Monday 17 August 2020

உலகியற்றியான் - சிறுகதை

 

இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காத எல்லாமும் வல்ல முப்பந்தல் இசக்கியம்மனின் தாமரை மேவும் தங்கத்திருவடிகள் சரணம்.

 

உலகியற்றியான்.

தான் படைத்த அந்த படடணத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றான் மாமுனி. உலகையேக் கலக்கி வென்ற உன்மத்த வெறிகொண்டது உள்ளம். சடைகளுக்குள் ஊர்ந்த உயிரொன்றை, தண்டத்தை வைத்து இழுத்து தரையில் போட்டான். உலகங்கள் பல சுழலும் பால்வெளிக்குள், அவன் படைத்ததும் இனி சுழலும். இறைவனுக்கே இணையாகிவிட்ட மிதமிஞ்சிய பெருமைக்குள், சிறிய கழிவிரக்கம் ஒன்று எப்போதும் அவனை ஆட்கொண்டிருந்தது. யாரை எதிர்த்து நின்று சாதிக்க நினைத்தானோ, அவர்களே இவனது வெற்றிகளை ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்குப் பெருமைகளைக் கொண்டுவந்த எண்ணிலடங்கா தவத்தால், அந்த கழிவிரக்கத்தை கழிக்கமுடியாதது கண்டு வியப்புற்றான். வெங்கல மேனியிலிருந்து விலகிய மேலாடையை, கமண்டலம் தாங்கிய கரமொன்றினால் சரிசெய்துவிட்டு, நிமிர்ந்த மேனியும் நேர்கொண்ட பார்வையுமாய் நின்ற மாமுனியின், உடலிலிருந்து கிளம்பிய ஒளி, அவன் படைத்த உலகத்தின் போக்கைத் தடுமாறச் செய்தது.

ஆகா, மேனியா அது... மேலெங்கும் மானுடர்களைத் தாக்கும் மலரம்புகளை ஏந்திய வில்போன்று, ஏற்ற இறக்கங்கள் கொண்ட அந்த மாய உடல் ஒரு கணம் மனதில் மின்னி மறைந்தது மாமுனிக்கு. ஆளண்டாத அடர்ந்த அடவியின் நடுவில், உயர்ந்த மண்திட்டில் அமர்ந்து, மூச்சினை ஒழுங்காக்கி, நாசி நுனியை நோக்கிப் பல்லாண்டுகாலம் தவமியற்றிக்கொண்டிருந்த மாமுனியின் தலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த செஞ்சடையின், உச்சியில் கனன்ற தீப்பிழம்பின் வழி, புகைக் கீற்றொன்று கிளம்பிற்று. உயிரென்று தொடக்கத்தில் அஞ்சிய சின்னஞ்சிறு உயிரினங்கள், அதன் அசைவின்மை கருதி, காலப்போக்கில் மாமுனியின் உடல்மீதேறி உயிர் வாழத் தொடங்கியதில், உடலின் பெரும்பகுதி புற்றால் மூடப்பட்டு இருந்தது. வெளித்தெரிந்த உடல் பகுதிகளில் இருந்து விரிந்த ஒளி, அந்த வனப்பகுதியில் ஓர் அதிசய வெம்மையை உருவாக்கியது. அசையாதிருந்த மேனி அசைந்த அந்த நாள், உலகியல் பார்வைகளிலிருந்துத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட கண்களில் ஒன்று மெல்ல திறந்த நாள். அந்த நாளின் நினவுகளிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார் மாமுனி. தேவாதிதேவர்களும், தன்னடங்கிய தவமுனிவர்களும், தன்னைப் படைக்கும் தன்மைகொண்ட இறைவன் என்று ஒப்புக்கொண்ட நாளில் உள்ளத்தில் உதித்து அடங்கிய சோதியின் உள்ளொழிந்திருந்த கருமை, அந்த பெருஞ்சோதியால் நெருங்கமுடியாத அந்தக் கருமை, அந்த ஒளிவெள்ளத்தின் ஊற்றே அந்தக் கருமைதானோ என்று கருதும் வண்ணம் திகழ்ந்த அந்தக் காலக்கருமை, அந்தநாளும், அது உண்டாக்கிய இன்பமும்தானோ. பெருமைகளில் திளைக்கும்போதெல்லாம் அதன் ஓரத்தில் நமையாட்டுவிக்கும் கழிவிரக்கம் அந்த நாள்தானோ என்று எப்போதும் சிந்த்திருப்பார் மாமுனி.

