சின்னதாக சேகண்டி, அதை ஒலிக்க ஒரு கம்பி. தலையை இடப்பக்கமாக சாய்த்து, குறுகிய உதட்டில் மெல்லிய புன்னகைகையை படரவிட்டு, உலகம் தழுவும் கருணையை கண்களில் ஏந்தியிருந்த மனிதன்....இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வான். சொன்னால் இவர்களுக்கு புரியுமா என்ன?.


“ஜீசஸ்........ இப்படித்தொட்டு பேச தொடங்கினான். யாருக்கு என்ன புரிந்தது. ஓரளவுக்கு போதும் என்ற நிலைக்கு போத்தியே வந்துவிட்டார். சிறிது நேரத்தில் அவனே நிறுத்திக்கொண்டான். புதியதோர் மனிதனை, மொழி புரியாத மனிதனை, நிறம் நடை உடை என்று எதுவும் தன் இனத்தோடு பொருந்தாத ஒரு மனிதனை, அவனது நீலஒளி வீசும் கருணைக்கண்கள் தந்த மயக்கத்தால் தாங்கிக்கொண்டிருந்தது சங்கனாங்குளம். குதிரையை வேடிக்கை பார்த்த கூட்டம் மெல்ல கலைய, ஒவ்வொருவராய் வந்து இப்புதியமனிதனை பார்த்து சென்றார்கள். பெரியவர்கள் சிலர், அந்த நீலஒளி வீசும் கருணைக்கண்களுக்கு அடிபணிந்து வணங்கினார்கள். பதிலுக்கு அம்மனிதன் தன்னிடம் இருந்த குறுக்குச்சட்டத்தை உயர்த்தி ஆசீர்வதித்தான். அவனது தலைமயிரும் தாடியும் வளைந்து நெளிந்து சுருண்டுகிடந்தன. மீசைக்கும் தாடிக்கும் இடையே இருந்த செவ்வுதடுகளில் எப்போதும் புன்னகை இலங்கியது.


சுடலைமுத்துக்கோனாரின் வீட்டு தார்சாவில் உட்கார்ந்திருந்தான் அந்த மனிதன். ஆடுகளை கிடையில் அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்த கோனார், தார்சாவில் கவுளிக்கம்பை சாயத்தபோது, அந்த மனிதனை அதிசயமாக பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் போனார். நேரமே வந்துவிட்டதாகவும், எப்போதும் எதையோ யோசிப்பதுபோலவே பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், பேச்சு யாருக்கும் புரியவில்லை என்றும் சொன்ன பேச்சியக்கா விடம், கஞ்சித்தண்ணி வாங்கி குடித்துவிட்டு அசந்தார் கோனார்.


மாலை மங்கும் நேரத்தில், தன்னிடம் இருந்த சேகண்டியை ஒலித்துக்கொண்டே இருந்தான் மனிதன். சங்கனாங்குளத்து சிறுவர்களும் பெரியவர்களுமாக மணிச்சத்தம் கேட்டு, கோனாரின் வீட்டு தார்சாவில் குழுமிய பிறகும் ஒலிப்பதை நிறுத்தவில்லை. சளைத்து ஓய்ந்ததுபோல, சேகண்டியை தார்சாவில் வைத்துவிட்டு, வந்திருந்த மக்களை மெல்ல ஏறிட்டு பார்த்தான். அதே நீலஒளி வீசும் கருணைக்கண்கள். அன்புகொண்டு யாரையும் மயக்கவல்ல விழிகள், ஒருமுறை இமைத்து அமைந்தன. முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தான். எழுந்து தனது சிலுவை உயர்த்திப் பிடித்து அனைவரையும் ஆசீர்வதித்தான். அங்கும் இங்குமாக அங்கி தார்சாவின் மண்தரையில் புரளும் வண்ணம் நடந்துகொண்டே, அவரது மொழியில் பேசிக்கொண்டே இருந்தார். புரியாத அம்மொழியை உள்வாங்கிக்கொண்டது போல, கூட்டம் கட்டுண்டு கிடந்தது. அன்புக்கு என்ன மொழி உண்டு?.


இரவில் ஊர் முழுக்க இதே பேச்சாகக் கிடந்தது. மாலையில் களப்பணி முடிந்து வீடுவந்தோர், செய்தி கேள்விப்பட்டு, நெடிதுயர்ந்து நின்ற புரவியையும், நீலஒளிவீசும் கண்களைக் கொண்ட அம்மனிதனையும் பார்த்துவிட்டு வந்தார்கள். அதே சிலுவை உயர்த்துதல்...உலகம் தழுவும் அன்பு நிறைந்திருந்த கருணைக் கண்களின் பார்வை...கருத்த மீசை தாடிக்குள் மெல்லிய உதடுகளின் புன்னகை.....ஆ.....ஏதோ இறையருள் நிரம்பப் பெற்ற சாது வாக இருக்கலாம் என்று பேசிக்கொண்டே உறங்கிப்போனது ஊர்.