மென்காற்றின் சுகந்தம் மேனியைத் தீண்டியது. நாசிக்கூர்மை வாசத்தை உணரும் முன் உடல் உணர்ந்து சின்னதொரு தளர்வை அடைந்தது. தீர்க்கமான நாசியை அந்த நாற்றம் நெருங்கியபோது, உடல் அதிர்ந்ததை உணர்ந்தார் மாமுனி. ஆண்டாண்டு காலம் அந்த வனத்தில் அனுபவித்திராத அற்புத வாசம் அது. இமைகளிரண்டும் ஒன்றோடொன்று ஒட்டியிருந்ததால் மூடியிருந்த மெல்லிய கோட்டில், ஒரு பெருவெள்ளத்தின் ஒளிக்கீற்று தட்டுப்பட்டது. அந்த ஒளிக்கீற்று, குளிரடைந்திருந்த கண்களில் சின்னதொரு வெப்பத்தை உண்டாக்கிற்று. பல்லாண்டுகளுக்கு முன்பு உணர்ந்த வெம்மையின் பெருக்கமென்று உணரத்தோன்றிற்று. அந்த மெல்லிய வெம்மையின் மூலத்தைத் தேடி, கண்கள் திறந்துவிடுமோ என்ற சின்னதொரு அச்சம் முதன்முதலாக முனிவருக்குத் தோன்றியது. வெள்ளிச்சலங்கைகளின் இசையொன்றை உணர்வதுபோன்ற லயம் உண்டானது. சீரான இடைவெளியில் தன்னை நோக்கி நெருங்குவதும், விலகுவதுமாக இருந்த தண்டை ஒலி, செவியின் குழிகளில் தேனை விட்டு விட்டு பாய்ச்சுவது போல இருந்தது. கொலுசு சிணுங்கும் ஓசை, காதை நெருங்கும் போதினில், செவிப்பறைகளில் மெல்லிய கூச்சமொன்றை கீச்சிவிட்டது. மென்பறை உருவாக்கிய அதிர்வு தொண்டை வழி இதயத்தை நெருங்கி, அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்தது. புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கடும்பாடு பட்டான் முனிவன். இத்தனையாண்டுகால தவக்கோலத்தில் இப்படியொரு அதிர்வை அவன் உடல் அடைந்ததில்லை. கரணங்கள் உருவாக்கிய அதிர்வு தன் ஆண்மையை அசைக்கும் வழி செல்வதற்குமுன் அவற்றை இறுக்கி நெஞ்சிலேயே நிறுத்த முனைந்தபோதுதான், மலரினும், பஞ்சினும் மெல்லிய பரிசமொன்றை அதரங்கள் உணர்வதாக நினைத்துத் திடுக்கிட்டான். நீண்டகாலம் மழிக்காமல் நிறைந்திருந்த மயிர்களைத் தாண்டி உதடுகள் உணர்ந்த பரிசம், முனிவனின் பழங்கால வாழ்க்கையை ஒரு சிறுகணத்தில் நினைவுறச்செய்தது. இனிமேலும் தவத்தை விடுவது தவிர்க்கமுடியாதது என்று நன்றாகப் புரிந்தது. மாமுனிவன் உலகியல் பார்வைக்கு அணியமானான். முதலில் கண்கள் அதை உணர்ந்தன.

மேனகா வுக்கு புதிய உலகம் ஒன்றைப் பார்க்க புறப்பட ஆணை கிடைத்தது. எப்போதும் தன் மீதேறி ஊறும் கண்களிலிருந்து விடுதலை. அவள் தன்னை அலங்காரம் செய்ய நினைத்தாள். ஏற்கனவே மூன்று பேருக்கு வழங்கப்பட்டு அவர்கள் தோற்றுப்போன பணி. ஆற்றல் மிகுந்த வில்லாளன் தன் கையில் இருக்கும் ஆகச்சிறந்த அம்பை,  போரின் இக்கட்டான சூழலில் எறிகிறான், நான் தேர்ந்திருக்கும் சிறந்த வாளி நீ, என்று தலைவன் சொல்லி அனுப்பி இருந்தான் அவளுக்கு. சாதாரண ஆடைகளைக் களைந்துவிட்டு சாகச அலங்காரத்தை செய்யத் தீர்மானித்தாள் அவள். தன் முன்னே நிற்கும் கடமையின் வீரியம் அவளுக்குத் தெரியும். திலோத்தமா திரும்பி வந்து, தன்னுடலைத் தானே பழித்ததைப் பார்த்தாள் அவள். அரம்பை மீண்டு வந்து, தன் மழை மேகமன்ன கூந்தலை அவிழ்த்துப் பரப்பினாள். ஊர்வசி ஓடி வந்து, இனியிந்த உடலுக்கும் அழகுக்கும் என்ன மதிப்பென்று மயங்கினாள், மன்மதனைப் பழித்தாள். அந்த அவமானத்தைத் தான் அடைந்துவிடக்கூடாதென்று நினைத்தாள் அவள். பெண்ணொருத்தி விரும்பி, ஆணொருவனை அசைக்கமுடியாமல் போகுமென்றால், அப்புறம் பிறப்பிலே பொருளில்லை என எண்ணினாள்.

தன் அழகிய மேனிதான் ஆகச்சிறந்த ஆடை என தேர்ந்தாள். சந்தனக்குளியலொன்றை நடத்தினாள். உள்ளக்கிடக்கையை உணரமுடியாத, கடலினும் பெரிய கண்களுக்கு அஞ்சனம் எழுதினாள். கோடிப்பொன் பரிசாகக் கொட்டினாலும், அவள் மூடித்திறக்கும் இமையிரண்டிற்கு ஈடாகாதென்று எண்ணும் வண்ணம், கண் எனும் பூசல் அம்பிற்கு மை பூசினாள். ஏற்றிக் கட்டிய குறத்திக் கொண்டையில் முல்லைச்சரம் சூடினாள். அதுபோக தன் அடர்ந்த கருங்கூந்தலின் அரைபாதியை, தன் பின்னழகுக்கும் கீழே நெளியவிட்டாள். சிக்கெடுத்து சீவியபின்னர், ஒரு சின்ன வெட்டுவெட்டித் திரும்பினாள். மலைமுகட்டில் மோதி வழியும் அருவிபோல, பின்மயிர் மேகலையில் நழுவி மெல்ல விலகியது. சிரித்துகொண்டாள். திண்பதற்காக மட்டுமன்றி, திண்ணப்படுவதற்காகவும் படைக்கப்பட்ட பச்சரிசிப் பற்களில் சின்ன விண்மீன் ஒன்று ஒளிர்ந்து மறைந்தது. கச்சையணிந்த மார்பகங்களில் குங்குமம் அப்பி, முத்துமாலையொன்றை அதன்மேல் புரளவிட்டாள். செம்பொன்னைக் குழப்பி நகங்களில் தோய்த்தாள். சிந்தாமணி ஆரமொன்றை பூட்டினாள். குலுங்கும் வளைகளுக்குள் கோதுமைநிறக் கைகளைச் செருகினாள். இடையணிந்த மேகலையில் மணிகளைக் கோர்த்து, மெல்ல ஆட்டிப்பார்த்து, அதில் வெளிப்பட்ட தாளலயமறிந்து ஆனந்தம் கொண்டாள். தண்டைகள் திருகி புறப்பட்டாள் பூமி நோக்கி.

அசைந்தாள், நடைழகும் அன்னத்துக்கே நடைபயிலும் விதமாக அசைந்தாள். இதைவிடவும் சிறந்ததொன்றை பிரம்மன் இதுவரைக்கும் படைக்கவில்லை எனும் விதமாக நற்குஞ்சரமும் நாணும் வண்ணம் நடந்தாள். சந்தனவண்ணத்து சுண்ணம் கொண்டு படைக்கப்பட்ட சுந்தர சிற்பமென வளைந்தாள். வாழை மடலெடுத்து வடிவமைத்தத் தண்டொன்றில் தாழைமலர் நிறமெடுத்து தடவியது போன்ற தன் குறங்குகள் பிணங்க ஆடினாள். உலக வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் வாக்கில், திமிர்ந்த தடநகில்கள் ஏறி இறங்கும் வண்ணம் நர்த்தனம் புரிந்தாள். செங்காந்தள் மலரொத்த விரல்கள், பகலவனின் பரிதிகள் என தோன்றும் அளவுக்கு அபிநயங்கள் காட்டினாள். சுழலும்போது விலகிய மேலாடைகளின் வழி மேனியைத் தீண்டிய மெல்லிய காற்று, அந்த அனுபவத்தை மாமுனியின் மெலிந்த திரேகத்தில், தீண்டலுக்கு ஏங்கியிருந்த புலன்களிடம் கொண்டு சேர்த்தது. மேனகாவின் மெல்லிய அசைவுகளில் வளைந்து நெளிந்த வாளிப்பான உடலின் வழி ஊடுருவிய தென்றல், முனிவனிடம் சலனத்தை உண்டாக்கியதை அவளால் உணரமுடிந்தது. இப்போது அபிநயத்தில் அன்பைக் குழைக்க விரும்பினாள் அவள். மகாயோக முறையில் அமர்ந்திருந்த மாமுனியின் மெலிந்து மினுங்கிக்கொண்டிருந்த உடல்மீது உள்ளத்தை செலுத்தினாள். தமக்கு முன்னர் அங்கு வந்து ஆடிய மூவரது அசைவுகளுக்கும் அசையாத உள்ளத்தின் உறுதியை வியந்தாள். இவனுடன் கூடுவதுதான், தான் இதுவரை செய்த பாவங்களுக்கெல்லாம் சித்தம் என்று சிந்தித்தாள். உண்மையான காதலைக் காற்றோடு கலைத்து தூதனுப்பினாள்.

மேனகா.....

சுவாமி.....

இன்னுமா சுவாமி........

என்றென்றும் சுவாமிதான் நீங்கள்.............

அதை எப்போதோ இழந்துவிட்டேன்...இல்லையில்லை நீ அதைப் பெற்றுக்கொண்டாய்.....

....எனக்கு முன்னர் வந்தவர்களிடம் நீங்கள் உளம் செலுத்தவில்லையே ஏன்....

யாரவர்கள்........

தெரியாதா.........

உண்மையில் தெரியாது........நான் பல்லாண்டுகாலம் தாண்டி கண்விழித்தபோது, எழிலார்ந்து என்முன் நீ நின்றுகொண்டிருந்தாய்......நான் சிவனைக் கண்ட காட்சியைவிடவும் எனக்கு நினைவிருப்பது நீ அன்று நின்றிருந்த கோலம்தான். கண்மணி...எங்கிருந்தடி கிடைத்தது இந்த எழில் உனக்கு...என் கண்கள் தன் பிறவிப்பயனை அன்று அடைந்துவிட்டன....சர்வலெட்சணங்களும் பொருந்திய இளமங்கை ஒருத்தி, தன்னோக்கி இழுக்கும் எண்ணம் கொண்டு, ஓர் ஆடவனின் முன் நின்று அனுபவிக்க அனுமதிப்பதைவிடவும் வேறென்ன இன்பம் உண்டு உலகில்...சொல்...