இரவு எத்தனை நாழி என்று தெரியவில்லை. கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கொண்டியைத் திறந்தாள் பேச்சியக்காள். அம்மனிதன் தான். அந்த இருட்டிலும் ஒளிவீசியது அவனது கண்கள். தாகமாக இருப்பதுபோலவும், தண்ணீர் வேண்டுவது போலவும், சைகையும் பேச்சுமாக கேட்டான் அவன். அவன் கேட்பது பிச்சையல்ல, காலாகாலத்துக்குமான பெரும் பேறு என்பது அப்போது பேச்சியக்காவுக்கு தெரிந்திருக்கவில்லை.


எப்போதும் பால் தயிர் மோர் என்று கொழிக்கும் கோனாரின் வீட்டில் அன்றுதான் எதுவும் இல்லை. குளத்தில் மண்பானைகளைக் கழுவிவிட்டு, வீரசங்கிலிபூதத்தை சுற்றிவந்து மண்ணெடுத்து நெற்றியில் பூசி, மோர் விற்க போன ஆச்சிக்கு, பூதத்தின் அருளோ, சோதனையோ எல்லாம் விற்று தீர்ந்துவிட்டு இருந்தது. பக்கத்து தெரு பரதவர்களிடம் எப்போதும் மீன் கிடைக்கலாம். அவர் பானகரம் போலல்லவா கேட்கிறார்?. இடபாகத்து நாடார்கள் வீட்டில் காய்ச்சிய பதனி வரியழியும். எப்போது போனாலும் கிடைக்கும். ஆனால் இந்த இரவுநேரத்தில், கோனார் வீட்டு பொம்பளை எப்படி போய் கேட்பது?. சுடலைமுத்துகோனார் கட்டிய கோவணத்துடன் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். வாசலிலோ அம்மனிதன் தாகத்தோடு நிற்கிறான். குழம்பிபோனாள் ஆய்ச்சி. கனகதுர்கா.....என்ன இந்த இடைச்சிக்கு வந்த ரோதனை....நான் என்ன சொல்லுவேன் அம்மனிதனிடம். சாயங்கால பொழுதில் இருந்து, வீட்டில் பால் தயிர் வாங்கி போகும் சனங்களை அவனும் பார்த்திருக்கிறான். வெறும் மனிதன் மாதிரியா இருக்கிறான். ஏதோ இறைவனின் தூதன் மாதிரியல்லாவா இருக்கிறான். வீட்டில் ஏதும் இல்லையென்றால் நம்புவானா....அப்படியே நம்பினாலும் அவனது தாக ஏக்கம், இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த இடைவீட்டை பிடித்து உலுக்கும்?. நினைந்து நினைந்து குமைந்துபோனாள்..... மாடுகள், இனிமேல் கறக்குமா என்ன?. மாலையில்தானே கறந்தது போக கன்றுக்கு விட்டுவிட்டோம், விட்டுவைத்திருக்குமா அவை?. கண்ணீர் வந்துவிட்டது பேச்சியக்கா வுக்கு.


செம்பை எடுத்துக்கொண்டு துர்கா வுக்கு அருகில் சென்றாள். கோனாரின் மகள் கனகா அனைத்து மாடுகளுக்கும் பெயர்வைத்திருந்தாள். நினைக்காத தெய்வமில்லை. கரையடி வீரசங்கிலி பூதத்துக்கு நேர்ந்துகொண்டாள். இடைச்சி வீட்டில் கேட்பவனுக்கு இல்லை என்று சொல்லாத நிலையை சங்கிலி ஐயா உண்டாக்கனும்...என்று மனமுருக பிரார்த்தித்தாள். ஆளரவம் கேட்டு திரும்பியவள், கோனார் நிற்பதை கண்டுகொண்டாள். அவருக்கு எல்லாம் புரிந்திருந்தது. மெல்ல பசுவின் தலையைத் தடவினார். காம்பிலே சில்லிடும் தண்ணீர் பட்டதும், இரண்டுநாட்கள் கறக்காமல் நிறைகொண்டது போல, மடி இறக்கியது மாடு. அதிர்ந்துபோனார்கள் ஆய்ச்சியும் கோனாரும். சொம்பு நிறைய பால்கறந்து நுரைக்க நுரைக்கக் கொண்டுவந்து அம்மனிதனுக்கு தந்தார்கள். அதே கருணைக் கண்கள், இடப்பக்கம் சாய்ந்த தலையின் வாஞ்சையான பார்வை....நடந்தவை புரிந்தது போலவும் புரியாததுபோலவும் ஓர் முக அமைப்பு...கைநீட்டி வாங்கிக்கொண்டான். ஆய்ச்சியும் கோனாரும் அகமகிழ்ந்து போனார்கள்.