...அது எனக்குக் கிடைத்த பேறு சுவாமி...இதோ இந்த சகுந்தலா...

..நம் செல்வக்கண்மணி.....

.........இறையின்பமும் இதற்கு ஈடில்லையா.....

..இல்லையடி....

மெல்ல வெள்ளலைகள் சலசலக்கும் அந்த நதிக்கரையைத் தாண்டி நந்தவனத்துக்குள் நடந்தார்கள் இருவரும்.

என்ன சொன்னீர்கள், இறையின்பமும் இதற்கு ஈடில்லை என்றா....

...ஆம்...

..உலகம் ஒப்புமா....

..ஆ..உலகம்...எதைத்தான் அது ஒரு சேர ஒப்பியிருக்கிறது...

பெண்ணின்பத்தை துறப்பதுதான் பேறு என்றல்லவா செப்புகிறது சாத்திரம்....

...அதில் இல்லறம் அடங்காதடி பெண்ணே....

..ஆனால் இதையும் சேர்த்துத்தானே எழுதியிருக்கிறார்கள்...

...முழுக்கத் தெரியாத முட்டாள்கள்.....வாத்தியத்தின் இருபக்கமும் அதற்கான ஒலியை எழுப்பினால்தானே தாளமும் இசையும்.....அது ஒழுங்காக வாய்க்காதவர்கள் உளறியது அது.....சரி விடு எதற்கிந்த விவாதம்....

நீங்கள் சொல்லுங்கள்.....

மேனகா...பல்லூழிக்காலம் தவம் செய்தவன் நான்... எண்ணறியா வரங்கள் கொண்டவன்...இறைவனையே நேரில் கண்டவன்..இது யாதும் தரும் இன்பங்களைவிட உயர்ந்தது நீ செய்யும் காதல் என்பேன்...

...உண்மையாகவா.....

..இதில் ஐயமென்ன உனக்கு....அதோ பார் நம் காதலின் சாட்சி.....

..எனக்கு இப்போதெல்லாம் மீண்டும் தவம் செய்யக் கிளம்பிவிடுவீர்களோ என்று அச்சமாக இருக்கிறது அவ்வப்போது.....

மாமுனி சிறிய நடுக்கத்துக்கு உள்ளானான். மேனகாவுடனான இன்ப வாழ்வில் முதன்முறை இப்படி மொழிகிறாள் அவள். அன்று அடவிக்குள் ஆடியபோது அவள்மீது அவளுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனதின் மூலங்களை ஆராயத்தொடங்கினார். வாத்தியத்தின் ஒருபக்கம், மந்தமோ, உச்சமோ தாளத்துடன் ஒட்டாமல் தப்புவதாக நினைத்தான். இருபக்க இன்பத்தில் பெரும்பக்கம் ஒன்றில் கீறல் விழுந்துவிட்டால், அது முழுமையடைவதற்கான வாய்ப்பு முற்றாக இல்லை என்பது அவனுக்குத் தெரியும். சிந்தனைகள் விரிந்தபோது, உரசிக்கொண்டு நடந்த மேனகாவின் தீண்டலை தன்னுடல் முழுதாக உணரவில்லை என்பதை அறிந்தான்.

அதிகாலையில் சகுந்தலாவை தோள்மேல் சாற்றிக்கொண்டு விண் நோக்கி நடந்தாள் மேனகா.

தான் படைத்த அந்த படடணத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றான் மாமுனி. விண்ணுளோர் வியந்து வினவியதன் அடிப்படையில் படைப்பைப் பாதியிலேயே நிறுத்தினான். கொஞ்சம் இறங்கிப்பார்த்தான். திரிசங்குத் தலைகீழாகத்  தொங்கிக்கொண்டிருக்கிறான் ஆகாயத்தில். முனிவனும் தான்.

செல்வியின்செல்வன் . 12.08.2020

பிறப்பொக்கும் - சிறுகதை

 

இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காத எல்லாமும் வல்ல இசக்கியம்மனின் தாமரை மலர் தாங்கும் தங்கத் திருவடிகள் சரணம்.

படிப்பை நிறைவு செய்த சிலநாட்களிலேயே கர்நாடக மாநிலத்தில், நாடு முழுவதும் கிளைபரப்பி இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தான் செம்பியன். ஊரிலும், கல்விச்சாலைகளிலும் செம்பு என்பார்கள் அவனை. அது பெயரின் குறுக்கமே தவிர, குவளையைக் குறிப்பதல்ல. அல்லது நவீன காலத்தில் அதற்கு சொல்லப்படும் குணத்தில் கிஞ்சித்தும் கிடையாது அவனுக்கு.  எனினும் தமிழ்நாட்டில் ஓரு தொழிலகத்தில் பணியாற்றி, அங்கேயும் தன் பட்டப்பெயர் பரவலாக்கப்படும் என்றால் அதன் பொருள் வேறுபடக்கூடும் என்பதால், வெளிமாநிலப்பணி என்பதில் செம்பியனுக்கு அதிவிருப்பம்.

பிறந்தகாலம் தொட்டு, வெயிலேறிக் கிடந்த திருநெல்வேலிச்சீமையில், காலந்தோறும் வெம்மையின் உக்கிரம் உயர்வதையேக் கண்டு வளர்ந்தவனுக்கு, எழுத்தில் இறக்கி வைக்கமுடியாத வனப்புகொண்ட அப்பகுதி பிடித்திருந்ததில் வியப்பில்லை. எங்கு நோக்கினும் அடவியும் அருவியும் என்று, கூர்ந்து நோக்குவதை கவனிக்காமலும், கவனிக்கும்போது சின்ன கூச்சத்துடன் நிலம் நோக்கி நகுவதும், எனை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்கொள் என அந்நோக்கிற்கு இடமளிக்கும் பாங்கிலும், யாருமில்லா தனித்த வனமொன்றில் எழிலார்ந்து நிற்கும் இளமங்கை ஒன்றைப்போன்றது அந்நிலம். மங்கையர் கூட்டமென்றும் சொல்லலாம். ஆனாலும் ஒருத்தியையேப் பார்த்துத் தீர உயிர்பிறவி ஒன்று போதாதல்லவா?. கூட்டமென்றாலும் பார்வை தனித்தனிதானே.

..ஏங்க....இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா....

..ஒங்கிட்ட எத்தன தடவ சொல்றது....இந்த.. ங்க...மரியாத எல்லாம்  பொது எடத்துல போதும்.....

..சரிப்பா....மெல்லதான் பழகும்.....

..ம்.சொல்லு.....

....நீங்க....

...ம்க்கும்.....

ஆங்...சேர்ச்சேரி.....நீ ஆபிசு போனதுக்கப்புறம்,  எதுத்த வீட்டு அக்கா, அப்புறம் அவங்க பக்கத்துவீட்டுல ஒரு முசுலீம் பொண்ணு இருக்க...ரெண்டுபேரும் வந்தாங்க....யார்ரா அது இந்த நேரத்துக்கு பெல் அடிக்கான்னு பாக்கேன்..நிக்குறாங்க....பாக்கத்தான் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுபோச்சு....

...அட....பார்றா.....

..அத ஏன் கேக்க...ஒரு அரைமணி நேரம் கத பேசிருப்போம்....அந்த அக்கா பேரு சீதா....அப்புறம் அந்த பொண்ணுபேரு சுமையா....நல்ல பேரு இல்ல.....இவ்ளோதான் புரிஞ்சது...மத்தபடி எல்லாம் சைகை பேச்சுத்தான்.... சந்தோசமா இருந்துச்சு கேட்டியா....

ஆங்....அவள் பெயர் சொல்ல மறந்துவிட்டேனா...வானதி. இந்தப் பெயருக்காகவே இவளை மணந்துகொள்ள சம்மதித்தான் செம்பியன். இரவில் உறங்கச் செல்லும் முன், படுத்துக்கொண்டே இப்படி ஏதாவது கதை பேசுவது வழக்கம். தொடர்ந்து அவ்வப்போது இப்படி சொல்வாள். யாரேனும் பார்க்கில் பார்த்து பேசினார்கள், லிப்டில் பார்த்துப் பேசினார்கள் என்று.  செம்பியனின் குணங்களை அவர்கள் புகழ்ந்ததாகச் சொல்லும்போது ஒரு சின்ன பெருமை வரும் அவளுக்கு. திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும், இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகும், அவளிடம் புதிதாகப் பேசியவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

....இன்னிக்கு இந்த ராகவ் அம்மா இல்ல...அவங்க பேசுனாங்க...சின்னப்பையன பள்ளிக்கூடம் அனுப்பப் போனேனா...அப்ப....அடுத்தவாரம் அவங்க மாமனார் மாமியார் வாராங்களாம். போன தடவ பாத்தியா...அப்படியே மாறிடுவாங்கப்பா....இப்ப என்ன மாதிரி புது வகையா உடுத்துறாங்க...அப்ப என்னடான்னா, எப்போதும் சேலைதான்...அதும் எப்ப பாத்தாலும் தலைப்பைத் தூக்கி தலையில போட்டுக்குவாங்க.....

அந்த மண்ணைப் போன்ற குணம் அந்த மக்களுக்கு. மாநிலத்தின் அரசமொழியான கன்னடம் அதிகம் செல்லாத பகுதி இது. இங்கே கொங்கணி தான் மக்களின் மொழி. அந்த மாநிலத்தில் அவர்களே ஒரு மொழி சிறுபான்மை என்பதால், நம்மைப் போன்றவர்களும் அவர்களும் நேர் அங்கே. எப்படி அங்கே இயற்கை தனது குணங்களை மாற்றவில்லையோ, அதைப்போலவே, இடையில் மானுடர்களிடம் புகுந்த நோய்கள் இல்லாத தூய்மையான மனிதர்கள். அன்பு பாசம் தவிர பிறிதொன்றை அறியாதவர்கள். அதனால்தான் அந்த மலைத்தொடரும், மழைப்பொழிவும், அந்த ஆரண்யமும், எண்ணற்ற உயிரினங்களும் சீராக இருக்கின்றன. தமிழ்நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அப்பகுதி தரிசாக்கப்பட்டு, பின்னர் சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது என்று புலம்பிக்கொண்டிருப்போம்.