சுறுசுறுப்பாய் விழித்துக்கொண்டது சங்கனாங்குளம். காவலுக்கு சென்றிருந்த மறவர்கள் வேல்கம்பும் கையுமாக வீடுதிரும்பிக் கொண்டிருந்தார்கள். பனையேற புறப்படும் நாடார்கள் ஒருபக்கம், பால்கறக்க புறப்பட்ட கோனார்கள் ஒருபக்கம், கடலுக்கு சென்றிருந்த கணவன்மாரை எதிர்பார்க்கும் பரதவப்பெண்கள் ஒருபக்கம், முத்துலெட்சுமியம்மன் கோயிலுக்கு விளக்குபோட புறப்பட்ட ஐயர் கூட்டம் ஒருபக்கம், என வேகமானது ஊர். இரவுமுழுக்க சங்கிலிபூதத்தின் சடையாய் ஊரை மூடிக்கிடந்த இருள் மெல்ல விலகத்தொடங்கியது. பேச்சியக்கா வளைவுக்குள் மாடுகளை ஒழுங்கு செய்து புல் கொண்டு போட்டாள். இரவிலே கறந்ததற்கு எந்த குறையும் இல்லாமல் எப்போதும் போல் கறந்தது மாடு. ஏதோ மந்திரக்காரன் என்று நினைத்துக்கொண்டாள் ஆச்சி. காலையிலும் அவனுக்கு பால்கொடுக்கலாம் என்றுதான் புறப்பட்டு தார்சாவுக்கு வந்தாள்.


ம்ஊம்......அவன் போய்விட்டான். அவன் தங்கியிருந்த தார்சாவில்  ஏதோ ஒரு அதிமதுரமான வாசனை வந்துகொண்டு இருந்தது. எங்கே போயிருப்பான், குதிரையையும் காணவில்லை, தெருவின் மண்தடம் முழுக்க குதிரையின் தடமும், அவனது பொதியடி தடங்களும் பதிந்திருந்தன. அனைத்து தெருவிலும் பொதியடி தடங்கள் புதைந்திருப்பதாக அப்போது பேச்சியக்காவைக் கவனித்தவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அம்மனிதன் அவ்விரவில் ஊர்முழுக்க நடந்திருக்கிறான். ஒவ்வொருவர் வீட்டின் முன்நின்றும் ஆசீர்வதித்திருக்கக்கூடும். இன்றுமாலையும் வரக்கூடும். ஏதேனும் மிச்சம் வைத்திருக்கவேண்டும் அவனுக்குக் கொடுக்க. நினைத்துக்கொண்டே தனது முன்கொசுவம் வைத்த கண்டாங்கிச்சேலையை பிடித்துக்கொண்டு, சாணம் பூசி தெளித்து கோலமிட்டாள் ஆச்சி. வீட்டுக்குள் நுழைய புறப்பட்டபோது, இரவில் தான்கொடுத்த பால்சொம்பு தார்சாவின் ஓரத்தில் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்ததை பார்த்தாள். எடுக்கலாம் என்று அருகே சென்றாள். நெருங்க நெருங்க சுகந்தம் கூடிக்கொண்டே வந்தது.


சில்லிட்டிருந்தது சொம்பு. என்ன இப்படி குளிர்கிறது என்று குழம்பிக்கொண்டே செம்பை எடுத்த பேச்சியக்கா வுக்கு இன்னோர் அதிசயம் காத்திருந்தது. சொம்புக்குள் ஓர் சிறிய மெழுவர்த்தி ஒளிர்ந்துகொண்டு இருந்தது. அப்போதுதான் ஏற்றிவைத்ததுபோல இருந்தது. மெழுகு உருகாமல் ஒரே நிலையில் நின்று ஒளிர்ந்துகொண்டு இருந்தது. சங்கனாங்குளம் மெல்ல சமாதானத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஆம்...கிறித்தவஉலகில் முதற்குரு தூயசவேரியார் அல்லவா வந்துசென்றார் அவ்வூருக்கு.

அன்பன்.
செல்வியின்செல்வன்.

14.09.2016

No comments:

Post a Comment