அப்படி ஓர் ஊரில் வாழ்ந்துவிட்டு, எதிர்பார்த்திருந்தது மாதிரியே இன்பத்தமிழ்நாடு என்று அவன் நினைத்துக்கொண்டிருந்த, தமிழ்நாட்டின் கிளைக்குப் பணிமாற்றம் வந்தது. பொதுவுலகத்தைப் புரிந்துகொள்ளும் வயதில் அவன் வெளிமாநிலத்தில் வசித்து வந்ததால், அதுதான் உலகம் என்றவன் கணித்து வைத்திருந்தான். அதே புரிதலுடன் அவன் தமிழ்நாட்டில் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், அப்பப்பா, அளவற்ற மகிழ்ச்சியோடு, குழந்தைகள் குடும்பத்தோடு பொருட்களைக் கட்டிக்கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தான்.

...ஏம்பா...ஏன் இங்கிருக்கவங்க யாருமே நம்மட்ட பேச மாட்டேன்றாங்க.....

...அவங்க பேசாட்டி என்ன....நீங்க பேசுறது...

..நாம எப்படிப்பா பேசமுடியும்.........

...ஏன் பேசுனா என்ன....

...நாமதான் இந்த ஊருக்கு புதுசு இல்லையா....அப்ப அவங்கதான் பேசனும்...அவங்க எல்லாம் கூடிக்கூடி பேசிக்கிறாங்க...நானும் அங்கனதான் சிறுசுகள விட்டுட்டு நிப்பேன்...எந்த ஊருன்னாவது கேக்கக் கூடாதா என்ன...சரி நம்மள விடுங்க...இந்த சின்னப்பயலுக...இவனுகளக்கூட கொஞ்சமாட்டேன்றாங்க....நாம சிரிச்சாக் கூட பதிலுக்கு வேண்டா வெறுப்பா சின்னதா சிரிக்கிறாங்க...பேசுற மாதிரி மூஞ்ச காமிச்சாதான பேசமுடியும்...என்ன சொல்ற......

ஊருக்கு வந்த சிலகாலத்தில் வானதி இப்படி சொல்லிக் குறைபட்டுக்கொண்டாள்.

..கைகா ன்னா இப்படி இருக்குமா....அவங்களே பேசுவாங்க தெரியுமா....கொஞ்ச நேரத்திலேயே ஏதோ சொந்தக்காரங்க மாதிரி எல்லாத்தயும் பேசுவாங்க.....

..அதில்ல வானு.... ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு பாரு....கைகாக்கு நீ வரும்போது உனக்குத்தான் அது புதுசு....நா ஏற்கனவே அங்க ஆறேழு வருசம் வாழ்ந்தவன்....என்னிய எல்லாருக்கும் தெரியுமில்லியா...அதனால ஒங்கிட்ட பேசுனாங்க...இங்கன நானும் புதுசு இல்லயா...அதுனால கொஞ்ச நாளாவும்....

..எத்தன...நாலுமாசம் ஆவப்போவுது....

உண்மையில் நான்கு மாதங்கள் ஆகிவிட்டது அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது.

ஒரு பேச்சுக்கு அவளை அப்போது சமாதானப்படுத்தினான் என்றாலும், ஏன் இப்படி இருக்கிறது என்று கவனிக்கத் தீர்மானித்தான். புதிதாக வந்த பெண்ணிடம், அங்கிருக்கும் இன்ன பிற பெண்கள் பேச்சுக் கொடுப்பதுதானே வழக்கமான குணம். ஒருவேளை வானதி அதிகம் பேசும் பெண்ணில்லை என்பதால் இப்படி உணர்கிறாளா என்று யோசிக்கத் தொடங்கினான்.

1.        அலுவலகத்தின் லாபியில் நின்றுகொண்டிருந்தேன். பிரிவின் பணியாளர் ஒருவர் வந்தார்.

 

சார்....உங்களுக்கு எந்த ஊரு சொன்னிய....

...எனக்கா...எனக்கு சங்கனாங்குளம்....

சங்கனாபுரமா.....

..இல்ல சங்கனாங்குளம்....திசையன்விளை பக்கம்....

...ஓ....

எனது சொந்த ஊர் அவருக்கு பரிச்சயம் இல்லாத காரணத்தால் அவருக்குப் புரியவில்லை...விட்டுவிட்டார் என்று நினைத்தேன். விடவில்லை.

 

மறுநாள் அதே லாபியில் மீண்டும் கிடைத்தார்.

..சார் சங்கனாங்குளம் னா இந்த விசயநாராயணம் பக்கமா....

..ஆமா...

..அந்த ஊருல முழுக்க தேவமாருன்னுலா சொல்றாங்க...இல்ல வேற ஆளு இருக்கா...

..... வேற ஆளுங்க இருந்தாங்க...நாடாரு, பர்ணாண்டசு எல்லாம் இருந்தாங்க....இப்ப வெளியூரு போயிட்டாங்க....அவங்களும் கேட்டா சங்கனாங்குளம்னுதான் சொல்வாங்க.....

கொஞ்சம் குழம்பிப்போய்....

....சார் நாடார் தான....

...இல்ல மறவர்....தேவமாரு ன்னுவாங்க.......

..சேர்ச்சேரி.....அதான் ஒருத்தன்ட்ட சொன்னேன்..நம்மாளு மாதிரிதான் இருக்குன்னு...அவந்தான் இல்ல சங்கனாங்குளம் னா தேவமாராத்தான் இருக்கும்னான்...அதான் கேட்டேன்...

 

 

2.        எனக்கு அக்கா ஒருத்தி மாப்பிள்ளை, இதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அக்கா என்றால் நெருங்கிய சொந்தமில்லை. ஒரு பெரியம்மா மகள். அவர்கள் அப்பாவும் சொந்தம் இன்னொரு வழியில். அவர் தாத்தா முறை. ஒரே ஊருக்குள் உறவுக்குள் மாற்றி மாற்றி பெண் கட்டினால் இப்படி சொந்தங்கள் குழம்பிக் கிடக்கும் சிலசமயம்.

 

மீன் வாங்கவேண்டும் என்று என் வீட்டுக்குக் கீழே வந்து நின்றார்.

...எத்தானோய்.....

...காலை வெயிலை மறைக்க கையை நெற்றியில் வைத்துக்கொண்டு மேல்நோக்கிப் பார்த்தார்.

..ஓ..மாப்ளயா....இங்கனதான் வீடா......தங்கச்சி புள்ளேல் எல்லாம் சௌக்கியமா.......

..ஆமாத்தான்....என்ன இந்தப்பக்கம் காலையிலேயே....

தெரியும்தான்....இருந்தாலும், கல்யாணவீட்டிலேயே வைத்து கல்யாணத்துக்கு வந்தீகளா என்று கேட்பதில்லையா அப்படி, வேறெப்படித் தொடங்குவது என்று தெரியாவிட்டால் இப்படி பேசவேண்டியதுதான்.

...மீன் வாங்க வந்தேன் மாப்ள....சிலநேரம் சின்ன முட்டத்துக்கு போயிருவேன்...இன்னிக்கி கொஞ்சம் எரிச்சலா இருக்கு.....அடுத்த தடவ வேணும்னா சொல்லும்...போம்போது ஒமக்கும் சேர்த்து வாங்கிட்டு வாரண்....

...சரித்தான்...என்று சொல்லிவிட்டு கம்பிக்கு இடையே எட்டிப்பார்த்த சின்னவனை மாமாவுக்கு வணக்கம் சொல் என்றேன்..

....குட்மார்னிங் மாமா............

...ஆங்...ஆங்...குட்மார்னிங்.....மாப்ள உங்களுக்கு என்ன மீனு ரொம்பப் பிடிக்கும்...எல்லா மீனும் சாப்பிடுவீங்க இல்ல....

…..நான் சின்ன புள்ளேல்ல மீனுன்னாலே, குதிப்பு, சீலா, வாவல், வாள...இதானத்தான்...அதுலயும் நாங்க குதிப்புதான் வாங்குவோம்...சங்கனாங்குளத்து அம்மன் கோயில் ல கால் நாட்டியாச்சுன்னா, தெசேன்வெள சந்தேல குதிப்பு வெல கொறயும்....அப்படியாக்கும்...

....ஆனா மாப்ள....உங்கூர்க்காரனுக எல்லாரயும் பாத்துட்டன் வே....இந்த ஊர்ப்பெரும பேசுறத விடமாட்டானுவ....எங்கன சுத்தியும் அங்கதான் வந்து நிப்பானுக....

....இருக்கு பேசுறோம்....

--ஆமாமா இருக்கு.....போம்வே.....

அவர் சாலையிலும் நான் மூன்றாவது மாடியிலும் நின்றிருந்ததால், நாங்கள் இருவரும் சத்தமாகப் பேசிக்கொண்டதை, எதிர்வளாகத்திலும் மாடியிலும் நின்றிருந்தவர்கள், கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள். எதேச்சையாக நான் பார்த்தபோது அவர்கள், என்னைப் பற்றி தன் மனதுக்குள் பெரிய குறிப்பொன்றை வரைகிறார்கள் என்பது அவர்கள் முகத்தைப்பார்த்தபோது உணரமுடிந்தது.

 

ஒருவரது முகத்தில் பெரும் ஆச்சரியம் தெரிந்தது. எனக்கு அதற்கான காரணத்தை ஊகிக்க முடிந்தது. இரண்டு நாளைக்கு முன்னால், கீழே வண்டியை எடுப்பதற்காக வந்தபோது...

 ......கரையில் திருநெல்வேலி அரகரா என்ற சத்தம், கல்லும் உருகிடுமே சிவனே அய்யா.......என்ற சாட்டுநீட்டோலை வரிகளைச் சத்தமாகப் பாடிக்கொண்டு சென்றதை, அவர் கவனித்து என்னைக் குறித்து வரைந்த சித்திரம், இப்போது மாறும்போல இருந்தது.

 

3.        மீன்கடையில் நின்றுகொண்டிருந்தேன். உடன் பணியாற்றும் அன்பர் ஒருவரும், அவருடன் என்னுடைய நண்பர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தனர். என்னுடைய நண்பர் என்று நான் சொல்லும் மனிதர், என்னுடையக் கல்லூரிக்காலங்களில் இருந்து எனக்கு பழக்கம். எனக்குப் பக்கத்து ஊர்க்காரர். தெரிந்தவர். உடன் பணியாற்றும் நண்பரும் அவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

.............அட...அண்ணன எப்படி உங்களுக்குத் தெரியும்.......இருவருமே எனக்கு அண்ணன்கள் தான்.

...உங்களுக்கு எப்படித் தெரியும் இவரை....

..நான் காலேச்சில மொத வருசம் படிக்கும்போது, அண்ணன் பக்கத்து காலேச்சில மூணாவது வருசம் படிச்சிட்டு இருந்தார். ட்ரெயின்ல ரெண்டுபேரும் ஒன்னா போவோம்....வருவோம்....அப்பவே தெரியும். உங்களுக்கு எப்படி....

..நானும் இவனும் ஒன்னா படிச்சோம் பாலிடெக்னிக்...நான் எலெக்ட்ரிக்கல், அவன் எலெக்ட்ரானிக்சு...

..அப்படியா எனக்கு இப்பத்தான் தெரியும்....எனக்கு இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும்....அவங்களும் இங்க இருக்கிறது..... சரிச்சரி....மீன் வாங்க வந்தீயளா....

..ஆமா...அதான் அப்படியே பேசிட்டு இருக்கோம்...நீங்க வாங்கிட்டு வாங்க........

மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.  சற்று நேரம் ஒன்றும் பேசாமல் நின்றவர்கள், அவர்கள் பேசுவது எனக்குக் கேட்காது என்ற தொலைவுக்கு நான் நகர்ந்தபிறகு, ஆகக்குறைந்த சத்ததுடன், உடன் பணியாற்றும் அன்பர், எனது பக்கத்து ஊர்க்காரரிடம் பேசினார். விசாரித்தார் என்று சொல்லவேண்டும்.

என்ன விசாரித்திருப்பார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

4.        அவர்கள் இருவரையும் நான் பார்த்து பல்லாண்டுகள் ஆகியிருந்தன. நான் கர்நாடகா கிளையில் இருந்தபோது அங்கே பயிற்சி எடுத்தார்கள். அதற்கப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன்.

கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தபோது,

...ராதாபுரத்துல சொள்ளக்கண்ணு இருக்கார்லா.....அவருக்கு உங்களத் தெரியும்லா என்ன..

...தெரியுமா...எனக்கு அத்தான்...அவரோட சித்தி பொண்ணைத்தான் எனக்கு கெட்டிருக்கு...

...அதான..யாரோ சொன்னாங்க...நீங்க அந்த ஆளுதான் அப்படின்னு...அப்படித்தான என்ன...?

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, அதற்குப் பிறகான பேச்சில் அதிகம் சுவாரசியம் இல்லாமல் போனது.

 

 

 

5.        கடைக்கு சில பொருட்கள் வாஙகச் சென்றிருந்தேன்.

..அண்ணனுக்கு எந்த ஊரு?...

..திசையன்விளை....

...அட நம்ம ஊரு பக்கம்...

...உங்களுக்கு எந்த ஊரு....

....எனக்கு சங்கனாங்குளம்...கடையில் பணியாற்றும் பெண், சட்டென்று தலையைத் திருப்பி என் முகத்தை நன்றாகக் கவனித்தார். நானும் திரும்பிய வேளையில் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

..அது எங்க இருக்கு....அவருக்கு சங்கனாங்குளம் தெரியவில்லை...

..மன்னார்புரம் பக்கம்.....அக்கா எல்லாம் படிச்சது கோலி ரெடீமர்சுல தான்.......

சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒருநாள் கடைக்கு சென்றிருந்தபோது, கடையில் கூட்டமில்லை. நானும் கடைக்காரரும், அந்த பெண் ஊழியரும் மட்டும் இருந்தோம்.

...சங்கனாங்குளத்துல உங்களுக்கு சண்முகசுந்தரம் தெரியுமா..? மெட்ராசுல இருந்தாங்க....

...யாரு, கொஞ்சம் கட்டையா இருப்பானே அவனா....

..ஆமா...அவங்கதான்.......

..தெரியும் தெரியும்...நாங்க எல்லாம் ஒரே வயசுதான...எனக்கு சித்தி மகன்தான்...

முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றி மறைந்தைதைக் கவனித்தேன்..

...ஆமா அவன உங்களுக்கு எப்படித் தெரியும்....

....எம்பொண்ணு அவங்க கம்பெனில தான் வேல பாத்தா....தங்கச்சி தங்கச்சி ன்னு ரொம்ப பாசமா இருப்பாங்க...கல்யாணத்துக்கெல்லாம் வந்திருந்தாங்க...அவங்க, அம்மா அப்பா..எல்லாரோடையும்...நல்ல எல்ப்பும் பண்ணுனாங்க....

....ஓ.....

பார்சலைப் பொதிந்துகொண்டே மெல்ல பக்கத்தில் வந்துவிட்டார். காதுக்கருகில் வந்து.....நாங்களும் தேவமாருதான்....

என் மனதுக்குள்ளும் ஓர் ஒளிக்கீற்று உண்டாயிற்று. திடுக்கிட்டுக்கொண்டேன். மாறிவிட்டேனா, மாற்றப்பட்டேனா....உண்மையறிவே மிகும் என்றல்லவா சொல்கிறான் வள்ளுவன்.

 

செல்வியின்செல்வன்.

06.08.2020